என் மலர்tooltip icon

    ஈரோடு

    • திடீரென வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் தீப்பிடிக்க தொடங்கியது.
    • தீயினால் ஏற்பட்ட புகையால் குழந்தைகள் முதியவர்கள் அவதி அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெண்டி பாளையத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மக்கும், மக்காத குப்பை மலைபோல் பல டன் அளவுக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது

    இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் திடீரென வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் தீப்பிடிக்க தொடங்கியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது.

    தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தீயினால் ஏற்பட்ட புகையால் குழந்தைகள் முதியவர்கள் அவதி அடைந்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ வேகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் பெரும் சவால் இருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். யாரோ வீசி சென்ற பீடியால் தீ விபத்து ஏற்பட்டு இருக்க லாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    • சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
    • விதைசுத்தி நிலையம் கொண்டு செல்லும் முறை பற்றி பயிற்சியளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் பயிர் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மற்றும் கோவை மாவட்ட ங்களை ேசர்ந்த தனியார் விதை உற்பத்தி யாளர்கள் விதைப்பண்ணை அமைத்துள்ளனர்.

    இவ்விதை உற்பத்தியாளர்களுக்கு சிவகிரியில் இயங்கி வரும் ஈரோடு துல்லிய பண்ணைய நிறுவன கூட்ட அரங்கில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் தலைமை யில் தரமான சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியின் போது விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய விதை நேர்த்தி தொழில்நுட்பம், பயிர் பாதுகாப்பு தொழில் நுட்பம், கலவன்களை அகற்றும் முறைகள், வல்லுநர் விதைகளைக் கொண்டு திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்தல், நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய தொழல் நுட்பங்கள் குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் பயிற்சியளித்தார்.

    மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட இரகங்களான ஏடிடி 51, ஏடிடி 54, கோ 54, கோ 55 மற்றும் ஏஸ்டி 21 ரகங்களின் சிறப்பியல்புகள், பயிரிப்பட வேண்டிய பருவங்கள் பற்றியும் தெரிவித்தார்.

    கோபிசெட்டிபாளையம் விதை சான்று அலுவலர் மாரிமுத்து விதைப்பண்ணையை பதிவு செய்யும் முறைகள், வயல் மட்ட விதைகளை முத்திரையிட்டு விதைசுத்தி நிலையம் கொண்டு செல்லும் முறை பற்றி பயிற்சியளித்தார்.

    மேலும் நெற்பயிரைத் தாக்கும் நோய்கள் மற்றும் பூச்சிகள் அவற்றின் மேலாண்மை முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தார்.

    இப்பயிற்சியில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று அலவலர்களான கவிதா, நாகராஜ், ஹரிபிரசாத், ஹேமாவதி, நாசர் அலி, தமிழரசு மற்றும் ஈரோடு துல்லிய பண்ணை உற்பத்தியாளர் கம்பெனி லிமிடேட் திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை மீட்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கதிரம்பட்டி நஞ்சனாபுரம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ். இவரது மனைவி கமலா (54). நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள 3 வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை சின்னமேடு நஞ்சனாபுரம் செல்லும் சாலையில் தங்கம் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கமலாவிடம் முகவரி கேட்பது போல அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர் கமலா காலத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்து அங்கிருந்து தப்பினர்.

    ஈரோடு தாலுகா போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் மோட்டார்சைக்கிளின் பதிவு எண் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில்,

    வழிப்பறியில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம் மடத்து குளத்தை சேர்ந்த சூர்யா என்கிற ஜெகதீஷ் (27), திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (60) என தெரிய வந்தது

    இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு பவுன் நகை மீட்கப்பட்டது. வழிப்பறிக்கு பயன் படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.2.03 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5,276 மூட்டைகளில் 2,57,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக்கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, ரூ.75.17-க்கும், அதிகபட்சமாக, ரூ.82.15-க்கும் விற்பனையானது. 2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக,- ரூ.30-க்கும், அதிகபட்சமாக ரூ.78க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ.2.03 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது.
    • நவநீதன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கான பயிற்சிகளை அளித்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை தீர்மானிக்கும் செயல்முறைக்கான பயிற்சி முகாம் நடந்தது.

