என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட போது அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் விமல். இவர் நேற்று பிற்பகல் தெற்கு ரத வீதியில் உள்ள வேணு பிரியாணி ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு பிரியாணி ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். பசியோடு இருந்த அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை சாப்பிட தொடங்கினார். அப்போது அதில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், ஊழியர்கள் மற்றும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தார்.

    ஆனால் ஓட்டல் நிர்வாகத்தினர் அலட்சியமாக பதில் அளித்தனர். இதனால் அவர் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானார். சாப்பிட்டதற்கு பணம் தர வேண்டாம் என்று நிர்வாகம் சார்பில் சமாதானம் செய்ய முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓட்டலில் பரிமாறப்பட்ட பிரியாணியில் கரப்பான்பூச்சி கிடந்தது அங்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நிறுத்திச் செல்லும் வாகனங்களால் தெற்குரத வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் வாகன ஓட்டுனர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவுக்கு கடை முன்பு ஏராளமான வாகனங்கள் நிறுத்தியிருந்தாலும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இது போன்ற சூழலில் தற்போது வாடிக்கையாளர் சாப்பிட்ட பிரியாணியிலும் கரப்பான் பூச்சி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நத்தம் சுற்று வட்டார பகுதியில் செவ்வந்தி பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
    • பூக்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலையில் சாகுபடியும் பாதிக்கப்பட்டு ள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான, மணக்காட்டூர்,கே.புதூர், சிறுகுடி, பிள்ளையார்நத்தம், வத்திபட்டி,காசம்பட்டி, செந்துறை உள்ளிட்ட கிராமங்களில் செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படு கிறது.

    தற்போது இப்பகுதியில் அதிக அளவு செவ்வந்தி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.செவ்வந்திப் பூக்களைப் பொருத்தவரை ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். 3 மாதங்கள் வரை பூக்கள் வரத்து இருக்கும். நத்தம் சுற்று வட்டார பகுதியில் பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.இந்த பூக்கள் மதுரை,திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக முகூர்த்த தினங்கள், திருவிழா காரணமாக விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.ஐப்பசி மாதம் முகூர்த்த தினங்கள்,திருவிழாக்கள் குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக சரிந்து ரூ.30 முதல் ரூ.50 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழையால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.மிகவும் எதிர்பார்த்த பூக்களுக்கு விலை கிடைக்காத நிலையில் சாகுபடியும் பாதிக்கப்பட்டு ள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் விலை உயரும் என்ற நம்பிக்கை தொடர்ந்து பூக்களை பறிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 6-ஆவது தேசிய இயற்கை மருத்துவ தின விழா நடைபெற்றது.
    • நாம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் நம் முன்னோர்களின் இயற்கை வாழ்வியல் முறை களை கடைப்பிடித்தால் நலமுடன் வாழலாம் என கலெக்டர் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 6-ஆவது தேசிய இயற்கை மருத்துவ தின விழாவை, கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்து பேசிய தாவது:-

    இயற்கை மருத்துவம் என்பது மருந்து மாத்திரை கள் மற்றும் எந்தவிதமான பக்கவிளைவும் இல்லாமல் பஞ்சபூதத்தின் சாரங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றைக் கொண்டு அனைத்து நோய்களுக்கும் அமைதி யையும், பொறுமையையும், இறையருளையும் கொண்டு பூரண குணமளிக்கப்படும் இனிமையான சிகிச்சை முறையாகும்.

    இயற்கை மருத்துவ சிகிச்சை முறையில், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், உள் மற்றும் வெளி மூலம், அல்சர், உடல் பருமன், அஜீரணக் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள், தோல் நோய்கள், நரம்புத் தளர்ச்சி, சுவாசக் கோளாறுகள், ரத்த சோகை, முடக்கு வாதம், மூட்டு வலிகள் போன்றவற்றை தீர்க்க சிகிச்சை, மனநல ஆலோசனைகள், குடும்ப நல ஆலோசனைகள், கர்ப்பகால யோகா ஆலோ சனைகள் வழங்கப்படுகிறது. இயற்கை நல ஆரோக்கி யத்திற்குத் தேவையான இயற்கை உணவுகள், சத்துமாவு, பேரிச்சம்பழம், நாட்டு சர்க்கரை பாரம்பரிய உணவு வகைகளை நாம் பயன்படுத்திட வேண்டும்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். பசியில்லாமல் சாப்பிட வேண்டாம். பசித்தவுடன் அரை டம்ளர் குளிர்ந்த தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டும். இரண்டாவது பசி எடுக்கும் போது பழங்கள் அல்லது உணவு அருந்த வேண்டும். வெறும் வயிற்றில் இனிப்பான பழங்கள் சாப்பிடுவது நன்மை தரும். உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். வாரம் ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.

