என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாவட்டத்தில் 57 இடங்களில் மருத்துவ முகாம் வருகின்ற 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை , ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் வருகின்ற 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
இதில் வருகின்ற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பவானி தாலுகாவில் உள்ள குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , பெருந்துறை தாலுகாவில் உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் 19-ந் தேதி (புதன்கிழமை) பெருந்துறை தாலுகாவில் உள்ள முகாசிபிடாரியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
20-ந் தேதி (வியாழக்கிழமை) சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள மில்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள எழுமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த வாரம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அகில இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கானதனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயம் என்பதினால் அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்துதுறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (நீலநிறம்), ஆதார் அட்டை, புகைப்படம் -2 ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.
- அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- நெரிஞ்சிப்பேட்டையில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.
இதே போல் நேற்று முன் தினம் அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அண்ணாமவுடு ஏரி நிரம்பி உபரி வெளியேறி வருகிறது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் அந்தியூர், தவிட்டு பாளையம், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று இரவும் அண்ணா மடுவு பெரியேரி நிரம்பி உபரி நீர் அதிகளவு வெளியேறி வருகிறது. இதனால் அந்தியூர்- ஈரோடு ரோடு அண்ணாமடுவு பகுதியில் தண்ணீர் இடுப்பளவு சென்றது. இதனால் ரோடுகள் தெரியாத அளவுக்கு மூழ்கியது.
இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று 2-வது நாளாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில வாகனங்கள் மட்டும் தட்டு தடுமாறி சென்றது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்து மாற்றம் செய்தனர்.
இதையடுத்து அந்தியூரில் இருந்து ஈரோடு, பவானி செல்லும் வாகனங்கள் தவிட்டுபாளையம், வெள்ளித்திருப்பூர், பிரம்மதேசம் மற்றும் ஆப்பக்கூடல் வழியாக சென்று பவானி வந்தது. அங்கு இருந்து ஈரோட்டுக்கு வாகனங்கள் சென்றன. மேலும் பஸ், கார் உள்பட ஒரு சில வாகனங்கள் கவுந்தப்பாடி வழியாக ஈரோட்டுக்கு சென்றன.
மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ள பாளையத்துக்கு சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள நேரு நகர், கண்ணப்பன் வீதி, பஸ் நிலையம் பகுதி, பவானி ரோடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.
இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் உள்ள கிழக்கு அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதே போல் பலத்த மழை காரணமாக கெட்டி சமுத்திரம் ஏரியும் நிரம்பி உபரி வெளியேற்றப்பட்டது. இதனால் பர்கூர் ரோடு சங்காபாளையம் பகுதியில் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாகவும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பர்கூர், எண்ணமங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. அந்த வழியாக வந்த பஸ், லாரி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி கார்னர், புதுக்காடு, வட்டக்காடு வழியாக பர்கூர், எண்ணமங்கலம் பகுதிகளுக்கு வாகனங்கள் சென்றன.
அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெரிஞ்சிப்பேட்டை, சென்னம்பட்டி, மாத்தூர், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தடுப்பணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெள்ளத்திருப்பூர் பகுதியில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக மழை நீர் பெருக்கெடுத்து பாரதி நகர் பகுதியில் புகுந்தது.
மேலும் வெள்ளித்திருப்பூர்-சென்னம்பட்டி ரோட்டை மூழ்கடித்து சென்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. தண்ணீர் சூழ்ந்ததால் 2 வீடுகள் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசம்க உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு நெரிஞ்சிப்பேட்டையில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் 4 வீடுகளில் மழை நீர் புகுந்தது. மேலும் வயல்வெளிகள், ரோடுகளில் மழை நீர் ஆறாக ஓடுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பவானி-95, குண்டேரி பள்ளம்-75.20, அம்மாபேட்டை-67.40, வரட்டுபள்ளம்-42.6, தாளவாடி-36, கொடிவேரி-35, எலந்தகுட்டைமேடு-23.20, பெருந்துறை-21, சத்தியமங்கலம்-18, நம்பியூர்-17, பவானிசாகர்-16.20, கோபி-14.20, ஈரோடு-12, கவுந்தப்பாடி-12, சென்னிமலை-3.
- சந்தேகம் அடைந்த போக்குவரத்து கழக ஊழியர் வடிவேல்முருகன் என்பவர் சம்பவத்தன்று மாலை காந்தி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார்.
- போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கழிப்பறை சென்ற நிலையில் அங்கேயே இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஈரோடு:
கோவை குனியமுத்தூர், பி.கே.புதூர், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் காந்தி (57). இவர் விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார்.
தற்போது ஈரோடு அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலக செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் ஈரோடு அகில்மேடு வீதி, வாசுகி வீதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக காந்தி அலுவ லகத்துக்கு செல்லவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை.
