என் மலர்
கடலூர்
- சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: இந்து சமய அறநிலையத்துறை இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று தீட்சிதர்கள் விசாரணை அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
- 17 வருட காலதாமதம் பற்றி எந்தவித விளக்கமும் இல்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேசதீட்சிதர், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையரும், விசாரணை அதிகாரியுமான ஜோதிக்கு அனுப்பியுள்ள பதில் கடித விபரம் வருமாறு:-
நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் 28.06.2022 அன்று 17 பக்க பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். அந்த பதிலில் இந்திய அரசியல் சாசனப் பிரிவு 25,26, 29/1, 31-A (1)(b), மற்றும் பிரிவு 394(A) ஆகியவற்றை மேற்கோள் காட்டி நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினர் மற்றும் அவர்களது பூஜை முறைகள் தனித்துவம் வாய்ந்தது என்பதையும் குறிப்பிட்டு உச்சநீதிமன்ற 06.01.2014 தீர்ப்பின்படி பொது தீட்சிதர்களின் வழிபாட்டு முறைகள் மற்றும் நிர்வாகத்தில் இந்து அறநிலையத் துறை சட்டத்தின் படி எந்தவித நடவடிக்கையும் ஆய்வும் உட்படுத்த சட்டத்தில் வழியில்லை என்பதை தெரிவித்தார்கள்.
மேலும், இந்து அறநிலையத்துறை செயலாளர், உச்ச நீதிமன்றத்தில் நீதிப்பேராணைகள் 544/2009 மற்றும் 476/2012 ஆகியவற்றில் தாக்கல் செய்த உறுதி மொழி பத்திரத்தில் இந்து அறநிலைய சட்டப்பிரிவு 107ன் படி பொருந்தாது அரசியல் சாசனப்பிரிவு 26-ன் கீழ் பாதுகாப்பு பெற்ற தனி சமயப்பிரிவினரின் நிர்வாகத்தின் மற்ற பிரிவுகள் பொருந்தாது என்று குறிப்பிட்டுள்ளதால் அதற்கு மாறாக தற்போது இந்து அறநிலையத்துறை தனி சமயப்பிரிவான பொது தீட்சிதர்களின் நிர்வாகத்தில் ஆய்வு செய்ய இந்து அறநிலைய சட்டத்திற்கு வழி முறை உள்ளது என்று கூறுவது சட்டப்படி தவறு என்றும், நீதிமன்றத்தில் தண்டணைக்குரிய செயல். மேலும் இந்த அறநிலையத் துறை சென்னை உயர்நீதி மன்ற நீதிப்பேராணை எண். 9594/2004ல் ஆ.மி.வைத்தீஸ்வரன் கோயில் தேவஸ்தான வழக்கில் சிதம்பரம் கோயில் தனி சமயப்பிரிவினால் நிறுவப்பட்டது என்பதை எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இவ்வாறு இந்து அறநிலைய சமயத்துறையினராலேயே தனி சமயப்பிரிவு கோயில் என்று ஒப்புக் கொண்ட பிறகு தற்போது ஸ்ரீ சபாநாயகர் கோயிலில் மீண்டும் மீண்டும் இந்து அறநிலைய துறை சட்டப்படி ஆய்வு நடத்த வழியுள்ளது என்று கூறுவது சட்டப்படி தவறானது. இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள நிர்வாக சீர்கேடு மற்றும் நிதிமுறைகேடுகளை முதலில் சரி செய்த பிறகு தான் நடராஜர் கோயில் நிர்வாகத்தை பற்றி கேள்வி கேட்கும் தார்மீக உரிமை இந்து அறநிலையத்துறைக்கு ஏற்படும். 2005-ல் நடைபெற்ற நகை சரிபார்ப்பு அறிக்கை தற்போது நடந்த ஆய்வின் போது பொது தீக்ஷிதர்கள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில் தான் 17 வருடம் கழித்து சரிபார்ப்பு அறிக்கையை இந்து அறநிலையத் துறை அளித்துள்ளது.
17 வருட காலதாமதம் பற்றி எந்தவித விளக்கமும் இல்லை. 17 வருடம் கழித்து அளிக்கப்படும் அறிக்கை நம்பகத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. கோவில் நிலங்கள் தனி வட்டாட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளதற்கு ஆய்வு நடத்தியதற்கு எந்தவித தகவலும் பொது தீட்சிதர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கோயில் நிலங்களின் குத்தகை வசூல் செய்வதில் உள்ள குறைபாடுகள் பற்றியும் இந்து அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை பற்றியும் பொது தீட்சிதர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஆனி மாத உற்சவம் நடைபெறுவதால் பொது தீட்சிதர்கள் உற்சவ நடவடிக்கைகளில் முழுவதுமாக தங்களை அர்பணித்துள்ளதால், சரிபார்ப்பு அறிக்கை பற்றிய கருத்து தெரிவிக்க கால அவகாசமும் பொது தீட்சிதர்கள் சார்பில் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- திட்டக்குடி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .
