என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் ஆசிரியை திருமணம் செய்த வெளிநாட்டு தொழிலதிபர்"

    இண்டர்நெட் மூலம் அறிமுகமாகி காதலர்களாக மாறிய கடலூர் ஆசிரியையும் செக் குடியரசு நாட்டின் தொழிலதிபரும் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
    விருத்தாசலம்:

    உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கியது மட்டுமல்ல கடல் கடந்து பல உள்ளங்களை இணைக்கும் வேலையையும் இண்டர்நெட் செய்கிறது.

    கடலூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சாருலதா (32).

    என்ஜினீயரிங் பட்டதாரியான சாருலதா இணைய தளத்தை எப்போதும் கையாள்வார். அப்போது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் லூக்காஸ் ரோஹன் நண்பராக அறிமுகம் ஆனார்.

    இணையதளம் வழியாக தங்களை பற்றி, தங்கள் குடும்பங்கள் பற்றி, நாட்டைப் பற்றி தகவல்களை பரிமாறிக் கொண்டார்கள். தொழில் அதிபரான தாமஸ் லூக்காஸ் எப்போதும் பிசியாக இருந்த போதிலும் சாருலதாவுடன் நட்பை பலப்படுத்தினார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாருலதா தனது நண்பரை இந்தியாவுக்கு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று இந்தியா வந்த தாமஸ் லூக்காஸ் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு சாருலதா வீட்டுக்கு சென்றார். அவரது வீட்டில் தங்கி இருந்து கடலூர் பகுதியில் உள்ள கோவில்களையும் பார்த்து இருக்கிறார்.

    இங்குள்ள பழக்க வழக்கங்கள் தாமஸ் லூக்காசை கவர்ந்தது. சாப்பாட்டில் இட்லி, தோசையும் பிடித்துப் போனதாம்.

    பின்னர் தாமஸ் லூக்காஸ் செக் குடியரசு திரும்பினார். சில மாதங்களில் சாருலதாவும் அங்கு சென்றுள்ளார். அந்த நாட்டில் அவருக்கு ஆசிரியை வேலையும் கிடைத்தது. அதன்பிறகு நண்பர்கள் காதலர்களாக மாறியிருக்கிறார்கள்.

    கடந்த மார்ச் 23-ந்தேதி செக் குடியரசு நாட்டில் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் இந்து முறைப்படி தமிழகத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமஸ் லூக்காஸ் ரோ‌ஷன் கிராண்ட்-சாருலதா உள்பட 4 பேர் செக்குடியரசு நாட்டில் இருந்து கடலூர் வந்தனர்.

    அவர்களது திருமணம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் இன்று காலை நடந்தது.

    மணமகள் சாருலதா பட்டுச்சேலை அணிந்திருந்தார். மணமகன் தாமஸ் லூக்காஸ் ரோ‌ஷன் கிராண்ட் பட்டு வேட்டி- சட்டை அணிந்திருந்தார். காலை 10.30 மணிக்கு இந்து முறைப்படி அவர்களது திருமணம் நடந்தது.

    மேள வாத்தியங்கள் முழங்க ஆசிரியை சாருலதா கழுத்தில் தாமஸ் லூக்காஸ் ரோ‌ஷன் கிராண்ட் தாலி கட்டினார். மணமக்களை அங்கிருந்தவர்கள் வாழ்த்தினர்.

    திருமணம் முடிந்ததும் சாரு லதாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது தன்னை சந்தோ‌ஷத்தில் ஆழ்த்தியதாக தாமஸ் லூக்காஸ் கூறினார். ‘இங்குள்ள மக்கள் அனைவரும் என்னிடம் அன்பாக பேசுகிறார்கள். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழ் கலாச்சாரப்படி வாழப்போகிறோம்’ என்றும் அவர் கூறினார்.
    ×