என் மலர்
திண்டுக்கல்
- பள்ளி வகுப்பறைகளில் பாடம் எடுக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்று விடுவேன்.
- சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணாமலையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி நந்தினி நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில், எனது தந்தை சரவணக்குமார் தச்சுத் தொழிலாளி. தாயார் பானுப்பிரியா குடும்ப தலைவி. நான் 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை இதே பள்ளியில்தான் படித்தேன்.
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது முதல் படிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன். விளையாட்டு உள்ளிட்ட எந்தவித பொழுது போக்கு விஷயத்திலும் கவனம் செலுத்த மாட்டேன். எங்கள் வீட்டில் எனக்காக அரசு பொதுத்தேர்வு சமயங்களில் டி.வி. பார்ப்பதை அனைவரும் தவிர்த்து விட்டனர்.
பள்ளி வகுப்பறைகளில் பாடம் எடுக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற்று விடுவேன். அதன் பிறகு வீட்டுக்கு வந்து அன்றைக்கு நடத்திய பாடங்களை அன்றே படித்து முடித்து விடுவேன். தேர்வு சமயங்களில் கூடுதல் நேரம் எடுத்து படித்து வந்தேன்.
சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் அதிக மதிப்பெண்கள் பெறலாம். இதையே எனது தோழிகளுக்கு கூறி வந்துள்ளேன். தற்போது எனக்கு கிடைத்துள்ள மதிப்பெண்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே காரணம்.
இதன் பின்பு ஆடிட்டராகி எனது சொந்தக்காலில் நிற்க உள்ளேன். இதுவரை எனது படிப்புக்காக எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும் என்றார். சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோழிகள் இனிப்பு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
- தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 மாணவிகளும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 மாணவர்களும் தேர்வை எழுதி இருந்தார்கள்.
இத்தேர்வு முடிவுகளை இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவி நந்தினி அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
- நேற்று இரவு கோம்பைபட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து 2 யானைகள் நீண்ட நேரம் சுற்றி திரிந்தது.
- அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வனத்துறையினரிடம் அளித்து யானைகளை விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார ப்பகுதியில் கோம்பைபட்டி, பாலாறு பொருந்தலாறு, ராமபட்டிணம்புதூர் உள்ளி ட்ட பகுதிகள் உள்ளன. இங்கு அதிக அளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இப்பகுதிகளில் அடிக்கடி யானைகள் முகாமிட்டு விளை நில ங்களை சேதப்படுத்துவதும், விவசாயிகளை தாக்குவது போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக 10 யானைகள் இப்பகுதியில் முகாமிட்டு இருந்த நிலையில் நேற்று இரவு கோம்பைபட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து 2 யானைகள் நீண்ட நேரம் சுற்றி திரிந்தது.
அதனை விரட்ட முடியாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இரவு நேரம் என்பதால் வெளியே வர முடியாமலும் வீட்டுக்குள் நிம்மதியாக தூங்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வனத்துறையினரிடம் அளித்து யானைகளை விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக கோடை காலங்களில் மட்டுமே யானைகள் இடம் பெயர்ந்து விவசாய நிலங்களுக்குள் படையெடுக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக மழைபெய்த நிலையிலும் யானைகள் இடம்பெயர்ந்து மிரட்டி வருவது விவசாயி களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
- ஏரியின் நடுவே 3 இடங்களில் வைத்திருக்கக்கூடிய செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
- சுற்றுலாப்பயணிகள் தண்ணீரில் நடந்தே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத்தல மாகும். கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்திட முக்கிய பங்கு வகிப்பது இங்குள்ள சுற்றுலா த்தலங்களும், சீதோஷ்ண நிலையும் தான். கொடைக்கானலுக்கென்று தனி அடையாளமாக இருப்பது நகரின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியாகும்.