கடலூர்:
திட்டக்குடி அருகே பட்டூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். அவரது மனைவி சத்தியா (வயது 25). திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் முகாசபரூரில் உள்ள ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலாளராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவரது மாமியார் மணிமேகலை என்பவர் சத்தியாவிடம் சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த சத்தியா நேற்று மாலை 6 மணி அளவில் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவினங்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .
- விருத்தாசலம் அருகே ஏரியில் தீ பற்றி எரிந்ததால் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
- நேற்று இரவு திடீரென, மர்மமான முறையில் ஏரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
கடலூர்:
விருத்தாசலத்தை அடுத்து மங்கலம்பேட்டைஅருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி முழுவதும் நிறைய கருவேல மரங்கள், விழல்கள் மற்றும் செடி, கொடிகளும் அடர்ந்து, வளர்ந்துக் கிடக்கிறது. நேற்று இரவு திடீரென, மர்மமான முறையில் ஏரியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த தீயானது கட்டுக் கடங்காமல் மள, மளவென பரவியது. கிராமப் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை போலீசாரும், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையில், தீயணைப்பு படை வீரர்கள் ஸ்ரீ ரங்கன், கனகராஜ், செல்வம், மற்றும் ஓட்டுநர் அசோக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, தீயை அணைத்தனர். ஏரியின் மொத்த பரப்பளவான சுமார் 40 ஏக்கரில், சுமார் 10 ஏக்கர் அளவுக்கு தீயில் கருகி நாசமானது.
- மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி ஆகினர்.
- புதுப்பேட்டை அருகே கோணப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரது மகன் சதீஷ் (வயது24) பெயிண் டர். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்தபெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பெண் வீட்டில் விருந்து முடித்துவிட்டு தன் வீட்டிற்கு செல்ல மோட்டார் சைக்கிளில் நேற்று வந்து கொண்டுஇருந்தார்.புதுப்பேட்டை அருகே கோணப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஆட்டோமோதியது. இந்த விபத்தில்புதுமாப்பிள்ளை சதீஷ் ஆட்டோவில் வந்த புஷ்பா (45) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
ஆட்டோவில் வந்த, பண்ருட்டி அருகே கட்டியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (38), சின்னப்பொன்னு (55), சிவகாமி (34), பரிமலா(27), நிஷாந்தி (28), மலர் கொடி(49), செண்பகம் (36), ஆட்டோ டிரைவர்அரிதாஸ் (24) ஆகிய 8 பே ர்காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- கடலூரில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவிகள் திடீர் மாயமானார்கள்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் குட்டைகார தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 35). இவரது மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வீட்டில் இருந்து வந்தார். இந்த பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதன் காரணமாக பூமாது மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் 12 -ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் வாங்கி வருவதாக வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் உறவினர் 12- ம் வகுப்பு மாணவி 2 பேரும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாணவிகளை தேடி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூரில் அனைத்துக் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க கோரி நடைபெற்றது.
கடலூர்:
அனைத்துக்கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் காரைக்கால், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மற்றும் கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் உழவன், ராமேஸ்வரம், திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில்கள், விழுப்புரம், மயிலாடுதுறை அனைத்து பாசஞ்சர் ெரயில்கள் மீண்டும் இயக்க வேண்டும்.
கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி காலை, மாலை ெரயில்கள் இயக்க வேண்டும். புதுவை, சென்னை ெரயிலுக்கு இணைப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போராட்டம் அறிவித்தவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என போராட்டம் செய்பவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று காலை கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப், தி.க மாவட்ட தலைவர் சிவக்குமார், குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், விடுதலை வேங்கைகள் மாநில செயலாளர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் பாலு, மாநகராட்சி கவுன்சிலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கந்து வட்டி கொடுமையால் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
- கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் தங்கள் மகளுடன் வந்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பையில் இருந்த மண்எண்ணையை எடுக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் விருத்தாசலம் அருகே உள்ள கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ராயப்பன் (வயது 47) என்பதும் அவரது மனைவி வேளாங்கண்ணி (37), இவர்களது மகள் ஆரோக்கிய ஷாலினி (வயது 22) என்பதும், ஆரோக்கிய ஷாலினியின் கல்லூரி படிப்புக்காக ராயப்பன், அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கதிரவனிடம் கடந்த 2018 -ம் ஆண்டு ரூ.50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் கடந்த ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்த சென்ற போது, கதிரவன் தனக்கு வட்டியுடன் ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையெனில் பூர்வீக சொத்தை தனது பெயரில் கிரையம் செய்து கொடுக்கும்படி மிரட்டி வருகிறார். இது தொடர்பாக ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் மண்எண்ணை கேனுடன் வந்ததாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் இது தொடர்பாக மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் கலெக்டர் அலுவலகத்திற்கு தம்பதியினர் மண்எண்ணை கேனுடன் வந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இளம் பெண்ணை கடத்தி உல்லாசமாக இருந்த கிராம நிர்வாக அலுவலரை போலீசார் தேடிவருகிறார்கள்.
- பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் பேசிக் கொண்டிருந்தனர்.
கடலூர்:
கடலூர் சேடப்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக இளையராஜா பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய அலுவலகத்திற்கு பட்டா பெயர் மாறுதல் கேட்டு திருமணமான இளம்பெண் வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் பட்டா வாங்க வந்தபோது இளையராஜாவிற்கும் அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் இளம்பெண்ணை இளையராஜா படம் எடுத்து உள்ளார்.
அந்த படத்தை காட்டி தன்னிடம் உல்லாசமாக இருக்க இளையராஜா இளம்பெண்ணை மிரட்டி உள்ளார். ஆனால் இளம்பெண் இதற்கு ஒத்து வராத நிலையில் மகாபலிபுரம் உல்லாச விடுதிக்கு அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பலமுறை அவரை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடிய நிலையில் அவர் மகாபலிபுரம் விடுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையெடுத்து காவல் துறையில் புகார் அளித்து இளம்பெண்ணை மீட்டு வந்தனர். அந்த இளம்பெண் தன்னை இளையராஜா பலமுறை பலாத்காரம் செய்ததாக கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடிவருகின்றனர்.
- சரநாராயணபெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.
- மூலவர் சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்திலும், உற்சவர் கண்ணாடி அறையில் சர்வபூபாலஅலங்காரத்தில்எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது சரநாராயண பெருமாள் கோவிலில் ஆனி மாத அமாவாசை தினமான இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைமுன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் தன்வந்திரி அலங்காரத்திலும், உற்சவர் கண்ணாடி அறையில் சர்வபூபாலஅலங்காரத்தில்எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பட்டர் ராமன்பட்டாச்சாரியார் தலைமையில்விழாகுழுவினர்செய்து வருகின்றனர்.
- கடலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மீனவ மகளிர் பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
- பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பட்டா தொடர்பான 122 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 83 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 42 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், பள்ளி கல்வி துறை தொடர்பாக 38 மனுக்களும், இதர மனுக்கள் 124 ஆக மொத்தம் 456 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.
பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தின் வாயிலாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 40 சதவீத மானிய விலையில் மீனவர் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள 13 மீனவர் மீனவ மகளிர் பயனாளிகளுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனத்தினை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.
- கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் அரசுத்துறை தேர்வு பயிற்சி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர் நல்நூலகர் பாப்பாத்தி விழாவிற்கு தலைமை வகித்தார்
கடலூர்:
தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் குருப்-4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சியை கடலூர் மாவட்ட மைய நூலகமும், நூலக வாசகர் வட்டமும் இணைந்து தொடர்ந்து நடத்தி வருகிறது, இப்பயிற்சியில் அதிக மதிப்பெண்களை பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மைய நூலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகர்.நல்நூலகர் பாப்பாத்தி விழாவிற்கு தலைமை வகித்தார். பயிற்சியாளர்கள் மணிகண்டன், சசிகுமார், பிரபாகரன், வெங்கடசேன், கார்த்திகேயன் ஆகியோர் போட்டியாளர்களை தேர்வு சேய்தனர். ஓவியா முதல் இடத்தையும், சரண்யா 2-ம் இடத்தையும், சுபாஷினி 3-ம் இடத்தையும் பெற்றனர். மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அரிமா. பாஸ்கரன் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.கிராமப்பகுதிகளில் இருந்து ஏழை மாணவ மாணவியர்கள் பெருவாரியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட செயற்குழ உறுப்பினர் அருள்ஜோதி நன்றி கூறினார்.
- கடலூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
- முக்கிய சுற்றுலாத் தலங்கள் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலூர்:
நவம்பர் 26, 2008 மும்பையில் கடல் வழியாக ஊடுருவி வந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தினார்கள். அதன் பிறகு இந்தியாவின் கடல் எல்லைகளை தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் வேடமிட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக வந்து நகர்ப்புற பகுதிக்குள் ஊடுருவி வருவார்கள். அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து, மடக்கிப்பிடிக்க வேண்டும். இதுதான் பாதுகாப்பு ஒத்திகையின் சிறப்பு அம்சம்.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கி, 2 நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடக்கும். கடலூரில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 8 இன்ஸ்பெக்டர்கள், 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 500 காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் கடல் வழியாக தங்களது ரோந்து படகின் மூலம் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






