என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bamboo basket industry"

    • சுற்றுச்சூழலுக்கு தீங்கான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பால், இயற்கை முறையில் தயாரிக்கும் மூங்கில் கூடை தொழில் நசிந்து வருகிறது.
    • அரசு மூங்கில் தொழில் அழிந்து போகாமல் காப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் திரும்பிய பக்கம் எல்லாம் பிளாஸ்டிக் பொருட்கள் தான் கண்ணில் தென்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் ஆபத்து என்று அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியவில்லை. அரசும் அசுர வேகத்தை பயன்படுத்தினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொதுமக்கள் பாரம்பரியமாக செய்து வந்த பல்வேறு கைத்தொழில்கள் நலிவடைந்து அழிவின் விளிம்பிற்கு சென்று வருகிறது. அதில் ஒன்று மூங்கில் கூடை பின்னல் தயாரிப்பு தொழில்.

    கடந்த காலங்களில் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் வீட்டுக்கூடை, முறம், வெற்றிலைக்கூடை, தட்டுக்கூடை, பூஜைக்கூடை, விவசாயக்கூடை, எருக்கூடை, பஞ்சாரம், விசிறி என பல்வேறு வடிவங்களில் தயாரித்தனர். இவற்றை மக்கள் காய்கறி எடுத்து செல்வதற்கும், கோழிகளை மூடி வைப்பதற்கும், கோவில்களுக்கு பூஜை பொருட்கள் எடுத்து செல்வதற்கும், பூக்களை விற்பதற்கும், சமைத்த சாதத்தை வடிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.

    தமிழகத்தில் மூங்கில் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, கேரளாவில் இருந்து மூங்கில்களை விலைக்கு வாங்கி தொழில் செய்தனர். மூங்கில் விலையும் உயர்ந்ததால், இந்த பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனையடுத்து மலிவாக கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தேடி மக்கள் சென்றுவிட்டனர். இதன்காரணமாக மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத மூங்கில் பொருட்களை செய்து வந்த தொழிலாளர்கள் வேறு வேலைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் மூங்கில் பின்னும் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சுற்றுச்சூழலுக்கு தீங்கான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பால், இயற்கை முறையில் தயாரிக்கும் மூங்கில் கூடை தொழில் நசிந்து வருகிறது.

    திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில், சாணார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, கோபால்பட்டி, வேம்பார்பட்டி, பகுதிகளில் மூங்கில் கூடை பின்னல் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல், மேட்டுப்பட்டி கருவூலச் சாலை பகுதியில் 10 மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மூங்கில் கூடை பின்னும் தொழில் செய்து வருகின்றனர். கூடை, விசிறி, கோழிகளை அடைக்க பயன்படும் பஞ்சாரம், தெருக்களை கூட்ட பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான துடைப்பான், மூங்கில் திரை ஆகியவற்றை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    திண்டுக்கல் காசிராஜன் (85) கூறுகையில், 13 வயதில் இருந்து மூங்கில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது 85 வயதை கடந்தும் இதே தொழிலை செய்து வருகிறேன். 40 வருடங்களுக்கு முன் மூங்கில் கூடைகளுக்கு பெரிய கிராக்கி இருக்கும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல மூங்கில் கூடைகளைத்தான் அதிகம் பயன்படுத்தினர். திராட்சை பழங்களை மூங்கில் கூடைகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பினர். மேலும் அந்த காலத்தில் வீடுகளில் மூங்கில் கூடைகளின் பயன்பாடு வாழ்வியலோடு ஒன்றியதாக இருந்தது. நாளடைவில் அனைத்தும் பிளாஸ்டிக் பெட்டிகளுக்கு மாறி விட்டன. இதனால் முன்புபோல, விவசாயிகள் எங்களை நாடி வருவதில்லை. நகர்புறத்தில் மக்கள் மூங்கில் கூடை பயன்படுத்துவதையே விட்டு விட்டனர்.

    கிராம மக்களை நம்பித்தான் தற்போது உள்ளோம். கோழிகளை அடைக்க பஞ்சாரம், சிறிய கூடைகள், விசிறிகள் வரை வாங்கிச் செல்கின்றனர். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கூடை பின்னும் வேலையில் ஈடுபட்டு வருகிறேன். அடுத்த தலைமுறையினர் இத்தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை என்று தெரிவித்தார்.

    சரவணன் (45) கூறுகையில், 30 வருடங்களுக்கு மேல் இந்த தொழில் செய்து வருகிறேன். தற்போது மூங்கில் பொருட்களின் பயன்பாடு மக்களிடம் குறைந்து வருவதால், மூங்கில் பொருட்கள் தயாரிப்பு தொழில் அழியும் நிலையில் உள்ளது. அரசு நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை சார்ந்த பொருட்களை எங்களைப் போன்றவர்களிடம் கொள்முதல் செய்தால் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். மற்ற தொழில்களுக்கு மானியம் வழங்குவதுபோல, மூங்கில் பொருட்கள் தயாரிப்புக்கும் மானியம் வழங்க வேண்டும். வருங்கால சந்ததியினர் மூங்கில் பொருட்களை காண்பதே அரிதாகிவிடும். எனவே அரசு இந்த தொழில் அழிந்து போகாமல் காப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

    ×