என் மலர்
கோயம்புத்தூர்
- பயிற்சிகள் மூலம் பலன்கள் கிடைக்கப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
- சத்குரு வழங்கும் தனிமனித மேம்பாட்டு நிகழ்ச்சிகள் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
கோவை:
கோவையை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வகையில் ஈஷா சார்பில் உப யோகா மற்றும் ஈஷா கிரியா வகுப்புகள் நடத்தப்பட்டன.
தொழில் உலகில் சக்தி வாய்ந்த பின்புலம் உடைய BNI அமைப்பின் கோவை ரிதம் சேப்டர்-ஐ சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட இளம் தொழிலதிபர்கள் ஈஷா யோகா மையம் வந்து யோக பயிற்சிகளை கற்றுக்கொண்டனர்.
ஈஷா சார்பில் இரண்டு நாள் பயிற்சியாக உப யோகா, ஈஷா க்ரியா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆதியோகி திவ்யதரிசனம், தியானலிங்கத்தில் நாத ஆராதனை, லிங்கபைரவியில் அபிஷேகம், நாட்டு மாடுகளை பராமரிக்கும் மாட்டுமனை, உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
BNI என்பது உலகளவில் 75 நாடுகளில் 300,000 உறுப்பினர்களை உடைய உலகின் முன்னணி வணிக பரிந்துரை அமைப்பு. BNI உறுப்பினர்கள் பிராந்திய, தேசிய மற்றும் உலகளாவிய BNI ஊழியர்களால் தீவிரமாக ஆதரிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வணிகங்களை வளர்ப்பதற்கும், தங்களுடைய இலக்குகளையும் தாண்டி சாதிப்பதற்கும் தேவையான பயிற்சி, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள்.
இங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகள் மூலம் அவர்களின் உடல் மன நலம், திறன்மிக்க தொழிலதிபராக தேவையான தெளிவு, கூர்மை உள்ளிட்ட பலன்கள் கிடைக்கப் பெற்றதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
ஐங்கரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் அங்கு அய்யப்பன் அவர்கள் தனது அனுபவம் குறித்து பகிர்கையில், "எனக்கு எப்போதும் மன அழுத்தம், டென்ஷன் இருக்கும். இங்கு வந்து இன்று காலை யோகப்பயிற்சிகள் செய்த போது நிறைய மாற்றம் தெரிகிறது. தொடர்ந்து ஷாம்பவி தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை செய்துவந்தால் குடும்ப வாழ்க்கை, தொழில் என எல்லாவற்றிலும் திறம்பட இயங்க முடியும்" என்று பகிர்ந்துகொண்டார்.
பேபி வேர்ல்ட் உரிமையாளர் அமர் கூறுகையில், "இது மிகவும் வித்தியாசமான அனுபவம். இந்த பயிற்சிகளை தொடர்ந்தால், தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இங்கு பரிமாறப்பட்ட உணவுகளும் வித்தியாசமாகவும், சத்தானதாகவும் இருந்தது" என்றார்.
சத்குரு அவர்கள், அனைவரும் பின்பற்றும் வகையிலான எளிய யோகப்பயிற்சிகள் வழங்குவது மட்டுமல்லாமல், தொழிலதிபர்களும் திறன் மிகுந்தவர்களாக வளர அவர் வழங்கும் 'ஈஷா இன்சைட்' போன்ற தனிமனித மேம்பாட்டு நிகழ்ச்சிகளும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
ஒரு வெற்றிகரமான தொழில் புரியத் தேவையான தகுதி குறித்து அவர் சொல்கையில், "எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சிந்திப்பதை விடுத்து, நீங்கள் எதை உருவாக்க விரும்புகிறீர்கள் என்று பார்ப்பதாலும், நீங்கள் உருவாக்குவது உண்மையிலேயே பயனுள்ளது என்றால், பொருளாதார வளர்ச்சி என்பது அதுவாகவே நடக்கும்" என்கிறார்.
- 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
- தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.
