search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் நூதன முறையில் 2 மூதாட்டிகளிடம் 5 பவுன் நகை அபேஸ்
    X

    ஈரோட்டில் நூதன முறையில் 2 மூதாட்டிகளிடம் 5 பவுன் நகை அபேஸ்

    • அதிர்ச்சி அடைந்த ராமாயம்மா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மூதாட்டிகளை குறிவைத்து நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் தாயுமானவர் சுந்தரம் வீதியை சேர்ந்த சின்னுசாமி மனைவி புனிதவதனி (70). இவர் தனது 3-வது மகன் சதீஷூடன் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசிக்கிறார். சதீஷ் ஈரோடு பொன் வீதியில் ஜூவல்லரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் புனிதவதனி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது திறந்திருந்த வீட்டின் முன்புற வாசல் வழியே 30 வயது மதிக்கதக்க வாலிபர் 2 பேர் புனிதவதனியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை படுக்கை அறையில் தள்ளி, அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    அதிர்ச்சியில் இருந்த மூதாட்டி புனிதவதனி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் நகை பறித்த அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பேர் நகையை திருடி சென்றுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஈரோடு சூரம்பட்டி கிராமடை முதல் வீதியை சேர்ந்த பழனியப்பன் மனைவி ராமாயம்மா (82). தறி பட்டறையில் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட சென்றார்.

    கிராமடை முதல் வீதி பாலம் அருகே நடந்து சென்றபோது, அப்போது அங்கு நின்று இருந்த 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மூதாட்டியை தடுத்து நிறுத்தி இப்பகுதியில் செயின் பறிக்கும் சம்பவம் அதிகளவில் நடந்து வருகிறது.

    இப்படி கழுத்தில் தங்க செயினை அணிந்து சென்றால் மர்மநபர்கள் பறித்து சென்று விடுவார்கள். பின்னர் அந்த நபர்கள் செயினை கழற்றி தந்தால் பர்சில் போட்டு பத்திரமாக தருவதாக கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய ராமாயம்மா அவர்களிடம் கழுத்தில் அணிந்திருந்த 1.25 பவுன் தங்க செயினை கழற்றி கொடுத்துள்ளார். அவர்களும் செயினை பர்சில் போடுவதை போல நடித்து பர்சை கொடுத்து பைக்கில் அங்கிருந்து சென்றனர். சில அடி தூரம் நடந்து சென்ற ராமாயம்மா சந்தேகம் அடைந்து பர்சினை திறந்து பார்த்த போது அதில் வெறும் மண் மட்டுமே இறந்தது. செயினை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராமாயம்மா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமயாம்மாவிடம் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த 2 சம்பவத்திலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மூதாட்டிகளை குறிவைத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×