என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே கன்னிமார் சமுத்திரத்துக்கு வாய்க்கால்களை சீரமைத்த விவசாயிகள்
    X

    ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடையை தூர்வாரிய விவசாயிகள்.

    நிலக்கோட்டை அருகே கன்னிமார் சமுத்திரத்துக்கு வாய்க்கால்களை சீரமைத்த விவசாயிகள்

    • அங்கிருந்த அதிகாரிகள் தற்போது உடனடியாக நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள இயலாது என தெரிவித்தனர்.
    • இதனையடுத்து விவசாயிகள் தாங்களாக முன்வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைத்துக் கொள்ள அனுமதி கோரினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, எம்.குரும்பபட்டியை ஒட்டி கன்னிமார் சமுத்திரம் அமைந்துள்ளது. இந்த கண்மாய்க்கு மழைநீர் மற்றும் மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டவுடன் எம்.வாடிப்பட்டி கோபால் கண்மாய் நிறைந்த பின் அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் நேராக கன்னிமார் சமுத்திர கண்மாய்க்கு தண்ணீர் கிடைக்கும்.

    இவ்வாறு தண்ணீர் வரும் பாதையில் எம்.வாடிப்பட்டி, மற்றும் வஞ்சி ஓடையில் இருந்து வரும் வாய்க்கால்களில் ஆங்காங்கே புதர்கள் மண்டியும், சில இடங்களில் ஓடை உடைப்புகள் ஏற்பட்டும் இருந்தது. இதை அறிந்த விவசாயிகள் நிலக்கோட்டை மருதாநதி பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணுகி உடனடியாக சீரமைத்து தர கோரிக்கை வைத்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தற்போது உடனடியாக நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள இயலாது என தெரிவித்தனர்.

    இதனையடுத்து விவசாயிகள் தாங்களாக முன்வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சீரமைத்துக் கொள்ள அனுமதி ேகாரினர். அதிகாரிகள் முறையாக விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க உடனே சீரமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் வஞ்சி ஓடைப்பகுதியில் இருந்து ஓடைகளை சீரமைத்து உபரி நீரை கன்னிமார் சமுத்திர கண்மாய்க்கு கொண்டு வந்தனர்.

    இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து உபரி நீர் கிடைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும், முதலமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கன்னிமார் சமுத்திர கணமாய் நிரம்பினால் வெங்கடாஸ்திரி கோட்டை, பூசாரிபட்டி, மல்லனம்பட்டி, எம்.குரும்பபட்டி மற்றும் சில கிராமங்கள் பயனடையும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×