என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த பாசூர் அருகே உள்ள பனங்காட்டு புதூர் பகுதியில் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு 17 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

    இவரது மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்தபோது மாணவி மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார்.

    இதுகுறித்து அவரது தாயார் கேட்ட போது மாணவி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து விசாரித்தபோது அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் மகனான தாமோதரன் (வயது 22) என்பவர் கொரோனா காலகட்டத்தில் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவியிடம் பழகி உள்ளார்.

    மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் அடிக்கடி மாணவி வீட்டுக்கு வந்து அவருடன் நெருங்கி பழகி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாகவே மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.
    பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

    இங்கு பொறிக்கப்படும் மீன்களை சாப்பிடுவதற்கு என்றே மக்கள் கூட்டம் தனியாக உள்ளது. காளிங்கராயன் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும்போது கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிவேரி அணை பகுதியில் பராமரிப்பு பணி நடந்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த 9ந் தேதி முதல் மீண்டும் கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். வரும் வாரத்தில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மேலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தண்ணீர் குறைவாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் மண்எண்ணை ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்ட ன்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். பனி யன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 

    இவரது மனைவி ரேணுகாதேவி (வயது 32). திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ரேணுகாதேவி மண் எண்ணை ஊற்றி தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.
     
    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  
    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ரேணுகாதேவி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு அன்னவீதியை பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (41). இவரது மனைவி பிரவீன். 

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஷேக் தாவூத் சென்ட்ரிங் சீட் மாட்டும் வேலை பார்த்து வந்தார். பிரவீன் வீட்டுவேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் ஷேக் தாவூத்துக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. மது அருந்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  

    கடந்த 2 மாதங்களாக நெல்லைக்கு வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஈரோட்டுக்கு வந்தார். கடந்த 3 வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்துவிட்டு தினமும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

    பின்னர் பிரவீன் சாப்பாடு வைத்தால் அதை எட்டி உதைத்து விட்டு பின்னர் மீண்டும் சாப்பிட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். 

    காலை பிரவீன் எழுந்து பார்த்தபோது ஷேக் தாவூத் அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஷேக் தாவூத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் ஒலி எழுப்பும் பைப் ஹாரன் பயன்படுத்திய 40-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்த பைப் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
     பவானி:

    பவானி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் ஒலி எழுப்பும் பைப் ஹாரன் பயன்படுத்திய 40-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருந்த பைப் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    பவானி பேருந்து நிலையத்திலிருந்து செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் ஒலி எழுப்பும் பைப் ஹாரன்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து பவானி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான அலுவலர்கள் அரசு மற்றும் தனியார்  பேருந்துகளில் உள்ள ஹாரன்களை சோதனை செய்து டி.சி.எம்.எல். அளவு அதிகமாக உள்ள பைப் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்கள் ஏற்படும் இடையூறு குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் பொதுமக்களும் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் விவசாயிகள் பயன்பெறும் வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    அந்தியூர்:
     
    அந்தியூர் ஊராட்சி ஒன்றியம்பர்கூர் வேம்பத்தி, மைக்கேல் பாளையம், சின்னத்தம்பி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் விவசாயிகள் பயன்பெறும் வேளாண் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    மைக்கேல் பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில்வேளாண்மை உளவுத்துறை, கால்நடைத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை துறை,வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாய கடன் அட்டை, சொட்டு நீர் பாசனம், பட்டா மாறுதல், மின் இணைப்பு, பெயர் மாற்றம் விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் உருவாக்குதல் உள்பட விவசாயிகளின் திட்டங்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

    இதில்கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மேலாளர் கந்தசாமி, மைக்கேல் பாளையம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

    குறிப்பாக ஈரோடு புறநகர் பகுதியான அம்மாபேட்டை, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    சில சமயம் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான வாழைகள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. 

    இந்நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் காலை வெயில் வாட்டி வதைத்தது. 

    மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன.இதையடுத்து புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

    பெருந்துறை, தாளவாடி, பவானிசாகர், சென்னிமலை,  கொடிவேரி, வரட்டுப்பள்ளம், மொடக்குறிச்சி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. 

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-11, கோபி-12.2, தாளவாடி-11.2, சத்தியமங்கலம்-6, பவானிசாகர்-9.6, பவானி-2.4, சென்னிமலை-18, கவுந்தபாடி - 14.4, எலந்தகுட்டைமேடு-4.8, வரட்டுப்பள்ளம்-6,  குண்டேரிபள்ளம்-3, கொடிவேரி-14, மொடக்குறிச்சி- 1.
    கம்பெனியில் இருந்து மொபட்டில் டீசல் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொழிலாளி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    கம்பெனியில் இருந்து மொபட்டில் டீசல் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொழிலாளி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் வெட்டுக்காட்டுவலசு, மடிக்கார காலனி முதல் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (43). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 

    சம்பவத்தன்று தனது மொபட்டில் கம்பெனியில் இருந்து டீசல் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். 

    அப்போது நாராயணவலசு பகுதியில் சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

    இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழையால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில் அவசர உதவி எண் தெரிவிக்கப்படுகிறது.
    ஈரோடு:

    மழையால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில் அவசர உதவி எண் தெரிவிக்கப்படுகிறது.

    ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை, காற்றுடன் பெய்து வருகிறது. 

    இதனால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில் அவசர உதவி எண் தெரிவிக்கப்படுகிறது.

    இதன்படி காற்று, மழையால் மின் கம்பம் சாய்தல், மின் கம்பிகள் அறுந்து விழுதல், பிற காரணங்களுக்காக மின்வாரியத்தை ‘மின்னகம்’ எனப்படும் – 94987 94987, வாட்ஸ் ஆப் எண் – 94458 51912 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். 

    வாட்ஸ் ஆப் எண்ணில் புகார்களை படத்துடன் அனுப்பி வைக்கலாம்.

    இவ்வாறு  அவர் அதில் கூறியுள்ளார்.

    ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் அடுத்த குமரன் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்கள் குப்பை கொட்டுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு குப்பைகள் கொட்டப்படுவது இல்லை.

    மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம்பிரித்து வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் குப்பை கொட்டும் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இன்று காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது குப்பை கொட்டும் இடத்தில் ஏராளமான மருந்து, மாத்திரைகள் உட்பட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.

    இவ்வாறு மருத்துவ கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவது குற்றமாகும். இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுகாதார ஆய்வாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் அபராதம் விதித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதையும் மீறி நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மாநகராட்சி பணியாளர்கள் அந்த மருத்துவ கழிவுகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்களை சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சாக்கு மூட்டையில் இருந்த 98 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கருங்கல்பாளையம் அடுத்த கிருஷ்ணம்பாளையம் மின்வாரியம் அலுவலகம் அருகே 2 பேர் சந்தேகப்படும்படியாக சாக்கு மூட்டைகளை கையில் வைத்து நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் (57), சக்திவேல்(36) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை திறந்து சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்களை சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சாக்கு மூட்டையில் இருந்த 98 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் இருக்கும்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    காங்கிரஸ் கட்சி இந்திக்கு எதிரான கட்சி அல்ல. ஆனால் விரும்பாத மக்கள் மீது மொழியை திணிப்பதை எதிர்த்து வருகிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காங்கிரஸ் நடைபயண நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. மாநில துணை பொதுப்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.

    10 நாட்களுக்கு 250 கி.மீ. நடைபயணமாக 250 கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:

    காங்கிரஸ் கட்சி இந்திக்கு எதிரான கட்சி அல்ல. இந்திய எல்லையில் பேசும் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. ஆனால் விரும்பாத மக்கள் மீது மொழியை திணிப்பதை எதிர்த்து வருகிறோம்.

    மொழி கொள்கையில் மாற்றம் செய்வதை எதிர்க்கிறோம். ஜவஹர்லால் நேரு இந்திய தேசத்தில் மாநிலங்களை அடையாளப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் மொழி வழி மாநிலங்களை உருவாக்கினார். வேற்றுமையில் ஒற்றுமையை கண்டது இந்தியா.

    நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அரசு வரி விகிதாச்சார அடிப்படையில் நிதி தாருங்கள் என தமிழக அரசு கேட்பதை தவறு என கூறுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு பிரிவினை உணர்வுள்ளவர்கள் இப்படி கேட்பதாக கூறுகிறார்.

    9வது, 10வது நிதி கமிசன் அறிக்கையில் 1 ரூபாயில் 60 பைசா மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் 15வது நிதி கமிசன் அறிக்கையில் 35 பைசா மட்டுமே தரப்படுகிறது.

    மாநில அரசு தனக்கு வரவேண்டிய தொகையில் 50 சதவீதம் இழக்கிறது. எப்படி நிர்வாகம் நடத்த முடியும். எங்கள் பங்கு 60 பைசா வழக்கமாக வழங்குவதை விட்டு 35 பைசா கொடுத்தால் எப்படி நிர்வாகம் நடத்த முடியும் என கேள்வி கேட்பதை நிர்மலா சீதாராமன் பிரிவினைவாதம் என்கிறார்.

    பொறுப்பான இடத்தில் இருக்கும் நிதி அமைச்சர் சரியான பதிலை தர வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கேட்கும் அதிகாரபூர்வமான கேள்விகளுக்கு அளிக்கும் பதிலா இது. திட்டமிட்டு மாநிலங்களின் வளத்தை குறைக்க முயற்சிக்கிறார்கள்.

    தமிழகம் போன்ற மாநிலங்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள். சமூக நீதி கொண்ட தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறது பா.ஜனதா.

    கொடுக்கும் நிதியை நிறுத்தினால் நிர்வாகம் செயலிழந்து போய்விடும் என நினைக்கிறார்கள். கொள்கைகள், உரிமைகள் பறிக்கப்படும் போது பொதுமக்களிடம் சென்று பரப்புரை செய்யும் நிலையில் இருக்கிறோம்.

    பா.ஜனதா நாட்டில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. எவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் நாட்டில் ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே வழிபாடு எப்படி சாத்தியமாகும்.

    சாதி, மதம் இறை வழிபாட்டின் பெயரால் இந்த நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் மதசார்பின்மைக்கான எடுத்துக்காட்டான அரசாக அனைத்து மக்களுக்குமான அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×