என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று எனது 3 வயது மகள் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது எங்களது வீட்டின் அருகே வசிக்கும் 16 வயது சிறுவன் எனது மகளை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அவர் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். எனது மகள் சத்தம் போடவே சிறுவன் அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

    பின்னர் எனது மகள் அழுதபடியே வீட்டிற்கு வந்தார். என்ன நடந்தது என்று கேட்ட போது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    எனவே எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    • வேலை செய்யும் இடத்தில் வைத்து தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்.
    • போலீசார் கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் நெகமம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் எனது ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயன் (வயது 45) என்பவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். வேலை செய்யும் இடத்தில் வைத்து அவர் எனது கை பிடித்து இழுத்தும், கட்டி பிடித்து முத்தம் கொடுத்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இது குறித்து நான் கட்டிட உரிமையாளரிடம் தெரிவித்தேன். அவர் விஜயனை கண்டித்து அனுப்பினார்.

    சம்பவத்தன்று நான் சம்பள பணம் வாங்குவதற்காக விஜயனின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த நான் சத்தம் போட்டேன். அப்போது நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டினார். எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கட்டிட தொழிலாளி விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் வேலை செய்யும் இடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஊராட்சி மன்ற தலைவர் தங்களை மதிப்பதில்லை எனவும் ஊராட்சி மன்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்தியதால் போராட்டத்தை கைவிட்டனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே செலக்கரச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர்.

    ஊராட்சி மன்றத்தில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று காலை திடீரென தி.மு.க.வைச் சேர்ந்த 5 வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் பஷீர் அகமது தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சு வார்த்தை நீண்ட நேரம் நடைபெற்றதால் அப்பகுதியில் சம்பந்தப்பட்ட தி.மு.க. உறுப்பினர்களின் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பாக திரண்டனர். அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் தங்களது வார்டுகளில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

    அப்பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால் கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சூலூர் போலீசார் மற்றும் சுல்தான்பேட்டை போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க சிறப்பு காவல் படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் மரகதவடிவு கருப்புசாமி தங்களை மதிப்பதில்லை எனவும் ஊராட்சி மன்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.இது பற்றி ஊராட்சி மன்ற தலைவர் மரகதவடிவு கருப்புசாமி கூறுகையில் ஊராட்சி மன்ற பணிகளுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்கள் யாரும் தங்களது அலைபேசியை எடுப்பதில்லை மேலும் எவ்வித கூட்டத்திற்கும் வருவது கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு பொதுமக்களின் நலன் மீது அக்கறை இல்லை என தெரிவித்தார்.

    அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இனி வரும் நாட்களில் மூலம் அனைவருக்கும் தகவல் பரிமாறப்படும். ஊராட்சி பணிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பேசி சமாதானப்படுத்தினர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    • குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்

    கோவை,

    கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசியா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதனையடுத்து அவரது உறவினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சாய்பாபா காலனியில் இருந்து ஆம்புலன்சு புறப்பட்டு சென்றது. ஆம்புலன்சில் மருத்துவ நிபுணர் தமிழழகன், டிரைவர் சக்திகுமார் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் அனுசியாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே தெரிந்தது.

    உடனடியாக அனுசியா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து ஆம்புலன்சு ஊழியர்கள் தாயையும், குழந்தையையும் சிகிச்சைக்காக துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    அவசரம் கருதி ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்க நடவடிக்கை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் தமிழழகன், டிரைவர் சத்திகுமார் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • கணவன் மனைவி இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஓரைக்கால்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்தசாமி (வயது 28). இவரது மனைவி சந்தியா (25). 2 பேரும் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஓரைக்கால்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சந்தியா தனது கணவரை மாதம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வரலாம் என அழைத்தார். அதற்கு அரவிந்தசாமி தற்போது கையில் பணம் இல்லை. எனவே பிறகு போகலாம் என கூறினார்.

    அப்போது சந்தியா தனது கணவரிடம் இப்போதே வரவில்லை என்றால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை மிரட்டினார். உடனடியாக அரவிந்தசாமி நீ மட்டும் தான் விஷம் குடிப்பாயா, நானும் குடிக்கிறேன் என கூறி அங்கு இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதனை பார்த்த சந்தியா தனது கணவரிடம் இருந்து விஷத்தை வாங்கி அவரும் குடித்தார்.

    சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கினர். கணவன்-மனைவி இருவரும் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அரவிந்தசாமி, சந்தியா ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மலையேறியவர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை சேகரித்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
    • அடுத்து வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து தூண்மைப்பணி நடைபெற உள்ளது.

    கோவை:

    கோவையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை வரலாற்று சிறப்பும் ஆன்மீக முக்கியத்துவமும் வாய்ந்தது. சிவனே வந்து அமர்ந்து சென்றதால் இம்மலை 'தென் கயிலாயம்' எனவும் அழைக்கப்படுகிறது. சவால் மிகுந்த இம்மலையில் மலையேற்றம் செய்வதற்கு கோடை காலத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மலையேறுவது வழக்கம். அவர்கள் விழிப்புணர்வு இன்றி விட்டு சென்ற குப்பைகளை சேகரிக்கும் பணியை தென் கயிலாய பக்தி பேரவை கடந்த 10 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, இந்தாண்டிற்கான தூய்மைப் பணி நேற்று (மே 7) தொடங்கியது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 'சிவாங்கா' பக்தர்களும், ஐ.என்.எஸ் அக்ரானி பயிற்சி மையத்திற்கு வருகை தந்துள்ள இந்திய கடற்படை அதிகாரிகளும் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர். மலையேறியவர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளிட்ட குப்பைகளை அவர்கள் சேகரித்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

