என் மலர்
திண்டுக்கல்
- செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கக்கூடிய மஞ்சள் வண்ண போயின் சியானா மலர்கள் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன.
- மர வகைகளைச் சேர்ந்த இந்த மலர்கள் கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் அதிக அளவில் பூத்துள்ளன.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் பல்வேறு வண்ண வண்ண மலர்கள் அந்தந்த சீசனுக்கு ஏற்றவாறு பூத்துக்குலுங்கும்.
இந்நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கக்கூடிய மஞ்சள் வண்ண போயின் சியானா மலர்கள் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன. பெடோபோரம் டூபியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே மலரக்கூடிய வகைகளாகும். ஆண்டுக்கு ஒருமுறை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மலைப்பகுதிகளில் மட்டுமே பூக்கக்கூடிய இந்த மலர்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் பூத்துக்குலுங்குகிறது.
மர வகைகளைச் சேர்ந்த இந்த மலர்கள் கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் அதிக அளவில் பூத்துள்ளன. இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மலைச்சாலைகளில் பூத்துள்ள மஞ்சள் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த பூக்கள் பூத்துள்ளதால் அதன் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இந்த பூக்கள் மேலும் சில நாட்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.
- அடிப்படை வசதிகள் கேட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி அலுவலகம் முன்பாக சாலையில் பாய் விரித்து தரையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.
- போராட்டம் நடத்திய வர்களிடம் 10 நாட்களுக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினை களை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் அதிகளவில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலைவசதி, தெரு விளக்கு, குடிநீர், கழிவு நீர் ஓடை,தடுப்புச் சுவர் உள்ளிட்டவைகளை 40 ஆண்டு காலமாக செய்து தராமல் உள்ளதை கண்டித்தும், இந்த வசதிகளை செய்து தரக் கோரி மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கை யும் எடுக்காததை கண்டி த்தும் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கன்று குட்டி, பாய், சமையல் பாத்திரங்கள், விறகு, குடம் உள்ளிட்ட பொருள்களுடன் தலையில் சுமந்தவாறு சாணார்பட்டி காவல் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி அலுவலகம் முன்பாக சாலையில் பாய் விரித்து தரையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி சந்திரன், ரூரல் டி.எஸ்.பி உதயகுமார், இன்ஸ்பெக்ட ர்கள் தங்க முனியசாமி, விக்டோரியா லூர்து மேரி,சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து பாது காப்புணியில் ஈடுபட்டனர்.
40 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து குடியேறும் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் நடத்திய வர்களிடம் 10 நாட்களுக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினை களை தீர்த்து வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்த னர். இதனைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற போரா ட்டம் முடிவுக்கு வந்தது. இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
- கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.
ஆத்தூர்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய வாக்கு ச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை தருவதாக உறுதியளித்து விட்டு தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறி ஏமாற்றி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பத்துக்கு ரூ.7000 இருந்தால் மாத செலவை சமாளித்து விடலாம். ஆனால் தற்போது ரூ.1000 இருந்தாலும் பற்றாக்குறை யாக உள்ளது. 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியு ள்ளளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது மோசடியான ஏமாற்று வேலை. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட கட்டண ங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இனால் தொழில் துறையினர் கடுமை யாக பாதிக்கப்பட்டு ள்ளனர். தாலிக்கு தங்கம், லேப்டாப் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் பல நல்ல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.
மக்களை திறமையாக ஏமாற்றி மோசடி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று நடத்தி வருகின்றனர். இது போன்ற அதிருப்தியை வாக்குகளாக சேகரிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
போலீஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த ஒரு கட்சித் தலைவர் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசும் அளவுக்கு ஆணவத்துடன் நடந்து வருகிறார். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற சிலர் மீடியா வெளிச்சத்தில் அரசியல் நடத்துகின்றனர்.
