என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு அருகே ரெயில் தண்டவாளத்தில் விழிமலர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
    • செவிலியர் அந்த வழியாக வந்த ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி வரதராஜாநகரை சேர்ந்த மாரிமுத்து மகள் விழிமலர் (வயது 41). திருமணமாகாத இவர் காந்திகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்.

    மேலும் மன உளைச்சலுடனே இருந்துள்ளார். நேற்று இரவு தனது அம்மா ஈஸ்வரியிடம் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அங்கு செல்லவில்லை.

    இதனிடையே இன்று காலை அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு அருகே ரெயில் தண்டவாளத்தில் விழிமலர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த செவிலியர் அந்த வழியாக வந்த ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை செய்து வருகின்றனர்.

    • போதிய பராமரிப்பு இல்லாததால் கண்மாயில் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
    • கழிவுநீரை கண்மாயில் விடுவதால் சாக்கடை நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் மழை பெய்தும் பலனில்லாமல் போகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கொங்கர்குளம் கண்மாய் சுமார் 150 ஏக்கர் சுற்றளவு கொண்டதாகும். இந்த கண்மாயில் தேங்கும் தண்ணீர் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் கண்மாயில் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வெளியேறும் கழிவுநீரை கண்மாயில் விடுவதால் சாக்கடை நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் மழை பெய்தும் பலனில்லாமல் போகிறது.

    மழைநீர் செல்ல வழியின்றி சாலைகளில் வீணாக செல்கிறது. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கண்மாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும். மழை நீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுற்றுச்சூழலுக்கு தீங்கான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பால், இயற்கை முறையில் தயாரிக்கும் மூங்கில் கூடை தொழில் நசிந்து வருகிறது.
    • அரசு மூங்கில் தொழில் அழிந்து போகாமல் காப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் திரும்பிய பக்கம் எல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் தான் கண்ணில் தென்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் ஆபத்து என்று அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியவில்லை. அரசும் அசுர வேகத்தை பயன்படுத்தினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொதுமக்கள் பாரம்பரியமாக செய்து வந்த பல்வேறு கைத்தொழில்கள் நலிவடைந்து அழிவின் விளிம்பிற்கு சென்று வருகிறது. அதில் ஒன்று மூங்கில் கூடை பின்னல் தயாரிப்பு தொழில்.

    கடந்த காலங்களில் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் வீட்டுக்கூடை, முறம், வெற்றிலைக்கூடை, தட்டுக்கூடை, பூஜைக்கூடை, விவசாயக்கூடை, எருக்கூடை, பஞ்சாரம், விசிறி என பல்வேறு வடிவங்களில் தயாரித்தனர். இவற்றை மக்கள் காய்கறி எடுத்து செல்வதற்கும், கோழிகளை மூடி வைப்பதற்கும், கோவில்களுக்கு பூஜை பொருட்கள் எடுத்து செல்வதற்கும், பூக்களை விற்பதற்கும், சமைத்த சாதத்தை வடிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

    தமிழகத்தில் மூங்கில் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, கேரளாவில் இருந்து மூங்கில்களை விலைக்கு வாங்கி தொழில் செய்தனர். மூங்கில் விலையும் உயர்ந்ததால், இந்த பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனையடுத்து மலிவாக கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தேடி மக்கள் சென்றுவிட்டனர். இதன்காரணமாக மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத மூங்கில் பொருட்களை செய்து வந்த தொழிலாளர்கள் வேறு வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் மூங்கில் பின்னும் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பால், இயற்கை முறையில் தயாரிக்கும் மூங்கில் கூடை தொழில் நசிந்து வருகிறது.

    திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில், சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, கோபால்பட்டி, வேம்பார்பட்டி, பகுதிகளில் மூங்கில் கூடை பின்னல் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல், மேட்டுப்பட்டி கருவூலச் சாலை பகுதியில் 10 மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மூங்கில் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். கூடை, விசிறி, கோழிகளை அடைக்க பயன்படும் பஞ்சாரம், தெருக்களை கூட்ட பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான துடைப்பான், மூங்கில் திரை ஆகியவற்றை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    திண்டுக்கல் காசிராஜன் (85) கூறுகையில், 13 வயதில் இருந்து மூங்கில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது 85 வயதை கடந்தும் இதே தொழிலை செய்து வருகிறேன். 40 வருடங்களுக்கு முன் மூங்கில் கூடைகளுக்கு பெரிய கிராக்கி இருக்கும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல மூங்கில் கூடைகளைத்தான் அதிகம் பயன்படுத்தினர். திராட்சை பழங்களை மூங்கில் கூடைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பினர். மேலும் அந்த காலத்தில் வீடுகளில் மூங்கில் கூடைகளின் பயன்பாடு வாழ்வியலோடு ஒன்றியதாக இருந்தது. நாளடைவில் அனைத்தும் பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு மாறி விட்டன. இதனால் முன்புபோல, விவசாயிகள் எங்களை நாடி வருவதில்லை. நகர்புறத்தில் மக்கள் மூங்கில் கூடை பயன்படுத்துவதையே விட்டு விட்டனர்.

