என் மலர்tooltip icon

    கடலூர்

    கோவில் சுவரில் தலையை மோத செய்து என்எல்சி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சொரத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகங்கை (வயது 70).நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    சொரத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாமி தரிசனம் செய்வதற்காக சிவகங்கையும் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். பூஜை முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். ஆனால் சிவகங்கை கோவிலிலேயே படுத்து தூங்கினார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த முருகன் (41) என்பவர் கோவிலுக்கு வந்தார். அவர் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மதுபோதையில் இருந்து முருகன் கோவிலில் தூங்கிய சிவகங்கையை எழுப்பி திட்டினார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த முருகன் சிவகங்கையை பிடித்து கீழே தள்ளினார். பின்னர் சிவகங்கையின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்தார். இதில் சிவகங்கையின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிவகங்கை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், நந்தகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சிவகங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகங்கை கொலை செய்யப்பட்டு கோவிலில் பிணமாக கிடப்பது குறித்து அறிந்த பொது மக்கள் அந்த பகுதியில் திரண்டு நின்றனர். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக முருகனும் ஒன்றும் தெரியாதது போல் அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார்.

    முருகனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் முருகன் குடிபோதையில் சிவகங்கையை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து முருகனிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்ற மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
    சேத்தியாத்தோப்பு:

    நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). மந்திரவாதி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

    இதனை உண்மை என நம்பி கடலூர் அருகே உள்ள சேத்தியாத்தோப்பை சேர்ந்த பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது 7 வயது மகளை குணப்படுத்துவதற்காக சக்திவேலை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சக்திவேல் உங்களது மகளை குணப்படுத்த வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் பூஜைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

    இதை நம்பிய அந்த பெண் தனது வீட்டின் முகவரியை தெரிவித்தார். உடனே சக்திவேல் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியின் தாயிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்றார்.

    இதுகுறித்து ஒரத்தூர் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மந்திரவாதி சக்திவேலை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,759 ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24942 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 24611 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 285 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நெய்வேலியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி 4-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் வேலாயுதம்(வயது 47). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள நகர நிர்வாக அலுவலகத்தில் சுகாதார பிரிவில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு நெய்வேலி 2-வது வட்டத்தில் உள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் கருத்தடை சிகிச்சை மையத்தில் உள்ள ஒரு அறையில் வேலாயுதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலாயுதத்தின் உடலை கைப்பற்றி என்.எல்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி அறிந்த வேலாயுதம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என்.எல்.சி. மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இறந்த வேலாயுதம் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து என்.எல்.சி. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தி கொள்ளலாம் என்றனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் என்.எல்.சி. தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க நிர்வாகிகள், எஸ்.சி., எஸ்.டி. நலப் பணியாளர் சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் வேலாயுதம் உறவினர்கள், என்.எல்.சி. நகர நிர்வாக முதன்மை பொது மேலாளர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேலாயுதம் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர தன்மையற்ற வேலை வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே டாக்டர் வீட்டில் பித்தளை பாத்திரங்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள சின்ன பகண்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 42). இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். முத்துக்குமரனுக்கு புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வீடு உள்ளதால், இவரது குடும்பத்தினர் சின்ன பகண்டையில் உள்ள வீட்டை பூட்டி விட்டு அரியாங்குப்பத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி காலையில் சின்னபகண்டையில் உள்ள முத்துக்குமரன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி முத்துக்குமரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் அவர் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பித்தளை பொருட்கள் அனைத்தும் திருடு போயிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.12 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் டாக்டர் வீட்டில் திருடியது, பட்டாம்பாக்கம் பி.என். பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் முகிலன்(வயது 21), ஜெயபால் மகன் ஜெயகணேஷ்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் இருவரும் டாக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து முகிலன், ஜெயகணேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் கல்லூரி மாணவியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கடலூர்:

    கடலூர் சங்கரநாயுடு தெருவை சேர்ந்தவர் 20 வயதுடைய கல்லூரி மாணவி. இவர் கடலூரில் உள்ள ஒருதனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

