என் மலர்
திண்டுக்கல்
- செம்பட்டியை அடுத்து பஸ் வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சை நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரித்தனர்.
- மகளிர் இலவச பயணத்திற்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 2ல் இருந்து அரசு பஸ் ஒன்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறது. இந்த பஸ்சை கடந்த 15ம் தேதி கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும் நபர்களை ஏற்றிச் செல்வதற்காக புக்கிங் செய்தனர். சுமார் 80 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்சை அன்று காலை அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆத்தூரில் இருந்து கோபால்பட்டிக்கு பயணிகளை ஏற்றிச் சென்றனர்.
பின்னர் மாலையில் மீண்டும் அவர்களை கோபால்பட்டியில் இருந்து ஆத்தூருக்கு தற்காலிக டிரைவர், கண்டக்டர் அரசு பஸ்சில் அழைத்துச் சென்றனர். அப்போது பயணிகளுக்கான டிக்கெட்டாக இலவச மகளிருக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை தற்காலிக கண்டக்டர் வழங்கி உள்ளார். இந்நிலையில் செம்பட்டியை அடுத்து பஸ் வந்து கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்சை நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரித்தனர்.
அப்போது மகளிர் இலவச பயணத்திற்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக இதுபோன்று தனியார் நிகழ்ச்சிகளுக்கு பயணிகளை புக்கிங் செய்து ஏற்றிச் செல்லும்போது போக்குவரத்துக் கழக மேலாளர் வழங்கும் அனுமதி கடிதத்தை கண்டக்டர் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால் முறையான விதிகளை பின்பற்றாத போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஊழியர்களான சுப்பையா, ஜோசப் மிக்சன் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழனி:
பராசூரன், திரவுபதி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்படுவதாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் மீது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் நேற்று சென்னையில் இருந்த மோகன் ஜியை கைது செய்தனர். பின்னர் திருச்சி அழைத்து வந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவரை சொந்த ஜாமினில் விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனிடையே மோகன் ஜி மீது பழனி அடிவாரம் போலீஸ் நிலையத்திலும் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் அடிவாரம் போலீசார் மோகன் ஜி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு குறித்து சர்ச்சையான கருத்துகளை பரப்பிய கோவையைச் சேர்ந்த பா.ஜ.க. தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் செல்வக்குமார், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் ஆகியோர் மீது பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மோகன் ஜி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் உள்பட முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தமிழ் முருகன் மாநாடு 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. அதையொட்டி கண்காட்சி ஒருவாரம் நடைபெற்றது. அப்போதும் அதிக அளவில் பக்தர்கள் வந்திருந்தனர். அதனை தொடர்ந்து வாரவிடுமுறை நாட்களில் தமிழகத்தில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இன்று மாத கார்த்திகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்தனர்.
இதனால் பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச்நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மலைக்கோவிலில் ஏராளமானோர் திரண்டனர். பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 4 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிக அளவில் பக்தர்கள் வாகனங்கள் வந்திருந்ததால் பழனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போலீசார் சீரமைத்தனர். பக்தர்கள் வசதிக்காக மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிக அளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இருந்தபோதும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வந்ததால் பஸ்களில் இடம்பிடிக்க முண்டியடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. இன்று மாத கார்த்திகை என்பதால் பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.
- ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலை பலவிதமான இயற்கை நிலைகள் அழகுபடுத்தி மெருகூட்டி பார்க்கின்றன. இதில் முக்கிய பங்களிப்பை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் முதன்மை இடத்தினை பிடிக்கின்றன, பொதுவாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகமான அளவில் இந்த மரங்கள் காணப்படுகிறது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த மரத்தில் உள்ள இலைகள் உதிர தொடங்கி செப்டம்பர் மாத இறுதி மற்றும் அக்டோபர் மாதத்தில் ரோஸ் நிறத்தில் பூக்கும் கானக செர்ரி மலர்கள் தற்போது கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்குகின்றது.
இதன் சிறப்பு அம்சம் 2 மாதங்களில் பசுமை நிறத்தில் காணப்படும். இந்த மரத்திலுள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்து செர்ரிப் பூக்கள் மட்டுமே ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.
