என் மலர்tooltip icon

    ஈரோடு

    மொடக்குறிச்சி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. காலை தொடங்கி மாலை வரை வெயிலில் தாக்கதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தி வாங்கியது. மாநகர் பகுதியில் நேற்று இரவு 10.40 மணிக்கு மேல் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழை வெளுத்து வாங்கியது.

    இதேப்போல் மொடக்குறிச்சி, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-15, மொடக்குறிச்சி-15, சென்னிமலை-5, பவானிசாகர்- 1.2.

    அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலரின் அதிரடி நடவடிக்கையில், 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 36 வழக்குகள் பதிவு செய்து ரூ.42 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் கொரோனா விதி முறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

    இதன் அடிப்படையில் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், தேர் வீதி, சிங்கார வீதி, அண்ணாசாலை, ராஜவீதி, பர்கூர் சாலை, பஸ் நிலையம், பவானி சாலை ஆகிய இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், கடைகளுக்கு முன் கட்டங்கள் வரையாமலும், கொரோனா விதி முறையை பின்பற்றாமல் இருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தள்ளுவண்டி கடைகளிலும் கொரோனா விதிமுறையை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    மேலும், கொரோனா விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்து விற்பனை செய்த கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

    கடந்த 4 நாட்களில் அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலரின் அதிரடி நடவடிக்கையில், 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 36 வழக்குகள் பதிவு செய்து ரூ.42 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

    கடந்த வாரம் பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. மேலும் பில்லூர் அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் கடந்த வாரம் பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது.

    இந்த நிலையில் ஊட்டி மற்றும் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது.

    பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 944 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணை நீர் மட்டம் 93.10 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 23 ஆயிரத்து 661 டி.எம்.சியாக உள்ளது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கனஅடி மற்றும் குடிநீருக்கு 200 கனஅடி என 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் எதிரே வந்த யானையை காளைமாடு ஒன்று எதிர்த்து நின்று துரத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் மாதேஷ் என்ற வாலிபர் வனப்பகுதிக்குள் தனது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு காட்டு யானை எதிரே வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாதேஷ் சுதாரித்துக்கொண்டு மாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு தப்ப முயன்றார்.

    அப்போது அவர் வளர்த்து வரும் காளைமாடு ஒன்று யானையை நோக்கி ஆவேசமாக பார்த்தது. பின்னர் யானையை எதிர்த்து நின்று துரத்த ஆரம்பித்தது. இதையடுத்து யானை மெதுவாக வனப்பகுதிக்குள் செல்ல ஆரம்பித்தது. இதனை மாதேஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். தற்போது இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
    ஊஞ்சலூர்:

    ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி காணப்படுகிறது. ஊஞ்சலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட தெற்கு தெருவில் 64 வயது மூதாட்டி, மாரியம்மன் கோவில் வீதியில் 60 வயது மூதாட்டி, மணிமுத்தூரில் 30 வயது ஆண் ஆகிய 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொளாநல்லி பகுதியில் 26 வயது வாலிபர், 19 வயது வாலிபர், கிளாம்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட மலையம்பாளையம் பகுதியில் 65 வயது மூதாட்டி, 65 வயது முதியவர், 75 வயது முதியவர் ஆகியோருக்கும், வட்டக்கல்வலசில் 75 வயது மூதாட்டி, 52 வயது ஆண் ஆகியோருக்கும், பாசூரில் 31 வயது பெண், 30 வயது வாலிபர் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    கொந்தளம் ஊராட்சிக்கு உள்பட்ட முத்தையன் வலசில் 32 வயது பெண், கொளத்துப்பாளையம் ஊராட்சி தேவம்பாளையத்தில் 17 வயது சிறுமிக்கும் கொரோனா உறுதியானது. எனவே ஊஞ்சலூர், கொளாநல்லி, கிளாம்பாடி, பாசூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 14 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
    ஈரோட்டில் தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு சூளை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் சத்யா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார். 3-வது மகள் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சத்யாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவர் குணமாகவில்லை.

    இந்தநிலையில், நேற்று முன்தினம் சத்யாவுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். வீட்டில் சத்யா இல்லாததால் அவரது குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டில் சத்யா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் சத்யாவை மீட்டு, சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 214 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 53 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேரடிப்பார்வையில் போலீசார் மதுவிலக்கு தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், கடந்த 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலான 10 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதில் சம்பந்தப்பட்ட 214 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தமிழ்நாட்டு மதுபானங்கள் 1,311 பாட்டில்களும், கர்நாடக மதுபானங்கள் 6 ஆயிரத்து 310 பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் 122 லிட்டர் சாராயம், 3 ஆயிரத்து 350 லிட்டர் சாராய ஊறல், 250 லிட்டர் கள் ஆகியவைகளும் மற்றும் ரூ.40 ஆயிரத்து 870 பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக மேலும் 36 இருசக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு லாரி என மொத்தம் 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட உள்ளன.

    கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தெரிந்தால் 96558 88100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
    கடம்பூர் உள்ளிட்ட 10 வனசரகங்களில் கண்காணிப்பு குழுவினர் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் தென்படும் யானை,சிறுத்தை,புலிகள் குறித்த கண்காணித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    சென்னை வண்டலூர் வனஉயிரின பூங்காவில் கொரோனா தொற்று பாதிப்பால் 2 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. மேலும் 5 சிங்கங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து தமிழகத்தில் உள்ள சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் உள்ள சிறுத்தை, புலி, யானைகள் போன்ற விலங்குகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனவா? என கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி 1485 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாழும் காட்டுவிலங்குகளை கண்காணிக்க, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் கிருபா சங்கர் தலைமையில் கால்நடை மருத்துவர், உதவி வனப் பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வனவர் மற்றும் வனக்காப்பாளர் என 6 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம், பவானி சாகர், ஜீரஹள்ளி, தலமலை, தாளவாடி, கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட 10 வனசரகங்களில் கண்காணிப்பு குழுவினர் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் தென்படும் யானை,சிறுத்தை,புலிகள் குறித்த கண்காணித்து வருகின்றனர்.

    அதில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் சுற்றுகிறதா? என்பது குறித்து கண்காணிப்பு குழுவினர் ஆடு, மாடு மேய்க்கும் பழங்குடியினரிடம் விசாரித்து வருகின்றனர்.

    இரு மாநில எல்லையில் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசுக்கு வனத்துறை சமர்ப்பித்து வருகின்றனர்.

    தடுப்பூசி போடும் மையமான வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு திரண்ட மக்கள் தாங்களாகவே டோக்கன்கள் போட்டுக்கொண்டும், கற்கள், குடங்களை வரிசையில் வைத்தும் இடம் பிடித்து விடிய, விடிய காத்து நின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7 நாட்கள் தடுப்பூசி போடப்படவில்லை. இதையடுத்து கடந்த 13, 14-ந் தேதிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது. 2 நாட்களில் தடுப்பூசி தீர்ந்து விட்டது.

    இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15-ந் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 16-ந் தேதி 15 ஆயிரத்து 600 கோவிஷீல்டு, 4 ஆயிரம் கோவேக்சின் என மொத்தம் 19 ஆயிரத்து 600 தடுப்பூசிகள் வந்தன.

    அன்றைய தினமே புறநகர் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தனர். ஆனால் மாநகர பகுதியில் தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. 17-ந்தேதி ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று மாநகரில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் புறநகர் பகுதியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று 67 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பு நேற்று இரவு முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிய தொடங்கினர்.

    இந்நிலையில் தடுப்பூசி போடும் மையமான வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு திரண்ட மக்கள் தாங்களாகவே டோக்கன்கள் போட்டுக்கொண்டும், கற்கள், குடங்களை வரிசையில் வைத்தும் இடம் பிடித்து விடிய, விடிய காத்து நின்றனர்.

    மாநகர் பகுதியில் 10 மையங்களில் வழக்கமாக ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. ஆனால் இன்று 100 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதனால் இரவில் காத்து கிடந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைத்தது. காலையில் வந்தவர்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆரம்பத்தில் தடுப்பூசியை கண்டு அச்சம் அடைந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி போட திரண்டு வருகின்றனர். 

    348 இருசக்கர வாகனங்களும், 146 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் ஊரடங்கின் 26-வது நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 232 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.

    ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 394 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 348 இருசக்கர வாகனங்களும், 146 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதேப்போல் மாநகர பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் ஆங்காங்கே சோதனை செய்து முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு தலா ரூ.200 அபரா தம் விதித்தனர். இதன் மூலம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

    இதேபோல் சமூக இடை வெளியை கடைப்பிடிக்காத 5 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி செயல்பட்ட 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து அந்த 2 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-ம் இடத்தில் இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 9 நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

    அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் முதன் முறையாக கடந்த மே மாதம் 16-ந் தேதி அன்று ஒரே நாளில் 1,232 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய இருந்து வந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 1,784 பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. நேற்றைய தினசரி பாதிப்பு 964 ஆக பதிவாகியிருந்தது. கிட்டத்தட்ட 32 நாட்களுக்கு பிறகு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

    அதே நேரத்தில் ஒரே நாளில் 1,266 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆயிரத்து 972 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 365 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    மின் மோட்டாரை பழுது நீக்கி சீரான முறையில் முறையில் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    தாளவாடி ஒன்றியம் திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்டது சுஜில்கரை கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு பஞ்சாயத்து சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டு கடந்த ஒருவாரமாக குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தோட்டத்து பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பழுதாகி உள்ள மின் மோட்டாரை பழுது நீக்கி சீரான முறையில் முறையில் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×