தற்போது நட்சத்திர ஏரியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக ஏரியின் நடுவே 3 இடங்களில் வைத்திருக்கக்கூடிய செயற்கை நீரூற்று சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் அறிவுறு த்தலின்படி நகராட்சி சார்பில் இந்த செயற்கை நீரூற்று நிறுவப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏரியை ச்சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. செயற்கை நீரூற்றுடன் செல்பி எடுத்தும் படகு சவாரியின் போது செயற்கை நீரூற்று அருகே சென்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
மேலும் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி சார்பாக படகு குழாம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. படகுகளும் புதிதாக வாங்கப்பட்டு செய ல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் தண்ணீரில் நடந்தே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் படகில் சவாரி செய்யும் இடம் வரை ஏரித்தண்ணீரில் நடை மேடையும் அமைக்கப்பட்டு ள்ளது. கொடைக்கானலில்
இது போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் நட்சத்திர ஏரி புதுப்பொலிவு பெற்று வருகிறது.
- போலி ஐ.டி.கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தனியாக ஒரு அமைப்பையும் அவர் நடத்தியது தெரியவந்தது.
- வேறுயாரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குஜிலியம்பாறை:
கரூர் மாவட்டம் கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் வாசுதேவன்(45). இவர் குஜிலியம்பாறை கோட்ட வருவாய் ஆய்வாளர் மாரியம்மாளை சந்தித்து ரூ.1லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்தநிலையில் மீண்டும் குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் சென்ற வாசுதேவன் தாசில்தார் ரமேசையும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து போலீசார் வாசுதேவனை கைது செய்தனர். அவரிடமிருந்து போலி ஐ.டி.கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தனியாக ஒரு அமைப்பையும் அவர் நடத்தியது தெரியவந்தது. வேறுயாரிடமும் பணம் கேட்டு மிரட்டியுள்ளாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாவட்ட கலெக்டர் ஓய்வறை பங்களா வளைவுச்சாலையில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி க்கற்கள் பல நாட்களாக பிரதான சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது
- வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாட்களில் அதிகமாக கூடுகின்றனர். சுற்றுலா தளங்களின் பல இடங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி,முறையான வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படாத நிலையில் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பிரதான நெடுஞ்சாலை களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்த நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மூஞ்சிக்கல் பகுதியில் சாலையின் இரு பகுதிகளிலும் கனரக வாக னங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து பாம்பார்புரம் செல்லும் மாவட்ட கலெக்டர் ஓய்வறை பங்களா வளைவுச்சாலையில் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி க்கற்கள் பல நாட்களாக பிரதான சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போக்குவரத்து நெரிசல் கொடைக்கானலில் இருக்காது என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. கோடை சீசன் நிறைவடைய இன்னும் குறைந்த நாட்களே உள்ளது. மலர் கண்காட்சி, கோடை விழா நடைபெறும் போது அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வில்லை. இது ஒவ்வொரு சீசனிலும் தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்த தீர்வை காண வேண்டும் என்பதே சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கூக்கால் கிராமப் பகுதி சாலை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.
- அதே பகுதியை சேர்ந்த 2 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதியில் தற்போது சாலை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூக்கால் கிராமப் பகுதி சாலை தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.இந்த சாலை பணியை தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த அஜித்குமார் என்பவர் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார்.
இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சிவா (24),ஜெயக்குமார் (39) ஆகிய 2 பேர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அஜித் குமார் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கொடைக்கானல் போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்.
- அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பிள்ளையார் நத்தம் ஊராட்சியில் உள்ள கொக்கு பிள்ளை பட்டி, ராமராஜ புரம், அணை ப்பட்டி, எம்.குரும்பபட்டி, என்.ஊத்துப்பட்டி, எஸ்.மேட்டுப்பட்டி, மட்ட ப்பாறை, சிலுக்குவார்பட்டி, சென்னஞ்செட்டிபட்டி, ஜி.தும்மலப்பட்டி, கெங்குவார்பட்டி, குளத்துபட்டி, என்.கோவி ல்பட்டி, தெப்பத்துப்பட்டி, குன்னத்துப்பட்டி, தருமத்துப்பட்டி, விராலிமலையன்பட்டி, விருவீடு, தாதபட்டி உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வி துறையோடு இணைப்பதை உடனடியாக திரும்பப் பெற வலியு றுத்தி பிரமலைக்க ள்ளர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதனை அறிந்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் போலீசார் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் உங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து விட்டீர்கள் கருப்புக்கொடியை அகற்றிக் கொள்ள வேண்டும் என்றனர்.
அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் பள்ளிக் கல்வியோடு அரசு கள்ளர் பள்ளிகளை இணைக்க மாட்டோம் என்று அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வரும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
பிரிட்டிஷ் அரசாங்க கைரேகைச் சட்டம் அடக்கு முறையை எதிர்த்து போராடிய எங்கள் முன்னோர்கள் 16 பேர் உயிரிழப்பை தொடர்ந்து உருவான கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினை திரும்பப் பெற வேண்டும். அது வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
- மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது.
- நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. விடுமுறை மற்றும் தரைப்பகுதியில் நிலவும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கொடைக்கானலில் சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பணிகள் வருகின்றனர்.
பிரதான சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், தூண்பாறை மட்டுமின்றி நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் திடீரென வெயிலும், அதனைத் தொடர்ந்து சாரல் மழையும், குளிரும் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
மாறிவரும் காலநிலையை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தொடர் மழையால் பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் வருகின்றனர். மேலும் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். இந்நிலையில் திடீரென்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பைன் பாரஸ்ட் பகுதியில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். மழையால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளது. ஆனால் அதனை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுதடைந்து வருகிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வருகிற 18-ந்தேதி போகர் ஜெயந்தி நாளாகும்.
- பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. போகர் என்ற சித்தரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. மூலவர் சிலையை வடித்த போகருக்கு கோவில் வளாகத்தில் தனிசன்னதி உள்ளது. பழனிக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு போகர் சன்னதியில் வழிபடுவது வழக்கம்.
இங்கு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வருகிற 18-ந்தேதி போகர் ஜெயந்தி நாளாகும். இந்நிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பழனி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில், விஜயதசமி அன்று வில்அம்பு போடும் நிகழ்ச்சியில் போகர் சன்னதி பூசாரிகள் பங்கு கொள்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற விழாக்களின் போது சன்னதி பூசாரிகள் மற்றும் பூஜை செய்பவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சன்னதி பூசாரிகள், போகர் சன்னதி உரிமை தங்களுக்கு தனிப்பட்டது என கோவில் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு போகர் சன்னதி சுவற்றில் வரையப்பட்டு இருந்த ஓவியங்களை அழித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் போகர் சன்னதி பூசாரிகள் தங்களின் சுய நலனுக்காகவும், கோவில் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத வகையில் போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த முயற்சி செய்கின்றனர். எனவே நடைமுறையில் இல்லாத புதிய விழாக்கள் எதையும் நடத்த கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
- மொத்தம் 2988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாளை நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
பார்வதீஸ் கல்லூரியில் 936, என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 840, என்.பி.ஆர். கலைக்கல்லூரியில் 696, அனுகிரகா பள்ளியில் 168, பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 348 பேர் என மொத்தம் 2988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து அதனை தங்கள் தேர்வு எழுதும் மையத்துக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாத பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு வரக்கூடாது எனவும், தேர்வு நடப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே வளாகத்திற்குள் வந்து விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் இவரை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்தனர்
- இந்த கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பழனி:
பழனி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் கோபால் மகன் வடிவேல் (வயது 27). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 3-ந் தேதி பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் இவரை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்தனர்.
இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. சிவசக்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் குரும்ப பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (27), அழகாபுரியைச் சேர்ந்த சுரேஷ் (28) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இக்கொலை வழக்கில் மேலும் சிலரை தேடி வந்த நிலையில் செல்லப்பாண்டி மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு வாக்குவாதமாக முற்றி கொலையில் முடிந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
பழனி டவுன் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அரிவாள் வெட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சமான உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொண்டு குற்றவாளிகளை போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