    இதில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் பங்கேற்றனர்.

    முகாமில் பவானிசாகர் அரசு பயிற்ச்சி நிறுவன பயிற்ச்சியாளர் நவநீதன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கான பயிற்சிகளை அளித்தார்.

    மொடக்குறி்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அலுவர்கள் பயிற்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • பணிகளை தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாரம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது பெரியபுலியூர் கிராமம். இந்த கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள மயானத்தை கடந்த 200 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தனியார் ஒருவர் அந்த மயானத்தை ஆக்கிரமித்து மயானத்தில் ரோடுகள் அமைக்கும் வகையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதேபோல் அங்கு சாக்கடை தோண்டும் பணியும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரிய புலியூர் கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் தி.மு.க. 3-வது வார்டு செயலாளர் பி.டி.ரமேஷ் தலைமையில் திரண்டு வந்து மயானத்தில் நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கலெக்டருக்கு பெரிய புலியூர் கிராமம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த இடத்தில் கலெக்டர் உத்தரவின் பெயரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு விரைந்து வந்தனர். இதுபோல் கவுந்தப்பாடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசாரம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மயானத்தில் நடைபெற்ற பணிகளை தடுத்து நிறுத்தினர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    இதனை ஏற்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்துக்கு பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கண்ணம்மா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பசுவனபுரம் கரலியம் ரோடு அருகே மது விற்பனை நடைபெறுவதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சிறப்புப் இன்ஸ்பெக்டர் சாதிக் பாஷா மற்றும் போலீசார் அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி கண்ணம்மா (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 8 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை எதிரே மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூர் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது 67). இவருடைய மகன் லோகநாதன் (34). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற லோகநாதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் லோகநாதன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அப்பகு தியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெரு ந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை காந்தி சிவகிரி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி அருகே அந்த வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 3 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றுள்ளார். இதற்காக அந்த மர்ம நபர் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் முதலில் ஏ.டி.எம் மையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை அடித்து உடைத்துள்ளார்.

    பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளார். இருந்தாலும் அவரால் பணத்தை திருட முடியவில்லை. இதனையடுத்து அந்த மர்மநபர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று உள்ளார். இன்று காலை ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரம் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் வீரப்பன்சத்திரம் போலீசார் மட்டும் வங்கியின் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வங்கி மேலாளரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதேப்போல் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவி பிடிக்கவில்லை.

    போலீசார் விசாரணையில் மர்ம நபர் நள்ளிரவில் வந்து இந்த துணிகர கொள்ளை முயற்சி ஈடுபட்டது தெரிய வந்தது. நல்ல வாய்ப்பாக பணம் கொள்ளை போகாததால் லட்சக்கணக்கில் பணம் தப்பியது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சின்னசாமி கூச்சலிட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த இரவு நேர காவலாளிகள் வர, அதைப்பார்த்து 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (65). இவர் தற்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி பாய்லரில் விறகு போடும் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சின்னசாமி அவர் தங்கியிருந்த கம்பெனியில் இருந்து அருகில் உள்ள விடுதிக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் சின்னசாமியை வழிமறித்து செல்போன் கொடுத்தால் பேசிவிட்டு தருகிறேன் என கூறியுள்ளனர்.

