search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டம்
    X
    ஈரோடு மாவட்டம்

    ஈரோட்டில் 1 மாதத்துக்கு பின்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-ம் இடத்தில் இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 9 நாட்களாக மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

    அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் முதன் முறையாக கடந்த மே மாதம் 16-ந் தேதி அன்று ஒரே நாளில் 1,232 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய இருந்து வந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 1,784 பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. நேற்றைய தினசரி பாதிப்பு 964 ஆக பதிவாகியிருந்தது. கிட்டத்தட்ட 32 நாட்களுக்கு பிறகு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

    அதே நேரத்தில் ஒரே நாளில் 1,266 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆயிரத்து 972 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 365 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    Next Story
    ×