search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம், கொடைக்கானலில் திருமணம்: அமெரிக்க என்ஜினீயரை மும்மத முறையில் மணமுடித்த திண்டுக்கல் டாக்டர்
    X

    அமெரிக்க என்ஜினீயர் மற்றும் திண்டுக்கல் டாக்டர்.

    தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம், கொடைக்கானலில் திருமணம்: அமெரிக்க என்ஜினீயரை மும்மத முறையில் மணமுடித்த திண்டுக்கல் டாக்டர்

    • பிள்ளைகளின் மனதை அறிந்து இருவீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டினர்.
    • காதலின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் நசீராதாவூத். திண்டுக்கல்லில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் பெங்களூரில் மருத்துவம் பயின்று மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

    அங்கு டாக்டராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயரான பில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

    இருந்தபோதும் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இது குறித்து தெரிவித்தனர். தங்கள் பிள்ளைகளின் மனதை அறிந்து இருவீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டினர்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த காதலர்கள் காதலின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பின்னர் இருவீட்டாரும் இணைந்து கொடைக்கானலில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி திண்டுக்கல் டாக்டர் நசீராவுக்கும், அமெரிக்க என்ஜினீயர் பில் என்பவருக்கும் காலையில் கொடைக்கானலில் உள்ள தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மதிய வேளையில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டாரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் என குறைந்த அளவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. ஜாதி, மதம், மொழி, இனங்களை கடந்து அமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயரை திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர் திருமணம் செய்த சம்பவம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×