என் மலர்
ஈரோடு
- பயங்கர சத்தத்துடன் 20 மீட்டர் அளவுக்கு சுற்றுச் சுவர் தானாகவே இடிந்து கீழே விழுந்தது.
- தகவல் கிடைத்ததும் ஊழியர்கள் விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் கடந்த கற்களை அப்புறப்படுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் அழகேசன் நகரில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு 4 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. குடியிருப்பின் முன்புறம் 8 அடி உயர சுற்று சுவர் பிரதான சாலையை ஒட்டி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் 20 மீட்டர் அளவுக்கு சுற்றுச் சுவர் தானாகவே இடிந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுற்றுச்சூழல் கற்கள் சாலையின் ஒரு புறம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வழியாக தான் ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், சென்னை போன்ற ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகிறது. சுவர் விழுந்தபோது அந்த இடத்தில் யாரும் இல்லாத தால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊழியர்கள் விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் கடந்த கற்களை அப்புறப்படுத்தினார்.
இதனால் சேலம்-நாமக்கல் -ஈரோடு சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.
- பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
- குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோபி,
கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 30-ந் தேதி காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடி மரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது. 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற்றது.
காலை 9மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி இன்றுமாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள்.
இதை யொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை கோயில் அடிவாரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.
நாளை 6-ந் தேதி தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம்வருதல்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வானை உடன் சண்முக பெருமான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இளவயதில் பங்கேற்ற, வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
ஈரோடு,
விளையாட்டு துறையில் சாதனை படைத்து நலிந்த நிலையில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ஓய்வூதிய உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதற்கு தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.
அந்த போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்,
இந்திய ஒலிம்பிக் சங்கத்தினர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச அல்லது தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளவயதில் பங்கேற்ற, வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். 31-1-2023 அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
மாத வருமானம் ரூ.15 ஆயிரம் வரை இருக்க வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியம் பெற்று வந்தால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது.
இந்த விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி மின்னஞ்சல் மூலமாக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து–ள்ளார்.
- ஆண்டுக்கான விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடக்கும்.
- உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து பரிசீலனை செய்யப்படும்.
ஈரோடு,
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 ஆயிரத்துடன் பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
இதற்கு 1-4-2023 அன்று 15 வயது நிரம்பியவர்களும், 31-3-2023 அன்று 35 வயதுக்குள் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராகவும், சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியவராகவும் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்களாக இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து பரிசீலனை செய்யப்படும்.
இந்த விருதுக்கு www.sdat.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாக வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
- 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை
- அணைக்கு வினாடிக்கு 1,389 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர்.
இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.25 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,389 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல்காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், என மொத்தம் அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாலை, 5:15 மணிக்கு புறப்படும்
- ஈரோடு– ஜோலார்பேட்டை ரெயில் எண்: 06412 ஈரோட்டில் இருந்து காலை, 6:25 மணிக்கு புறபப்படும்
ஈரோடு,
ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு இரு மார்க்கங்களிலும் செல்லும் ரெயில்கள் சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம்– ஜோலார்பேட்டைக்கு இடையே ரெயில் தடத்தில் பொறியியல் பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால், ஈரோடு– ஜோலார்பேட்டை ரயில் எண்: 06846, ஈரோட்டில் இருந்து மாலை, 4:10-க்கு புறப்படும் ெரயில் இன்று (புதன்கிழமை) 6, 7, 8 ஆகிய, 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதுபோல, ஜோலார்பேட்டை – ஈரோடு ரெயில் எண்: 06845, ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாலை, 5:15 மணிக்கு புறப்படும் ரெயில், வரும், 6, 7, 8, 9 ஆகிய, 4 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ஈரோடு– ஜோலார்பேட்டை ரெயில் எண்: 06412 ஈரோட்டில் இருந்து காலை, 6:25 மணிக்கு புறபப்படும் ரெயில், வரும், 7 -ந் தேதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
அதுபோல, ஜோலார்பேட்டை – ஈரோடு ரெயில் எண்: 06411, ஜோலார்பேட்டையில் இருந்து மதியம், 3:10 மணிக்கு புறப்படும் ரயில் வரும், 7-ந் தேதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது.
- தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய பிரவீன் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
- பிரவீன் குமார் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி அடுத்த மேல் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(23). பங்குனி உத்திர திருவிழாவிற்காக அதே ஊரைச் சேர்ந்த சிலருடன் பிரவீன்குமாரும் குழுவாக தீர்த்தம் எடுப்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றனர்.
அங்கு சாமி கும்பிட்டு காவடி தீர்த்தம் எடுப்பதற்காக அதிகாலை ஈரோடு மாவட்டம் கொடுமுடி வந்துள்ளனர்.
அப்போது பிரவீன்குமார் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது பிரவீன்குமார் திடீரென சுழலில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. இதை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய பிரவீன் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரவீன்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் குமார் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- 6800 தேங்காய்கள் 17 ரூபாயிலிருந்து 22 ரூபாய் வரையிலும், 41 மூட்டைகள்
- வர்த்தகத்தில் இரண்டு லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று விவசாய விலை பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்திற்கு அந்தியூர் மற்றும் அந்தியூர் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாய விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் 6800 தேங்காய்கள் 17 ரூபாயிலிருந்து 22 ரூபாய் வரையிலும், 41 மூட்டைகள் தேங்காய் பருப்பு 77 ரூபாயிலிருந்து 83 ரூபாய் வரையிலும்,
ஐந்து மூட்டைகள் எள் 158 ரூபாயிலிருந்து 159 ரூபாய் வரையிலும், எட்டு மூட்டைகள் ஆமணக்கு 68 ரூபாயிலிருந்து 73 ரூபாய் வரையிலும், இரண்டு மூட்டைகள் தட்டைப் பயிறு 38 ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
வர்த்தகத்தில் இரண்டு லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் ஞானசேகர் தெரிவித்தார்.