கூட்டணி என்ற பெயரில் நம் தோளில் அமர்ந்து காதை கடிக்கின்ற வேலையை செய்தனர். தற்போது அவர்களை நாம் தூக்கி எறிந்து விட்டோம். இனி அ.தி.மு.க.வின் வெற்றிக்கு எந்த தடையும் இல்லை. அனைத்து மதங்களையும் அரவணை க்கும் இயக்கமாக அ.தி.மு.க. செயல்படும். சனாதனம் என்ற போர்வையில் இந்து மதத்தை தி.மு.க.வினர் எதிர்க்கின்றனர். தமிழ்நாடு இது வரை கண்டிராத மோசமான நிர்வாகத்தை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கொரலம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
- குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள கொரலம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் இன்று காலி குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவல கம் முன்பு முற்றுகை போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில்,
கடந்த 1 மாதமாக எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வரவில்லை. ஒரு குடம் ரூ.5க்கு விலை கொடுத்து வாங்கி வந்தோம். அந்த தண்ணீரும் சரிவர கிடைப்ப தில்லை. பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை கேட்டும் முறையான பதில் அளிக்கவில்லை. தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் தண்ணீர் இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை.
மேல்நிலை தொட்டிக்கு செல்லும் பைப் லைன் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. ரெட்டியார்சத்திரம் யூனியனில் தகவல் தெரி வித்தும் எங்கள் பிரச்சி னைக்கு தீர்வு காணவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.
- தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்த குழந்தை க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
- ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேட்டு ப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மரியபெர்லின் பிரின்சியா (வயது26). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் பிரின்சியா கர்ப்பம் அடைந்தார்.
கடந்த 43 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த அன்றே ஒரு குழந்தை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது.
இந்நிலையில் இன்று காலை குழந்தைக்கு பிரின்சியா தாய்ப்பால் கொடுத்தார். குடித்துக் கொண்டு இருந்த குழந்தை க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
- இதனால் பொது மக்களுக்கு இ சேவை மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கட்டாயமாக லாரி மற்றும் வேளாண்மை உபகரணங்களை வாங்க வேண்டும் என்று வற்புறுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்க அனைத்து பணியாளர்களும் விடுப்பு எடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில் லாரி மற்றும் வேளாண்மை உபகரணங்களின் சாவியை ஒப்படைக்க செல்வதாக தெரிவித்தனர்.
அதன்படி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் சென்றனர். இதன் காரணமாக நிலக்கோட்டை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர் அலுவலகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொது மக்களுக்கு இ சேவை மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டது.
- த்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி, மல்லியம்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, சிலுக்குவார் பட்டி, மைக்கேல் பாளையம், சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.
- ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.
- சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம்:
நத்தம் அருகே சிறுகுடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 25 ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒடுக்கம்பட்டி, நல்லகண்டம் மஞ்ச நாயக்கன்பட்டி, பூதக்குடி உட்பட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் அப்பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலங்களில் அப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கி ஊரல் ஏற்பட்டதால் அந்த கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
மேலும் அப்பகுதி மக்கள் விபத்து மற்றும் பிற நோய்களுக்காக முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொள்ள சுமார் 15 கி.மீ. தூரமுள்ள நத்தம் மற்றும் திண்டுக்கல் அல்லது மதுரை, கொட்டா ம்பட்டி, ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆகையால் கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும், புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், சிறுகுடி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மேற்கூரை சேதமடைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வரும் நோயாளிகளும், பணியில் உள்ள டாக்டர்களும், செவிலியர்களும் அச்சப்பட்டு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் செல்ல தயங்குகின்றனர். இந்த சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
- தொழில்போட்டி காரணமாக வியாபாரியை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 43). இவர் மினி வாகனம் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தண்ணீர் நிறுவனத்திற்கும் இடையே தொழிற் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஜெயராமன் தண்ணீர் வண்டியுடன் லைனுக்கு சென்றார். கேதையறும்பு அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து எங்கள் பகுதியில் தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஜெயராமனை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். இதனையடுத்து காயமடைந்த ஜெயராமனை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மது கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுவிற்பனை ஜோராக நடந்தது.
- பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஜி-பே மூலம் பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காமுபிள்ளைசத்திரம், புதுகோடாங்கிபட்டி, கோழிபண்ணை, வீரக்கல், கோடிக்காமன்வாடி உள்ளிட்ட பகுதியில் 5 டாஸ்மாக் மது கடைகள் உள்ளது.
இக்கடையில் மதுபான பார்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் இங்கு 24 மணி நேரமும், ஒரு பாட்டிலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் விலை வைத்து மது விற்பனை இரவு பகலாக படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மது கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் மது கடை அருகிலே தனிநபர் சிலர் மதுபானங்களை விற்பனை செய்தனர்.
முதல் நாளே டாஸ்மாக் மது கடையில் விற்பனையாளர்கள் துணையுடன் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு நேற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். மேலும் வழக்கம் போல் ஒவ்வொரு நாளும் மதுக்கடைகள் மூடிய பிறகும் மதுக்கடை திறப்பதற்கு முன்பும் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகிலே கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.
பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஜி-பே மூலம் பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.
இதுகுறித்து இப்பதி பொதுமக்கள் பலமுறை போலீசாருக்கு புகார் செய்தும் பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு டாஸ்மார்க் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு உத்தரவை மதிக்காமல் இந்தப் பகுதியில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது. குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.
புதுகோடாங்கிபட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் திறந்த வெளியில் சாலை ஓரம் மது விற்பனை நடைபெற்றது. காமுபிள்ளைசத்திரம் டாஸ்மாக் மதுக்கடைஅருகே செம்பட்டி - நிலக்கோட்டை சாலையில் சாலை ஓரம் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்தனர். விடுமுறை நாட்களில் மது விற்பனை நடைபெற்று வருவதால் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவர்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் இந்த வழியில் செல்லும்போது பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே இதுபோன்ற மதுவிற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் புதுச்சத்திரத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதத்தால் போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம் புதுச்சத்திரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஜெயகணேஷ் தீர்மான நகலை வாசித்தார்.
அப்போது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள், கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஊராட்சியில் நடைபெற்ற பணிகள் விவரங்களை கேட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரிடம், வார்டு உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஒருதரப்பினரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தகவல் அறிந்து செம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை சமாதானம் செய்தனர். வார்டு உறுப்பினர்கள் தரப்பில் கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தாங்கள் புறக்கணித்து செல்வதாக கூட்டத்தில் இருந்து திடீர் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு இடையில் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற திட்டப்பணிகளை தலைவர் காளிதாஸ் தெரிவித்தார். அப்போது புதுகாமன்பட்டியை சேர்ந்தவர் ஒருவர் தனிநபர் ஒருவரிடம் வார்டு உறுப்பினர்கள் ரூ. 10 ஆயிரம் பெற்றுக்கொண்டு தனக்கு சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க ஆதரவாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
இதனால் வார்டு உறுப்பினர்களுக்கும் அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
- பிள்ளைகளின் மனதை அறிந்து இருவீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டினர்.
- காதலின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல்லை சேர்ந்தவர் நசீராதாவூத். திண்டுக்கல்லில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் பெங்களூரில் மருத்துவம் பயின்று மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அங்கு டாக்டராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயரான பில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
இருந்தபோதும் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இது குறித்து தெரிவித்தனர். தங்கள் பிள்ளைகளின் மனதை அறிந்து இருவீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டினர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த காதலர்கள் காதலின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பின்னர் இருவீட்டாரும் இணைந்து கொடைக்கானலில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி திண்டுக்கல் டாக்டர் நசீராவுக்கும், அமெரிக்க என்ஜினீயர் பில் என்பவருக்கும் காலையில் கொடைக்கானலில் உள்ள தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மதிய வேளையில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டாரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் என குறைந்த அளவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. ஜாதி, மதம், மொழி, இனங்களை கடந்து அமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயரை திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர் திருமணம் செய்த சம்பவம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






