என் மலர்
கோயம்புத்தூர்
- வால்பாறையில் இனி ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படும்.
- வால்பாறையில் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வால்பாறை
வால்பாறை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் ரூ.30.30 கோடி மதிப்பீட்டில் 4 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.13.55 கோடி மதிப்பீட்டில்முடிவுற்ற 7 பணிகளை தொடங்கி வைத்து, 111 பயனாளிகளுக்கு ரூ.39.11 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்டஉதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி, நகராட்சி ஆணையாளர் (பொ)வெங்கடாசலம், நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் கோழிக்கடை கணேசன் மற்றும் வால்பாறை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-
வால்பாறையில் கோடைவிழா பல ஆண்டுகளுக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தற்போது நடைபெறு கின்றது. அரசின் திட்டங்கள் மட்டுமல்லாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விழாக்க ளையும் நடத்தும் அரசாக திகழ்கின்றது. இனிமேல் வால்பாறை கோடைவிழா ஆண்டுதோறும் நடத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. தேர்தலில்கொ டுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை இந்த இரண்டு ஆண்டுகளிலே நிறைவேற்றி உள்ளது. வால்பாறை நகராட்சிக்கு
தேவையான வளர்ச்சி திட்டங்கள் உள்பட கோவை மாவட்டத்திற்கு அனைத்து வளர்ச்சித்திட்டங்களை வழங்கி சிறப்பித்துள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரூ.9000கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். மேலும், இல்லதரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சரால் தொடங்கப்பட உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி வால்பாறை பகுதியில் புறநகர்ப்பேருந்துகள் தான் அதிகமாக வருகின்றன. சாதாரண நகரபேருந்துகள் குறைவாகவே வருவதால்ந கரபேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்பது இப்பகுதியில் செயல்படுத்தமுடியாத சூழ்நிலை இருந்து வருகினறது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இப்பகுதி மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண்டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார்.
- இறந்து போனவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
சூலூர்:
சூலூர் அருகே குரும்பபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் 8 வருடங்களுக்கு முன்பு சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு, கோவை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றும், பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனால் அவர் தனது மனைவியை பிரிந்து அந்த பெண்ணுடன் வாழ தொடங்கி விட்டார். இது தொடர்பாக மணிகண்டன் மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாலும், அவர் மனைவியுடன் செல்லாமல், அந்த பெண்ணுடனேயே வாழ்ந்து வந்தார்.
கடந்த 27-ந் தேதி மணிகண்டனுக்கும், அவருடன் இந்த பெண்ணுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை எரியூட்டுவதற்காக சூலூர் மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே இறந்து போன மணிகண்டனுக்கு, திருச்சியை சேர்ந்த அகோரியான மணிகண்டன் என்பவர் நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மணிகண்டன் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்கிருந்து தனது சீடர்களுடன் புறப்பட்டு கோவை சூலூருக்கு வந்தார்.
பின்னர் மின் மயானத்திற்கு வந்த அவர், இறந்து போன உடலுக்கு மரியாதைகள் செலுத்தி பூஜை செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து இறந்த மணிகண்டன் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அகோரி அவரது உடல் மீது ஏறி அமர்ந்து தியானம் செய்தார்.இந்த பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்ததும் மணிகண்டன் உடல் எரியூட்டப்பட்டது. இறந்து போனவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரி பூஜை செய்த சம்பவம் இந்த பகுதி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
- ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்
- 31-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கோவை:
ஈஷாவில் வரும் மே 30-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். எனவே, அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்
இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம் வரும் மே 30-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மூடப்பட உள்ளது. 31-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
கோவை:
தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-
எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர்) மழை பற்றிய முன்னறிவு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் ஆகியவை ஆராய்ச்சி மேற்கொண்டன.
இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2023-ம் ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வேனில் வந்த 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
- இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
கோவை,
கர்நாடக மாநிலத்தில் இருந்து 20 பயணிகள் வேனில் மருதமலை, பேரூருக்கு சுற்றுலா வந்தனர். அப்போது கே. ஜி மில் சாலை அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஜீப் மீது மோதியது. இதில் வேனில் வந்த 14 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ஜீப்பில் வந்த மில் தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இந்த விபத்தினால் கோவை வடவள்ளி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
- திருமணத்தை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுடன் மகேந்திர பூபதி பழகினார்.
- மகேந்திர பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திர பூபதி (வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
ஆனால் திருமணத்தை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண்ணுடன் அவர் பழகினார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர்.
மகேந்திரபூபதி, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் சிறுமியை மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார்.