    ஆனால் சின்னசாமி சந்தேகம் அடைந்து தர மாட்டேன் என மறுக்க 3 பேரும் சின்னசாமியிடம் நாங்கள் ஈரோட்டில் பெரிய ரவுடி செல்போன், வாட்ச்சினை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். சுதாரித்து கொண்ட சின்னசாமி கூச்சலிட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த இரவு நேர காவலாளிகள் வர அதைப்பார்த்து 3 வாலிபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசில் சின்னசாமி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து தப்பி சென்றவர்களின் மோட்டார் சைக்கிள் எண்ணினை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட முயன்றது ஈரோடு சூரம்பட்டிவலசு கட்டபொம்மன் வீதியை சேர்ந்த ஜான்பாட்சா மகன் ரியாஷ் (21), சூரம்பட்டி வலசு அணைக்கட்டு சாலையை சேர்ந்த சம்பத் குமார் மகன் சிவக்குமார் (21), அதேபகுதியை 5-வது அணைக்கட்டு வீதியை சேர்ந்த குழந்தைவேலு மகன் யோகேஷ் (22) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • அதிர்ச்சி அடைந்த ராமாயம்மா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மூதாட்டிகளை குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் தாயுமானவர் சுந்தரம் வீதியை சேர்ந்த சின்னுசாமி மனைவி புனிதவதனி (70). இவர் தனது 3-வது மகன் சதீஷூடன் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசிக்கிறார். சதீஷ் ஈரோடு பொன் வீதியில் ஜூவல்லரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் புனிதவதனி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது திறந்திருந்த வீட்டின் முன்புற வாசல் வழியே 30 வயது மதிக்கதக்க வாலிபர் 2 பேர் புனிதவதனியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை படுக்கை அறையில் தள்ளி, அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    அதிர்ச்சியில் இருந்த மூதாட்டி புனிதவதனி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் நகை பறித்த அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பேர் நகையை திருடி சென்றுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஈரோடு சூரம்பட்டி கிராமடை முதல் வீதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி ராமாயம்மா (82). தறி பட்டறையில் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட சென்றார்.

    கிராமடை முதல் வீதி பாலம் அருகே நடந்து சென்றபோது, அப்போது அங்கு நின்று இருந்த 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மூதாட்டியை தடுத்து நிறுத்தி இப்பகுதியில் செயின் பறிக்கும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.

    இப்படி கழுத்தில் தங்க செயினை அணிந்து சென்றால் மர்மநபர்கள் பறித்து சென்று விடுவார்கள். பின்னர் அந்த நபர்கள் செயினை கழற்றி தந்தால் பர்சில் போட்டு பத்திரமாக தருவதாக கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய ராமாயம்மா அவர்களிடம் கழுத்தில் அணிந்திருந்த 1.25 பவுன் தங்க செயினை கழற்றி கொடுத்துள்ளார். அவர்களும் செயினை பர்சில் போடுவதை போல நடித்து பர்சை கொடுத்து பைக்கில் அங்கிருந்து சென்றனர். சில அடி தூரம் நடந்து சென்ற ராமாயம்மா சந்தேகம் அடைந்து பர்சினை திறந்து பார்த்த போது அதில் வெறும் மண் மட்டுமே இறந்தது. செயினை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராமாயம்மா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமயாம்மாவிடம் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மூதாட்டிகளை குறிவைத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தெரு நாய்களை சில கும்பல் அடைத்து கடத்த முயன்றுள்ளனர்.
    • அப்பகுதி மக்கள் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே 46 புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பச்சப்பாளி பகுதியில் ஒரு வேனில் அரசு அனுமதி இல்லாமல் தெரு நாய்களை சில கும்பல் அடைத்து கடத்த முயன்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அப்போது வேனில் 3 பேர் கொண்ட கும்பல் இருந்தனர். இது குறித்து தேசிய விலங்குகள் நல ஆணைய பொருளாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாய் கடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அந்த பகுதிக்கு சென்ற தேசிய விலங்குகள் நல ஆணைய பொருப்பாளர் விசாரனை நடத்தியதில் யாரோ தனிநபர் தொடர்ந்து அந்த பகுதியில் நாய்களுக்கு விஷம் வைத்து கொல்வதும், பிடித்து சென்று கொல்வதும் வாடிக்கையாகி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    அரசின் அனுமதி இல்லாமலோ, மாவட்ட விலங்குகள் நல அதிகாரி உத்தரவு இல்லாமலோ, தேசிய விலங்குகள் நல ஆணையத்தின் மூலமாக அங்கீகரிக்கப்படாத அமைப்புகள் மூலமாக தெருநாய்களை பிடிப்பது குற்றமாகும்.

    மீறி பிடிப்பவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தேசிய விலங்குகள் நல ஆணைய பொருளாளர் எச்சரிக்கை விடுத்தார்.

    ×