கோவை,
கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன.
இந்தநிலையில், கோவை மாநகரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்கவும், பதற்றம் மிகுந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகமாக்கி ரோந்து பணியை மேற்கொள்ள 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் என 3 புதிய போலீஸ் போலீஸ் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பணியிடங்கள் குறித்த விவரங்களை டிஜிபி அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், உட்பட 25 பேர் போலீசார், கரும்பு கடை போலீஸ் நிலையத்தில் 2இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் மற்றும் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 11 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் என போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கரும்புக்கடை போலீஸ் நிலையம் ஆயிஷா மஹால் அருகேயும், கவுண்டம்பாளையத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த புதிய 3 போலீஸ் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளன.
இதனைத் தொடர்ந்து வருகிற 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.
- போலீசார் அபுதாஹீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
- ஜனவரி 1-ந்தேதி முதல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 314 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லெட்களை பதுக்கி வைத்து விற்பதாக ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடத்தை சேர்ந்த அபுதாகீர்(வயது45) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.43 ஆயிரம் மதிப்புள்ள 6.250 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட், ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள 77.700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அபுதாஹீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கையின் பேரில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 314 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சுமார் 483.301 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 177 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 1925.950 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- மர்ம நபர் பிரபல ஓட்டல் குறித்து சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்றார்.
- இது குறித்து விஜயகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் விஜயகுமார்(40). இவரது செல்போனுக்கு டெலிகிராம் மூலமாக ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர், லிங்க்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் பிரபல ஓட்டல் குறித்து சிறந்த முறையில் ரிவ்யூ கொடுத்தால் மிகப்பெரிய தொகை கிடைக்கும் எனவும், அதற்கு ஆன்லைனில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறி அதற்கான வழி–முறைகளை தெரிவித்தார்.
இதனையடுத்து அவருக்கு முதலில் 858 ரூபாய் கமிஷன் கிடைத்தது. பின்னர் அவர் ரூ.10,500 முதலீடு செய்தார்.
அதற்கு அவருக்கு கமிஷன் தொகையுடன் சேர்த்து ரூ.17,948-ம், 3-வதாக முதலீடு செய்த ரூ.38,686க்கு கமிஷனுடன் சேர்த்து ரூ.51,015 கிடைத்தது.
இதனை தொடர்ந்து சிறிது, சிறிதாக அவர் அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.7.24 லட்சம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை.
மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்கிற்கு வரவு வைக்க முடியவில்லை.
மர்ம நபர் அதிக கமிஷன் கிடைக்கும் என நம்ப வைத்து மொத்தம் ரூ. 7.24 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்து விட்டார். இது குறித்து விஜயகுமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
- பள்ளி வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் வட்டார போக்குவரத்து சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் நேஷனல் பள்ளி மைதானத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதற்கு மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் (பொறுப்பு) தலைமை வகித்தார். வட்டாட்சியர் சந்திரன், மேட்டுப்பா–ளையம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால் தமிழக அரசு தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தை–யும் ஆய்வு செய்ய கூறி அறிக்கை வெளியிட்டு–ள்ளது.
இதையடுத்து மேட்டு–ப்பாளையம் நேஷனல் பள்ளி மைதானத்தில் மேட்டுப்பா–ளையம் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 56 பள்ளிகளில் இயங்கி வரும் 393 பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வாகனங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள், தீயணைப்பு கருவிகள் அவசரகால வழி கதவுகள் சரியாக செயல்படுகிறதா, முதலுதவி பெட்டி உள்ளதா என ஆய்வு செய்தனர்.
மேலும் பள்ளி வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நகர் பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பள்ளி பஸ்களை இயக்க வேண்டும்.
மாணவர்கள் காலையில் வாகனத்தில் ஏறும் போதும் மாலையில் வாகனத்தில் இருந்து இறங்கும்போதும் சாலையை கடந்து பெற்றோரிடம் மாணவர்கள் செல்லும் வரையில் வாகன உதவியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.