இந்த நிலையில் மகேந்திரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன விவரம் சிறுமிக்கு தெரியவந்தது. இதேபோல மகேந்திர பூபதியின் மனைவிக்கும், தனது கணவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து அவரது மனைவி, மகேந்திர பூபதியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகேந்திர பூபதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த குற்றத்துக்காக மகேந்திர பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாரிமுத்து குடிப்பதற்கு பணம் இல்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே குஞ்சிபாளையம் மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது49). கூலி தொழிலாளி. இவரது மகன் முருகானந்தம் (29). இந்நிலையில் முருகானந்தத்திற்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் அவர் மது குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அவரது தந்தையுடன் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டிற்கு குடிபோதையில் வந்த முருகானந்தம், அவரது தந்தையிடம் குடிப்பதற்கு பணம் தரும்படி கேட்டார். ஆனால் அவர் என்னிடம் இப்போது பணம் இல்லை என கூறி மறுத்து விட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து அவரது தந்தையை குத்தினார். இதில் காயம் அடைந்த அவர் வலியால் கத்தினார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதற்குள் முருகானந்தம் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து காயம் அடைந்த மாரிமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து அவர் பொள்ளாச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.
- குறுக்கு சாலையில் இருந்து வரும் வாகனங்கள், அதிவேகமாக டிபி சாலையில் திரும்புகிறது.
- குறுக்கு சாலை நோக்கி திரும்பும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை தடுக்க முடியும்.
குனியமுத்தூர்,
கோவையில் உள்ள பிரதான சாலைகளில் ஆர்.எஸ்.புரம் -டிபி ரோடு முக்கியமானது.
இது சுக்ரவார்பேட்டை மூன்று கம்பத்தில் தொடங்கி, டி.பி.ரோடு, கவ்லி பிரவுன் சாலை வரை நீண்டு செல்கிறது. இங்கு சீனிவாச ராகவன் வீதி, சுப்பிரமணியன் ரோடு, வெங்கடகிருஷ்ணன் ரோடு, அருணாச்சலம் ரோடு, ராமலிங்கம் ரோடு, ஆரோக்கியசாமி சாலை, சம்பந்தம் ரோடு, லோகமானிய வீதி, பொன்னுரங்கம் வீதி, வெங்கடசாமி ரோடு, பெரியசாமி ரோடு, பாசிய காரலூரோடு உள்பட எண்ணற்ற குறுக்கு சாலைகள் உள்ளன. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அப்போது குறுக்கு சாலையில் இருந்து வரும் வாகனங்கள், அதிவேகமாக டிபி சாலையில் திரும்புகிறது. அப்படி திரும்பும் போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது உரசக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் அங்கு தினமும் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. டிபி சாலையில் இருந்து குறுக்கு சாலை நோக்கி திரும்பும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்தால் விபத்துகளை தடுக்க முடியும்.
எனவே பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன்பாக, இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
- இந்த போட்டிகளில் 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.
கோவை,
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவிலான 56-வது ஆண்டுக்கான ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 20-வது ஆண்டுக்கான பெண்கள் சி.ஆர்.ஐ. கோப்பை கூட்டைப்பந்து போட்டிகள், கோவை நேரு ஸ்டேடியத்துக்கு அருகே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.
இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 ஆண்கள் அணியும், 8 பெண்கள் அணியும் கலந்து கொண்டன.
இதன் ஒருபகுதியாக ஆண்கள் பிரிவின் முதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சென்னை வருமானவரி அணியை எதிர்த்து, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் வருமானவரி அணி 78-57 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் கேரளா போலீஸ் அணியை எதிர்த்து, பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணி விளையாடியது. இதில் பேங்க் ஆப் பரோடா அணி 82-72 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவுக்கான முதல் போட்டியில் மும்பை மத்திய ரெயில்வே அணியை எதிர்த்து, கோவை மாவட்ட கடைப்பந்து அணி விளையாடியது. இதில் மத்திய ரெயில்வே அணி 83-48 எனற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
2-வது போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து, சென்னை தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரள மாநில மின்வாரிய அணி 75- 32 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
நாச்சிமுத்து கோப்பை ஆண்கள் பிரிவுக்கான முதல் போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் சென்னை வருமான வரி அணியும், திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணியும் மோதின.
இதில் கேரளா போலீஸ் அணி 66-55 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு போட்டிகள் நடந்தன.
- கோடை விழாவில் முத்தாய்ப்பாக, அங்கு உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி நடத்தப்பட்டது.
- தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வளர்ப்பு நாய் கண்காட்சி நடந்தது.
வால்பாறை,
ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் கோடை விழாக்களை நடத்துகிறது. அதன்படி நடப்பாண்டும் கோடை விழா கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வால்பாறையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வால்பாறை நகராட்சி ஆகியவை சார்பில் நேற்றுமுன்தினம் கோடைவிழா தொடங்கி நடக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாணவிகளின் பரதநாட்டியம், தப்பாட்டம், மேஜிக் ஷோ, இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோடை விழாவில் முத்தாய்ப்பாக, அங்கு உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக படகுசவாரி செய்தனர்.
அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள இயற்கை பேரழகு காட்சிகளை கண்குளிரகண்டு களித்தனர். அடுத்தபடியாக வால்பாறை நகராட்சி கால்பந்தாட்ட மைதானத்தில் பாராகிளைடிங் சாகசம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வானில் இருந்தபடி வால்பாறை மற்றும் ஊட்டியின் பேரழகை மெய்மறந்து ரசித்தனர். தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வளர்ப்பு நாய் கண்காட்சி நடந்தது.
இதில் வெளியூர்- உள்ளூரை சேர்ந்த பல்வேறு வகை நாய்கள் கலந்து கொண்டன. இது வெளியூர் சுற்றுலா பயணிகளைவெகுவாக கவர்ந்தது. வால்பாறையில் கோடைவிழா நேற்று தொடங்கிய நிலையில், மதிய நேரத்தில் திடீரென மழை பெய்தது. இதனால் அங்கு கலைநிகழ்ச்சிகள் தடைபட்டன. இருந்தபோதிலும் சுற்றுலா பயணிகள் உல்லாசமாக மழையில் நனைந்தபடி வால்பாறையில் காலாற நடந்து சென்று இயற்கை கண்காட்சிகளை நேரில் கண்டு ரசித்தனர். அப்போது அவர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து, நண்பர்களுக்கு அனுப்பி வைத்து மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கோடைக்கால விடுமுறை முடிந்து வருகிற 7-வது தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. எனவே தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்து ஊட்டி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு, அங்கு நடத்தப்படும் கோடைவிழா மற்றும் இயற்கை காட்சிகளை மெய்மறந்து கண்டுகளித்து ரசித்து வருகின்றனர்.
- முதல் நிலை தேர்வு எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
- அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது.
கோவை,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டு தோறும் குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
அதன்படி இந்த ஆண்டு 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல் நிலை தேர்வு எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் இன்று நடந்தது.
கோவை மாவட்டத்தில் 7,742 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 18 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் முதல் தாள் பொது அறிவு தேர்வு நடந்தது. மதியம் 2-ம் தாள் திறனறிவு தேர்வு நடக்கிறது.
தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். நேரம் கடந்து வந்தவர்களை மைய கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர். இதனால் வெகுதொலைவில் இருந்து வந்த பலர் தேர்வு எழுத முடியாமல் போனது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரிகள் 18 தேர்வு மையங்களுக்கும் தலா ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தேர்வையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. தடையில்லா மின்சார வசதியும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வர்கள் மையங்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் பஸ்நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
- வடிவேல் அன்னூர் நாராயணபுரம் பகுதியில் தங்கி சிற்ப வேலை பார்த்து வந்தார்.
- போலீசார் 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள ஓட்டல் அருகே வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் பேரூர் இந்திரா நகரை சேர்ந்த வடிவேல் (வயது 42) என்பது தெரியவந்தது. இவர் கோவில் சிற்பியாக உள்ளார். அன்னூர் நாராயணபுரம் பகுதியில் தங்கி சிற்ப வேலை பார்த்து வந்தார். வடிவேல் எப்படி குரும்பபாளையம் வந்தார் என்று தெரியவில்லை.
எனவே போலீசார் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் சிற்பி வடிவேல் வேலை முடிந்து நண்பர்களுடன் பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அப்போது அவர் குரும்பபாளையத்தில் இறங்கி சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, பஸ்சில் இருந்து இறங்கி சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் குரும்பபாளையத்தில் வடிவேல் இறந்து கிடந்த ஓட்டலில் பணியாற்றிய வலியாம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 57), ராஜ்குமார் (21), பால்துரை (45), சந்தோஷ்குமார் (24) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் வடிவேலை அடித்துக் கொன்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். போலீசார் 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். போலீசாரிடம் கைதான 4 பேரும் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் குரும்பபாளையத்தில் ஓட்டல் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து நாங்கள் ஒன்றாக மது அருந்தினோம். அப்போது அங்கு ஒருவர் சுற்றுமுற்றும் பார்த்தபடி ஓட்டலுக்குள் புகுந்தார். எனவே நாங்கள் அவரிடம் நீங்கள் யார் என்று கேட்டோம். அதற்கு அவர் ஓட்டலில் சாப்பிட ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார்.
எங்களுக்கு அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே நீ திருடன் தானே என்று கேட்டோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை திருடன் என்பதா என கேட்டு எங்களுடன் வாக்குவாதம் செய்தார். நாங்கள் குடிபோதையில் இருந்ததால் அவரை சகட்டு மேனிக்கு தாக்கினோம். இதில் அவர் படுகாயங்களுடன் மயங்கி விழுந்தார்.
அதன்பிறகு அவரை வெளியே தூக்கி வீசி விட்டோம். ஓட்டலுக்கு வெளியே படுகாயத்துடன் கிடந்தவர் உயிருடன் இருப்பார் என்று கருதினோம். ஆனால் அவர் இறந்து போவார் என்று நினைக்கவில்லை. ஓட்டலுக்கு திருட வந்தவர் என்று நினைத்து உணர்ச்சி வேகத்தில் தாக்கி கொலை செய்து விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.






