என் மலர்
ஈரோடு
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). வேன் டிரைவர். இவர் அந்தியூர் தவிட்டுபாளையம் அருகே கடந்த 21-ந் தேதி இரவு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள சாக்கடையில் பிணமாக கிடந்தார்.
சதீஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை யாரோ கொலை செய்து விட்டதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியதால் அந்தியூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் சதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளிவந்தது. இதில் சதீஷ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கொலை நடந்த நாளில் கடைசியாக சதீஷ் மொடச்சூரை சேர்ந்த தனது நண்பர் கார்த்திக் (26) என்பவருடன் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் சதீஷ் இறந்த நாளிலிருந்து கார்த்திக் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் தலைமறைவாக இருந்தார்.
இதனால் அந்தியூர் போலீசார் கார்த்திக்கை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்தியூர் பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திக்கை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சதீசை கொன்றதை கார்த்திக் ஒப்புக்கொண்டார்.
போலீஸ் விசாரணையில் கார்த்திக் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நானும், சதீசும் நண்பர்கள். சம்பவ நாளன்று சதீஷ் எனக்கு சொந்தமான வேனை வாங்கி ஓட்டி சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். நானும் அவருடன் வேனில் சென்றேன்.
அந்தியூர் ரவுண்டானா அருகே என்னை இறக்கிவிட்டு சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறி வேனை ஓட்டி சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இதனால் நான் அந்த பகுதியில் நடந்து சென்றபோது அங்கு ஒரு பகுதியில் கூட்டமாக இருந்தது. நான் அங்கு சென்று பார்த்தபோது சதீஷ் குடிபோதையில் வேனை தாறுமாறாக ஓட்டி 3 பேர் மீது மோதுவது போல் சென்று நிறுத்தியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் சதீஷ் மற்றும் வேனை பிடித்து வைத்து கொண்டனர்.
நான் சென்று வேனை கேட்ட போது நாளை காலை வந்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர். இதனால் எனக்கு சதீஷ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் நானும் சதீசும் தொட்டிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் மது கடைக்கு சென்றோம்.
அப்போது ஆத்திரத்தில் உன்னால்தான் என் வேன் அவர்களிடம் சிக்கி விட்டது என்று சதீசிடம் சண்டை போட்டேன். அப்போது ஆத்திரத்தில் சதீஷ் கழுத்தை நெரித்து சாக்கடையில் தள்ளி விட்டடேன். இதில் சதீஷ் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்தியூர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) மொத்த, சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இங்கு 280 கடைகளும், அதனை சுற்றி, பல நூறு ஜவுளி மொத்த விற்பனை கடைகள், குடோன் விற்பனை, வாகனங்களில் வைத்து விற்பனையும் நடக்கிறது.
கடந்த, 20 நாட்களுக்கு மேலாக கோடை ஜவுளி விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், ஜவுளி விலை உயர்வால் மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கனி மார்க்கெட் தினசரி கடை வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடு முதல் ஜவுளி உற்பத்தியும் பாதித்து, விற்பனையும் குறைந்தது. தற்போது தளர்வுகள் நீங்கி முழுமையாக கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து வகையான ஆடைகளின் விலையும் உயர்ந்துள்ளன.
உதாரணமாக ஆண்களுக்கான சட்டை 20 ரூபாயும், லுங்கி 8 முதல் 10 ரூபாயும், வேட்டி 5 முதல், 10 ரூபாயும், புடவை 30 ரூபாய், பேண்ட் 30 ரூபாய், பனியன், ஜட்டிகள் ஒரு டஜன் 20 முதல் 50 ரூபாயும், சற்று உயர்ந்த ரக ஜட்டி, பனியன்கள் 60 முதல் 70 ரூபாயும், கவுன் 30 முதல் 70 ரூபாயும் உயர்ந்துள்ளது.
அதுபோல நைட்டி, உள்ளாடைகள், மெத்தை விரிப்பு போர்வை போன்றவையும் விலை உயர்ந்துள்ளது. கோடைக்கான ஆடை வாங்குவோர் அதனுடன் இணைந்து துண்டு, லுங்கி, வேட்டி, போர்வை போன்றவைகளும் வாங்குவார்கள். விலை உயர்வால், வாங்குவதை குறைத்தும் சிலர் வாங்காமலும் செல்வதால், வியாபாரம் கடுமையாக பாதிக்கிறது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் விலையை சீராக வைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஜவுளி தொழில் நலிவடையாமல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது தாளவாடி.
அதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய் விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறியதாவது:-
3 மாத பயிரான தக்காளி நாற்று, களைஎடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதம் முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.25 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
விளைச்சல் அதிகம் எனக் காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்கின்றனர். வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்பதில்லை.
இதனால் பழுத்த தக்காளியை பறித்து குப்பையில் கொட்டி வருவதாகவும், சிலர் அப்படியே செடியில் விட்டு விடுவதாகவும் தெரிவித்தனர். விவசாயத்தை நம்பி இருந்தால் கடன் தொல்லையால் தான் அவதிபட முடியும். விவசாயத்தை விட்டு நகர் பகுதிக்கு தான் இனி செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் மல்லிராஜ் (43). இவர் பசு மாடுகள், ஆடுகளை வளர்த்து வந்தார். இவரது பசு மாடுகள் அதே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாடுகள் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று இருந்தது. அப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டது.
இதையடுத்து மல்லிராஜ் என்ன ஏதோ என்று பதறி கொண்டு காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது தனது பசுமாட்டின் வாய் சிதைந்து ரத்தம் கொட்டி நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பவானி சாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததில் வெடித்து மாட்டின் வாய் சிதைந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாட்டை அழைத்து சென்றனர்.
வனப்பகுதியையொட்டிய நிலத்தில் மான், காட்டு பன்றிகளை வேட்டையாடும் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளையும் மறைத்து வைக்கின்றனர். இதில் சிக்கி ஆடு, மாடுகள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. எனவே வேட்டை கும்பல் மீது போலீசார் மற்றும் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த சில நாட்கள் முன்பு டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயியின் மாடு அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றபோது நாட்டு வெடிகுண்டை கடித்து அந்த மாட்டின் வாய் சிதைந்து சுமார் 5 நாட்களுக்கு பிறகு அந்த மாடு இறந்தது குறிப்பிடத்தக்கது.