மேலும் சுற்றுலாத்தலங்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்கும் இந்த மரங்களில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
பசுமை போர்த்திய மலைப்பகுதிகளில் ரோஸ் நிற மலர்கள் சூடிய மலைகளின் இளவரசியாக கூடுதல் அழகாக கொடைக்கானல் காட்சியளிக்கின்றது.
இந்த செர்ரி மரங்களில் உள்ள மலர்கள் அக்டோபர் மாத இறுதியில் உதிர தொடங்கி இலைகள் துளிர்த்து பழைய நிலைக்கு திரும்பி விடும். கொடைக்கானலில் நிலவும் குளுமையான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் இந்த பூக்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் கழுகு பார்வை காட்சிகளால் பார்க்கும் போது ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
- கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
- பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சீசன் காலம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். இயற்கை எழில் நிறைந்த மலைகள், நட்சத்திர ஏரி, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை அவர்கள் பார்வையிட்டு ரசிக்கின்றனர்.
இந்தநிலையில் கொடைக்கானலின் பசுமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானலை உருவாக்க வேண்டும். அதற்கு 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை கொடைக்கானலில் தடை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த கண்காணிப்பு குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதோடு பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதம் விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் நகராட்சி, பண்ணைக்காடு பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துபவர்கள், விற்பவர்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பசுமைவரி என்ற பெயரில் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 அபராதமாக விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவடைந்துள்ளது தெரிய வந்தது.
இப்பகுதியில் எவ்வித கட்டுமான பணிகளோ, சுரங்க பணிகளோ நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் இந்த பிளவு எப்படி உருவானது என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த பகுதி கேரளாவை ஒட்டியுள்ள பகுதி என்பதால், வயநாட்டில் ஏற்பட்டதை போன்ற நிலச்சரிவு இங்கும் ஏற்படுமோ? என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவில் நிர்வாகம் எங்கு நெய் வாங்கியது எனவும், பஞ்சாமிர்தத்தின் உண்மை தன்மை குறித்து விளக்க வேண்டும் எனவும் செய்தி பரப்பினர்.
- பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பழனி:
திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி திருப்பதி தேவஸ்தானத்துக்கு திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் சார்பில் நெய் அனுப்பப்பட்டு வந்தது தெரிய வந்தது.
அந்த நெய்யில் கொழுப்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தங்களது நிறுவனம் சார்பில் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நிறுவனத்தில் பால் பொருட்கள் தயாரிக்கப்படும்போது வெளியேறும் கழிவு நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதனை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்து அதில் உள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தனர். குறைபாடு இருப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
நேற்று மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நெய் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வுக்கு வந்தனர். அவர்கள் நெய் தயாரிக்க பயன்படுத்தப்படும் பால் மற்றும் மற்ற பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஏற்கனவே ஆலையின் உரிமையாளர் தங்கள் நிறுவனத்தில் தரமான பொருட்கள் மட்டுமே உற்பத்தி செய்வதாகவும், இது குறித்து தரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் வழங்கிய சான்று உள்ளதாகவும் தெரிவித்த நிலையில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பழனி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் இருந்து வாங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது என்றும், எனவே இது குறித்து கோவில் நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோவில் நிர்வாகம் எங்கு நெய் வாங்கியது எனவும், பஞ்சாமிர்தத்தின் உண்மை தன்மை குறித்து விளக்க வேண்டும் எனவும் செய்தி பரப்பினர்.
ஆனால் பழனி கோவில் பஞ்சாமிர்தத்திற்கு ஆவின் நிர்வாகத்திடம் இருந்தே நெய் சப்ளை செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்பும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்பிய பா.ஜ.க.மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது கோவில் தேவஸ்தான நிர்வாகி பாண்டியராஜன் அடிவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
- திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய் பொருட்களின் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை என கூறியதையடுத்து, கடந்த ஜூலை 6-ந்தேதி முதல் 12 -ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெய் வினியோக நிறுவனங்களில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனமும் ஒன்றாகும்.
இந்நிலையில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய் பொருட்களின் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினரும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு இருப்பதாக தகவல்.
- விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
திருப்பதி லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியானதை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து, பழனி பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
அதாவது, 'திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யபட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற AR Foods பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறது' என்று சமூக வலைதளத்தில் வதந்தி பரவியது.
இந்நிலையில், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, "'பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது' என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது" என்றார்.
