என் மலர்
ஈரோடு
- தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
- வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குவைத்தில் நடந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில், மத்திய அரசு ரூ.2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது. அதனை ரூ.25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
நீட் தேர்வில் நடைபெற்ற ஏராளமான குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கும். தி.மு.க. வெற்றிக்காக பாடுபடுவோம்.
வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வனத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து, தற்பொழுது பட்டுப்போன மூங்கில் மரங்களை வனப்பகுதியில் வாழும் பழங்குடியினரே அதனை எடுத்துச்செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை மிதித்தது.
- யானை கிராமத்துக்குள் புகுந்து வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஈரோடு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. யானைகள் தோட்டத்துக்குள் புகுவதை தடுக்கும் வகையில் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் காவலில் இருப்பது வழக்கம்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்த வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகத்தில் சுஜில் குட்டை என்னும் இடத்தில் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் நம்பியூரைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 25) என்ற வாலிபர் தோட்டத்தில் இரவு நேர காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
தோட்டத்தில் பூசணிக்காய் பயிரிடப்பட்டிருந்தது. இதனால் இவர் தினமும் இரவில் வந்து இங்கு படுத்து தூங்குவது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல் வெங்கடாசலம் தோட்டத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வெங்கடாசலம் தோட்டத்திற்குள் புகுந்தது. நள்ளிரவு என்பதால் வெங்கடாசலம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனால் யானை வருவதை அவர் கவனிக்கவில்லை. தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெங்கடாசலத்தை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடாசலம் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
சத்தம் கேட்டு அருகில் தோட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வெங்கடாசலம் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தோட்டத்தில் யானை நிற்பதையும் பார்த்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், தீபந்தத்தை காட்டியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கும், சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடாசலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை கிராமத்துக்குள் புகுந்து வாலிபரை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அச்சத்துடன் உள்ளனர்.
- கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 2 காட்டு யானை புகுந்தது.
- பட்டாசு வெடித்தும், தீ கம்பத்தை காட்டியும் யானைகளை விரட்டினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில சமயம் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை தாளவாடி அருகே திகினாரை கடுக்காய்மரம் பிரிவு பகுதியில் நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 2 காட்டு யானை புகுந்தது.
இதை தொடர்ந்து யானைகள் தோட்டத்தில் இருந்த மின்கம்பத்தையும், டிரான்ஸ்பார்மர் கம்பத்தையும் உடைத்து சேதம் செய்துள்ளது. சத்தம் கேட்டு இரவு காவலில் இருந்த விவசாயிகள் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது 2 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து யானைகளை விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், தீ கம்பத்தை காட்டியும் யானைகளை விரட்டினர்.
தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த 2 காட்டு யானைகளும் மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றன. இதன் பிறகே விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
- குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.82 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து 57 அடியை எட்டியது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 607 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 57.58 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.63 அடியாக உள்ளது.
இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23.82 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
- வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
- தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதை 21 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்வதற்கான மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.
திம்பம் மலைப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. விபத்து ஏற்படும் நேரங்களில் தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.
இந்நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு காய்கறி லோடுகளை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று திம்பம் மலைப்பகுதியில் உள்ள 7-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினர். 7-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்ததால் தமிழக-கர்நாடக இடையேயான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பிறகு பண்ணாரியில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேன் மீட்கப்பட்டது. அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
- பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஈரோடு:
ஈரோடு என்.ஜி.ஓ. காலனி, 7-வது வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஆடிட்டர். இவரது மனைவி சாதனா. இவர் தனியார் கல்லூரி பேராசிரியை. இவர்களது ஒரே மகன் ஆம்புரோஸ் பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று சுப்பிரமணி தேனியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்று விட்டார். சுப்பிரமணி வாடகை வீட்டில் மேல்மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் உரிமையாளரின் மகன் மேல் மாடிக்கு சென்ற போது சுப்பிரமணி வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சுப்பிரமணிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். உடனே சுப்பிரமணி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்பிரமணி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 150 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
தகவல் கிடைத்ததும் டவுன் டி.எஸ்.பி ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் வைரம் ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சுப்பிரமணி தற்போது ஈரோடு வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகுதான் மேலும் வெள்ளிப்பொருட்கள், வேறு ஏதேனும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதா என்பது குறித்து முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
- யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
- கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை மீட்பு.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சர கங்கள் உள்ளன. இங்கு ஏரா ளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலை ஓரங்கள் மற்றும் கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உச்சி மலை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு பாறைகளுக்கு இடையே அந்த யானை சிக்கிக்கொண்டது. அந்த யானையால் மேற்கொண்டு நகர முடியாமல் நின்றது.