சந்தேகம் அடைந்த போக்குவரத்து கழக ஊழியர் வடிவேல்முருகன் என்பவர் சம்பவத்தன்று மாலை காந்தி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அறை உள் பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து அவரது குடும்பத்தாருக்கும், ஈரோடு அரசு மருத்துவமனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் காந்தி நிர்வாணமாக அமர்ந்த நிலையில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கழிப்பறை சென்ற நிலையில் அங்கேயே இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதனையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் சாலையில் 3 யூனிட் கற்கள் அனுமதியின்றி விற்பனைக்காக ஏற்றி வந்தது தெரியவந்தது.
- லாரி டிரைவர் உதயகுமார் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கற்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் தலைமையில், வாணிப்புத்தூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் சாலையில் கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தபோது 3 யூனிட் கற்கள் அனுமதியின்றி விற்பனைக்காக ஏற்றி வந்தது தெரியவந்தது.
கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை டி.என்.பாளையம் குமரன் கோயில் ரோடு பகுதியை சேர்ந்த உதயகுமார் (32) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அதிகாரிகள் லாரி டிரைவரை விசாரித்ததில், புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பா ளையம் கிராமத்தில் உள்ள தனியார் கிரசர்க்கு கற்களை ஏற்றி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் இது குறித்து பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பிடிபட்ட லாரி டிரைவர் உதயகுமாரை விசாரித்த போது டிப்பர் லாரி டி.என்.பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, அனுமதியின்றி கற்களை விற்பனைக்காக ஏற்றி வந்த டிப்பர் லாரியை 3 யூனிட் கற்களுடன் பறிமுதல் செய்து, லாரி டிரைவர் உதயகுமார் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.
- போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்டவர்களின் விவர ங்களை சேகரித்ததோடு அவர்களின் கை ரேகைகளும் சேகரிக்கப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தின் நுழைவு பகுதி மற்றும் நடைமேடை பகுதியில் இரவில் படுத்து தூங்கும் சிலர் சிறுசிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வயதான சிலர் பயணிகளிடம் யாசகம் பெற்று அங்கேயே நிரந்தரமாக தங்கிக்கொள்கின்றனர். வயது முதிர்ச்சியால் இறந்து விடும் பட்சத்தில் இறந்த நபர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இரவில் படுத்து தூங்குபவர்களின் விவரங்களை சேகரிக்கும்படி போலீசாருக்கு மாவட்ட காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலைய வளாகத்தில் தங்கி இருந்த 30-க்கும் மேற்பட்டவர் களின் பெயர், ஊர் உள்ளிட்ட விவர ங்களை சேகரித்ததோடு, அவர்களின் கை ரேகை களும் சேகரிக்கப்பட்டன.
- கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நஞ்சை புளியம்பட்டியில் உள்ள தற்காலிக நெல் கொள்மதல் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
- இதனால் விவசாயி களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்து க்குக்குட்பட்ட நஞ்சை புளியம்பட்டி, புஞ்சை துறையம்பாளையம் பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது.
பெரும்பான்மையான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நெற்பயிர்கள் அறுவடை முடிந்த நெல் மணிகளை விவசாயிகளிடம் அரசு நேரடியாக தற்காலிக டெண்டர் அமைத்து கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் பெரும்பாலான தற்காலிக நெல்கொள்முதல் நிலையம் களிமண், மண் தரை கொண்ட களங்களாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நஞ்சை புளியம்பட்டியில் உள்ள தற்காலிக நெல் கொள்மதல் நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் விவசாயிகள் கொட்டிய நெல் மணிகள் மழை காலங்களில் நீர் சூழ்ந்து கொள்வதாலும், ஈரப்பதம் குறையாமல் இருப்பதினால் கொள்முதல் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் விவசாயி களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே சிமெண்ட் களத்துடன் கூடிய நிரந்திர கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நிதியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் நஞ்சை புளியம்பட்டி ஊராட்சியில் களம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நஞ்சை புளியம்பட்டி ஊராட்சியில் வருவாய் துறைக்கு உட்பட சர்வே எண்:44-ல் சுமார் 40 சென்ட் கொண்ட அரசு புறம்போக்கு நிலத்தில் 50 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட களம் அமைக்கப்பட உள்ளது.
இந்த இடம் முழுவதும் சிமெண்ட் களம் அமைத்து அதை நிரந்திர கொள்முதல் நிலையமாக அமைத்து கொடுத்தால் விவசாயி களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
முன்னதாகவே டி.என்.பாளையம் ஒன்றியத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டி பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பெரியமடத்துபாளையம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- இன்று பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள பெரியமடத்து பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிலில் மஞ்சள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு பக்தி மற்றும் கிராமிய பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் ஆன்மீக வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி சொற்பொழிவும் நடைபெறுகிறது.
நாளை காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், மதியம் மகா தரிசனம் பூஜையும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெறுகிறது. கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் கலியுக வரதராஜ பெருமாளும், தாயார் மகாலட்சுமியும், தும்பிக்கையாழ்வார், இராமானுஜர், ஆஞ்சநேயர், கருடர், துவார பாலகர்கள் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரிய மடத்து பாளையம் கோவில் தலைவர் ஆறுமுகம் செய்துள்ளார். பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
- நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது.
- இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது.
ஈரோடு, அக். 14-
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வானது ஈரோடு அடுத்த கருந்தேவன்பாளையம் அல்-அமீன் பொறியியல் கல்லூரி, துடுப்பதி செங்குந்தர் பொறியியல் கல்லூரி, டி.என்.பாளையம் ஜே.கே.கே.பொறியியல் கல்லூரி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, கோபி பி.கே.ஆர்., கலை கல்லூரி, தாசம்பாளையம் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, திண்டல் வி.இ.டி. கலை கல்லூரி என 8 மையங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடங்கியது.
இந்த தேர்வினை மாவட்டம் முழுவதும் 12,660 பேர் எழுத உள்ளனர். ஒவ்வொரு மையங்களிலும் கண்காணிப்பாளர்கள், கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உதவியாளர் (ஸ்கிரைப்) மூலம் தேர்வு எழுதினர். காலை முதலே தேர்வர்கள் அந்தந்த தேர்வு மையத்திற்கு ஆர்வத்துடன் வந்தனர்.
இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது. இதற்காக என்ஜினீயர் கல்லூரியில் உள்ள கணினி வகுப்புகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டிருந்தன. காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. முறைகேடுயின்றி தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
- பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.
- இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த கண்ணகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேமலை (82). இவரது மனைவி பழனியம்மாள். சேமலை மகனுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சேமலை யும், அவரது மகனும் வீட்டின் காம்பவுண்டுக்குள் பழைய பொருட்கள் போட்டு வைக்கும் சிமெண்ட் சீட் செட்டிற்குள் இருந்த பழைய பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது பழைய பொருட்களில் இருந்து வெளியே வந்த பாம்பு எதிர்பாராத விதமாக சேமலையை கடித்து விட்டது.
இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நம்பியூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேமலை அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சேமலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் நிலங்களை அளவீடு செய்ய ரோவர் கருவி மூலம் சேட்டிலைட் சர்வே அளவீடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- இந்த பணியில் செல்லியாண்டியம்மன் கோவில் செயல் அலுவலர் பிரேமா, நில அளவையாளர்கள் கார்த்தி, அருள் மற்றும் கோவில் பணியாளர்கள் என பலர் ஈடுபட்டு உள்ளனர்.
பவானி:
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழக கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு படி பவானி செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமாக செங்காடு, சொக்காரம்மன் காடு மற்றும் திருவள்ளுவர் நகர் போன்ற பகுதியில் சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தினை அளவீடு செய்திட செல்லியாண்டியம்மன் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
பவானியில் உள்ள ஆலய நிலங்கள் மீட்பு பணி மேற்கொள்ள ஓய்வு பெற்ற தாசில்தார் பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் செல்லியாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள 9 ஏக்கர் 90 சென்ட் நிலங்களை அளவீடு செய்ய ரோவர் கருவி மூலம் சேட்டிலைட் சர்வே அளவீடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் செல்லியாண்டியம்மன் கோவில் செயல் அலுவலர் பிரேமா, நில அளவையாளர்கள் கார்த்தி, அருள் மற்றும் கோவில் பணியாளர்கள் என பலர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த அளவீட்டு பணிகள் முடிவடைந்த பின்னர் ஆக்கிரமிப்புகள் செய்திருப்பது கண்டறியப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னர் தமிழக அரசு உத்தரவு பெற்று ஆக்கிரமிப்பு இடத்தினை அகற்றப்பட்டு இந்து அறநிலைத்துறை மூலம் எல்லை கற்கள் நடப்பட உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார்.
- அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
நம்பியூர்:
ஈேராடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (26). இவர் நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டம்பா–ளையம் மற்றும் லாகம்பாளையம் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் துலுக்கன்தோட்டம் என்ற பகுதியை சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பித்தார். மேலும் இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத்தை சந்தித்தார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் 20 கார்த்திக்கிடம் கொடுத்து அனுப்பினர். அவர் நேற்று மாலை கொட்டக்காட்டுபாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து அருண்பிரசாத்திடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருண்பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
இவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுகள் இன்னும் நிறைவடையாத நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கி உள்ளார்.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
- இதேபோல் 33.50 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதைத்தொ டர்ந்து 56 நாட்களுக்கு 102 அடியில் பவானிசாகர் அணை நீடித்தது. இந்நிலையில் மழை ப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.33 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 2,115 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி என மொத்தம் 2,100 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
இதேப்போல் தொடர் மழைக்காலமாக மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 39.32 அடியாக உள்ளது.
இதேபோல் 33.50 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடியாக உள்ளது. இந்த 2 அணைகளும் கிட்ட த்தட்ட நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்றொரு பிரதான அணையான பெரும்பள்ளம் அணை 21.76 அடியில் உள்ளது.






