என் மலர்
கடலூர்
சுதந்திர தின விழா நாளை(புதன்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவில் பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடல் வழியாகவும் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் பஸ் நிலையம், கோவில், ரெயில் நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்த பிறகே ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கின்றனர். மேலும் நடைமேடைகளில் சந்தேகத்துக்கிடமாக யாரேனும் சுற்றித்திரிகிறார்களா? கேட்பாரற்று பைகள், சூட்கேஸ் போன்ற பொருட்கள் எதுவும் கிடக்கிறதா? என அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மணிமுக்தாறு பாலத்தின் கீழ் பகுதி, மேல்பகுதி, தண்டவாளங்கள் ஆகிய பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனையிட்டனர். இதேபோல் மாரி ஓடை பாலம், ஆறுகம்மா ஓடை பாலம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களிலும், பூவனூர் ரெயில் நிலையம் ஆகிய இடங்களிலும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.
சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் சம்பத், தலைமை காவலர் பாஸ்கர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். மேலும் சிதம்பரம் ரெயில் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் கடல் வழியாக பயங்கவரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலூர் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், ரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் நவீன ரோந்து படகில் நல்லவாடு முதல் கிள்ளை வரை கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த படகுகளை போலீசார் சோதனை செய்தனர். மேலும் சந்தேகப்படும்படியாக யாரேனும் வந்தால் 1093 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மணிகண்டன் தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தாய்-மகன் 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பூஜை அறையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இன்று காலை மணிகண்டன் எழுந்து பூஜை அறைக்கு சென்றார். அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதையும், பணம் கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மங்கலம் பேட்டை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த கொத்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது37). தொழிலாளி
இவரது மனைவி இந்தி ராணி(32). இவர்களுக்கு ஹரிப்ரியா (7) என்ற மகளும், விஷ்னு பிரசாந்த் (5) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இந்திராணி வீட்டில் உள்ள மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து இந்திராணியின் உடலில் தீப்பிடித்தது. அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த கண்ணபிரான் ஓடி சென்று இந்தி ராணியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது கண்ணபிரானின் உடலிலும் தீப்பற்றியது. கணவன்- மனனவி 2 பேரும் தீ விபத்தில் சிக்கினர். வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறினார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அனைத்து கண்ணபிரானையும் அவரது மனைவி இந்திராணியையும் மீட்டனர். இருப்பினும் அவர்கள் 2 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர்களை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கண்ணபிரானையும், அவரது மனைவி இந்திராணியையும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இந்திராணி பரிதாபமாக இறந்தார். கண்ணபிரானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சந்தனக்குப்பம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றுகொண்டிருந்த அதேப்பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(55) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள மேல வன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 81) இவரது மனைவி சரோஜா (71). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
ராஜகோபால் காற்றுக்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரின் மனைவி சரோஜா வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார்.
இதை நோட்டமிட்ட 4 மர்ம மனிதர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சரோஜாவின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.
அப்போது திடுக்கிட்டு எழுந்த சரோஜா திருடன்.... திருடன்... என அலறினார். உடனே அந்த மர்ம மனிதர்கள் கத்தியை காட்டி சரோஜாவை மிரட்டினர்.
பின்னர் அவர் வாயில் துணியை வைத்து சரோஜாவின் கைகளை கயிற்றினால் கட்டி போட்டு விட்டு கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க சங்கலியை பறித்து கொண்டு மர்ம மனிதர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.
அப்போது வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த ராஜகோபால் திடீரென கண் விழித்தார். வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம மனிதர்கள் 4 பேர் வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தனர். உடனே ராஜகோபால் அந்த மர்ம மனிதர்களை பிடிக்க முயன்றார்.
அப்போது மர்ம மனிதர்களில் ஒருவன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ராஜகோபாலை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் ராஜகோபால் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய மர்ம மனிதர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டில் கட்டி போட்டிருந்த சரோஜாவையும் தாக்குதலில் காயம் அடைந்த ராஜகோபாலையும் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
இது குறித்து குமராட்சி போலீசில் ராஜகோபால் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் புதுப்பாளையம் சஞ்சீவராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மகன் சூரியகுமார் (வயது 17). இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பல பாடங்களில் தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் தேர்வை எழுதினார். அதிலும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதனால் சூரியகுமார் மனவேதனையில் இருந்தார். அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் தண்டவாளம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு ரெயில் வேகமாக வந்தது. அதன் முன்பு சூரியகுமார் பாய்ந்தார். இதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த முதுநகர் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று சூரியகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி புதுநகர் 8-வது வட்டம் குதிரைகாரன் தெரு என்.எல்.சி. குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி புனிதா (வயது 41). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத போது புனிதா சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன் ஷிப் இன்ஸ்பெக்டர் ரவீந்தர்ராஜ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார்.
