என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஆன்லைன் டிரேடிங் டாஸ்க் மூலமாக கோபாலகிருஷ்ணனுக்கு ரூ.150 லாபம் கிடைத்தது.
    • கோபாலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் கம்பம் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது23). இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது.

    அதில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் அந்த ஆன்லைன் இணைப்பில் சென்று விவரங்களை பெற்றார். பின்னர் ஆன்லைன் டிரேடிங் டாஸ்க் மூலமாக ரூ.150 லாபம் கிடைத்தது. தொடர்ந்து இவர் அந்த லிங் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் அனுப்பி முதலீடு செய்தார். இந்தநிலையில் அதிக லாபம் வரும் என கருதிய அவர் ரூ.10.30 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் அனுப்பி வைத்தார்.

    ஆனால் ஆன்லைன் முதலீட்டில் எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை. இது குறித்து கோபாலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.17.85 லட்சம் பணத்தை கொடுத்தார்.
    • ரவிச்சந்திரன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விருதாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது56). இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகர் பகுதியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தை அணுகி வேலைவாய்ப்பு கேட்டு வந்தார்.

    அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஜோஸ்வா (34) என்பவர் கனடா உள்பட பல்வேறு நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கூறினார்.

    பணம் கொடுத்தால் வெளிநாடு அனுப்பி பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வைத்து விடுவோம் என ரவிச்சந்திரனிடம் ஆசை வார்த்தை கூறினார்.இதனை உண்மை என நம்பிய ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக ரூ.17.85 லட்சம் பணத்தை கொடுத்தார்.

    பணத்தை வாங்கிய ஜோஸ்வா வேலை வாங்கி தருவதாக காலத்தை கடத்தி வந்தார். இதையடுத்து ரவிச்சந்திரன் பலமுறை கேட்டும் பணத்தை திரும்ப கொடுக்காமல் அலைக்கழித்து மறுத்து விட்டார். இது குறித்து ரவிச்சந்திரன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கீர்த்தி இரவு 8 மணி அளவில் 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.
    • கீர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலகோபாலபுரத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 27). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது கடைக்கு சுப்பேகவுண்டன் புதூரை சேர்ந்த கீர்த்தி (19) என்ற இளம்பெண் வேலைக்கு சேர்ந்தார். இரவு 8 மணி அளவில் அவர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் தங்க நகைகளை திருடி தப்பிச் சென்றார்.

    இது குறித்து ஆகாஷ் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து கீர்த்தியை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் மூலம் வங்கியில் திருடிய நகையை அடகு வைத்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பணம் பெற்றதாக கூறினார்.

    போலீசார் அவரிடம் இருந்து பணத்தை பெற்று நகையை மீட்டு ஆகாஷிடம் ஒப்படைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட கீர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.
    • ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.

    கோவை,

    அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமையில் தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு கரும்பு, நெல் முழுமையாக கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காயையும் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.

    ஒரு ஏக்கருக்கு 1164 கிலோவாக மாற்றி கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்குகள் கிடைக்காமல் இருப்பதை சரி செய்ய வேண்டும். கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.

    கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைகளை காலியாக உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களான பெதப்பம்பட்டி, அவினாசி, சேவூர், வடக்கிப்பாளையம் ஆகிய கிடங்கில் வைக்க வழிவகை செய்து கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும்.

    கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய் முழுவதையும் எண்ணையாக மாற்றி ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.

    பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திற்கும் போதுமான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அம்பராம்பாளையம் கூட்டுகுடிநீர் திட்டம் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பணிகள் முடிந்த பின்னரும் கிராமங்களுக்கு மோசமான குடிநீர் செல்கிறது. எனவே குடிநீர் விநியோகத்தை சரி செய்ய வேண்டும்.

    பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அரசு டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் பார்களில் நடைபெறும் சில்லிங் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த மனுவில் கூறியிருந்தார்.

    • சிறுமி தனது தாயிடம் சண்டை போட்டு விட்டு வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார்.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சுகந்தி (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரிடம் அவரது தாய் டீ வைத்து கொடுக்கும் படி கேட்டார்.

    அதற்கு சுகந்தி கோபித்துக்கொண்டு டீ வைத்து கொடுத்தார். தனது தாயிடம் சண்டை போட்டு விட்டு வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள ஓம்சக்தி பங்காரு அடிகளார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு வரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து சுகந்தியின் உடலை மீட்டனர்.

    இதனை தொடந்து போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அம்பேத்கர் திருமண மண்டபத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் சுயஉதவிக்குழு மற்றும் தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினசரி சேகரிப்படும் குப்பைகளை தரம்பிரித்து எடுக்க நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதன்படி நகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுயஉதவி குழுக்கள் மூலம் தற்காலி பணியாளர்கள் 137 பேர் என மொத்தம் 175 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் காரமடை நகராட்சி பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நகராட்சிக்காக எடுக்கப்பட்டனர். தற்போது நகராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு நகராட்சி மூலம் ஒப்பந்தம் விடப்பட்டது.

    இதன்படி காரமடை நகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தினசரி நகர பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு செல்லும் முன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் மூலம் வருகை பதிவேடு எடுப்பது வழக்கம். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் வருகை பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அச்சமடைந்த தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்ததாரர் வேறு தூய்மை பணியாளர்களை எடுத்து விட்டார்களா? என்ற அச்சத்தில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் குப்பைக்கிடங்கு அருகிலுள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஜனநாயக மாதர்சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்

    இக்கூட்டத்தில் தனியார் ஒப்பந்ததாரரின் கீழ் சுயஉதவிக்குழு மற்றும் தங்களுக்கு கூலியாக ரூ.606 வழங்க வேண்டும். ஆள்குறைப்பு செய்ய கூடாது. ஏற்கனவே பணியில் உள்ள தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய கூடாது. நகராட்சி ஆணையர் முன்னிலையில் மட்டுமே தனியார் ஒப்பந்ததாரர்கள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    தவறும் பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யூ மாவட்ட பொதுச்செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட தலைவர் ராஜாக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போதுவை என்ற இடத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு மகனும், 3 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் கணவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருநங்கை ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிற்கு வராமல் திருநங்கையுடன் வசித்து வந்தார். இது குறித்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் நாகராஜை அழைத்து அறிவுரை வழங்கி அவரது மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னரும் இளம்பெண்ணின் கணவர் திருநங்கையுடனான பழக்கத்தை கைவிட வில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 3 மாத பெண் குழந்தையுடன் மாயமானார்.

    அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கிடைக்க வில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து இளம் பெண்ணின் பெற்றோர் 3 மாத கைக்குழந்தையுடன் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • இளம்ெபண்ணின் கணவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் டிரைவர் ஜெயபாலை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவி நகரை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை 6 மணியளவில் இளம்பெண் தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது மேல் வீட்டில் வசித்து வரும் டிரைவர் ஜெயபால் (வயது 47) என்பவர் மறைந்து இருந்து ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். உடனடியாக ஜெயபால் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து இளம்பெண் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த டிரைவர் ஜெயபாலுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கிறார்கள்.

    • தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
    • மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.

    கோவை:

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 25). இவர் கோவையில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 29-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தபோது அவினாசிசாலை, தொட்டிபாளையம் பிரிவு அருகே விபத்து ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடைந்த சீனிவாசனுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த 9-ந் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இதையறிந்த சீனிவாசனின் பெற்றோர் இளமுருகன், கனகவல்லி ஆகியோர் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த சீனிவாசனின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல் மற்றும் எலும்பு ஆகியவை தானமாக பெறப்பட்டன.

    இதில் கல்லீரல், ஒரு சிறுநீரகம், இதயம், ஒரு சிறுநீரகம், தோல் மற்றும் எலும்பு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், நுரையீரல் சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதன் முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வெள்ளியங்கிரி மலையேற மார்ச், ஏப்ரல் மாதங்களில் வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.
    • மலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது பக்தர்களின் கடமை ஆகும்.

    கோவை அருகே பூண்டி வெள்ளியங்கிரியில் 7-வது மலை உச்சியில் சிவலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மலை ஏறி செல்கிறார்கள். எனவே மலைப்பகுதியில் ஒருமுறை பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்வது தடை செய்யப்பட்டு உள்ளது.

    வெள்ளியங்கிரி மலையேற மார்ச், ஏப்ரல் மாதங்களில் வனத் துறையினர் அனுமதி அளிக்கின்றனர். மேலும் சித்ரா பவுர்ணமி யையொட்டி மே 31-ந்தேதி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக் கப்படுகிறார்கள். வெள்ளியங்கிரி மலையேற தமிழ்நாடு மட்டு மின்றி மற்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்.வெள்ளியங்கிரியில் 6-வது மலையில் ஆண்டி சுனை ஓடை உள்ளது. மலையேறும் பக்தர்கள் அந்த சுனையில் வரும் குளிர்ச்சி யான நீரில் குளித்து விட்டு தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க செல்கிறார்கள். சுனையில் குளிக்கும் சிலர் தங்கள் ஆடைகளை அங்கேயே போட்டுவிட்டு செல்கிறார்கள்.

    இதனால் மலையில் பல இடங்களில் ஆடை மற்றும் துணிகள் கிடக்கிறது. இதனால் மலையில் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு ஆடைகளை போட கூடாது என்று தகவல் பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதை பலரும் கண்டு கொள்ளாத நிலையே உள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறும்போது, ஓடை யில் துணிகளை போடக்கூடாது. ஆனாலும் சிலர் துணிகளை போட்டு செல்கிறார்கள். அதை தடுக்க வேண்டும் என்றனர்.

    ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு நிர்வாகி காளிதாஸ் கூறும்போது, வெள்ளியங்கிரி மலைப்பகுதியை சூழலியல் வனப்பகுதியாக அறிவிக்க முன்மொழிவு நீண்டநாளாக நிலுவையில் உள்ளது. மலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது பக்தர்களின் கடமை ஆகும். இயற்கைக்கு எதிரானது, கடவுளுக்கு எதிரானது என்பதை பக்தர்கள் உணர வேண்டும் என்றார்.

    • ஒரிஜினல் நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
    • இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் விசு (வயது22). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவரிடம் கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி (65) மற்றும் அவரது மகன் விவேக் (35), ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளோம்.

    அதனை மீட்க பணம் வேண்டும் என கேட்டனர். சம்பவத்தன்று வங்கிக்கு சென்ற விசு அவர்களின் நகையை ரூ.68 ஆயிரம் கொடுத்து மீட்டு கொடுத்தார். பின்னர் தந்தை, மகன் இருவரும் நகைகளை மீண்டும் விசுவிடம் கொடுத்து விட்டு ரூ.58 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து விசு அவர்கள் கொடுத்த நகையை வங்கியில் அடகு வைக்க சென்றார். அப்போது அவர்கள் கொடுத்தது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு என்பது தெரியவந்தது. ஒரிஜினல் நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது.
    • இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சுமார் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது. மேலும் எஸ்.பி.கே. நகர், அருண் நகர், எம்.ஜி.ஆர் நகர், ராகவேந்திரா நகர், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பகுதியில் மரம் விழுந்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் மருதமலை சாலையில் உள்ள தனியார் தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட தகரம் சாய்ந்தது.

    இதனால் வடவள்ளி சுற்றுவட்டார பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேபோல வானங்கள் செல்ல வழி இல்லாமல் தவித்தனர். இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×