என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் புதுக்குப்பம் பழமலை நாதர்நகரை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மகன் தியாகராஜன்( வயது 36). போலீஸ்காரரான இவர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜீப் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு கல்பனா என்ற மனைவுயும், நிஷா என்கிற மகளும், திலீபன் என்கிற மகனும் உள்ளனர். நேற்று விடுமுறையில் இருந்த தியாகராஜன் மதியம் 2 மணி அளவில் திடீரென வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    இதை பார்த்த அவருடைய மனைவி கல்பனா மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    நெல்லிக்குப்பம் அருகே கடலூரிலிருந்து பண்டிருட்டி சென்ற அரசு பஸ் மீது கல்வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூரிலிருந்து பாலூர் வழியாக பண்ருட்டிக்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் அரசு பஸ் வந்தபோது ஒரு வாலிபர் அரசு பஸ் மீது கல் வீசினார். இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறி கத்தினார்கள். இதனைப் பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவனை நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் அந்த வாலிபரை விசாரித்தபோது, அவர் பள்ளி மாணவன் என்பது தெரியவந்தது. மேலும் நேற்று காலை பள்ளிக்கு செல்லும்போது பஸ் நிறுத்தாத காரணத்தினால் ஆத்திரமடைந்ததாகவும், இதன்காரணமாக மாலையில் பஸ் கண்ணாடி உடைத்ததாகவும் கூறினார்.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
    பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாஞ்சில் சம்பத் கடலூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.
    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி தினகரன் அணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் அவர் கடலூர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை நாஞ்சில் சம்பத் கடலூர் வந்தார். கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் ஆஜரானார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இந்த வழக்கில் நாஞ்சில் சம்பத் சார்பாக வக்கீல் திருமார்பன் ஆஜரானார். அதன் பின்னர் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி தினகரன் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நான் தினகரன் தலைமையை ஏற்று இருந்த காலத்தில் பேசினேன்.

    இந்த பொதுக்கூட்டம் நடந்து முடிந்து 8 மாதம் முடிந்த நிலையில் முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக கூறி கடலூர் நீதிமன்றத்தில் இருந்து எனக்கு சம்மன் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானேன். நான் பொது வாழ்வில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியே வந்துவிட்டேன். தற்போது இலக்கிய மேடை, பொது நிகழ்ச்சி மற்றும் மாணவர்களை சந்தித்து பேசி வருகிறேன்.

    மேலும் பொது வாழ்வில் இருந்தும், அரசியல் வாழ்க்கையில் இருந்தும் விலகுகிறேன் என்று அறிவித்த பிறகு இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதின் பேரில் அரசு வக்கீல் மூலம் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

    பொதுவாழ்வில் இருப்பவர்கள் தன் மீது வரும் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாவிட்டால் பொது வாழ்வில் இருந்து விலகிவிட வேண்டும். இதுபோல் அவதூறு வழக்கு போடக்கூடாது.

    மேலும் என் மீது 49 அவதூறு வழக்குகள் உள்ளன. ஆனால் பொதுவாக அவதூறு வழக்கில் இதுவரை தண்டனை யாரும் பெற்றதாக எனக்கு தெரியவில்லை. 6 மாதம் கழித்து இந்த வழக்கு போட்டிருப்பது ஆட்சியாளர்களின் கேலிக் கூத்தாக தெரிகிறது.

    பொது வாழ்வில் இருந்து நான் விலகிய பிறகு என்னை தண்டிக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

    இதுமட்டுமன்றி இந்த வழக்கில் முதல்-அமைச்சரோ, துணை முதல்- அமைச்சர் ஆஜராக கூடாது என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நடக்க வேண்டுமானால் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

    இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முதல்- அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சரை கூண்டில் ஏற்றுவது தவிர வேறு வழியில்லை. விரைவில் நீதிமன்ற கூண்டில் அவர்கள் ஏறும் காலம் வரும். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வருங்காலங்களில் நிம்மதியாக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மையான நீர் ஆதாரமாக விளங்குவதோடு சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    ஏரியின் நீர்மட்டம் நேற்று 42.45 அடியாக இருந்தது. இன்று அது 43.35 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாத் தோப்பு அருகே பூதங்குடியில் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.


