search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில கும்பல்"

    • ஜெயசீலனின் செல்போன் எண்ணுக்கு அந்த வாலிபர் உங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
    • சிறிது நேரத்திலேயே ஜெயசீலனின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோனது.

    சென்னை:

    வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அதுதொடர்பான விவரங்களை கேட்டு வாங்கி மோசடி செய்யும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறது.

    அந்த வகையில் புழல் சிறை காவலரான ஜெய சீலனிடம் போனில் குறுஞ்செய்தி அனுப்பிய வட மாநில வாலிபர் ஒருவர் ரூ.13 ஆயிரத்து 700-ஐ பறித்துள்ளார். ஜெயசீலனின் செல்போன் எண்ணுக்கு அந்த வாலிபர் உங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதனை பார்த்ததும் குறுஞ்செய்தி லிங்க்கில் போய் பான் கார்டு மற்றும் வங்கி தொடர்பான விவரங்களை ஜெயசீலன் அளித்துள்ளார்.

    சிறிது நேரத்திலேயே ஜெயசீலனின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோனது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமாநிலங்களை சேர்ந்த மோசடி நபர்கள் இதேபோன்று குறுஞ்செய்தியை அனுப்பி தொடர்ச்சியாக பணம் பறிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருட வந்தவர் என நினைத்து கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கினர்.
    • 7 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த கட்டிட காண்டிராக்டர் பணிகளை ஓசூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார். அங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இதனிடையே சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கந்தனூரில் வசிக்கும் தனது அண்ணன் மகன் பிரபாகரன் (வயது 33) என்பவரிடம், சின்னாறில் வேலை உள்ளதாகவும், நீ அங்கு வேலை பார்க்குமாறு நாராயணன் கூறினார்.

    அதை நம்பி பிரபாகரன் சின்னாறுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்தார். அங்கேயே தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 28-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள கம்பி வேலி அருகில் பிரபாகரன் அமர்ந்து இருந்தார். அந்த வழியாக என்ஜினீயர் தங்கராஜ் மற்றும் வடமாநில வாலிபர்கள் 5 பேர் வந்தனர்.

    அப்போது அவர்கள் பிரபாகரனை பார்த்து இரும்பு பொருட்களை திருட வந்தவர் என நினைத்து கயிற்றால் கட்டி போட்டு சரமாரியாக தாக்கினர். மேலும் என்ஜினீயர் தங்கராஜ் கட்டிட உரிமையாளருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

    மேலும் பிரபாகரனை அந்த பகுதியில் உள்ள அறையில் கட்டி போட்டு இரும்பு கம்பியால் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பிரபாகரன் படுகாயம் அடைந்தார். மேலும் அவரிடம் இரும்பு பொருட்களை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று அவர்கள் மிரட்டினர். மேலும் இவற்றை வீடியோவாக எடுத்து, ஊத்தங்கரையில் உள்ள நாராயணனுக்கு அனுப்பி வைத்து, அவர் எடுத்து சென்ற இரும்பு பொருட்களை கொடு. இல்லாவிட்டால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடு என மிரட்டினர்.

    இதுகுறித்து நாராயணன், சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று கன்டெய்னர் அறை ஒன்றில் கயிற்றால் கட்டி அடைத்து வைத்திருந்த பிரபாகரனை மீட்டனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து காண்டிராக்டர் ஓசூர் சப்தகிரி நகரை சேர்ந்த மணி (47), என்ஜினீயர் தருமபுரி நல்லம்பள்ளி தாலுகா திம்மராயன் கொட்டாய் தங்கராஜ் (33), வடமாநிலத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர் (46), பாலேந்தர் (28), சுசில்குமார் (24), அர்ஜூன் (24), திப்பந்தர் சோக்கியா (22), ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். 

    • சிறுவனை ஏமாற்றி துணிகரம்
    • ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி முஹம்மத் அலி பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் நேமிசந்த். இவர் நேற்று மதியம் உணவு இடைவேளையில் தனது மகன் சுஜல் (16) என்பவரை கடையில் விட்டு சென்றுள்ளார்.

    அப்போது கடையில் சிறுவன் தனியாக இருப்பதை அறிந்து வட மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கடையில் நகையை வாங்க வருவது போல சிறுவனிடம் போக்கு காட்டி சிறுவன் நகையை காண்பித்துக் கொண்டிருக்கும் போது நகை பெட்டியில் வைத்திருந்த 2 நகை பொட்ட லங்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். தன்னந்தனியாக சுதாரித்து சிறுவன் பஜார் பகுதியில் தப்பி ஓடிய திருடர்களை துரத்தி பிடிக்க ஓடினான்.

    அப்போது பொதுமக்கள் உதவியுடன் ஒருவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முஹம்மத் பாஷா என்பது தெரிய வந்துள்ளது.

    மேலும் நகையுடன் தப்பி ஓடிய மற்றொரு நகை திருடனை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் பஜார் பகுதியில் நடந்த இந்த நகை திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
    • மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டுகள் அரபி, ரஞ்சித் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்கள், கைரேகைகள் சேகரித்தனர்.