    இவர் சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நாகம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் பிரபாகர் (வயது 30) என்பவர், தனது ஆட்டோவில் ஏற மாட்டியா? என்று கூறி கல்லூரி மாணவியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து கல்லூரி மாணவி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரை கைது செய்தனர்.
    கடலூர் அருகே சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1-ந்தேதி முதல் யாகசலை பூஜைகள் தொடங்குகிறது.
    கடலூர் அருகே சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1ந்தேதி முதல் யாகசலை பூஜைகள் தொடங்குகிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்துவது குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு தாசில்தார் பலராமன் தலைமை தாங்கினார். இதில் ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவின் போது பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், துறை சார்ந்த அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சின்னபகண்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் டாக்டர் முத்துக்குமார். இவர் புதுவை அரியாங்குப்பத்தில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். அரியாங்குப்பத்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு இவருக்கு சொந்தமான சின்ன பகண்டையில் உள்ள மாடி வீட்டில் நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ முன்பக்க கதவு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த நகை, பணம், வெண்கல பாத்திரம் ஆகியவற்றை திருடிசென்றனர்.

    கதவு திறந்து கிடப்பது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் டாக்டர் முத்துக்குமாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர் நேரில் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் கொள்ளை போன பொருட்கள் விவரம் குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மோப்ப நாய் பிரிவு மற்றும் விரல் ரேகை பிரிவு வந்து தடயத்தை சேகரித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இதன் விளைவாக பண்ருட்டி அருகே பி.எம். பாளையத்தை சேர்ந்த முகிலன் (வயது 21), ஜெய்கணேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர்.
    கடலூர் மாவட்டத்தில் டாக்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 910 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 24 ஆயிரத்து 593 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 285 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் புதிதாக 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இவர்களில் என்.எல்.சி. பகுதியை சேர்ந்த டாக்டருக்கும், விருத்தாசலத்தை சேர்ந்த முன்கள பணியாளருக்கும், மயிலாடுதுறையில் இருந்து புவனகிரிக்கு வந்த ஒருவருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புவனகிரி, குமராட்சி பகுதியை சேர்ந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நேற்று மட்டும் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 37 பேர் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 340 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
    கல்வி கட்டணத்தை குறைக்காததால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்ற பின்பும் மாணவர்களிடம் அரசு கல்லூரிக்கு உரியகட்டணம் வசூலிக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கண்டித்தும் அரசு அறிவித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும் கல்லூரி மாணவ- மாணவிகள் பல்வேறுகட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கிவந்த ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு அதற்கான அரசாணை தமிழக அரசால் நேற்று வெளியிடப்பட்டது. இதனால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கிவந்த ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியை அரசு தற்போது சுகாதாரதுறையின் கீழ் கொண்டுவந்து அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் மாணவர்களின் கல்விகட்டணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    இதனால் நாங்கள் படிக்கும் கல்லூரியில் அரசு மருத்துவ கல்லூரிக்கு உரிய கல்வி கட்டணம் வசூக்கப்படும் என்ற அறிவிப்பு வரும்வரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    நேற்று இரவும் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 52-வது நாளாக மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    சிதம்பரம் கே.ஆடூர் பகுதியை சேர்ந்தவர் சினேகா(வயது 18). இவர் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று சினேகா பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதை அவருடைய தாய் கண்டித்துள்ளார். 

    இதனால் மனமுடைந்த சினேகா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார் மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கி வந்த சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் கொண்டு வந்து பெயரையும் மாற்றியுள்ளது தமிழக அரசு.
    சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உயர்கல்விதுறையின் கீழ் இயங்கி வந்தது. இந்த கல்லூரில் அரசு கல்லூரியை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் தொடர்ந்து போட்டம் நடத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக அரசு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

    மற்ற அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் இனி இங்கேயும் வசூலிக்க நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது.
    ×