விசாரணையில் புனிதாவுக்கு வயிற்று வலி இருந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
கடந்து சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி உபரிநீர் கல்லணை, கீழணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது.
நேற்று வீராணம் ஏரிக்கு 690 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.70 அடியாக இருந்தது. இன்றும் அதே 46.70 கனஅடியாகவே உள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கடந்த 11-ந்தேதியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று 65 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. நேற்றைய விட இது 9 கனஅடி குறைவாகும்.
ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு மாறுபடும்.
தற்போது அறுவடை பணிகள் நடப்பதாலும், கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடப்பதாலும் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று 570 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. அங்கிருந்து வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வல்லம்படுகையில் இருந்து கஞ்சங்கொல்லை வரை உள்ள கொள்ளிடம் இடது கரைகளை கலெக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் தண்டபாணி கூறியதாவது,
காவிரி தண்ணீர் அதிகமாக வருவதால் கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிட ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலமும், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய பாசனத்துக்கு எப்போது தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது பற்றி முடிவு எடுக்க வருகிற 17-ந் தேதி விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. வீராணம், பெருமாள் மற்றும் வாலஜா ஆகிய 3 ஏரிகளை ஆழப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #VeeranamLake
பண்ருட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், இவரது மனைவி சுகன்யா இவர்களது மகன் ஹரி சரண் (வயது 4) இவன் பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறான்.
பெற்றோர்களிடம் கல்வி கற்று வந்த சிறுவன் ஹரிசரனை கடந்தாண்டு பண்ருட்டி கலை வித்யா மந்திர் பள்ளியில் ப்ரி கே.ஜி.யில் சேர்த்தனர்.
இவனது அபார திறனை வியந்தபள்ளி ஆசிரியைகள் சிறுவன் ஹரிசரணுக்கு தூண்டுகோலாக இருந்தனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிறைய விஷயங்களை இவனுக்கு சொல்லி கொடுத்து வந்தனர். 2 வயதில் தொடங்கிய இவனது நினைவாற்றல் தற்போது 4 வயதில் அசத்தும் வகை பல அதிசயங்களை நிகழ்த்தி காட்டி வருகிறான்.
கரும்பலகையில் அமைக்கப்பட்டுள்ள 200 உலக நாடுகளின் தேசிய கொடிகளை சுட்டிகாட்டி அவை எந்த நாட்டிற்கான கொடி என்று கேட்டால் கடகடவென வரிசையாக உலக நாடுகளின் பெயரை சொல்லி அசத்தி அனைவரின் பாராட்டை பெற்று சாதனை படைத்துள்ளான். இது மட்டும் இல்லாமல் கொடியை மட்டும் காண்பித்து இது எந்த நாட்டு கொடி என கேள்வி எழுப்பினால் நொடிப் பொழுதில் உரிய நாட்டின் பெயரை கூறி அசத்துகிறான்.
ஹரிகரணின் அசத்தல் இதோடு மட்டும் இல்லாமல் உலக நாடுகளின் பெயர், தலைநகரம் ஆகியவையும் கூறி வருகிறான். தேவாரம், திருவாசகம் பாடல்களையும் மழலை மொழியில் பாடி அசத்தும் ஹரிசரணை பள்ளி தாளாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் பாராட்டுகின்றனர். சிறுவன் ஹரிசரணுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இது பற்றி ஹரிசரணின் தாயார் சுகன்யா கூறியதாவது:-
மாணவன் ஹரிசரண் படிப்பில் படுசுட்டி. படிப்பில் இவனுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்து இவனது ஆர்வத்தை தூண்டும் வகையில் இவனது படிப்பில் தனிகவனம் செலுத்தி வந்தோம்.
ஹரிசரணுக்காக டி.வி. பார்ப்பதை தவிர்த்தோம். உலக நாடுகள் பெயர், அந்தந்த நாடுகளின்கொடி, சின்னம், தலைநகர் பெயர் ஆகியவைகளை பார்த்து படிக்க ஆரம்பித்தான். 2 வயதிலேயே 100 நாடுகளின் பெயர், கொடி ஆகியவை காண்பித்து சொல்ல தொடங்கினான். இப்போது 200 நாடுகளின் கொடியை காண்பித்து இது எந்தநாட்டு கொடி என்று கேட்டால் உடனே அந்த நாட்டின் பெயரை சொல்லும் அளவிற்கு சிறு வயதிலேயே ஞாபகசக்தியில் சிறந்து விளங்கி வருகிறான்.
இவ்வாறு அவர் கூறினார். #PanrutiUKGStudent