    இந்த நீரேற்று நிலையத்தை சென்னை மெட்ரோ வாட்டர் செயல் இயக்குனர் பிரபுசங்கர், கண்காணிப்பு பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி பொறியாளர்கள் அருண்குமார், விஷ்வநாதன் உள்ளிட்ட குழுவினர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் வீராணம் ஏரியின் நீர்வாங்கி நெடுமாடத்தை ஆய்வு செய்தனர். முன்னதாக சோதனை முறையில் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீரை பப்பிங் செய்து பார்த்தனர்.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னைக்கு குடிநீர் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேத்தியாதோப்பு முதல் வடக்குத்து பகுதி வரை உள்ள குடிநீர் குழாயை சுத்தம் செய்யும் பணி வீராணம் ஏரி நீரேற்று நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி 4 நாட்கள் வரை நடைபெறும். அதன் பின்னர் விரைவில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் என்றார். #VeeranamLake
    நெல்லிக்குப்பத்தில் 3 ஆட்டோக்களில் இருந்த ரூ.16 ஆயிரம் பொருட்களை மர்ம மனிதர்கள் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜ், சோழவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனி, வச்சீராந்த் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் இவர்கள் 3 பேரும் ஆட்டோ டிரைவர்கள்.

    இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு தூங்க சென்றனர்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் இந்த 3 ஆட்டோக்களிலும் உள்ள பாதுகாப்பு பெட்டியை உடைத்து அதில் இருந்த 2 செல்போன்கள், விலை உயர்ந்த 3 கைகடிகாரங்கள், மற்றும் ரூ.2,500 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

    இன்று காலையில் கண்விழித்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரும் ஆட்டோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் பூர்ணிமா. இவரும் மேல்மாம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்பாண்டியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் அருள் பாண்டியன் மோட்டார் சைக்கிள் வேண்டும் என கேட்டு பூர்ணிமாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் வருந்திய பூர்ணிமா வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார். ஆபத்தான நிலையில் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதையொட்டி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பூர்ணிமா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் பூர்ணிமாவின் தாயார் முத்துலட்சுமி, புகார் கொடுத்தார். இதையொட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சப்-கலெக்டர் மேல் விசாரணை நடத்தினார்.
    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே வாலிபர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள வலசக்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 33). விவசாயி.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி மோதி கொண்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராஜதுரை தனது நண்பர் கலைமணி (28) என்பவருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணன், அவரது நண்பர் முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து ராஜ துரையிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ராஜதுரையையும், கலைமணியையும் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து சோழத்தரம் போலீசில் ராஜதுரை புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் மகேசுவரி வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தார். தலைமறைவாகி விட்ட முத்துக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.
    இண்டர்நெட் மூலம் அறிமுகமாகி காதலர்களாக மாறிய கடலூர் ஆசிரியையும் செக் குடியரசு நாட்டின் தொழிலதிபரும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
    விருத்தாசலம்:

    உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கியது மட்டுமல்ல கடல் கடந்து பல உள்ளங்களை இணைக்கும் வேலையையும் இண்டர்நெட் செய்கிறது.

    கடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சாருலதா (32).

    என்ஜினீயரிங் பட்டதாரியான சாருலதா இணைய தளத்தை எப்போதும் கையாள்வார். அப்போது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் லூக்காஸ் ரோஹன் நண்பராக அறிமுகம் ஆனார்.

    இணையதளம் வழியாக தங்களை பற்றி, தங்கள் குடும்பங்கள் பற்றி, நாட்டைப் பற்றி தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள். தொழில் அதிபரான தாமஸ் லூக்காஸ் எப்போதும் பிசியாக இருந்த போதிலும் சாருலதாவுடன் நட்பை பலப்படுத்தினார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாருலதா தனது நண்பரை இந்தியாவுக்கு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று இந்தியா வந்த தாமஸ் லூக்காஸ் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு சாருலதா வீட்டுக்கு சென்றார். அவரது வீட்டில் தங்கி இருந்து கடலூர் பகுதியில் உள்ள கோவில்களையும் பார்த்து இருக்கிறார்.

    இங்குள்ள பழக்க வழக்கங்கள் தாமஸ் லூக்காசை கவர்ந்தது. சாப்பாட்டில் இட்லி, தோசையும் பிடித்துப் போனதாம்.

    பின்னர் தாமஸ் லூக்காஸ் செக் குடியரசு திரும்பினார். சில மாதங்களில் சாருலதாவும் அங்கு சென்றுள்ளார். அந்த நாட்டில் அவருக்கு ஆசிரியை வேலையும் கிடைத்தது. அதன்பிறகு நண்பர்கள் காதலர்களாக மாறியிருக்கிறார்கள்.

