search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி"

    சிதம்பரத்தில் காதலி இறந்ததால் தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் முகத்தை எலி கடித்து குதறிய சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Chidambaramgovthospital
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் சண்டேஸ்வரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வைத்தீஸ்வரன் (வயது 22). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்தார்.

    இவருடன் கல்லூரியில் படித்த சிதம்பரம் ஏ.ஆர்.எம். நகரை சேர்ந்த ரத்தனப்பிரியா (22) என்பவரும் படித்தார்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் ரத்தனப்பிரியாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர்.

    இதனால் மனம் உடைந்த ரத்தனப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரத்தனப்பிரியா தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் மிகவும் மனவேதனை அடைந்தார். அவரால் ரத்தனப்பிரியாவை மறக்க முடியவில்லை.

    இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு வைத்தீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வைத்தீஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    அவரது உடலை பார்ப்பதற்காக வைத்தீஸ்வரனின் உறவினர்கள் இன்று காலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் பிணவறை ஊழியர்கள் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க அனுமதிக்கவில்லை.

    இதனால் சிதம்பரத்தில் உள்ள வக்கீல் பிரபுவை தொடர்பு கொண்டு இது பற்றிய தகவலை தெரிவித்தனர். உடனே அவர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினார்.

    அதன்பின்னர் வைத்தீஸ்வரனின் உடலை பார்க்க உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிணவறையில் இருந்த வைத்தீஸ்வரனின் முகம் முழுவதும் காயங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டபோது எலி கடித்ததாக கூறினர்.



    இதைகேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Chidambaramgovthospital
    ×