என் மலர்
திண்டுக்கல்
- பஸ் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது பின் இருக்கையில் அரசு பஸ் டிரைவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
- குடிபோதையில் இருந்த டிரைவர் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ்நிலை யத்தில் இன்று காலை நத்தம் ரேக்கில் காரைக்குடி செல்வதற்காக அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவராக செல்வம் என்பவரும், கண்டக்டராக குருசாமி என்பவரும் இருந்தனர். பஸ் புறப்படுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது பின் இருக்கையில் அரசு பஸ் டிரைவரான சரவணன் என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது கண்டெக்டர் குருசாமி பஸ் புறப்பட உள்ளதால் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் கண்டக்டர் குருசாமியை பயங்கரமாக தாக்கினார். மேலும் இதை தடுக்க வந்த பயணிகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். சரவணன் தாக்கியதில் குருசாமியின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. உடனே அங்கிருந்த பணிமனை அலுவலகத்திற்கு புகார் அளிக்க சென்றார்.
அப்போதும் ஆத்திரம் அடங்காமல் சரவணன் அவரை விரட்டிச் சென்று தாக்க முயன்றார். இதனால் பஸ்நிலையத்தில் பரபர ப்பான சூழல் உருவானது. இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு வந்து சரவணனை விசாரனைக்காக அழைத்துச் சென்றனர். அவர் குடிபோதையில் இருந்ததால் இந்த தாக்குதலில் ஈடுபட்ட தாக போலீசார் தெரி வித்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- திருவாவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனியில் பல முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று திருக்கார்த்திகை திருவிழா ஆகும். 7 நாட்கள் நடைபெறும் இந்த விழா வருகிற 20-ந் தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின்னர் காப்பு கட்டப்படும். மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, மாலை 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து 6 நாட்களும் இந்த பூஜை நடைபெறுகிறது. 25-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின் போது நடைபெறுகிறது. 26-ந்தேதி திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். 4.30 மணிக்கு விளாபூஜை அதனைத் தொடர்ந்து சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6.15 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து திருவாவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
- குடும்பத்தினரிடம் விசாரித்ததில் கடந்த சில மாதங்களாகவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் வீடு மற்றும் டி.வி. அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த எலக்ட்ரீஷியன் செல்வம் (41) என்பவரை நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்தார். அவரது குடும்பத்தினரிடம் விசாரித்ததில் கடந்த சில மாதங்களாகவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
போலீசார் அவரது மருத்துவ சான்றுகளையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அந்த வாலிபரை எச்சரித்து இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள கோசுக்குறிச்சி கரையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இவருக்கு முத்துலட்சுமி (35) என்ற மனைவியும், நதியா (14) என்ற மகளும் உள்ளனர். நதியா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடன் ஈஸ்வரனின் தாய் செல்லாயி (75) என்பவரும் வசித்து வந்தார். ஈஸ்வரனுக்கு சொந்தமான வயல் இருந்ததால் அதனை பார்த்துக் கொண்டு பசுமாடுகள் வளர்த்து பால் விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.
ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மது குடித்துவிட்டு வருவதை தாய் மற்றும் மனைவி கண்டித்துள்ளனர். அவர்களுடன் ஈஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று இரவு 11.30 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஈஸ்வரனை மனைவி மற்றும் தாய் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அரிவாளால் தனது தாய் என்றும் பாராமல் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார். இதைப் பார்த்ததும் மனைவி மற்றும் மகள் நதியா ஆகியோர் கதறி அழுதனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான பெரியாண்டி (80) என்பவர் எழுந்து வந்தார். அவரையும் ஈஸ்வரன் அரிவாளால் பயங்கரமாக வெட்டினார். இதில் பெரியாண்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் ஆத்திரமடைந்த ஈஸ்வரன் வீட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசு மாட்டையும் வெட்டினார். இதைப் பார்த்ததும் மகள் நதியா தடுக்க முயன்றார். இருந்த போதும் அவரது 2 கைகளையும் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் நதியா மயங்கி விழுந்தார்.