    கடந்த மார்ச் 23-ந்தேதி செக் குடியரசு நாட்டில் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் இந்து முறைப்படி தமிழகத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமஸ் லூக்காஸ் ரோ‌ஷன் கிராண்ட்-சாருலதா உள்பட 4 பேர் செக்குடியரசு நாட்டில் இருந்து கடலூர் வந்தனர்.

    அவர்களது திருமணம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் இன்று காலை நடந்தது.

    மணமகள் சாருலதா பட்டுச்சேலை அணிந்திருந்தார். மணமகன் தாமஸ் லூக்காஸ் ரோ‌ஷன் கிராண்ட் பட்டு வேட்டி- சட்டை அணிந்திருந்தார். காலை 10.30 மணிக்கு இந்து முறைப்படி அவர்களது திருமணம் நடந்தது.

    மேள வாத்தியங்கள் முழங்க ஆசிரியை சாருலதா கழுத்தில் தாமஸ் லூக்காஸ் ரோ‌ஷன் கிராண்ட் தாலி கட்டினார். மணமக்களை அங்கிருந்தவர்கள் வாழ்த்தினர்.

    திருமணம் முடிந்ததும் சாரு லதாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது தன்னை சந்தோ‌ஷத்தில் ஆழ்த்தியதாக தாமஸ் லூக்காஸ் கூறினார். ‘இங்குள்ள மக்கள் அனைவரும் என்னிடம் அன்பாக பேசுகிறார்கள். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ் கலாச்சாரப்படி வாழப்போகிறோம்’ என்றும் அவர் கூறினார்.
    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து செய்தனர். இவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெறுவதாக ஸ்ரீ முஷ்ணம் போலீஸ் நிலையத்திற்கு தொடர் புகார்கள் வந்தது.

    இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று ஸ்ரீ முஷ்ணம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆண்டி மடம் செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் நான்கு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரனை நடத்தினர்.

    அப்போது அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரசு (வயது19), ரஞ்சித்(17), சின்னையா என்கிற ராஜ்குமார்(18), ஸ்ரீ ஆதிவராகநல்லூர் பகுதியை சேர்ந்த சபரி வாசன்(17) என்பதும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

    அவ்வாறு திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி வைத்திருந்துஅதன் பின்னர் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் உள்ள துரைசாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிகடையை உடைத்து பொருட்களை திருடியதையும் ஒப்பு கொண்டனர்.

    இவர்கள் 4 பேரும் திருடுவதற்கு மூளையாக செயல்பட்டவர் அய்யூர் பகுதியை சேர்ந்த மற்றொரு ரஞ்சித் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அரசு (வயது19), ரஞ்சித்(17), சின்னையா என்கிற ராஜ்குமார்(18), சபரி வாசன்(17) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அய்யூர் பகுதியை சேர்ந்த மற்றொரு ரஞ்சித்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த கோ.சத்திரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின்மோட்டார் மூலம் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றபட்டு அதிலிருந்து பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யபட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கோ. சத்திரம் பகுதியில் காலையில் 1 மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கபட்டு வருகிறது.

    அந்த தண்ணீர் பொது மக்களுக்கு போதுமானதாக இல்லை. சில நாட்களில் முற்றிலும் தண்ணீர் வழங்கப்படுவதில்லை.

    இதனால் அந்த பகுதி பொது மக்கள் தங்களது அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து பொதுமக்கள் குடிக்க பயன்படுத்தி வந்தனர்.

    எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி பொது மக்கள் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் கோ.சத்திரம் பகுதியில் உள்ள குறிஞ்சிபாடி- நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக் பாபு மற்றும் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதி பொது மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் .

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பண்ருட்டியில் உடல்நலம் பாதிப்படைந்த முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அருணாசலம் கீழ்காங்கேயன்குப்பம் தகன மேடை அருகே மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகி இறந்தார்.

    இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாதோப்பு நீரேற்று நிலையத்திற்கு காவிரி தண்ணீர் வந்ததையடுத்து, சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. #VeeranamLake #Cauvery
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் முதன்மையாக விளங்கும் இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும்.

    நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணைக்கு திறக்கப்பட்டது. அங்கிருந்து வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. நேற்று 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 41.55 அடியாக இருந்தது. இன்று அது மேலும் ஒரு அடி உயர்ந்து 42.45 அடியாக அதிகரித்துள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியின் கடைசி பகுதியான சேத்தியாதோப்பில் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. சில நாட்களில் இந்த நீரேற்று நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. #VeeranamLake #Cauvery

    ×