- டிரைவர் கந்தசாமி உயிர் தப்புவதற்காக, மினி லாரியில் இருந்து கீழே குதித்தார்.
- சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
சிறுமுகை அருகே உள்ள பொகளூர் பகுதியைச்சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கந்தசாமி (வயது69). இவர் மினி லாரி வைத்து ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று மினி லாரியில் சென்றார். அப்போது பொகளூர் அருகே இவர் வாகனத்தை அசுர வேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது. இதனால் வாகனம் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. எனவே டிரைவர் கந்தசாமி உயிர் தப்புவதற்காக, மினி லாரியில் இருந்து கீழே குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதி படுகாயம் அடைந்தார்.
எனவே அவரை சிறுமுகை போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து டிரைவர் கந்தசாமி, மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கந்தசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும்.
- இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம்.
குனியமுத்தூர்,
உக்கடம் பஸ் நிலையம் அருகே எந்த நேரமும் பஸ்களும், கார்களும், மோட்டார் சைக்கிள்களும் சென்று கொண்டே இருக்கும்.
இதனால் அந்த பகுதியில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். அப்பகுதியை கடப்பதற்குள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போதும் போதும் என்றாகி விடும்.
இப்படி போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் சாலைகளில் வருபவர்கள், மாடுகளை பார்த்து பயந்து, கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்துக்களில் சிக்கி விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மாடுகளை வளர்ப்பவர்கள் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும். இது போன்று சாலையில் சுற்றி திரிய விடக்கூடாது. சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து கோவை மாநகராட்சியினர் பட்டியில் அடைக்க வேண்டும்.
மேலும் அந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த முடியும். ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் உக்கடம் பஸ் நிலையம் அருகே மாடுகள் சுற்றித் திரிவது மிகவும் கண்டனத்திற்குரியது.
இந்த நிலையானது தற்போது அல்ல காலகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தடுமாறி கீழே விழுவதை அன்றாடம் காண்கிறோம். எனவே கோவை மாநகராட்சி விரைந்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- குடிபோதையில் நின்ற வாலிபரை உதயபிரகாஷ் கண்டித்துள்ளார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் உதயபிரகாஷ்(24). டான்ஸ் மாஸ்டர்.
சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்ற வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தார். இதனை பார்த்த உதயபிரகாஷ் அந்த வாலிபரின் அருகே சென்று அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து உதயபிரகாஷை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த டான்ஸ் மாஸ்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டான்ஸ் மாஸ்டரை கத்தியால் குத்திய பத்திரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சவுந்தர்ராஜன் (23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- படுகாயம் அடைந்த கவுதமை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கவுதம் (வயது 21). கல்லூரி மாணவர்.
சம்பவத்தன்று இவர் தனது நண்பரான விஷ்ணு (21) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார்.மோட்டார் சைக்கிளை விஷ்ணு அதிவேகமாக ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை - அவினாசி ரோட்டில் சென்ற போது விஷ்ணு ரோட்டின் நடுவே இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றார்.
அப்போது பின்னால் அமர்ந்து இருந்த கவுதம் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே கவுதம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர் அருகே உள்ள புகலூரை சேர்ந்தவர் கந்தசாமி (69). டிரைவரான இவர் லாரியை ஓட்டிச் சென்று டிராக்டர் மீது மோதினார்.இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (40). சம்பவத்தன்று இவர் வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மொபட் பாபு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.
- விவசாயிகளுக்கு தென்னை பற்றிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்உழவர்துறை சார்பில், தென்னை பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு, உர மேலாண்மை ஆகியவை தொடர்பான கருத்தரங்கு, பொள்ளாச்சி மூலனூர் கிராமத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.
இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தென்னை நோய் வாடலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள். கையேடுகளும் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கருத்தரங்கில் பேசியதாவது:-
நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இனி வரும் காலங்களில் வேளாண் சார்ந்த தகவல்களுக்கு கியூ ஆர் கோடு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.இதன் வாயிலாக விவசாயிகள் எளிதில் விவசாயம் சார்ந்த தகவல்களை பெறலாம்.
மேலும் விவசாயிகளுக்கு தென்னை பற்றிய கையேடு வழங்கப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஏற்படும் தென்னை நோய் தாக்குதல் மற்றும் சத்து குறைபாடு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது குறித்து தென்னை ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியுள்ளனர்.
"கொங்கு மண்டலத்தில் கூலித்தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது. போதிய கொள்முதல் விலையும் கிடைக்கவில்லை. எனவே குறுகியகால சாகுபடியில் விலை கட்டுப்படி ஆகாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
தென்னை சாகுபடியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தென்னையில் ஏற்படும் பூச்சித்தாக்குதல் மற்றும் வாடல் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.
- இந்த எந்திரத்தில் மொத்தம் 300 பைகள் இருப்பு வைக்க முடியும்.
- ஒரிரு நாட்களில் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது
கோவை,
தமிழக அரசின் சார்பில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், பாலித்தீன் கவர்கள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் துணியால் தயாரிக்கப்பட்ட மஞ்சப்பை பயன்படுத்து வதை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரிரு நாட்களில் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் கூறும் போது, "பொது மக்களிடம் மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த எந்திரத்தில் மொத்தம் 300 பைகள் இருப்பு வைக்க முடியும். ஒரு பையின் விலை ரூ.10. எந்திரத்தில் ரூ.10 நாணயம் மற்றும் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளை செலுத்தி, தேவையான எண்ணிக்கையை குறிப் ிட்டு பையை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், இதில் மீதி சில்லரையை பெற முடியாது.
க்யூ ஆர் கோடு வசதியும் உள்ளது. ஜி-பே, பரிவர்த்தனைகள் மூலமும் ஸ்கேன் செய்து தொகையை செலுத்தி பையை பெற்றுக் கொள்ளலாம்" என்றனர்.
- அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
- அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி என்ற ரஞ்சித் (வயது 45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகமூடி அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தார். ஆனால் இது அவர்களுக்கு தெரியவில்லை.
அந்த நபர் வீட்டில் இருந்த சிறுமியின் சத்தம் வராதபடி வாயை பொத்தியபடி தூக்கி கொண்டு செல்ல முயன்றார். இதனை சிறுமியின் தாய் பார்த்து விட்டார்.
அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி விட்டு வெளியே நிறுத்தி இருந்த காரில் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிறுவன் தப்பி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் சிறுவன், காரை கல்லார் ரெயில்வே பாலம் அருகே நிறுத்தி விட்டு தப்பி விட்டார்.
இதையடுத்து போலீசார் காரை கைப்பற்றி, சிறுமியை கடத்த முயன்றது யார்? எதற்காக கடத்த முயன்றார் என விசாரணை மேற்கொண்டனர். முதலில் கைப்பற்றப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது என விசாரிக்க தொடங்கினர்.
விசாரணையில் அந்த கார் கோவையை சேர்ந்த அழகுமுத்து என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.
இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் அந்த காரை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தனுஷ் என்பவருக்கு கடந்த 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வாடகை பேசி ஒப்படைத்ததாக தெரிவித்தார்.
போலீசார் தனுஷை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் தனது சகோதரரான 17 வயது சிறுவன் நண்பர்களுடன் ஒரு திருமணத்துக்கு செல்வதற்கு கார் வேண்டும் என கேட்டதாகவும் அவர் தான் எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியை கடத்த முயன்ற சிறுவன் ரஞ்சித்தின் தங்கை மகன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறுமியை எதற்காக கடத்தினாய் என விசாரித்த போது, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்க பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக சிறுமியை கடத்தி பணம் கேட்க முடிவு செய்ததாக கூறினர்.
தொடர்ந்து போலீசார் சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






