என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சாமிக்கு சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பால், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என சரண கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து அரளி பூக்களால் பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தாடிக்கொம்புவை அடுத்த அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால ைபரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுக்காம்பட்டி துரைஆதித்தன் சித்தர் சுவாமிகள் தலைமையில் நடந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், மஞ்சள், பன்னீர், சந்தனம், தயிர், நெய் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை திரளான பக்தர்கள் வழிபட்டனர். சாவடி பஜாரில் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் தனியார் நூற்பாலைக்கு சொந்தமான விடுதி உள்ளது.
    • வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் மற்ற தொழிலாளர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தனியார் நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அங்கேயே 3 வேளை உணவும் தயாரித்து வழங்கப்படுகிறது.

    வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் ரோட்டில் தனியார் நூற்பாலைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் மற்ற தொழிலாளர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து விடுதி வார்டன் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதையில் இருந்த 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கேயே அவர்களை தூங்க வைத்து காலையில் எழுப்பி காபி கொடுத்து போதையை தெளியவைத்தனர். பின்னர் இரவில் அவர்கள் செய்த சேட்டைகளை எடுத்துக் கூறி அதற்கு தண்டனையாக போலீஸ் நிலையம், கருவூலம், இ-சேவைமையம் ஆகிய பகுதிகளுக்கு வரும் வாகனங்களை சுத்தப்படுத்தி அந்த வளாகங்களையும் 3 நாட்களுக்கு தூய்மை படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    மேலும் இதேபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    மூதாட்டி ஒருவருக்கு அவரது மகளே கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியை அடுத்த நடுப்பட்டி குரும்பபட்டியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி சவடமுத்து (வயது85). இவரது கணவர் மற்றும் ஒரு மகன் உயிரிழந்து விட்டனர்.

    மகள் மயிலம்மாளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவரிடம் இருந்த 7 செண்ட் நிலத்தை தனது பெயருக்கு தானமாக கொடுக்க வேண்டும் என மகள் கேட்டுள்ளார். அதற்கு மூதாட்டி மறுக்கவே ஆத்திரம் அடைந்த மயிலம்மாள் மிளகாய் பொடியை தூவி அவரை கடுமையாக தாக்கி உள்ளார்.

    மிரட்டி அந்த நிலத்தை தனதுபெயருக்கு தான செட்டில்மெண்ட் செய்துள்ளார். இதனால் சவடமுத்து வசிப்பதற்கு இடம் இல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டு திண்னைகளில் தங்கி அவர்கள் தரும் உணவை உண்டு காலத்தை ஓட்டி வருகிறார்.

    இன்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அவர் அந்த மனுவில் தனது மகள் சித்ரவதையால் 7 செண்ட் நிலத்தை அவர் பெயருக்கு தானமாக கொடுத்து விட்டேன். தற்போது வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றேன். எனவே அந்த தானசெட்டில் மெண்ட்டை ரத்து செய்து நிலத்தை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். மூதாட்டி ஒருவருக்கு அவரது மகளே கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • சாணார்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையில் ஏட்டுகள் தோமனிக்,கோவிந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கூவனூத்து குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கூவனூத்து குரும்பபட்டியை சேர்ந்த ரத்தினகிரி (வயது 67),காலனி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (45),வடக்கு தெருவை சேர்ந்த ராமசாமி (70),குரும்பபட்டியைச் சேர்ந்த ரவி (54),முருகேசன் (62) நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி (60) ஆர்.எம்.டி.சி.காலனியைச் சேர்ந்த சுப்ரமணி (52)என்பது தெரியவந்தது.