    மேலூர்:

    தமிழகத்தில் நடக்கும் கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களில் சில வடமாநில கும்பல் ஈடுபட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

    கடைகள், தொழிற்சாலைகளில் வேலைக்கு சேரும் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் முழு விவரங்களை வைத்திருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரு வீட்டில் வடமாநில கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மேலூரில் உள்ள குமார் நகரைச் சேர்ந்தவர் பிரபு சங்கர். என்ஜினீயரான இவர் குடும்பத்துடன் பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு பிரபு சங்கர் வருவது வழக்கம். இதன் காரணமாக பெரும்பாலான நாட்கள் அவரது வீடு பூட்டியே கிடக்கும்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த 135 பவுன் நகை, 45 கிலோ வெள்ளி, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டுகள் அரபி, ரஞ்சித் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்கள், கைரேகைகள் சேகரித்தனர். மேலும் கொள்ளை நடந்த நேரத்தில் அந்தப்பகுதியில் பதிவான செல்போன் எண்கள், சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் உள்ளிட்டவற்றை வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், பிரபு சங்கர் வீட்டில் கைவரிசை காட்டியது வடமாநில கும்பல் என தெரியவந்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் அங்குனா மாவட்டம் கஜிராசேக் விஸ்வாங்கர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த ஜெய் கிசோலங்கி (வயது 39), அவனது கூட்டாளி கைலாஷ் (50) ஆகிய 2 பேரை உள்ளூர் போலீஸ் உதவியுடன் தனிப்படை போலீசார் பிடித்தனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரும் மதுரைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், இவர்களுடன் மேலும் 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்த கும்பல் தமிகழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர்ந்து கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை தேடி வருகின்றனர்.

    "தீரன்" பட பாணியில் வடமாநில கொள்ளை கும்பல் மேலூரில் ஒரு வீட்டில் நகை-பணத்தை திருடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது அதிக பணம் வைத்திருப்பார்கள் என்பதால் அவர்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.
    • திருப்பூர் காதர்பேட்டை, பழைய பஸ் நிலையம், வெள்ளி விழா பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் சிலை அருகே கடந்த 19-ந்தேதி சவுதப் சவுத்திரி (வயது 26) என்பவர் மயங்கிய நிலையில் கிடந்தார். ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்தவர் என்பதும், ஊருக்கு செல்வதற்காக கடந்த 16-ந்தேதி ரெயில் நிலையத்துக்கு வந்த போது அவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் பேச்சுக்கொடுத்து பிஸ்கட் சாப்பிட வைத்துள்ளனர்.

    அதை சாப்பிட்டு மயங்கியவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். மேலும் சவுதப் சவுத்திரியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை எடுத்து சென்று அதிலும் ரூ.27 ஆயிரத்தை எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.வனிதா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் திருப்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் ரெயில் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்பு துலக்கினார்கள்.

    இந்தநிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பீகார் மாநிலம் அரையா, சாகை பகுதியை சேர்ந்த சல்மான் (27), மனுவார் ஆலம் (25), முகமது ஆசாத் (32), அப்துல்லா (31), முகமது மமுத் ஆலம் (31) ஆகிய 5 பேரை திருப்பூர் ரெயில் நிலையம் அருகே வைத்து பிடித்தனர். இவர்கள் அனைவரும் உறவினர்கள். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, திருப்பூர் சின்னக்கரை மற்றும் சூரியாகாலனி பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மயக்க மருந்து கொடுத்து வடமாநிலத்தவர்களை குறி வைத்து பணம், பொருட்களை பறித்துள்ளனர்.

    பிறகு பீகாரில் உள்ள மெடிக்கல் கடைகளில் அதிக விலை கொடுத்து தூக்க மாத்திரைகளை மொத்தமாக வாங்கி திருப்பூருக்கு கொண்டு வந்து இருப்பில் வைத்துள்ளனர். 5 பேரும் சேர்ந்து கடந்த 4 மாதங்களாக ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் சொந்த ஊர்க்காரர் போல் பேச்சுக்கொடுத்து டீ, குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். அவர்கள் சாப்பிட்டு மயங்கியதும் அவர்களிடம் இருந்து செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர்.

    திருப்பூரில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது அதிக பணம் வைத்திருப்பார்கள் என்பதால் அவர்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். திருப்பூர் காதர்பேட்டை, பழைய பஸ் நிலையம், வெள்ளி விழா பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். பலரிடம் கைவரிசை காட்டியதையடுத்து புகார்கள் வரவே அந்த கும்பலை மடக்கி பிடித்துள்ளோம். 5பேரும் உறவினர்கள் என்பதுடன் பீகார் மாநிலத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். வட மாநில தொழிலாளர்களை மயக்க பிஸ்கட்டுகள் வாங்கி அதில் 5பேரும் சேர்ந்து மயக்க மருந்து க்ரீமை தடவி கொடுத்துள்ளனர். 50பேரை மயக்கி பணம்-செல்போனை பறித்துள்ளனர். இதனை ஒரு தொழிலாகவே செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    5 பேரிடம் இருந்து 30 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள், மயக்க மாத்திரைகளை பொடியாக்கி வைத்த பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    ×