என் மலர்tooltip icon

    கடலூர்

    விவசாயிகளுக்கு வெட்டிவேர் மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் சுமார் 1,000 ஏக்கரில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வெட்டிவேர் திண்டுக்கல், கோவை மற்றும் கர்நாடக மாநிலம் உடுப்பி ஆகிய நகரங்களில் இயங்கி வரும் நறுமண பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால் மேற்கண்ட தொழிற்சாலைகள் இயங்காததால் வெட்டிவேர் கொள்முதல் செய்வதற்கு யாரும் வரவில்லை. இதனால் வெட்டிவேர் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெட்டிவேரை மதிப்புக் கூடுதல் செய்து திரைச்சீலைகள், மாலைகள், தலையணை மற்றும் தேய்ப்பான் ஆகியவை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தடுப்பை கருத்தில் கொண்டு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் வெட்டி வேரை கொண்டு பிரத்யேகமாக முகக்கவசங்களை தயாரிக்க விவசாயிகளும் அவர்களை சார்ந்த தொழில் முனைவோரும் முன்வந்துள்ளனர்.

    இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதுடன் பலருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக விவசாயிகள் மூலம் தயாரிக்கப்பட்ட 2 ஆயிரம் வெட்டிவேர் முகக்கவசங்களை கொள்முதல் செய்து காவல் துறைக்கு வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக தோட்டக் கலைத்துறை மூலம் வெட்டிவேர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிர் கடன் வழங்க வெட்டிவேர் சாகுபடிக்கு தற்போது ரூ.5 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சாகுபடி செலவினங்களை கருத்தில் கொண்டு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் மற்ற பகுதிகளில் கொள்முதல் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட 2 ஆயிரம் வெட்டிவேர் முகக்கவசங்களை கலெக்டர் அன்பு செல்வன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவிடம் வழங்கினார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பூவராகன் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    கடலூரில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பயிற்சி பள்ளி உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் இங்கு கடந்த 3-ந் தேதி முதல் 2-ம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நடந்து வருகிறது. சுமார் 134 பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    கடந்த 10-ந் தேதி 134 பெண் காவலர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உள்பட 160 பேருக்கு மாவட்ட சுகாதாரத்துறையினர் கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதனை நடத்தினர். அந்த பரிசோதனை முடிவு இன்று காலை வந்தது.

    அப்போது சப்-இன்ஸ் பெக்டர் ஒருவர், 2 ஏட்டுகள், 10 பெண் பயிற்சி காவலர்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்ட அளவில் நேற்று வரை 395 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 409 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் உள்ள கொரோனா தடுப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் போலீஸ் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். இதையொட்டி அந்த பகுதி முழுவதும் தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    நெய்வேலி என்எல்சி 2-வது அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 2-வது அனல் மின்நிலையத்தில் 6-வது உற்பத்தி பிரிவில் கடந்த 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களில் நெய்வேலி பகுதியை சேர்ந்த நிரந்தர தொழிலாளி ‌ஷர்புதீன் (வயது 54) நேற்று முன்தினம் இறந்தார்.

    இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நெய்வேலியை அடுத்த கொள்ளிருப்பு கிராமத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம் (29) நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 6 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சண்முகம் உயிரிழந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் என்.எல்.சி 2-வது அனல்மின் நிலையம் நுழைவாயில் முன்பு திரண்டனர். இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட வில்லை. எங்கள் கோரிக்கை ஏற்காவிட்டால். உடலை வாங்க மாட்டோம் என்று சண்முகத்தின் உறவினர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு 9 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    கடலூர் மீன் மார்க்கெட்டில் இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அவர்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 394 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்காலிக காய்கறி சந்தை, மீன் சந்தைகளில் சமூக இடைவெளி விட்டு மீன் வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடலூரில் மீன்கள் அதிகம் கிடைப்பதால் ஏராளமான மீன் மார்க் கெட்டுகள் உள்ளது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக கடலூர் நகர்பகுதியான துறைமுகம் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் சிப்காட் பகுதியிலும், தேவனாம் பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் உப்பனாறு பகுதியிலும் மீன்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனுமதிக்கப்பட்ட 2 இடங்களில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

    இந்த மீன் மார்க்கெட்டு காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படுகிறது. மீன் மார்க்கெட்டில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

    அதே நேரத்தில் மஞ்சக்குப்பம் பகுதியில் தற்காலிகமாக இறைச்சி கடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அவர்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.

    கடலூரில் ஒரே நாளில் 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
    விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52). இவர் கடலூர் மாவட்ட பகுதிக்கு சென்று மதுகுடிக்க தனது நண்பர்கள் 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். பண்ருட்டி அருகே பனப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கினர். திருத்துறையூர் கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவில் அருகே சவுக்குதோப்பில் 4 பேரும் மதுகுடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து பழனிவேலை தாக்கி கொன்றனர்.