    இதையடுத்து சாணார்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.5020 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
    • இந்த கொள்ளை சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஏழுமலையான் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது47). இவர் கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பல்வேறு அறைகளில் நகை மற்றும் பணம் உள்ளதா? என தேடினர். அங்கு பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இன்று ஊர் திரும்பிய கலைச்செல்வி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் நகைகள் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல் புறநகர் பகுதியில் புதிதாக குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • விழாவில் பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி கணேசன், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் முகமது இப்ராஹிம், கோவிந்தன், ஸ்ரீதர், மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை அலுவல ர்களும் கலந்து கொண்டனர். கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 3 மத தலைவர்கள் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல் டவுன், மூஞ்சிக்கல், அண்ணா நகர், நாயுடுபுரம் பள்ளி வாசல்களை சேர்ந்த ஜமாத்தார்களும், கொடை க்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆலயத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், உதவி பங்கு தந்தை நிக்கோலஸ், கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவரும் இந்திய பெந்தகோஸ்தே சபையின் நிர்வாகியுமான டாக்டர் குரியன் ஆபிரகாம், கிளாசிக் சலாமத், டி.ஜி. அசோசியேட்ஸ் தனசேகரன், எஸ். ஆர் அசோசியேட்ஸ் ராம் மோகன், கொடைக்கா னல் நகர தி.மு.க. துணைச் செயலாளர்கள் சக்திமோ கன், சுப்பிரமணி, கோமதி சக்திவேல், நகர பொருளா ளர் முகமது நைனார், நகர அவைத் தலைவர் மரிய ஜெயந்தன், மாவட்ட பிரதிநிதிகள் சுதாகர், இளங்கோவன், அரசு வக்கீல் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


    • எனது பேத்தி திவ்யா (17). எனது வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது விராலிபட்டியை சேர்ந்த மகேந்திரன் (28) என்பவரை காதலித்து அவருடன் சென்று விட்டார்.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என எடுத்துக் கூறியும், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் நியாயம் கிடைக்காது என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பழைய வத்தலக்குண்டு மாரியம்மன் கோவில் தெருைவ சேர்ந்த தனலட்சுமி (49) என்பவர் மனு அளிக்க வந்தார்.

    திடீரென அவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் தெரிவிக்கையில்,

    எனது மகள் பானுப்பிரியாவுக்கும், கணேசன் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணேசன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். எனது மகளும் சென்னையிலேயே வசித்து வருகிறார். அவர்கள் மகளான எனது பேத்தி திவ்யா (17). எனது வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். அப்போது விராலிபட்டியை சேர்ந்த மகேந்திரன் (28) என்பவரை காதலித்து அவருடன் சென்று விட்டார்.

    இதுகுறித்து போலீசார் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த மகேந்திரன் எனது பேத்தி திவ்யாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார். இதை அறிந்து நான் அங்கு சென்று திவ்யாவை என்னுடன் வருமாறு அழைத்தேன். அதற்கு மகேந்திரனின் குடும்பத்தினர் அனுப்ப மறுத்துவிட்டனர்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும் நியாயம் கிடைக்காது என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன் என்றார். இதனை தொடர்ந்து அவரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஆரியநல்லூரை சேர்ந்தவர் பாக்கியநாதன் (67). இவர் தனக்கு பட்டா வழங்கக் கேட்டு பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க வந்தார். அவரிடம் இருந்த பாட்டிலை பறித்துக் கொண்ட போலீசார் மனு அளித்து செல்லுமாறு அறிவுறுத்தினர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பரப்பலாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் விருப்பாட்சி மலை வழியாக தலையூத்து அருவியாக கொட்டுகிறது.
    • காசித் தீர்த்தத்துக்கு இணையாக இந்த தண்ணீரை கருதுவதால் திருநல்காசி என்ற பெயர் பெற்றது.
    • மகா சிவராத்திரி விழாவின் போது ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் இங்கு தங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி பகுதி முந்தைய காலத்தில் விருப்பாட்ச பட்டணம் என அழைக்கப்பட்டது. மன்னர் திருமலைநாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் அவரது கனவில் அசரிரீயாக தோன்றி உத்தரவின்படி தலையூத்து அருவிக்கு அருகில் தனது இஷ்ட தெய்வமான சிவபெருமாளுக்கு விருப்பாட்ச ஈஸ்வரர் கோவிலையும், தனது குலதெய்வமான பெருமாளுக்கு நீலமலை அழகர் கோவிலையும் அமைத்தார்.

    இந்த கோவில்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மூலிகை வாசம் நிரம்பிய வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. முற்றிலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில கி.மீ தூரம் கரடு முரடான பாதையில் நடந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட முடியும். சிவன் கோவிலுக்கு செல்லும் வழியில் நீலமலை அழகர் கோவில், சப்த கன்னிகள், ஆஞ்சநேயர், விநாயகர் சன்னதிகளும் உள்ளன.

    இங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் விருப்பாட்சி ஈஸ்வரர் கோவிலை அடையலாம். அங்கு 18ம் படி கருப்பணசாமி, வன துர்க்கை, பைரவர், நாகவிசாலாட்சி அம்மன் ஆகிய காவல் தெய்வங்களும் உள்ளன.

