என் மலர்tooltip icon

    கடலூர்

    என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக பேசி வந்தனர்.

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    ஏற்கனவே முதல் சுரங்கம் மற்றும் 2-வது சுரங்கம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்ட இடத்துக்கு போதுமான இழப்பீடு வழங்கவில்லை. மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு இதுவரை வேலையும் வழங்கவில்லை.

    எனவே இனிவரும் எந்த சூழ்நிலையிலும் 3-வது சுரங்கம் அமைக்க உள்ள என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஒரு சென்ட் நிலம் கூட தரமாட்டோம் என கூறி கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ள சாராயம் குடிக்காமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது.
    கடலூர்:

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் கள்ள சாராயம் குடிக்காமல் தடுப்பதற்கு விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லியோ தங்கதுரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, உதவி ஆணையர் (கலால்) லூர்துசாமி, கோட்ட கலால் அலுவலர் மகேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆரோக்கியராஜ், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியில் பள்ளி மாணவர்கள் மது குடிப்பவரின் குடும்பத்தையும்,குலத்தையும் கெடுக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வறுமை ஏற்படும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகும். பசியின்றி உடல் நலம் குறையும்.

    நினைவாற்றல் குறையும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன்ஹாலில் முடிவடைந்தது. இதில் புது நகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, கலால் தாசில்தார் ஜான்சிராணி, இன்ஸ்பெக்டர்கள் (கலால்) பத்மாவதி, பாஸ்கர், வனிதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    பண்ருட்டி அருகே செட்டிபாளையம் சித்தேரியில் பஞ்சாயத்து தலைவர் சரசு தெய்வசிகாமணி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று காலை நடந்தது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்கு செட்டிபாளையத்தில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் பள்ளி, கல்லூரிகளும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஏரி அளவிடும் பணி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை அங்கு செட்டிபாளையம் சித்தேரியில் பஞ்சாயத்து தலைவர் சரசு தெய்வசிகாமணி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை தலைவர் மணிகண்டன், பஞ்சாயத்து கிளார்க்சங்கர், வார்டு உறுப்பினர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    போலீசார் வடமாநில கும்பலை கண்டுபிடித்து உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் சென்னை சாலையில் பிரபல காம்ப்ளக்ஸ் ஒன்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் கம்பெனியை ஒரு கும்பல் தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே ஜி.எஸ்.டி.எண், வங்கி கணக்குகள் தொடங்கினர்.

    வியாபாரிகளிடமும், விவசாயிகளிடமும் கொள்முதல் செய்த, முந்திரி உள்ளிட்ட பொருட்களுக்கு உடனுக்குடன் காசோலை மூலம் பணம் வழங்கி அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதித்தனர். இதனால் மற்ற எல்லா நிறுவனங்களை விட இந்த நிறுவனம் அசுர வளர்ச்சியை எட்டியது.

    நல்ல விலை உடனுக்குடன் பணம் கிடைத்ததால் இவர்களிடம் பொருட்களை விற்பனை செய்ய அனைவரும் ஆர்வம் காட்டினர். அந்த வகையில் அனைவரது கவனத்தையும் திசை திருப்பி இந்த வடமாநில கும்பல் ஒரே நாளில் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    வாங்கிய பொருட்களுக்கு காலையில் பணம் தருவதாக சொன்ன இந்த கும்பல் தங்களது செல்போன்களை சுவிட்ஆப் செய்து உள்ளது.

    இதனால் அந்த நிறுவனத்தின் முன்பு திரண்ட பாதிக்கப்பட்டவர்கள் நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தனர். இவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.

    இவர்கள் கொடுத்த எல்லா ஆவணங்களும் போலியானது என தெரிய வந்தது. பண்ருட்டி பகுதி மக்களிடம் இருந்து பெற்ற முந்திரி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இவர்கள் அனுப்பிய டிரான்ஸ்போர்ட் மூலம் விசாரித்து பார்த்ததில் எங்கு அனுப்பினார்கள் என்ற விவரம் இவர்களால் பெற முடியவில்லை.