    கடலூர் அருகே உள்ள வி.காட்டுப்பாளையம் பஜனை மடத்தெருவை சேர்ந்த சிவக்குமார் (35) நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது தந்தை ராமலிங்கத்துக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிவக்குமார் ராமலிங்கத்தை இரும்பு கம்பியால் அடித்து கொன்றார்.
    நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்த 8 தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மொத்தம் 4 அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யபட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் உள்ள பாய்லர் பிரிவில் என்.எல்.சி. ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாய்லரில் திடீரென்று தீப்பிடித்து வெடித்து சிதறியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    இந்த சம்பவத்தால் 6-வது யூனிட்டில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் என்.எல்.சி. தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் பணியில் இருந்த சர்பூதீன், பாவாடை, சண்முகம், அன்புராஜ், மணிகண்டன், பாலமுருகன், ரஞ்சித் குமார், ஜெய்சங்கர் ஆகிய 8 ஊழியர்கள் மீது ஆயில் பட்டதால் அவர்களின் உடலில் தீப்பற்றியது. உடனடியாக தீயினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மற்ற ஊழியர்கள் உதவியுடன் என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அறிந்ததும் ஊழியர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் குவிந்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து ஆஸ்பத்திரியில் குவிந்திருந்த பொதுமக்களை வெளியேற்றினர். என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 8 தொழிலாளர்களும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதியும் இந்த பகுதியில் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பண்ருட்டியில் ஊரடங்கு உத்தரவால் பலாப்பழங்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் யாரும் வராததால் மரத்திலேயே பழங்கள் பழுத்து தொங்குகின்றன.

    பண்ருட்டி:

    தமிழகத்தில் பண்ருட்டி பலா பழத்துக்கு தனி மவுசு உண்டு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் பலாப்பழ சீசன் களை கட்டும். இந்த ஆண்டு பலாப்பழம் சீசன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஒரு பலாப்பழம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பலாப்பழம் அறுவடை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அறுவடை செய்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதிக்காக வாகனங்களில் ஏற்றப்பட்ட பலாப்பழங்கள் புதுச்சேரி பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலாப்பழ விவசாயி கூறியதாவது:-

    ஊரடங்கு உத்தரவால் பலாப்பழங்களை அறுவடை செய்ய தொழிலாளர்கள் யாரும் வரவில்லை. சில இடங்களில் கூடுதல் கூலி கொடுத்து ஆட்களை வரவழைத்து, பலாப்பழங்களை அறுவடை செய்தோம். அந்த பழங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால் இங்கேயே விற்பனை செய்கிறோம். விற்பனை மந்தமாக உள்ளதால், மேற்கொண்டு, அறுவடை செய்யாமல் விட்டு விட்டோம். இதனால் மரத்திலேயே பழங்கள் பழுத்து தொங்குகின்றன. இந்த ஆண்டு பலாப்பழம் விளைச்சல் அதகளவில் இருந்தும் விற்பனை செய்ய முடியாததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    நெய்வேலி:

    தமிழகம், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நெய்வேயில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    நெய்வேலி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அளகில் இன்று பாய்லர் வெடித்தது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதை அடுத்து அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூரில் மீன்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மீன்களை வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மீன் மார்க்கெட்டில் மீன்கள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மீன் பிடிக்க சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. கட்டுமரம், பைபர் படகுகளில் மட்டும் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    மீன் விற்பனை செய்யும் இடங்களையும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடலூர் துறைமுகம் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் சிப்காட்டிலும், தேவனாம்பட்டினம் பகுதியில் பிடிக்கும் மீன்கள் உப்பனாறு பகுதியிலும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி ஒதுக்கப்பட்ட 2 இடங்களில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. அங்கு மீன்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.

    குமரி மாவட்டத்தில் குளச்சல், நாகர்கோவில் உள்ளிட்ட மீனவ பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மீன் விற்பனை நடந்து வருகிறது.

    இங்கு வந்து மீன்களை வாங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். இதனால் வழக்கமாக வரும் மீன்களைவிட குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வருகிறது. மீன்களை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தே வாங்கி செல்கின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் தொடர் ஊரடங்கு உத்தரவால் மீன் விற்பனை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இருந்து தஞ்சைக்கு மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் மீன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வியாபாரிகள் மீன்கள் வாங்கி விற்பனை செய்து வந்தனர். ஆனால் அங்கு கொரோனா பாதிப்பு அதிகமானதால் அங்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் 3 செவிலியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்ததையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் நகர பகுதியில் அரசு காமராஜர் ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான செலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 3 செவிலியர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சிதம்பரம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் மூடப்பட்டது.

    அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த ஒருவர் மூலம் கொரோனா தொற்று வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    சிதம்பரத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.

    சிதம்பரம் அருகே உள்ள கீழச்சாவடி கிராமத்தில் சென்னையில் இருந்து வந்த பெண் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி உள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிநபர்கள் யாரும் செல்லாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    நடுவீரப்பட்டு அருகே டிராக்டர் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் திருப்பாதிரிப்பலியூர் போடிச்செட்டி தெருவை சேர்ந்தவர் ஞானசேகர்(56). இவர் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு, நேற்று காலை தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டை குறுக்கு சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஞானசேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞானசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் பலியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகருக்கு கவுரி(48) என்கிற மனைவியும் வெங்கடகிருஷ்ணன் (27), கோபாலகிருஷ்ணன்(25) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
    சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது. இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  தமிழகத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் கடந்த 1ந்தேதி 2 பேருக்கும், பின்னர் 2ந்தேதி 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக, கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பின்படி, கடந்த 3ந்தேதி முழு ஊரடங்கு அமலில் இருந்தது.

    இதனால் நகரில் மருந்து, பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.  ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கடலூரில் இருந்து காய்கறிகளை விற்பனை செய்வதற்காக சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தைக்கு வந்து விட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில், கடலூரில் நேற்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  இந்த 107 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள். கோயம்பேட்டில் இருந்து வந்த மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

    இதேபோன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பியவர்களில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வடைந்தது.

    இந்நிலையில், கடலூரில் இன்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பியவர்களில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 197 ஆகவும், கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 228 ஆகவும் உயர்ந்து உள்ளது.

    ×