search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூரில் கனமழை கொட்டியது- ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

    • அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நெரிஞ்சிப்பேட்டையில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.

    இதே போல் நேற்று முன் தினம் அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அண்ணாமவுடு ஏரி நிரம்பி உபரி வெளியேறி வருகிறது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் அந்தியூர், தவிட்டு பாளையம், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது.

    இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நேற்று இரவும் அண்ணா மடுவு பெரியேரி நிரம்பி உபரி நீர் அதிகளவு வெளியேறி வருகிறது. இதனால் அந்தியூர்- ஈரோடு ரோடு அண்ணாமடுவு பகுதியில் தண்ணீர் இடுப்பளவு சென்றது. இதனால் ரோடுகள் தெரியாத அளவுக்கு மூழ்கியது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று 2-வது நாளாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சில வாகனங்கள் மட்டும் தட்டு தடுமாறி சென்றது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்து மாற்றம் செய்தனர்.

    இதையடுத்து அந்தியூரில் இருந்து ஈரோடு, பவானி செல்லும் வாகனங்கள் தவிட்டுபாளையம், வெள்ளித்திருப்பூர், பிரம்மதேசம் மற்றும் ஆப்பக்கூடல் வழியாக சென்று பவானி வந்தது. அங்கு இருந்து ஈரோட்டுக்கு வாகனங்கள் சென்றன. மேலும் பஸ், கார் உள்பட ஒரு சில வாகனங்கள் கவுந்தப்பாடி வழியாக ஈரோட்டுக்கு சென்றன.

    மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ள பாளையத்துக்கு சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    மேலும் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள நேரு நகர், கண்ணப்பன் வீதி, பஸ் நிலையம் பகுதி, பவானி ரோடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

    இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் உள்ள கிழக்கு அரசு பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதே போல் பலத்த மழை காரணமாக கெட்டி சமுத்திரம் ஏரியும் நிரம்பி உபரி வெளியேற்றப்பட்டது. இதனால் பர்கூர் ரோடு சங்காபாளையம் பகுதியில் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாகவும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து பர்கூர், எண்ணமங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. அந்த வழியாக வந்த பஸ், லாரி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி கார்னர், புதுக்காடு, வட்டக்காடு வழியாக பர்கூர், எண்ணமங்கலம் பகுதிகளுக்கு வாகனங்கள் சென்றன.

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெரிஞ்சிப்பேட்டை, சென்னம்பட்டி, மாத்தூர், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தடுப்பணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வெள்ளத்திருப்பூர் பகுதியில் கன மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக மழை நீர் பெருக்கெடுத்து பாரதி நகர் பகுதியில் புகுந்தது.

    மேலும் வெள்ளித்திருப்பூர்-சென்னம்பட்டி ரோட்டை மூழ்கடித்து சென்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. தண்ணீர் சூழ்ந்ததால் 2 வீடுகள் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசம்க உயிர் சேதம் ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு நெரிஞ்சிப்பேட்டையில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் 4 வீடுகளில் மழை நீர் புகுந்தது. மேலும் வயல்வெளிகள், ரோடுகளில் மழை நீர் ஆறாக ஓடுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானி-95, குண்டேரி பள்ளம்-75.20, அம்மாபேட்டை-67.40, வரட்டுபள்ளம்-42.6, தாளவாடி-36, கொடிவேரி-35, எலந்தகுட்டைமேடு-23.20, பெருந்துறை-21, சத்தியமங்கலம்-18, நம்பியூர்-17, பவானிசாகர்-16.20, கோபி-14.20, ஈரோடு-12, கவுந்தப்பாடி-12, சென்னிமலை-3.

    Next Story
    ×