search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழாவுக்கு அனுமதி இல்லை: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
    X

    பழனி முருகன் கோவிலில் போகர் ஜெயந்தி விழாவுக்கு அனுமதி இல்லை: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

    • வருகிற 18-ந்தேதி போகர் ஜெயந்தி நாளாகும்.
    • பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் மூலவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. போகர் என்ற சித்தரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது. மூலவர் சிலையை வடித்த போகருக்கு கோவில் வளாகத்தில் தனிசன்னதி உள்ளது. பழனிக்கு வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு போகர் சன்னதியில் வழிபடுவது வழக்கம்.

    இங்கு விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வருகிற 18-ந்தேதி போகர் ஜெயந்தி நாளாகும். இந்நிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பழனி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில், விஜயதசமி அன்று வில்அம்பு போடும் நிகழ்ச்சியில் போகர் சன்னதி பூசாரிகள் பங்கு கொள்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற விழாக்களின் போது சன்னதி பூசாரிகள் மற்றும் பூஜை செய்பவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.

    இந்நிலையில் சன்னதி பூசாரிகள், போகர் சன்னதி உரிமை தங்களுக்கு தனிப்பட்டது என கோவில் நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு போகர் சன்னதி சுவற்றில் வரையப்பட்டு இருந்த ஓவியங்களை அழித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் போகர் சன்னதி பூசாரிகள் தங்களின் சுய நலனுக்காகவும், கோவில் நடைமுறையிலும், பாரம்பரிய விழாக்களிலும் இல்லாத வகையில் போகர் ஜெயந்தி என்ற பெயரில் விழா நடத்த முயற்சி செய்கின்றனர். எனவே நடைமுறையில் இல்லாத புதிய விழாக்கள் எதையும் நடத்த கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×