என் மலர்
ஈரோடு
- விவசாயிகள் 4,364 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- ரூ.48 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,364 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 7 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 77 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2,001 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.48 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.
- கோவிலில் இருந்த ஒரு உண்டியல் திருடப்பட்டு இருந்தது
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள ஓங்கன் புரம் என்ற ஊரில் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி சென்றார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவிலில் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது கோவிலில் இருந்த 2 உண்டியலில் ஒரு உண்டியல் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது திருடப்பட்ட உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.
- முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், நாடு செழித்து சகல நன்மைகளும் எல்லோருக்கும் வேண்டி அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அக்னி நட்சத்திர விழா அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா வருகிற 11-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மாலை சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அதிகாலை 5 மணிக்கு மேல் சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக்குடங்களுடன் தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பா ளையம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்கள் வழியாக மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.
தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் சென்னிமலை மலை கோவிலில் கணபதி ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், அஸ்த்ர ஜபம் சாந்தி ேஹாமம் முதல்கால யாக வேள்வி, பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியாக 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். பின்னர் அன்று காலை 7.30 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, ஸ்கந்த ஹோமம், பூர்ணாகுதி ஆகியவை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாரா தனையும், அதைத்தொடர்ந்து 1 மணிக்கு உற்சவமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை முருகன் அடிமை சுப்புசாமி தலைமையில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
- ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் ஒரு கிலோ கதலி 20 ரூபாய்க்கும், நேந்திரம் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் பூவன் தார் ஒன்று 330 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 670 ரூபாய்க்கும், தேன் வாழை தார் ஒன்று 470 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 280 ரூபாய்க்கும், ரொபஸ்டோ தார் ஒன்று 380 ரூபாய்க்கும், ரஸ்தாலி தார் ஒன்று 560 ரூபாய்க்கும் விற்பனையானது.
மொத்தம் 3 ஆயிரம் வாழைத்தார் கொண்டு வரப்பட்ட நிலையில் ரூ.4 லட்சத்து 2 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
- வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
- சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
192 நீர் நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக மண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து செல்ல விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்நேர்வில் விவசாயிகளின் நலன் கருதி மண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பெற்று பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்க ஏதுவாகும் வகையில் சம்மந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு வரப்பெறும் விண்ணப்பங்களின் பேரில் உடனுக்குடன் பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் விவசாய காரியங்களுக்காக மண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.
- பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
- சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஈரோடு:
தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஈரோடு மாவட்ட அளவில் தொழில்பழகு நர்களுக்கான "பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 8-ந தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500- க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த 2017, 2018, 2019, 2020, 2021, மற்றும் 2022-ம் ஆண்டு அகில இந்திய தொழில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.
தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.
தற்போது தொழிற்பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும். ஐ.டி.ஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பழகுநர் முகாமில் பங்கேற்று பயன் அடையலாம்.
மேலும் தகவலுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஈரோடு என்ற முகவரி அல்லது 9442494266, 9443384133 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
- தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடந்தது.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 26 -ந் தேதி சங்கமேஸ்வரர் சன்னதி முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ந் தேதி வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப்பெருமாள் மற்றும் 63 நாயன்மார்கள் உட்பட பல்வேறு சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து இரவு விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் கருட வாகனத்திலும், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) காலை ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதி கேசவப் பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் பவானி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாயுடுமார்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
தேரோட்ட நிகழ்ச்சியில் பவானி நகர தி.மு.க. செயலாளர் ப.சீ. நாகராசன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், சங்கமேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சுவாமிநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
- பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- தண்ணீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 647கனஅடியாக அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது.
இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர குடிநீர் வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாகும். மழை காலத்தில் அணை நிரம்பியது. இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து விட்டது.
அதே நேரம் அணையில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் பவானி சாகர்அணையின் நீர்மட்டம் கிடு கிடு வென குறைந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று பவானி சாகர் அணை பகுதியில் மட்டும் சுமார் 79 மி.மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 647கனஅடியாக அதிகரித்து உள்ளது.
மேலும் அணையின் நீர்மட்டம் 82.29அடியாகவும், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- விநாயகர், சிவன் மற்றும் பிரம்மா திருத்தேரோட்டம் நடந்தது.
- பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு எனும் மும்மூர்த்திகள் அருள் பாலிக்கும் தலமாக பிரசித்தி பெற்ற கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் திகழ்ந்து வருகிறது.
மேலும் தமிழகத்தில் சிறந்த பரிகார தலமாக கொடுமுடி சிறந்து விளங்குகிறது. இதனால் தினமும் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபடுகிறார்கள்.
கொடுமுடி மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த நிலையில் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்ட விழா கடந்த 24-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. 25-ந் தேதி சிவன், பெருமாள் கெடியேற்றம் நடந்தது.
இதையொட்டி அன்று முதல் தினமும் சுவாமிகள் திருவீதி உலா நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
மேலும் தினமும் சாமி புறப்பாட்டுடன் ஒதுவா மூர்த்திகள் குழுவினரின் திருமுறை பாராயணம் நடந்தது. இதை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது.
இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது. முன்னதாக சாமிகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சிவன் மற்றும் பிரம்மா திருத்தேரோட்டம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய பகுதிகள் வழியாக சென்றது.
விழாவில் கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து இன்று மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி நாளை காலை சிவன், பெருமாள் புறப்பாடும், சூல தேவர், சக்கரத்தாழ்வார் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
இதை தொடர்ந்து நாளை மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
- விசாரணை நடத்தியதில் ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.
- அதன் அடிப்படையில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த சவுண்டப்பூர் தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தின் தலைவராக அதே ஊரைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் பதவி வகித்து வருகிறார்.
சங்க உறுப்பினர்களுக்கு பயிர் கடன், நகை கடன் வழங்கப்பட்டு 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை வசூலிக்கப்பட்ட பணம் வங்கி கணக்கில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் விசாரணை நடத்தியதில் ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த மோசடியில் சங்க தலைவர் ரமேஷ் அவருக்கு உடந்தையாக சங்க ஊழியர்களான கோபியை சேர்ந்த சத்தியமூர்த்தி (53), தங்கமுத்து (55) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்பத்தகராறில் மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார்.
- இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி, காலிங்கராயன்பாளையம் கிழக்கு முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவரது மனைவி உமா மகேஸ்வரி.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மணிகண்டன் பவானி கூடுதுறையில் பரிகார புரோகிதராக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் கிடைக்காததால் பல்வேறு இடங்களில் மணிகண்டன் கடன் வாங்கி உள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று குடும்பத்தகராறில் திடீரென்று பெட்ரோலை எடுத்து தனக்கு தானே ஊற்றி மணிகண்டன் தீ வைத்துக்கொண்டார்.
பின்னர் மணிகண்டன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- 9 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 866 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 081 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






