என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    144 தடை உத்தரவு வாபஸ்
    X
    144 தடை உத்தரவு வாபஸ்

    சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்- 144 தடை உத்தரவு திடீர் வாபஸ்

    சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்று கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் யாரும் ஏறக்கூடாது என கோவில் தீட்சிதர்கள் முடிவு செய்து அறிவித்தனர். ஆனால் தீட்சிதர்களின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

    இதைத்தொடர்ந்து பக்தர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தீட்சிதர்களுக்கு எதிராகவும், சிற்றம்பல மேடையில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதுகுறித்த ஆலோசனைகள் நடந்து வந்த நிலையில் யாரும் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார்.

    அதில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இதுகுறித்த நீதிமன்ற ஆணைகள் மற்றும் அரசாணைகள் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிகழ்வு தமிழ்நாடு மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பேரில் இறுதி முடிவு எடுக்கும் விதமாக பல்வேறு நிலை சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

    எனவே அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர பல்வேறு போராட்ட குழுவினர் அரசின் முடிவு வரும் வரையில் எவ்வித போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், கூட்டமாக கூடி ஆலோசனைகளையும் மேற்கொள்ள கூடாது எனவும், அதனால் ஒரு மாத காலத்திற்கு குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன்படி தடைஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என உத்தரவில் கோட்டாட்சியர் தெரிவித்து இருந்தார்.

    இந்த உத்தரவு 24-ந் தேதி (நேற்று) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அந்த உத்தரவில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் இன்று கோட்டாட்சியர் ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×