    நூதனமான முறையில் டிரான்ஸ்போர்ட் மூலம் அனுப்பி வழியிலே வேறு வண்டியில் மாற்றி அனுப்பியது தெரியவந்தது. இதனால் கவலை அடைந்த வியாபாரிகள், விவசாயிகள் கடலூர் போலீஸ் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வடமாநில கும்பலை கண்டுபிடித்து உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை என கூறி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கிளினிக் டாக்டர்கள் திரண்டனர்.
    கடலூர்:

    கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கிளினிக் டாக்டர்கள் திரண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதல் அரசு மினி கிளினிகில் எங்களை பணியமர்த்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வந்தோம்.

    ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில் வருகிற மார்ச் 31- ந் தேதிக்கு பிறகு எங்களை பணி நீக்கம் செய்யபோவதாக தகவல் கிடைத்து உள்ளது. ஆகையால் மார்ச் 31-ந் தேதிக்குள் எங்களுக்கு நிலவில் உள்ள சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
    புவனகிரி அடுத்த சாத்தபாடி ஏரியில் விவசாயிகள் பலர் ஆக்கிரமித்து நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களை சாகுபடி செய்திருந்ததை சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    புவனகிரி:

    புவனகிரி அருகே சாத்தபாடி ஏரி 240 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியில் பல்வேறு விவசாயிகள் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து நெல் மற்றும் பல்வேறு வேளாண் பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.

    இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிட ம் பலமுறை தகவல் கூறியும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளவில்லை. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி புவனகிரி அடுத்த சாத்தபாடி ஏரியில் விவசாயிகள் பலர் ஆக்கிரமித்து நெல் உள்ளிட்ட வேளாண் பயிர்களை சாகுபடி செய்திருந்ததை சிதம்பரம் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் செயற்பொறியாளர் கந்தரூபன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் குமார் அடங்கிய குழுவினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை மீட்டு பல ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஏரிக்கு கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் பல்வேறு இடங்களிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கந்தரூபன் தெரிவித்துள்ளார்.

    வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இந்த கடுமையான வெப்பத்தை சமாளிக்க அவர்களுக்கு இருப்பது மின்சார பயன்பாடு மட்டுமே. இந்த மின்சார பயன்பாட்டினால் தான் மின்விசிறி, ஏர்கண்டிசன், ஏர் கூலர் போன்றவைகளால் கடுமையான வெப்பத்தை தணிக்க முடியும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலத்திற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்த வெயிலை சமாளிக்க வெளியில் செல்லும் மக்கள் ஆங்காங்கே உள்ள மரங்களின் நிழலை தேடி செல்கின்றனர்.

    வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இந்த கடுமையான வெப்பத்தை சமாளிக்க அவர்களுக்கு இருப்பது மின்சார பயன்பாடு மட்டுமே. இந்த மின்சார பயன்பாட்டினால் தான் மின்விசிறி, ஏர்கண்டிசன், ஏர் கூலர் போன்றவைகளால் கடுமையான வெப்பத்தை தணிக்க முடியும்.

    தற்போது ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அனைவரும் வெப்பத்தை தாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இந்த மின்வெட்டு மேல்பட்டாம்பாக்கம், அண்ணாகிராமம், வான்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் இந்த மின்வெட்டு அதிகமாக இருக்கிறது. இதனால் இரவில் சரியாக தூங்க முடியாமல் வியர்வை மழையில் நனைந்தபடி சரிவர தூக்கமின்றி கடுமையாக பாதிப்படைகின்றனர். அனைவருக்கும் தூக்கம் என்பது மிக அவசியம்.

    காலையிலிருந்து மாலை வரை ஓயாது வேலை பார்த்த உடல் ஓய்வெடுக்கும் நேரம் இரவில் மட்டும்தான். இதனால் மக்கள் அனைவரும் நன்றாக தூங்கினால் தான் மறுநாள் அந்த வேலையை பார்க்க உடல் ஒத்துழைக்கும் ஆனால் அலுவலக வேலை மற்றும் பிற வேலைகளுக்கு செய்பவர்கள் இரவில் ஏற்படும் மின் வெட்டினாள் தூக்கமின்றி அவர்களால் சரிவர வேலை செய்ய முடிவதில்லை.

    இந்த தூக்கமின்மையால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால் உரிய அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து ஏற்படும் தொடர் மின்வெட்டிற்கு முற்றுப் புள்ளி வைத்தால்தான் பொதுமக்கள் அனைவரும் நிம்மதியாக உறங்க முடியும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    திட்டக்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி நகராட்சியில் பல்வேறு கடைகளில் தொடர்ந்து அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திட்டக்குடி குற்றப்பிரிவு போலீசார் திருமஞ்சனம் தெருவில் உள்ள பாலமுரளி ( வயது 46) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்தனர். 