    கிராம மக்களை நம்பித்தான் தற்போது உள்ளோம். கோழிகளை அடைக்க பஞ்சாரம், சிறிய கூடைகள், விசிறிகள் வரை வாங்கிச் செல்கின்றனர். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கூடை பின்னும் வேலையில் ஈடுபட்டு வருகிறேன். அடுத்த தலைமுறையினர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிவித்தார்.

    சரவணன் (45) கூறுகையில், 30 வருடங்களுக்கு மேல் இந்த தொழில் செய்து வருகிறேன். தற்போது மூங்கில் பொருட்களின் பயன்பாடு மக்களிடம் குறைந்து வருவதால், மூங்கில் பொருட்கள் தயாரிப்பு தொழில் அழியும் நிலையில் உள்ளது. அரசு நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை சார்ந்த பொருட்களை எங்களைப் போன்றவர்களிடம் கொள்முதல் செய்தால் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். மற்ற தொழில்களுக்கு மானியம் வழங்குவதுபோல, மூங்கில் பொருட்கள் தயாரிப்புக்கும் மானியம் வழங்க வேண்டும். வருங்கால சந்ததியினர் மூங்கில் பொருட்களை காண்பதே அரிதாகிவிடும். எனவே அரசு இந்த தொழில் அழிந்து போகாமல் காப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    • கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கோவுகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கவுரி(22) என்பவருக்கும் சிவக்குமார்(25) என்பவருக்கும் கடந்த 9.9.2021-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்குபிறகு உடனடியாக குழந்தை வேண்டாம் என குழந்தை பிறப்பை தள்ளிபோட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கவுரியின் தாய் நாகலட்சுமி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் சிவக்குமாரின் கள்ளக்காதலால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. வளைகாப்பு சமயத்தில் இந்த பிரச்சனை நீடிக்கவே கவுரி சத்தம் போட்டுள்ளார்.

    அதற்கு சிவக்குமார் அவ்வாறுதான் இருப்பேன். உனக்கு இஷ்டம் இருந்தால் என்னுடன் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் செத்துபோ என கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு குழந்தையை தூக்கி வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    கவுரியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் துன்புறுத்தி பேசியதால் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததும் உறுதியானது. இதனால் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வனஅலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இதில் மான், முயல், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மோளப்பாடியூர் பகுதியில் வேட்டை நாய்களை வைத்து கும்பல் முயல்களை பிடித்து இறைச்சியை விற்பனை செய்து வருவதாக சென்னை வனப்பாதுகாப்பு படைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதனைதொடர்ந்து வனபாதுகாப்பு படை அலுவலர் கிருஷ்ணகுமார், அய்யலூர் வனஅலுவலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது 7 பேர் முயல்வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. முயல்வேட்டையாடிய முத்து, பழனியாண்டி, மணிகண்டன், கார்த்திகேயன், சுபாஷ், மலையாளம், லோகமணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இதில் முத்துக்கு ரூ.50ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.2லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நவம்பர் முதல் ஜனவரி வரை சீசன் காலத்தையொட்டி இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
    • கொடைக்கானல் எல்லையான வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியிலும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இங்கு வந்து மலைப்பாங்கான இடங்களில் டெண்ட் அமைத்து தங்கிச் செல்வது வழக்கம்.