இதையடுத்து அந்த யானை பிளறியது. சத்தத்தை கேட்டு அந்த பகுதியாக வந்த பொதுமக்கள் யானை பாறைகளுக்கு இடையே சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானை ஒரு வழியாக அந்த பாறையின் இடையில் இருந்து வெளியே வந்தது.
பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போ ன்களில் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைத்தள ங்களில் வெளியிட்டுள்ள னர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.
- ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி தலமலை ஊராட்சிக்கு உட்பட்ட தடசலட்டி, இட்டரை மற்றும் மாவநத்தம் ஆகிய மலைகிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் தொழில் ஆடு, மாடு மேய்ப்பது, கூலி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக இங்கு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி மாவநத்தம் கிராமத்தில் மாரம்மா (40) , தடசலட்டி கிராமத்தில் கடந்த கவுரியம்மாள் (65), ரங்கன் (75), மாதி (85) என 4 பேர் வாந்தி பேதியால் திடீரென உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 5-ந் தேதி மாரே (67) என்பவரும், இட்டரை கிராமத்தில் கேலன் (60) என்பவர் உட்பட மொத்தம் 6 நபர்கள் கடந்த வாரங்களில் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து வயதானவர் உயிரிழந்தது மலைகிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நேற்று கிராமங்களில் மருத்துவக் குழுவினர், உணவு பாதுகாப்புத் துறை, வருவாய்த் துறை மற்றும் போலீசார் ஆகியோர் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மேலும் பஞ்சாயத்து மூலம் குளோரின் பவுடர்கள் போடப்பட்டுள்ளது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீரை பயன்படுத்துவதன் மூலமும், குட்டை நீரை குடிநீராக குடித்ததாலும், மேலும் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதாலும் இங்குள்ள வயதானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வாந்தி பேதி ஏற்பட்டு மேற்கண்ட நபர்கள் இறந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தடசலட்டி கிராமத்தை சேர்ந்த நீலி மற்றும் அவரது கணவர் பாலன் ஆகியோர் உடல்நிலை சரியில்லாததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இட்டரை கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் சத்தியமங்கலம் தனியார் மருத்துவ மனையிலும், லட்சுமி என்பவர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாவநத்தம், இட்டரை, தடசலட்டி ஆகிய 3 கிராமங்களும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு செல்போன் தொடர் சேவை கூட இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டால் மற்றவர்களை தொடர்பு கொள்ளாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்த மலைகிராமத்தில் மருத்துவ குழு கிராமத்தில் தொடர்ந்து முகாமிட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், 108 ஆம்புலன்ஸ் அந்த கிராமத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இலகுரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சென்று வருகிறது.
- கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பரவலாக மழை செய்து வருகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சென்று வருகிறது.
சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை வழியாக மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த வழித்தடத்தை வாகன ஓட்டிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பரவலாக மழை செய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதை சாலையின் ஓரங்களில் மண் சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்வதற்கு மிகவும் இடையூறாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
தற்போது பெய்துள்ள மழை காரணமாக சாலையின் ஒரங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதையில் உள்ள சாலைகள் ஆங்காங்கே மண்ணரிப்பு ஏற்பட்டு குழிகளாக இருப்பதால் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் மிகுந்த சிரமத்தில் வர வேண்டிய நிலை உள்ளதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
- கருணாநிதியின் பேனாவுடன் கூடிய மணிமண்டபமும் அமைத்துள்ளார்.