    மேலும் இவருக்கு சொந்தமான மற்றோரு மளிகை கடையிலும் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட 20 பாக்கெட் போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து பாலமுரளியை திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் வழக்கு பதிவு செய்து பால முரளியை கைது செய்தார்.
    தற்போது விவசாயிகள் வருகின்ற ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரையுள்ள காலத்திற்கான 11-வது தவணைத் தொகையைப் பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கவும், இதர வேளாண் பணிகளுக்காகவும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,82,811 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    தற்போது விவசாயிகள் வருகின்ற ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரையுள்ள காலத்திற்கான 11-வது தவணைத் தொகையைப் பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும்.

    மத்திய அரசு தற்போது பி.எம்.கிசான் திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில், இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். தற்போது விவசாயிகள் 11-வது தவணைத் தொகை (01.04.2022 முதல் 31.07.2022 வரை) பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது கட்டாயமாகும்.

    எனவே விவசாயிகள் உடனடியாக தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் சென்று வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும்.

    இதுவரை ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ- பொது சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்கள் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதார் எண்கள் மற்றும் வங்கிக்கணக்குகளை அருகாமையில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வங்கிகளுக்கு நேரில் சென்று வரும் மே மாத இறுதிக்குள் பதிவு செய்து தொடர்ந்து இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
    கடலூர் அருகே கணவன் கண்முன்பாக மனைவி உடல்நசுங்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    கடலூர் அருகே ஆலப்பாக்கம் வடக்கு பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவரது மனைவி தனசெல்வி (வயது 35). கணவன்-மனைவி 2 பேரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நெல்லிக்குப்பம் சென்றனர்.

    கடலூர் முதுநகர் பழைய போலீஸ் நிலையம் முன்பு அவர்கள் சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவநாதன் சாலை ஓரமும், தனசெல்வி சாலையிலும் விழுந்தனர்.

    அப்போது இவர்கள் மீது மோதிய லாரி தனசெல்வி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் கண்முன்பாக மனைவி உடல்நசுங்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    14-வது வார்டில் கட்டப்பட்டுள்ள 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திட்டக்குடி:

    திட்டக்குடி நகர த.வா.க., துணைத்தலைவர் சுதாகர் தலைமையில் அக்கட்சியினர் நகராட்சி கமி‌ஷனர் ஆண்டவனிடம் மனு அளித்தனர். மனுவில் கூறி இருப்பதாவது:-

    திட்டக்குடி நகராட்சியிலுள்ள 24 வார்டுகளிலும் முறையான குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் தினசரி அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. 14 மற்றும் 15-வது வார்டுகளில் முற்றிலுமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    14-வது வார்டில் கட்டப்பட்டுள்ள 60ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    மனு அளிக்கும் போது த. வா.க.,ஒன்றியசெயலாளரும், நகராட்சி கவுன்சில ருமான சுரேந்தர், த.வா.க.,நிர்வாகிகள் பாண்டியன், கதிரவன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்று கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் யாரும் ஏறக்கூடாது என கோவில் தீட்சிதர்கள் முடிவு செய்து அறிவித்தனர். ஆனால் தீட்சிதர்களின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீட்சிதர்களுக்கு எதிராகவும், சிற்றம்பல மேடையில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதுகுறித்த ஆலோசனைகள் நடந்து வந்த நிலையில் யாரும் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.

    அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இதுகுறித்த நீதிமன்ற ஆணைகள் மற்றும் அரசாணைகள் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிகழ்வு தமிழ்நாடு மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பேரில் இறுதி முடிவு எடுக்கும் விதமாக பல்வேறு நிலை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

    எனவே அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர பல்வேறு போராட்ட குழுவினர் அரசின் முடிவு வரும் வரையில் எவ்வித போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், கூட்டமாக கூடி ஆலோசனைகளையும் மேற்கொள்ள கூடாது எனவும், அதனால் ஒரு மாத காலத்திற்கு குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன்படி தடைஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என உத்தரவில் கோட்டாட்சியர் தெரிவித்து இருந்தார்.

    இந்த உத்தரவு 24-ந் தேதி (நேற்று) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அந்த உத்தரவில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் இன்று கோட்டாட்சியர் ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    ×