search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் பால் வேன் டிரைவர் பலி
    X

    சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் பால் வேன் டிரைவர் பலி

    • கதிர்வேல் கருமாண்டம் பாளையத்தில் இருந்து ஈரோடு காளைமாடு சிலை அருகே தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு வந்து கொண்டிருந்தார்.
    • சோலார் புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சிமெண்ட் லாரியும், பால் வேனும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

    மொடக்குறிச்சி:

    கொடுமுடி பாசூர் அருகே உள்ள செங்கோடம்பா ளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் கதிர்வேல் (26). பால்வேனில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கதிர்வேல் கருமாண்டம் பாளையத்தில் இருந்து ஈரோடு காளைமாடு சிலை அருகே தனியாருக்கு சொந்தமான பால் பண்ணைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அவர் லக்காபுரம் பஞ்சாயத்து சோலார் புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே ஒரு சிமெண்ட் லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் சிமெண்ட் லாரியும், பால் வேனும் நேருக்குநேர் மோதி விபத்தானது.

    இந்த விபத்தில் பால் வண்டி உள்பக்கம் நசுங்கியதுடன் தூக்கி வீசப்பட்டு உருண்டு சாக்கடை கால்வாய் பகுதியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பால் வேன் டிரைவர் கதிர்வேல் வாகனத்திற்குள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

    சிமெண்ட் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் (40) என்பவருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி போலீசார் ஜேசிபி எந்திரம் உதவியுடன் வாகனத்தை மீட்டனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் கதிர்வேலை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×