    இந்த தூய்மைப் பணியானது, வனத் துறையின் ஒத்துழைப்புடன் மே 14, 21, 28 மற்றும் ஜூன் 4 என அடுத்து வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்தப் புனித பணியில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள் 83000 15111 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
    • நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றார்

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று நடந்தது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்களை நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி திடீரென தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற அவர் மீது தண்ணீர் ஊற்றினர். விசாரணையில் அவர், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் ரோட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ் (வயது53) என்பது தெரியவந்தது.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனக்கு சொந்தமான 1 அரை சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே போலீசார் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும்
    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இந்த ஒத்திகை நிகழ்வை பார்வையிட்டார்

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் பயன்பாட்டிற்கு என தனியார் நிறுவன பங்களிப்புடன் டிரோன்கள் வாங்கப்பட்டது. கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர்புகை குண்டு வீசி கலைக்க இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ஒத்திகை நிகழ்வானது இன்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் கலவரக்காரர்கள் போல ஒன்று கூடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர், டிரோன் மூலம் அந்த இடத்திற்கு சென்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்வை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிறுபவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த டிரோன்கள் மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு சென்று கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், 2 நிமிடத்தில் மாற்றுக் கண்ணீர் புகை குண்டுகளை பொருத்திக் கொள்ள முடியும். மேலும் இந்த ட்ரோன்களில் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும். ஓடிச் செல்பவர்களையும் டிரோன் மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை எடுக்க முடியும். தமிழகத்தில் போலீஸ் துறையில் டிரோன்கள் பயன்படுத்தவது கோவையில் தான் முதல் முறை இவ்வாறு அவர் கூறினார்.

    • பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண்ணுக்கு கடந்த 1 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது கணவர் விவசாய தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணமான 1 மாதத்தில் மாயமான இளமபெண்ணை தேடி வருகிறார்கள். 

    • ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்
    • இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த ஊதியம் வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்யகோரியும் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300க்கும் மேற்பட்டோர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு அரசாங்கம் கூறிய ரூ.721 ஊதியம் வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் ரூ.721 வழங்க அறிவுறுத்தியதையடுத்து போராட்டங்களை கைவிட்டனர்.

    ஆனால் மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. எனவே ஊதியத்தை தங்கள் நிறுவனம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், இன்று கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளனர்.

    • ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்
    • ஜூன் முதல் வாரத்தில் குடிநீர் திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்

     கோவை,

    கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை இன்று நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் சாலையில் ரூ.40.67 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள் அமைத்தல் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்டப் பணிகள் தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் சாலையில் தேங்கும் மணல் குப்பைகளை அகற்ற செய்யும் 2 வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 105 எண்ணிக்கையிலான இலகு ரக வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

    மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 100 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டு ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள காசோலை வழங்கப்பட்டது. இதேபோல வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் போன்ற பகுதிகளுக்கு ரூ. 860.80 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டப்பட்டது. வெள்ளலூர் பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திறந்து வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு பேசுகையில் கோவையை சுத்தம் செய்ய நிறைய வாகனங்கள் வந்துள்ளது. கோவையில் குடிநீர் பிரச்சினை நாடு அறிந்தது. சிறுவாணி தண்ணீர் தேக்கம் குறைவாக உள்ளதால் தண்ணீர் தர முடியவில்லை. பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் விரைவில் முடிந்து விடும்.

    ஜூன் முதல் வாரத்தில் குடிநீர் திட்டத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

    கரூரை விட கோவைக்கு தான் அதிகம் செய்ய வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் கேட்கிறார். 15 மாதத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு தந்துள்ளார். ஆகவே அவர் கேட்கும் பணியை கோவையில் நாங்கள் செய்வோம் என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறுகையில் சிறுவாணி அணையில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தக் கோரி முதல் -அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கேரளா அரசுக்கு நாங்களும் இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடம் சொல்லியுள்ளோம். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீர்வழித்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கையும் எடுத்து வருகிறார் என கூறினார்.

    விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் சாலைகள் 2 ஆண்டுகளில் பழுதடைந்தது போல வீடியோ வெளியிடப்படுகிறது. கடந்த காலங்களில் போடப்படாத சாலைகளை போட வேண்டும் என்பது கோரிக்கை. தற்போது 2 ஆண்டுகளில் மக்கள் பணிகளை செய்து முடித்தவர் முதல்- அமைச்சர். விடுபட்ட பணிகள் ரூ. 860 கோடி நிதி கொடுத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. நாகராஜன் உள்பட கலந்து கொண்டனர்

    • தோட்டத்திற்கு சென்று திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • மேட்டுப்பாளையத்திலும் இதே போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள கரையாம்பா ளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 43). தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்பட 15 பவுன் தங்க நகைகள், ரூ.77,500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இரவு வீட்டிற்கு திரும்பிய சரவணகுமார் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் பேராசிரியர் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.77,500 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம் கொண்டையூர் அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் முகமது அலி (43). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துகொண்டு திருப்பூருக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 1 பவுன் கம்மல், ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×