என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தாளவாடி, தொட்டகாஞ்சனூர், அருள்வாடி, திகினாரை, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.
    • ஓடைகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் மற்றும் குளம், குட்டைகள் நிரம்பியது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் மாலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. நேற்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம் பகுதியில் ஒரே நாளில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.50 அடியை நெருங்கிவிட்டது.

    இதேபோல் பவானி, கொடிவேரி, குண்டேரிப்பள்ளம், பவானிசாகர், ஈரோடு, சத்தியமங்கலம், அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலை, எலந்தகுட்டைமேடு, நம்பியூர், தாளவாடி, கொடுமுடி போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    தாளவாடி, தொட்டகாஞ்சனூர், அருள்வாடி, திகினாரை, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. பின்னர் மழை தூரி கொண்டே இருந்தது.

    பலத்த மழையால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. 10-க்கும் மேட்பட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த காட்டாற்று வெள்ளத்தால் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலை மற்றும் சூசைபுரத்திலிருந்து பீம்ராஜ் நகர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலங்களை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். சுமார் மூன்று மணி நேரத்துக்கு பிறகு வெள்ளம் வடிந்ததும் வாகனங்கள் சென்றன. இங்குள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அதே போல் ஓடைகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் மற்றும் குளம், குட்டைகள் நிரம்பியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பலத்த மழையால் அள்ள புரத்தொட்டி கிராமத்தில் 6 வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

    இதேபோல் பவானி சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை காரணமாக தொட்டிபாளையம் என்ற கிராமத்தில் மழை வெள்ளம் சூழந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் காடையாம்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதன் காரணமாக பவானி, அந்தியூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வரட்டுபள்ளம்-107.20, பவானி-76, கொடிவேரி-52, குண்டேரிபள்ளம்-48.6, பவானிசாகர்-46.60, ஈரோடு-43, சத்தியமங்கலம்-40, அம்மாபேட்டை-39.60, மொடக்குறிச்சி-35, பெருந்துறை-32, சென்னிமலை-28, எலந்தகுட்டைமேடு-26.60, நம்பியூர்-26, தாளவாடி-24, கவுந்தப்பாடி-21.20, கொடுமுடி-10.20, கோபி செட்டிபாளையம்-7.50.

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இதனால் அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல் பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளி திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என பவானி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பேச்சுவார்த்தை மூலம் போனஸ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்
    • இல்லை எனில் வருகிற 20 ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தீபாவளி போனஸ், கூலி உயர்வு ஒப்பந்தம் சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும், அனைத்து கட்சி தொழில் சங்க கூட்டு குழுவிற்கும் போனஸ் ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படும்.

    கடந்த 2019 ம் வருடம் நடந்த மூன்றாண்டு ஒப்பந்த உடன்படிக்கை காலாவதியாகி விட்டதால் இந்த வருடம் புதிய ஒப்பந்தம் போட வேண்டும்.

    இது குறித்து தி.மு.க., தொழிற்சங்கமான எல்.பி.எப்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழில் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., ஆகிய தொழில் சங்கங்கள் மட்டும் போனஸ் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு 10 நாட்கள் தான் உள்ள நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்க வில்லை. மேலும் அனைத்து தொழில் சங்கமும் இணைந்து கூட்டு குழு ஏற்படுத்தி நோட்டீஸ் வழங்க வேண்டும் என முதலாளிகள் சங்கம் கூறி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் ஏ.ஐ.டி.யு.சி., தொழில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக நேற்று வருகிற 19 ம் தேதிக்குள் சென்னிமலை வட்டார விசைத்தறி நெசவாளர்களுக்கு சமூக பேச்சுவார்த்தை மூலம் போனஸ் வழங்க ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் இல்லை எனில் வருகிற 20 ம் தேதி முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

    • சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து சஞ்சய் அந்த சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்ததாக கூறப்படு கிறது.

    இது குறித்து சைல்டு லைன் ஆலோசகர் தீபக் குமாருக்கு தகவல் கிடை த்தது. இதையடுத்து அவர் கோபி செட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். ஆனால் சஞ்சய் தலை மறைவாகி விட்டார். போலீ சார் அவரை வலை வீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று போலீசார் சஞ்சயை பிடித்து விசாரித்தனர். இதை தொடர்ந்து அவரை போலீ சார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதை யடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இதே போல் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் தனசேகர் (22). இவர் கோபிசெட்டி பாளை யம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் பழகி வந்தார். இதையடுத்து அவர் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.

    இதையடுத்து தனசேகரை போலீசார் போக்சோ சட்ட த்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
    • இதில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை சார்பாக சென்னிமலை யூனியன், அம்மாபாளையம், பசுவப்பட்டி, வெள்ளோடு, ஈங்கூர், மற்றும் திப்பம்பாளையம் ஆகிய குறுவள மையங்களில் தொடக்க பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் திறம்பட செயல்படுத்துதல் நோக்கத்துடன் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி சென்னிமலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

    இப்பயிற்சியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் ஆசிரியர்கள் வகுப்பறை கையாளுதல் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கற்றல் உபகரணங்கள் செய்யும் முறை குறித்து ஆசிரியப்பயிற்றுநர் மற்றும் ஆசிரியக் கருத்தாளர்கள் விளக்கினார்கள்.

    வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோபிநாதன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    இதில் 68 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து 173 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் நிர்மல்குமார், அம்பிகா, மைதிலி, குமுதா, கஸ்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

    • மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த உக்கரம், குப்பன் துறை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (33). கூலி தொழிலாளி.

    கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் குப்பன் துறை பகுதியில் ஒரு வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த 2-ம் வகுப்பு மாணவியிடம் செந்தில்குமார் நைசாக பேச்சு கொடுத்து அந்த மாணவிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 20 வருட சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார். மேலும் இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    • அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பகுதி மற்றும் எண்ணமங்கலம் மலைப்பகுதியில் இரவில் கனமழை கொட்டியது.
    • வாழை, தென்னை ஆகியவை மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

    அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பகுதி மற்றும் எண்ணமங்கலம் மலைப்பகுதியில் இரவில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக வெள்ளித்திருப்பூர் பகுதியில் உள்ள மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கம்புதூர் ஏரி நிரம்பியது.

    5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி நிரம்பி தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அணையின் மதகு நள்ளிரவில் திடீரென உடைந்தது.

    ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் மாத்தூர், வெள்ளித்திருப்பூர், மூலக்கடை, பாரதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் மற்றும் வீடுகளை சூழ்ந்தது. மேலும் மாத்தூர் மாதிரி பள்ளியை சுற்றி தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

    வாழை, தென்னை ஆகியவை மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கிராம சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது.

    வீடுகள், வயல்களை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏரியில் ஏற்பட்ட மதகு உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • சுங்ககாரன்பாளையத்தை அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன், காண்டிராக்டர். இவரது மனைவி யுவராணி.
    • கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன்பாளையத்தை அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன், காண்டிராக்டர். இவரது மனைவி யுவராணி (36). இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரியாக படிக்காததால் விடுதியில் சேர்க்க யுவராணி முடிவு செய்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன் இரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாயை ஹாலோபிளாக் கல்லால் அடித்து கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை அடித்து கொன்ற அவரது 15 வயது மகனை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோட்டில் உள்ள இளைஞர் நீதிக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து அவர் கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

    • ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
    • பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி தட்டக்கரை வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலர்களாக சுரேஷ் (35), கணேஷ் (32) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் இருவரும் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் சுரேசுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கணேசை அங்குள்ள முள் புதருக்குள் தூக்கி வீசியது. இதில் அவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த ஒற்றை யானை பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தமிட்டதை அடுத்துஅங்கு வந்த தட்டக்கரை ரேஞ்சர் பழனிசாமி மற்றும் வனக்கா வலர்கள் அவர்களை மீட்டு, முதல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர்.

    பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் முக்கிய நீர்ப்பி டிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து 56 நாட்கள் 102 அடியில் பவானிசாகர் அணை நீடித்தது.

    மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,822 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • கதிர்வேல் கருமாண்டம் பாளையத்தில் இருந்து ஈரோடு காளைமாடு சிலை அருகே தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு வந்து கொண்டிருந்தார்.
    • சோலார் புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சிமெண்ட் லாரியும், பால் வேனும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

    மொடக்குறிச்சி:

    கொடுமுடி பாசூர் அருகே உள்ள செங்கோடம்பா ளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் கதிர்வேல் (26). பால்வேனில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கதிர்வேல் கருமாண்டம் பாளையத்தில் இருந்து ஈரோடு காளைமாடு சிலை அருகே தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் லக்காபுரம் பஞ்சாயத்து சோலார் புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே ஒரு சிமெண்ட் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சிமெண்ட் லாரியும், பால் வேனும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

    இந்த விபத்தில் பால் வண்டி உள்பக்கம் நசுங்கியதுடன் தூக்கி வீசப்பட்டு உருண்டு சாக்கடை கால்வாய் பகுதியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பால் வேன் டிரைவர் கதிர்வேல் வாகனத்திற்குள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

    சிமெண்ட் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் (40) என்பவருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் ஜேசிபி எந்திரம் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் கதிர்வேலை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது.
    • இதில் கஞ்சா விற்பனை செய்ததாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    போதை பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் ஈரோடு தாலுகா போலீசார் சென்னிமலை ரோடு, அணைக்கட்டு, வாய்க்கால்கரை ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக ஈரோடு சென்னிமலைரோடு சேனாதிபதிபாளையத்தை சேர்ந்த பழனிசாமியின் மகன் சஞ்சய் (வயது 21), ரங்கம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்த சங்கரின் மகன் சந்தோஷ் (22), சூரம்பட்டிவலசு ராமமூர்த்தி தெருவை சேர்ந்த செல்வத்தின் மகன் கவின்குமார் (21) ஆகியோரை கைது செய்தார்கள்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று தீவிர கஞ்சா ஒழிப்பு வேட்டை நடத்தப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வந்தார்கள். அதன்படி 118 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் கஞ்சா விற்பனை செய்ததாக மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வங்கி கணக்கு களை முடக்குவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    மேலும் 70 பேர் இனிவரும் காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நிர்வாகத்துறை நடுவர் முன்னிலையில் நன்னட த்தைக்கான பிணைய பத்திரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொதுமக்கள் தங்களது பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடப்பது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு 94880 10684 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் அல்லது குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறிஉள்ளார்.

    ×