    கொரோனா தொற்று பரவல் காலங்களில் பார ம்பரிய மருத்துவ முறைக ள்தான் நமக்கு பெரிதும் பாதுகாப்பாக இருந்தது. பலர் பாரம்பரிய மருத்துவ முறைக்கு மாறி வருகின்றனர். எனவே, நாம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் நம் முன்னோர்களின் இயற்கை வாழ்வியல் முறை களை கடைப்பிடித்தால் நலமுடன் வாழலாம் என்றார்.

    இவ்விழாவில் மேயர் இளமதி, அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, இணை இயக்குநர்(நலப்பணிகள்) பூமிநாதன், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் அமுதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ அலுவலர்கள் தேவராஜா, மகாமுனி, மருத்துவக் கண்காணி ப்பாளர் வீரமணி, தலைமை மருத்துவர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுமி பலாத்கார வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் தலைமறைவான வாலிபரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள கோப்பம்பட்டிைய சேர்ந்தவர் கணேசன் மகன் உதயராயன்(23). கூலித்தொழிலாளி. இவர் அதேபகுதிைய சேர்ந்த 10-ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.

    பின்னர் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்றும் உல்லாசமாக இருந்தார். இந்த விபரம் அவரது நண்பர்களுக்கும் தெரிந்தது. பின்னர் தனது காதலியை நண்பர்கள் சிலருக்கும் விருந்தாக்கினார்.

    இதில் சிறுமி கர்ப்பமானார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்ட போதுதான் தனக்கு நேர்ந்த ெகாடுமையை உணர்ந்தார். இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய த்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு நேர்ந்த கொடுைமயை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிகிச்சையில் சிறுமிக்கு பிறந்த குழந்தையும் இறந்ததால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் உதய ராயன் மற்றும் அவரது நண்ப ரான கொல்ல பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திரவிய கோடீஸ்வரன்(29) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது 3-வது நபராக செங்குளத்துப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் மணிமாறன்(23) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவரும் ஆட்டோ டிரை வராக உள்ளார்.

    போலீசார் தேடி வரு வதை அறிந்து தலைமறை வாக இருந்த மணிமாறனை கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    • டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினியிடம் மருத்துவம் படிப்பு சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை.
    • ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்தன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த பவானி கணேசன் தனியார் ஆஸ்பத்திரி தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத்தின்படி நலப்பணிகள் இணை இயக்குனரிடம் உரிமம் பெறவில்லை.

    இங்கு டாக்டராக பணியாற்றிய சித்ரா பிரியதர்ஷினியிடம் மருத்துவம் படிப்பு சான்றிதழ் மற்றும் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை. மேலும் ஆஸ்பத்திரிக்கு தொடர்பு இல்லாத மகப்பேறு மருத்துவத்திற்கான உபகரணங்கள், மாத்திரைகள் இருந்தன. ஆயுர்வேதம், சித்தா தொடர்பான காலாவதியான மாத்திரைகளும் இருந்தன.

    அதனை பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர். மேலும் மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் போலீசார் போலி டாக்டர் சித்ரா பிரியதர்ஷினி மீது மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பூங்கொடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ப்பட்ட அறையில் பாது காப்பாக வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திண்டுக்கல்:

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி க்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமையவுள்ள ரெட்டியார்சத்திரம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பூங்கொடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் தெரிவிக்கையில்,

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு 1.1.2024-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் என 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலு க்கான வாக்கு எண்ணிக்கை மையம் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலை க்கழக கல்லூரியில் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவு செய்யும் எந்திரம் வைப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை, முகவர்கள் அமரும் பகுதி, பத்திரிகையாளர்கள் பகுதி, கண்காணிப்பு கோபுரம் அமையும் இடம், வரவேற்பறை அமைவிட ங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க ப்பட்ட அறையில் பாது காப்பாக வைப்பதற்கு உரிய இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் தேர்தல் தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நாளை முதல் தங்கள் விரதத்தை தொடங்கு கின்றனர்.
    • திண்டுக்கல்லில் உள்ள கடைவீதிகளில் பக்தர்கள் அணியும் மாலை, காவி வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாளான நாளை முதல் தங்கள் விரதத்தை தொடங்கு கின்றனர்.

    இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கடைவீதிகளில் பக்தர்கள் அணியும் மாலை, காவி வேட்டி, துண்டு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப சந்தனமாலை, ருத்ராட்ஷ மாலை, ஸ்படிகமாலை ஆகியவற்றை அணிந்து கொள்வார்கள். விரத நாட்கள் முடிந்த பிறகு மாலைகளை அகற்றி மீண்டும் மறுவருடம் அதனை அணிந்து கொள்வதும், துணை மாலையாக மற்றொரு மாலையை அணிந்து கொள்வதும் வழக்கம்.