- விவசாய நிலத்தில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது.
- ஆத்திரமடைந்த உரிமையாளர் ஜே.சி.பி. ஆப்ரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றார்.
செம்பட்டி:
கன்னிவாடி அருகே 4 வழிச்சாலைக்காக விவசாய நிலத்தை அழிக்கக்கூடாது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து இன்று போராட்டம் நடத்த இருந்த நிலையில், 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை பிடுங்கியதால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குண்டு கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தர்மத்துப்பட்டி-கோம்பை செல்லும் சாலையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கோவில் உள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு நல்லாசெட்டியார் பூசாரியாக உள்ளார். அங்குள்ள கோவில் நிலத்தை இவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் ஒட்டன்சத்திரம் முதல் ஜெ.மெட்டூர் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தர்மத்துப்பட்டி கோம்பை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் போது சம்பந்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வீடுகளையும், விவசாய நிலங்களையும் அழித்து சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டரிடம் புகார் வழங்கிய நிலையில் இதுகுறித்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் விவசாய நிலத்தில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது. தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்காக, அதிகாரிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் மிரட்டி வருவதாக கூறி, விவசாய சங்கம் சார்பாக இன்று சம்பந்தப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் போராட்டம் நடத்திய அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி அகற்றினர்.
அப்போது, ஜே.சி.பி. எந்திரம் வைத்து தென்னை மரங்களை சாய்த்ததில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருகாரின் மீது தென்னை மரம் விழுந்ததில் கார் சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் ஜே.சி.பி. ஆப்ரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றார்.
பின்னர் செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அவரை பிடித்து அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் வேனில் குண்டுகட்டாக தூக்கி ஏற்றி கொண்டு சென்றனர். வீட்டில் இருந்த பெண்களை போலீசார் கையை பிடித்து இழுத்து வெளியேற்றினர். தொடர்ந்து இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பிரேத பரிசோதனையில் 17 மயில்களும் விஷம் வைத்த அரிசியை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது.
- மலைப்பகுதியில் இருந்து தோட்டத்துக்கு வரும் மயில்கள் மக்காசோள கதிர்களை தின்று சேதப்படுத்தி சென்றது.
இடையகோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பலக்கனூத்து ஊராட்சிக்குட்பட்ட பொட்டிநாயக்கம்பட்டியில் நரிப்பட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 50) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தின் அருகே ஓடையில் 17 மயில்கள் இறந்து கிடப்பதாக கன்னிவாடி வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கன்னிவாடி வனச்சரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில், வனவர்கள் அய்யப்பன், செல்வம், வனக்கப்பாளர் கல்யாணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர்.
அப்போது தோட்டம் மற்றும் ஓடைபகுதியில் 8 ஆண் மயில்கள், 9 பெண் மயில்கள் என 17 மயில்கள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அரசு கால்நடை உதவி மருத்துவரை கொண்டு சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த மயில்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையில் 17 மயில்களும் விஷம் வைத்த அரிசியை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மயில்களை விஷம் வைத்து கொன்றது யார்? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விவசாயி முருகன் மயில்களை விஷம் வைத்து கொன்றது தெரியவந்தது. அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து தோட்டத்துக்கு வரும் மயில்கள் மக்காசோள கதிர்களை தின்று சேதப்படுத்தி சென்றது. இதனால் கோபமடைந்த விவசாயி முருகன் அரிசியுடன் விஷமருந்து கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்ட 17 மயில்கள் நடந்து செல்லும்போதே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளன என்று வனத்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விவசாயி முருகனை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் தேசிய பறவையான 17 மயில்களை விஷம் வைத்து கொன்ற சம்பவம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
- சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜசுதா. குடும்ப தலைவியாக உள்ளார். இவர்களுக்கு ஹரீஸ் (வயது 13), கிஷோர் (11), ஆகிய 2 மகன்கள் உள்ளனர். எம்.எம்.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் மகன் 8ம் வகுப்பும், கிஷோர் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிஷோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். முதலில் காய்ச்சல் மட்டும் இருந்த நிலையில் பின்னர் வலிப்பு நோய் ஏற்பட்டு மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து கிஷோர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமக உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கிஷோரின் உடல் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.
அங்கு சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சிறுவயதில் தனது மகன் இறந்த சூழ்நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