    நவம்பர் முதல் ஜனவரி வரை சீசன் காலத்தையொட்டி இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவர்கள் இங்குள்ள காட்டேஜ்களில் தங்கி இருந்து இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை கண்டு ரசித்தும், மலைப்பாங்கான இடத்தில் சென்று யோகாசனம் செய்தும் வழக்கம்.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு வருகை தருவார்கள். அவர்களுக்காகவே பிரத்யேக காட்டேஜ்கள் வட்டக்கானல் அருகே உள்ளது. தற்போது இஸ்ரேல் நாட்டில் போர் பதட்டம் சூழ்ந்துள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் வருடம் தோறும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து தங்குவது வழக்கம். இவர்கள் முறையற்ற வகையில் தங்குவதை தடுக்க அவர்களது அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பின்பே அனுமதி அளிக்கப்படும். இதற்காக வட்டக்கானல் பகுதியில் சோதனைச்சாவடியும், கடந்த 5 ஆண்டுகளாக அமைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு சில இஸ்ரேலியர்கள் மட்டுமே இங்கு தங்கியுள்ளனர். மேலும் பலர் வர வாய்ப்புகள் இருந்தாலும் முறையான சோதனைக்கு பிறகே இங்கு தங்க வைக்கப்படுவார்கள். கொடைக்கானல் எல்லையான வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியிலும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் பிரிவினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதனை பயன்படுத்தி வேறு யாரும் இங்கு அடைக்கலம் வராத அளவுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழியாக மோட்டார் சைக்கிள்களில் கடந்து செல்பவர்களையும் கண்காணித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    பொது விநியோகத்தி ட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்களில் ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் அட்டை கோரி மனு அளிக்கலாம். கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்தும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் மனு அளிக்கலாம்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • பெற்றோர் பள்ளிக்கு அல்லது வேலைக்கு செல்ல சிறுவனை கண்டித்துள்ளனர்.
    • இதனால் விரக்தி அடைந்த சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகு பட்டி மலையடிவாரம், ஒத்தபனைமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். லோடுமேன். இவரது மகன் பிரவீன் (வயது18). 10-ம் வகுப்பு படித்த நிலையில் வீட்டில் ஊர் சுற்றி வந்துள்ளார்.

    பெற்றோர் பள்ளிக்கு அல்லது வேலைக்கு செல்ல கண்டி த்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பிரவீன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில்களில் திருவிழா காலங்களில் எடுக்கப்படும் முளைப்பாரி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தது.
    • தூர்வாரப்படாததால் தொட்டியில் விஷவாயு வரத்தொடங்கி, துர்நாற்றம் வீசியும் வருகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோ ட்டை அடிவாரத்தில் கோட்டை குளம் உள்ளது. இந்த குளத்தில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் திருவிழா காலங்களில் எடுக்கப்படும் முளைப்பாரி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தது.

    இதனை அடுத்து குளத்தை பராமரிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரி, இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டது. மேலும் சிலைகள் மற்றும் முளைப்பாரி கரைக்க தடை விதித்து உத்தரவிட்டது. சிலைகள் கரைக்க கோட்டை குளம் முன்பு 2015ல் பெரிய தொட்டி அமைக்கப்பட்டது. இதில் சிலைகள், முளைப்பாரி கரைக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்லில் கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட்டது. இதற்காக 65 சிலைகள் இந்து அமைப்பு சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் கோட்டை குளத்தில் பிரத்தியேகமாக கட்டப்பட்ட தொட்டியில் கரைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் எடுக்கப்பட்ட முளைப்பாரி ஆகியவையும் கரைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது தூர்வாரப்படாமல் உள்ள இந்த தொட்டியினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த தொட்டியில் விஷவாயு வரத்தொடங்கி, துர்நாற்றம் வீசியும் வருகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பொத்தியபடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அருகே பத்ரகாளி அம்மன், அய்யப்பன் கோவில், ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த தொட்டியை உடனடியாக தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொட்டியில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திண்டுக்கல் மாவட்ட மையம் சார்பில் இன்று ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடமாற்றம் செய்யும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட மையம் சார்பில் இன்று ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார்.

    இதுகுறித்து போராட்ட த்தில் ஈடுபட்ட வர்கள் தெரிவி க்கையில், ெகாடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் பணியாளர்களையும், ஊராட்சி செயலர்களையும் ஒருமையில் பேசுவதுடன், தரக்குறைவாக நடத்தி வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு வடகவுஞ்சி ஊராட்சி செயலரிடம் மிரட்டி ஆவணங்களை எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.

    அலுவலகத்திற்கு தொடர்பில்லாத நபர்களை உதவியாளராக வைத்துகொண்டு கோப்புகளை கையாள விடுகிறார். எனவே இவரை பணியிடமாற்றம் செய்யும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

    இந்த போராட்டத்தால் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    • பழனி அருகே தாளையம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பழனி:

    உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி இந்திராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அவர்களை தூத்துக்குடியில் இருந்து காரில் அழைத்து வந்துள்ளார்.

    பழனி அருகே தாளையம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    படுகாயம் அடைந்த மோகன்ராஜ், இந்திரா, வன்னியராஜ் ஆகியோர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.
    • இளம்பெண் தற்கொலை குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமத்திற்கு உட்பட்ட கோமுககவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கவுரி (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    கவுரிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று காலையிலும் அதே போல் தனது மனைவியை சத்தம் போட்டு விட்டு சிவக்குமார் வெளியே சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த கவுரி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகள் அழுதுகொண்டே இருந்த நிலையில் கவுரியை காணாததால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர்.

    அப்போது அவர் கிணற்றில் மிதந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று கவுரியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்த உள்ளார். தாய் இறந்த நிலையில் இரட்டைக்குழந்தைகள் பாலுக்காக தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    ×