என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,

    பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண் சிசுக்களை பாதுகாப்பதற்காக கருவில் இருக்கும் பெண் சிசுக்களை பாதுகாத்தல், பிறந்த பெண் குழந்தைகளை பாதுகாத்தல், பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாத்தல், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.

    பெண் குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் ஜீவசிந்து, தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • குதிரையாறு அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • இந்த காட்சி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு ஆகிய 3 அணைகள் உள்ளன. கொடைக்கானல் மற்றும் அதன் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணைகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.

    தற்போது கொடைக்கானலில் பெய்துவரும் கனமழை காரணமாக வரதமாநதி அணை ஏற்கனவே முழு ெகாள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்தும் கடந்த வாரம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 70 அடி உயரமுள்ள குதிரையாறு அணையில் 60 அடி வரை தண்ணீர் உள்ளது.

    தற்போது குதிரையாறு அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாயை துரத்திக் கவ்வி பிடிப்பது போன்ற வீடியோ அதில் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    அணைப்பகுதியை ஒட்டிய இடங்களில் யானை, மான், சிறுத்தை போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளன. பெரும்பாலும் இவை வனப்பகுதியை விட்டு வெளியே வராது என்ற போதிலும் மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தை திரிவதால் இதுகுறித்து வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கொழுமம் வனச்சரக அலுவலர் செந்தில் தெரிவிக்கையில்,

    அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போன்ற வீடியோ உண்மையானதுதான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ வெளியானது. அதனை வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் இங்கு வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் பூட்டிக்கிடந்ததால் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
    • இன்று காலை கடையை திறக்கச் சென்ற ஊழியர்கள் அடுத்தடுத்து கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிரு ந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலைய சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாக காம்ப்ளக்ஸ் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் பூட்டிக்கிடந்தன. இதனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை என தெரிந்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஆடிட்டர் அலுவ லகம்,போட்டோ ஸ்டூடியோ மற்றும் கணினி மையத்தில் பூட்டை உடைத்தனர்.

    இன்று காலை கடையை திறக்கச் சென்ற ஊழியர்கள் அடுத்தடுத்து கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிரு ந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், ஸ்டூடியோவில் இருந்து 2 காமிராக்கள், ஆடிட்டர் அலுவலகத்தில் இருந்து 1 செல்போன், கணினி மையத்திலிருந்து மடிக்கணினி மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த காம்ப்ளக்சில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளைக் கொண்டு கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூலித் தொழிலாளியும், அவரது நண்பரும் சின்னச்சாமி என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர்.
    • அப்போது சின்னச்சாமியும் அங்கு மது குடித்துக் கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மணி மகன் ராஜேஷ்குமார் (வயது 25). கூலித் தொழிலாளி. இவரும் அவரது நண்பரான பாண்டியும் சின்னச்சாமி என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சின்னச்சாமியும் அங்கு மது குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதனிடையே ராஜேஷ்குமார் தரப்பினரு க்கும் சின்னச்சாமி தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ராஜேஷ்கு மாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து விலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மோதலில் ஈடுபட்ட சின்னச்சாமி, கவுரிமணி, கருப்புச்சாமி, பேச்சியம்மாள் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    சின்னச்சாமியை கைது செய்தனர். இதனிடையே காயமடைந்த ராஜேஷ்குமார் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    • தற்போது மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • இதனால் கத்தரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளான வடமதுரை, பாடியூர், குளத்தூர், எரியோடு, வேடசந்தூர் ஆகிய பல்வேறு கிராமங்களில் நாட்டு வகை மற்றும் ப்ளூ கத்தரிக்காய் சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கள் திண்டுக்கல் உழவர் சந்தை மற்றும் காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.40க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கத்தரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்துள்ளது. திண்டுக்கல் உழவர் சந்தையில் வழக்கத்தைவிட பாதியாக கத்தரிக்காய் வந்துள்ளது. இன்று 250 கிலோ மட்டுமே வரத்து வந்ததால் கிலோ ரூ.80 க்கு விற்கப்பட்டது.

    காந்தி மார்க்கெட்டிலும் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் சில்லறை கடைகளில் கிலோ ரூ.90 வரை விற்கப்படுகிறது. சாம்பாருக்கு பயன்படுத்த ப்படும் கத்தரிக்காய் ரூ.100ஐ நெருங்கி வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமையலில் கத்தரிக்காயை குறைத்து மற்ற காய்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

    தொடர் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனையாகும் என்று வியாபாரிகள் தெரி வித்தனர்.

    • பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார்.
    • போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    சென்னை வில்லிவாக்கம், என்.எம்.டி.ஹெச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்த இவர் பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். மேலும் இங்கிருந்தபடியே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எவ்வாறு இறந்தார்? வழுக்கி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அறை கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மகன் ஜேக்கப் (வயது 30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்றார். திண்டுக்கல் வந்த ஜேக்கப் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    இன்று அவரது அறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் ஜேக்கப் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார்.
    • அப்போது திண்டுக்கல் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை புதூரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது திண்டுக்கல் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்து 10 நாட்களுக்கு பிறகே சம்பளம் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
    • இன்று காலை 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பழனி:

    பழனி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்து 10 நாட்களுக்கு பிறகே சம்பளம் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

    தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து இன்று காலை 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் அவர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனியில் கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாகவும், தீபாவளி பண்டிகையின் போது வெடித்த பட்டாசு குப்பைகள் அதிக அளவில் தேங்கி சுகாதார சீர்கேடான நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடாமல் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சுகாதார பணிகளில் தேக்கம் ஏற்பட்டது.

    கடந்த 2 நாட்களாகவே பழனியில் குப்பைகள் முறையாக அள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். நகரில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணத்தால் குப்பைகள் தேக்கமடைந்து காணப்பட்டால் பல்வேறு நோய்கள் உண்டாகும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதனிடையே கவுன்சிலர் ஜனத்துல்பிரதோஷ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதே போல மற்ற கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மதுரையில் இருந்து தாறுமாறாக வந்த கார் திடீரென நிலை தடுமாறி பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது.
    • அந்த நேரம் அங்கு யாரும் ஆட்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்தப் பயணிகள் நிழற்குடையில் தான் பெரியகுளம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் நிற்பது வழக்கம்.

    நேற்று தீபாவளி முடிந்த அடுத்த நாள் என்பதாலும், விடுமுறை தினம் என்பதால் மாலை 4 மணியளவில் சற்று ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அப்போது மதுரையில் இருந்து தாறுமாறாக வந்த கார் திடீரென நிலை தடுமாறி பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது. அந்த நேரம் அங்கு யாரும் ஆட்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர்.
    • ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1095 குழுக்களில் 11,446 உறுப்பினர்களும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 647 குழுக்களில் 6303 உறுப்பினர்களும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 813 குழுக்களில் 8228 உறுப்பினர்களும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 499 குழுக்களில் 5440 உறுப்பினர்களும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 484 குழுக்களில் 4996 உறுப்பினர்களும், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 1091 குழுக்களில் 11,051 உறுப்பினர்களும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 623 குழுக்களில் 6217 உறுப்பினர்களும்,

    ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 900 குழுக்களில் 9099 உறுப்பினர்களும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 584 குழுக்களில் 6120 உறுப்பினர்களும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 562 குழுக்களில் 5692 உறுப்பினர்களும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 561 குழுக்களில் 5595 உறுப்பினர்களும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 572 குழுக்களில் 6100 உறுப்பினர்களும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 466 குழுக்களில் 4830 உறுப்பினர்களும், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 661 குழுக்களில் 7085 உறுப்பினர்களும் என ஊரகப் பகுதிகளில் மொத்தம் 9558 குழுக்களில் 98,202 உறுப்பினர்கள் உள்ளனர்.

    மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆக மொத்தம் 13,040 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில் 1,39,485 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 236 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.35 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 465 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.69 லட்சம், 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 188 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28 லட்சம் என மொத்தம் ரூ.1.32 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 1,538 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9.91 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 1,315 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.19.72 கோடி, 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 389 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.01 கோடி என மொத்தம் ரூ.34.64 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 18,548 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.976.94 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 11,631 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.621.16 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 5,474 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.388.87 கோடி என மொத்தம் ரூ.1,986.97 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோல் நகர்ப்புற பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 633 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.63 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 652 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.65 லட்சம் என மொத்தம் ரூ.1.29 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 328 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.15.28 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 3,148 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.207.40 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 3,911 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.194.08 கோடி என மொத்தம் ரூ.416.77 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-22 முதல் 31.10.2023 வரை ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களில் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழக அரசுக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.

    • சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • அவரது சட்டை பையில் பீடி தீப்பெட்டி, மோட்டார் சைக்கிளின் சாவி, பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவை இருந்தது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் காமராஜர் அணை அருகே, ராஜவாய்க்கால் செல்லும் வழியில் சாலையோரம் முட்புதரில், சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம்வீசியதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செம்பட்டி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அதில் சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அந்த நபர் கைலி வேஷ்டி, அரை கை சட்டை அணிந்து இருந்தார். அவரது சட்டை பையில் பீடி தீப்பெட்டி, மோட்டார் சைக்கிளின் சாவி, பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவை இருந்தது.

    மேலும் அவர் இடுப்பில் தாயத்து போட்ட கருப்பு கயிறு கட்டியிருந்தார். அடையாளம் தெரியாத அவரை யாராவது கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி அந்தப் பகுதியில் வீசி விட்டுச் சென்று இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.

    மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் சுமார் 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி இங்கு வீசி சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி போட்ட, நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தெரிய வில்லை.

    சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நபர் யார்? அவரை கொலை செய்து அந்த பகுதியில் வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த நபரின் சட்ைட காலரில் செம்பட்டியை சேர்ந்த தையல் கடை முகவரி இருந்ததால் அவர் செம்பட்டிைய சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அப்பகுதியில் மாயமான நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×