கையில் அரிவாளுடன் தனக்கு எதிரே வந்த அனைவரையும் வெட்ட முயன்றதால் அவர் அருகில் செல்வதற்கே பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் ஒருவழியாக அவரை பிடித்து கால்களை கட்டினர். அதன் பிறகு நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி நதியாவை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி நத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் தலைமையிலான போலீசாரும் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஈஸ்வரனை கைது செய்து நத்தம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தாய் உள்பட 2 பேரை வெட்டி சாய்த்ததுடன் மகளையும் அரிவாளால் வெட்டிய சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலிலும், வன்னியர்களை எம்.பி.சி. பட்டியலிலும் சேர்க்க வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிறிஸ்தவ மக்கள் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும். கிறிஸ்தவ வன்னியர்களை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்.
சுயாதீன திருச்சபையினர் சொந்த கட்டிடங்களில் நடத்தும் ஆராதனைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் பீட்டர் லாரன்ஸ் தலைமை வகித்தார்.
புனித மரியன்னை கல்வி நிறுவனங்களை சேர்ந்த மரிவளன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
- வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்தனர்.
- அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சாணார்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்த அலங்காநல்லூரை சேர்ந்த கண்ணன்( வயது 38), கன்னியாபுரத்தை சேர்ந்த சுரேந்திரன்( வயது 43) ஆகிய 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஏழை, எளிய மக்கள் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிக்கு வந்து சிகிச்சை பெற அதிக பணம் செலவாகும் என்பதால் கிராமங்களிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- எனவே மருத்துவ அதிகாரிகள் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்க வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த கூலித்தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். இதனுடன் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.
மேலும் நீண்ட நாட்கள் நீடிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். குறிப்பாக வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காலத்தில் வேகமாக பரவும் காய்ச்சலால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
சில மலை கிராமங்களில் போதிய அளவு வசதிகள் இல்லை. அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லவும் போக்குவரத்து வசதி அதிக அளவு இல்லை. இதனால் பெரும்பாலான கிராம மக்கள் மெடிக்கல் ஷாப்பில் மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் பார்த்து வருகின்றனர். மேலும் மருத்துவம் படிக்காத சிலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏழை, எளிய மக்கள் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிக்கு வந்து சிகிச்சை பெற அதிக பணம் செலவாகும் என்பதால் கிராமங்களிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் காய்ச்சல் பாதிப்பு குறையாமல் உள்ளது. எனவே மருத்துவ அதிகாரிகள் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்க காலதாமதம் செய்வது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது.
- ஆனால் தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர்திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.
நிலக்கோட்டை:
மதுரை மாவட்டம் திருமங்கலம், உசிலம்பட்டி தாலுகா விவசாயிகள் கடந்த சில மாதங்களாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பேரணையில் திருமங்கலம் கால்வாய் பகுதிக்கு முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருமங்கலம் நீரினை பயன்படுத்துவோர் விவசாய சங்க தலைவர் ராமன் தலைமையிலும், உதவி செயற்பொறியாளர் அன்பரசன் முன்னிலை யிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதில் திருமங்கலம் பாசன நீரினை பயன்படுத்து வோர் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பகவான், தியாகராஜன், தங்கராசு, அப்துல் கலாம், அறிவியல் விவசாய சங்க தலைவர் அபேல் மூர்த்தி, மதுரை மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மணிகண்டன், உதவி பொறியாளர் செல்லையா, சேகரன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சந்தனத்துரை, ஜெயக்குமார், விக்கிரமங்கல பகுதி விவசாய சங்க தலைவர் மூக்கன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது திருமங்கலம் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமன் கூறியதாவது:- ஒரு தலை பட்சமாக கள்ளந்திரி கால்வாய்க்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. திருமங்கலம் கால்வாயில் தண்ணீர் திறக்க காலதாமதம் செய்வது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் போராடினர். ஆனால் தற்போது 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர்திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது.
எனவே அதிகாரிகள் குறைந்தது 40 நாட்களு க்காவது தண்ணீர் திறக்க வேண்டும் என்றார்.
- மில்லில் வேலை செய்து வந்தார்.
- இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அழகு சமுத்திர பட்டியை சேர்ந்தவர் மணிவேல். மில் தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (35). இவரும் மில்லில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சர்மிளாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 4 வீதிகளிலும் இருந்து சூரன்கள் புறப்பட்டு முருகனுடன் போர் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
- பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டும் அவர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையிலும் கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.
பழனி:
பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 18ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழா கிரி வீதியில் நடைபெறும். இதனை முன்னிட்டு 4 வீதிகளிலும் இருந்து சூரன்கள் புறப்பட்டு முருகனுடன் போர் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். முடிவில் சூரன்களை முருகன் வதம் செய்து வெற்றிவாகை சூடுவார்.
இந்த நிகழ்ச்சியை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பழனி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்கள் பாதுகாப்பை முன்னிட்டும் அவர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யும் வகையிலும் கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி இன்று நடைபெற்றது.
விழா நடைபெறும் பகுதியில் இருந்த கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
விழா நிறைவடையும் வரை இப்பகுதியில் யாரும் மீண்டும் கடைகள் அமைக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- அங்கிருந்த அதிகாரிகள் தற்போது உடனடியாக நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள இயலாது என தெரிவித்தனர்.
- இதனையடுத்து விவசாயிகள் தாங்களாக முன்வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைத்துக் கொள்ள அனுமதி கோரினர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, எம்.குரும்பபட்டியை ஒட்டி கன்னிமார் சமுத்திரம் அமைந்துள்ளது. இந்த கண்மாய்க்கு மழைநீர் மற்றும் மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் எம்.வாடிப்பட்டி கோபால் கண்மாய் நிறைந்த பின் அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் நேராக கன்னிமார் சமுத்திர கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கும்.
இவ்வாறு தண்ணீர் வரும் பாதையில் எம்.வாடிப்பட்டி, மற்றும் வஞ்சி ஓடையில் இருந்து வரும் வாய்க்கால்களில் ஆங்காங்கே புதர்கள் மண்டியும், சில இடங்களில் ஓடை உடைப்புகள் ஏற்பட்டும் இருந்தது. இதை அறிந்த விவசாயிகள் நிலக்கோட்டை மருதாநதி பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகி உடனடியாக சீரமைத்து தர கோரிக்கை வைத்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தற்போது உடனடியாக நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள இயலாது என தெரிவித்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் தாங்களாக முன்வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைத்துக் கொள்ள அனுமதி ேகாரினர். அதிகாரிகள் முறையாக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க உடனே சீரமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் வஞ்சி ஓடைப்பகுதியில் இருந்து ஓடைகளை சீரமைத்து உபரி நீரை கன்னிமார் சமுத்திர கண்மாய்க்கு கொண்டு வந்தனர்.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து உபரி நீர் கிடைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும், முதலமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கன்னிமார் சமுத்திர கணமாய் நிரம்பினால் வெங்கடாஸ்திரி கோட்டை, பூசாரிபட்டி, மல்லனம்பட்டி, எம்.குரும்பபட்டி மற்றும் சில கிராமங்கள் பயனடையும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
- தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- அப்போது அதிகாரிகள் கூறுகையில், புல்லாவெளி, வெள் ளரிக்கரை, குப்பம்மாள்பட்டி, கவிக்காடு, கரடிபாறை, பூதமலை, ஆகிய பகுதிகளில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் தொலை தொடர்பு வசதி கிடையாது. இதனால் தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பெரியூர், நடுப்பட்டி கொடலங்காடு,வட கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கோவை ஊரக வளர்ச்சி தொலை தொடர்பு இயக்குனர் சத்தியபிரிய தர்ஷனி,வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், புல்லாவெளி, வெள் ளரிக்கரை, குப்பம்மாள்பட்டி, கவிக்காடு, கரடிபாறை, பூதமலை, ஆகிய பகுதிகளில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.
பின்னர் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானை, காட்டெருமை புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. அதைதடுக்க தொங்கு சோலார் வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி. தெரிவித்தார். இந்த ஆய்வில் கொடைக்கானல் தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன். கீழ்மலை தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டியன், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், காமனூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிரஞ்சிதம் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