ஈரோடு:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநி தியின் 101-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாட ப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஓவியரும், கலை ஆசிரியருமான ஈரோடு இந்திரா நகர் மோசிக்கீரனார், 2- வது வீதியை சேர்ந்த சவுகத் அலி மகன் ஷானவாஸ் (வயது 29) பிரஸ் உதவியின்றி தனது நாக்கால் வெள்ளை சார்ட்டில் கருப்பு மையை பயன்படுத்தி 3 அடி நீளம், 2 அடி அகலத்தில் 20 நிமிடத்தில் கருணாநிதியின் படத்தை வரைந்து அசத்தி உள்ளார்.
இந்த ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷானவாஸ் ஏற்கனவே, சலவை சோப்புகளை கொண்டு கருணாநிதியின் மணிமண்டபமும், கருணாநிதியின் பேனாவுடன் கூடிய மணிமண்டபமும் அமைத்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு தமிழ் வாழ்க என்ற வாசகங்கள் அடங்கிய ரப்பர் ஸ்டாம்பினை பயன்படுத்தி மஞ்சப்பையில் கருணாநிதியின் உருவப்படத்தை வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஷானவாஸ் ஓவிய திறமையை பாராட்டி கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி கலை வளர்மணி விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
- சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பச்சாம் பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை மகன்கள் ராஜேந்திரன், சிவகுமார். 2 பேரும் அண்ணன், தம்பிகள். இருவரும் அருகருகே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கூலி வேலைபார்த்து வருகின்றனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பருவாச்சியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குடும்பத்துடன் சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு அந்தியூர் மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் மற்றும் சிவகுமார் வீட்டில் இடி தாக்கியது. இதைத்தொடர்ந்து 2 பேர் வீடும் சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எறிய தொடங்கியது.
வீடுகளிலும் தீ எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் இதுகுறித்து உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் 2 வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்க பணம், 5 பவுன் நகை, தொலைக் காட்சி பெட்டிகள், கட்டில், பீரோ, பாத்திரங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து கருகிவிட்டன. நல்ல வாய்ப்பாக இடி தாக்கிய போது 2 பேர் வீட்டிலும் ஆட்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ராஜேந்திரன், சிவகுமார் வீட்டை பார்த்து கதறி அழுதனர். அந்தியூர் தாசில்தார் கவியரசு, நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், பச்சாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.
- மரத்தின் மீது டார்ச் லைட் அடித்து பார்த்தபோது யானை பலாப்பழத்தை சாப்பிட்டு கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பக்கத்து தோட்டத்துக்குள் யானை வந்துவிடக்கூடாது என்பதற்காக யானையை விரட்ட முயன்றார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த 2 மாதமாக கடும் வெப்பம் பதிவாகி வந்ததால் வனப்பகுதியில் வறட்சி நிலவியது. நீர்நிலைகள் வறண்டதால் வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது.
இந்நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் அம்மன் கோவில் அருகே உள்ள பலாப்பழம் மரத்தின் மீது தனது இரு கால்களை கீழ் வைத்தும், மற்றொரு இரு கால்களையும் மரத்தின் மீது வைத்து பலாப்பழங்களை பறித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது. அதன் அருகே விவசாய தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயி ஒருவர் யானை சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வந்து மரத்தின் மீது டார்ச் லைட் அடித்து பார்த்தபோது யானை பலாப்பழத்தை சாப்பிட்டு கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பக்கத்து தோட்டத்துக்குள் யானை வந்துவிடக்கூடாது என்பதற்காக யானையை விரட்ட முயன்றார். ஆனால் அந்த காட்டு யானை அந்தப் பகுதியை விட்டு அசையவில்லை. உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு விரட்டினர். இப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதால் நெய்தாலபுரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.