    அதன்படி திண்டுக்கல் கடைவீதிகளில் பல்வேறு வகையான மாலைகள் ரூ.100 முதல் ரூ.400 வரை விற்பனையானது. மாலை களில் பொருத்தப்படும் அய்யப்பன் உருவம் பொறித்த டாலர்களும் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. இதுதவிர கருப்பு, பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் வேட்டி, துண்டு, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனையானது.

    கார்த்திகை மாதம் நாளை பிறக்க உள்ளதை முன்னிட்டு விரதம் மேற்கொள்ளும் வீடுகளிலும் சுத்தம் செய்து தயார் படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அய்யப்பன் கோவில் மற்றும் மணிமண்டபம் ஆகிய பகுதிகளிலும் பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் செய்ய ப்பட்டன.

    • திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.

    இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலைஅடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, முத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி,

    நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி மனைவியை கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர்.
    • புகாரின்பேரில் மாற்றுத்திறனாளி கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பட்டிவீரன்பட்டியை சேர்ந்த அங்குச்சாமி மகன் மதன்குமார் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்த மாணிக்கம் மகள் சசிகலா (30) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு பிப்.2ம் தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி சசிகலாவை கணவர் மதன்குமார் மற்றும் மாமியார் அன்னகாமு ஆகியோர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெ க்டர் லதா வரதட்சணை கொடுமைப்படுத்திய மதன்குமார் மற்றும் அன்னகாமு ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். மதன்குமாரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • கொடைக்கானல் மேல் மலை பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி, உள்ளிட்ட கிராம பகுதிகளில் வேலுச்சாமி எம்.பி. ஆய்வு செய்தார்.
    • பள்ளி கட்டிட பணி, சாலை மேம்பாட்டு பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல் மலை பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி, உள்ளிட்ட கிராம பகுதிகளில் வேலுச்சாமி எம்.பி. ஆய்வு செய்தார். இந்த பகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிட பணி, சாலை மேம்பாட்டு பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    மேல்மலைப்பகுதிகளில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு டவர் அமைப்பதற்குரிய இடங்கள், வட்டக்கானல் பகுதியில் தொலைத்தொடர்பு டவர் அமைப்பதற்குரிய இடங்களையும் ஆய்வு செய்தார். இப் பகுதியில் டவர் அமைப்பதன் மூலம் வெள்ளக்கவி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மிகவும் பின் தங்கிய மலை கிராமங்கள் வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன்பெறுவார்கள் என வேலுச்சாமி எம்.பி. தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது இந்திய தொலைதொடர்பு துறை டெபுட்டி டைரக்டர் ஜென்ரல் சத்தியபிரிய தர்ஷிணி, கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, கொடைக்கானல் முன்னாள் நகர்மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    பின்னர் நடந்த ஆய்வு கூட்டத்தில் கொடைக்கானல் டி.எப்.ஓ யோகேஷ் குமார் மீனா, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜன், ஏ.சி.எப். சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு மேல்மலை பகுதியிலுள்ள விவசாயிகள் பிரச்சினைகள், நகர் பகுதியில் உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு முதன்மைச் செய லாளர் மங்கத்ராம் ஷர்மா, கலெக்டர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு முதன்மைச் செய லாளர் மங்கத்ராம் ஷர்மா, கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மங்கத்ராம் ஷர்மா கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் இது வரை 982.77 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது. பெரும்பாலான அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பருவமழை காலங்களில் ஏற்படும் சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைக்க ப்பட்டன.

    கொடைக்கானல், சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்டு போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டு அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதியாக உள்ளது.

    அந்த இடங்களில் சம்மந்தப்பட்ட அலுவ லர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். 66 பள்ளிகள், 4 திருமண மண்டபங்கள், 5 சமுதாய கூடங்கள் என 75 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தீயணைப்பு துறை மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின் போது உரிய முறையில் செயல்பட ரப்பர் படகு, மிதவைப்படகு, ரப்பர் டிங்கிகள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் குடிநீர், மின்வசதி உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உணவு வசதிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். அனைத்து ரேசன் கடை களிலும் குடிமைப்பொரு ட்கள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தேவையான மருந்துகள் வைத்திருக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு ஏற்பட்டாலும், வெள்ளம் ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் எஸ்.பி. பாஸ்கரன், திட்ட இயக்குனர் திலகவதி, வருவாய் அலுவலர் ஷேக் முகைதீன், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், கோட்டாட்சி யர்கள் கமலக்கண்ணன், சரவணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில், நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாறை:

    அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது. இதையொட்டி பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, கே.சிங்காரக்கோட்டை, சேவுகம்பட்டி, செங்கட்டான்பட்டி, மருதாநதி அணை, கோம்பை, சித்தரேவு,

    எம்.வாடிப்பட்டி, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி, போடிகாமன்வாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    ×