    இக்கோவில் அருகில் தலையூத்து என்று அழைக்கப்படும் திருநல்காசி நதி அமைந்துள்ளது. பரப்பலாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் விருப்பாட்சி மலை வழியாக தலையூத்து அருவியாக கொட்டுகிறது. கடும் வறட்சி ஏற்பட்டாலும் தலையூத்து அருவியில் வற்றாத ஜீவநதி போல தண்ணீர் ெகாட்டி வருவது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். காசித் தீர்த்தத்துக்கு இணையாக இந்த தண்ணீரை கருதுவதால் திருநல்காசி என்ற பெயர் பெற்றது. மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரம் சென்று நன்காஞ்சி என்ற ஆறாக ஓடுகிறது. இந்த நதி புனித தீர்த்தமாக கருதப்படுவதுடன் கோவில் கும்பாபிஷேகங்களுக்கு இந்த நீரை கலசங்களில் சேகரித்து செல்கின்றனர்.

    திருநல்காசி ஆலயத்தில் 17ம் நூற்றாண்டு காலம் வரை 6 கால பூஜைகள் நடந்து வந்தன. அதன் பிறகு கோபால்நாயக்கர் காலத்தில் ஆங்கிலேயருடன் நடந்த போரால் கோவில்கள் சேதமடைந்தன. இருந்தபோதும் தொடர்ந்து வரும் பக்தர்கள் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்து தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்தி கோவிலை புதுப்பித்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவின் போது ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் இங்கு தங்கி வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து காசிநாதரை வழிபட்டு செல்கின்றனர்.

    இக்கோவிலுக்கு செல்ல பஸ் வசதி கிடையாது. பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் விருப்பாட்சியில் உள்ள கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தோ, மோட்டார் சைக்கிளிலோ செல்ல வேண்டும். தற்போது பரப்பலாறு அணை மற்றும் விருப்பாட்சி, தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்தால் திருநல்காசிநாதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதோடு தலையூத்து அருவியும் சுற்றுலா தலமாக மாறும்.

    • சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தநகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
    • மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21), பொன்மேனியை ேசர்ந்த சதீஸ் (24) ஆகியோர்தான் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் திருநகரை சேர்ந்த ஜாய் என்பவரின் மனைவி பிரான்சிஸ் மரியரோசி (38). ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தநகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

    இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதே போல அம்பாத்துரை உள்ளிட்ட மேலும் சில இடங்களிலும் தனியாக சென்ற பெண்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (21), பொன்மேனியை ேசர்ந்த சதீஸ் (24) ஆகியோர்தான் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் மதுரை, கோவை மாவட்டங்களிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள், 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    • விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரியூர், நடுப்பட்டி, மன்றக்கால்வாய் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சுதாகர் (வயது26). கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று இரவு விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆர்.வெள்ளோடு கிராமத்தில் அட்மா திட்டத்தின்மூலம் உழவர் திருவிழா, விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் வேளாண்மை இணை இயக்குனர் அனுசியா தலைமையில் நடைபெற்றது.
    • உழவன் செயலி பதிவேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குஜிலியம்பாறை:

    குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோடு கிராமத்தில் அட்மா திட்டத்தின்மூலம் உழவர் திருவிழா மற்றும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கான அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் வேளாண்மை இணை இயக்குனர் அனுசியா தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கீதா அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு தொடக்க வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மானிய திட்டங்களை விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

    உழவன் செயலி பதிவேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மணிவேல், வேளாண்மை அலுவலர் தியாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர் ஜோதிராசு, வேளாண்துறை அதிகாரிகள் சப்பாணிமுத்து, நித்யா, காமாட்சி உள்பட பலர் இதில்பங்கேற்றனர்.

    • புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்கத்தின் 2023- 24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தன்ராஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் கார்த்திக் மற்றும் பெண்கள் மேம்பாட்டு பிரிவு தலைவர் மீனா சுப்பையா, உதவி ஆளுநர் கிருபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிய தலைவராக டாக்டர். சதீஷ்குமார், செயலாளராக டாக்டர் முருகேசபாண்டியன், பொருளாளராக பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் முருகேசன், முகமது நஜ்முதீன், ராஜ்குமார், பத்ரிநாராயணன், கிருஷ்ணமூர்த்தி, காசி ஜெயராமன், பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பல்வேறு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் செயலாளர் முருகேசபாண்டியன் நன்றி கூறினார்.

    ×