- எஸ்.எஸ். எல். சி. பொது தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
- வினாத்தாள் மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
ஈரோடு,
தமிழ்நாட்டில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ந் தேதியும், பிளஸ்- 1 பொதுத்தேர்வு இன்றுடனும் நிறைவு பெறுகிறது.
இதைத்தொடர்ந்து எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு நாளை(வியாழக்கிழமை) தொடங்குகிறது. வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ். எல். சி. பொது தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
இவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக 113 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக 6 மையங்கள் என மொத்தம் மாவட்டத்தில் 119 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் ஈரோடு உட்பட மாவட்டத்தில் 7 கட்டு காப்பு மையத்தில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வினாத்தாள் மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாளை தேர்வையொட்டி அந்தந்த தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள யுஆர்சி பள்ளி, கோபியில் உள்ள குருகுலம் பள்ளி, சத்தியமங்கலத்தில் ராகவேந்திரா பள்ளி என 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்த பள்ளிக்கல்வித்துறை தேதி அறிவித்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும்.
- மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
- மதுப்பிரியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று விற்பனை செய்கின்றனர்.
அம்மாபேட்டை,
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் விடுமுறை விடப்பட்டது.ஆனால் அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மது விற்பனை நடைபெற்றது.
வழக்கமான நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும் முக்கிய அரசு விடுமுறை தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
இதுகுறித்து அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கூறுகையில் அம்மாபேட்டை,பூதப்பாடி,,மாணிக்கம்பாளையம், கோனேரிப்பட்டி பிரிவு,பூனாட்சி முளியனூர், குருவரெட்டியூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இந்தக் கடைகள் நேற்று மூடப்பட்டிருந்த போதிலும் கடைகளின் அருகிலேயே மறைவான பகுதிகளில் மது விற்பனை காலை 8 மணி முதல் இரவு வரை நடைபெற்று வந்தது. அது மட்டுமின்றி குறிச்சி சைபன் வாய்க்கால் கரைப்பகுதிகளிலும், சீலம்பட்டி, சிங்கம்பேட்டை உள்ளிட்ட வாய்க்கால்கரை பகுதிகளிலும் அங்காங்கே மறைவான பகுதிகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
மேலும் சிலர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் பதுக்கி வைத்து மதுப்பிரியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று விற்பனை செய்கின்றனர்.
என்னதான் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு நேரக் கட்டுப்பாடுகள் விதித்தாலும் விடுமுறை என அறிவித்தாலும் இப்பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று தான் வருகிறது.
கண்ட இடங்களில் மது விற்பனை நடைபெறுவதால் மதுவினை குடித்துவிட்டு ஆங்காங்கே பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் பாட்டில்கள் உடைந்து இரு சக்கர வாகனங்களில் பஞ்சர் ஆவது, நடந்து செல்லும் கூலி தொழிலாளர்கள் காலில் குத்தி ரத்த காயம் ஏற்படுகிறது.
மேலும் பள்ளி,கல்லூரி மாணவிகள், பெண்கள் ரோட்டில் செல்லும்போது மது பாட்டில்கள் கண்ட இடங்களில் இருப்பதை கண்டு முகம் சுழித்து செல்கின்றனர்.
இதை தவிர்க்க அதிகாரிகள் முறையான அனுமதியின்றி விற்பனை செய்யும் மது விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
- கால்வாய்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
கோபி,
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன கால்வாய்கள் மூலம் திறக்கப்படுகிறது.
இவ்விரு கால்வாய்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், செங்கரை, மோதூர், பிள்ளையார் கோவில் துறை,வாணிபுத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தங்கள் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கொண்டு செல்ல போதுமான வாகன வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கின்றன.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் லாரிகள் மூலம் பாதுகாப்பான இடத்தில் வைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- காலை அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும், அம்மனிடம் வாக்கு கேட்டல் நிகழ்வும் நடைபெற்றது.
- விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் சிறுவர் சிறுமிகள், குண்டம் இறங்கினார்கள்.
அந்தியூர்,
அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்,தேர் திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி, எருமை கிடா வெட்டுதல், கொடியேற்றம் பிரம்பு பூஜை பச்சை மாவு படையல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி இன்று காலை குண்டம் இறங்கும் விழா நடந்தது. முன்னதாக இன்று காலை அம்மன் அழைக்கும் நிகழ்ச்சியும், அம்மனிடம் வாக்கு கேட்டல் நிகழ்வும் நடைபெற்றது.
அம்மன் வாக்கு கொடுத்ததும் தலைமை பூசாரி குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து வீர மக்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர்.
இதையடுத்து விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் சிறுவர் சிறுமிகள், குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேலும் பக்தர்கள் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி தலைமையில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி,மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் கோவில் செயல் அலுவலர் நந்தினிஸ்வரி, அலுவலர்கள் செந்தில்குமார், தணிகாசலம் மற்றும் அலுவலக பணியாளர்கள் பக்தர்களுக்கு,தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்திருந்தார்கள்,
மேலும் இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும், திங்கட்கிழமை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.






