என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மாணவி வழக்கம் போல பால் வாங்க சென்ற போது மீண்டும் விவசாயி தங்கவேலு பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • போலீசார் விவசாயி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே பீடம்பள்ளியை சேர்ந்தவர் 5 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவியின் தாய் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு அந்த பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல் (வயது58) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் குழந்தைகள் நல அலுவலர் ஏஞ்சலினா, மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் தங்கவேலுவின் வீட்டிற்கு மாணவி தினசரி பால் வாங்க செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி பால் வாங்க சென்ற போது விவசாயி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ஆனால் நடந்த சம்பவத்தை மாணவி யாரிடமும் சொல்லவில்லை.

    சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல பால் வாங்க சென்ற போது மீண்டும் விவசாயி தங்கவேலு பாலியல் தொல்லை கொடுத்தார். இதன் காரணமாக மாணவி வலியால் அலறி துடித்தார். மேலும் மாணவிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து மாணவியின் தாய் அவரிடம் விசாரித்த போது அவர் தனக்கு நேர்ந்தவற்றை தாயிடம் தெரிவித்தார்.அவர் குழந்தைகள் நல அலுவலர் ஏஞ்சலினாவிடம் தெரிவிக்க, அவர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.

    • 2022-23ல் பட்டம் முடித்த மாணவர்கள் சுமார் 80ஆயிரம் பேரும் பட்டம் பெறாமல் இருந்து வருகின்றனர்.
    • பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

    கோவை,

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2020-21 கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டது.

    அதன்பின் 2021-22-ம் கல்வியாண்டிற்கான பட்ட மளிப்பு விழா நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பட்டம் முடித்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    மாணவர்கள் பலர் வெளிநாடுகளில் உயர் கல்வியை தொடர முடியாமலும், பிற பல்கலைக்கழகத்தில் சேர முடியாமலும் வேலை வாய்ப்புகளில் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியாமலும் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதுதவிர 2022-23ல் பட்டம் முடித்த மாணவர்கள் சுமார் 80ஆயிரம் பேரும் பட்டம் பெறாமல் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. அதன்படி பல்கலைக்கழகம் சார்பில் வருகிற 24-ந் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 2021-2022 மற்றும் 2022-23 ஆகிய 2 கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கும், பட்டங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    • வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி காமாராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
    • வனகாப்பாளர் நாகராஜன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஏராளமான தானியங்கி காமாராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    மேட்டுப்பாளையம் வனச்சரகம் உலிக்கல் சுற்றில் வனக்காப்பாளராக பணியாற்றி வருபவர் நாகராஜன் (வயது37).

    சம்பவத்தன்று இவர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் வனப்பகுதியில் ரோந்து சென்றார்.

    அப்போது கல்லாறு புளியமரக்காடு உப்பு மண்குழி குன்னூர் ஆற்றுப்படுகையில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு காமிராக்கள் திருட்டு போயிருந்தது. இதனை மர்மநபர்கள் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து வனகாப்பாளர் நாகராஜன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பு பொருத்தப்பட்டு இருந்த 2 கண்காணிப்பு காமிராக்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • மறுநாள் காலையில் அழகர் ராஜாவை அவர்கள் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
    • அணிந்து இருந்த 7 பவுன் செயின், 4 பவுன் காப்பு, முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்தனர்.

    கோவை:

    கோவை காளப்பட்டி அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அழகர் ராஜா (வயது 37). தொழில் அதிபர்.

    இவர் பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக சித்ராவை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி நித்யா (36) என்பவருடன் சேர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அலுவலகம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அழகர் ராஜா, நித்யாவுக்கு ரூ.25 லட்சம் பணம் கொடுக்க வேண்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறால் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 1 மாதத்துக்கு முன்பு அழகர்ராஜா அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

    சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் பெரியநாயக்கன் பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். கார் விளாங்குறிச்சி 80 அடி ரோட்டில் சென்ற போது நித்யாவின் கணவர் குமாராசாமி உள்பட 3 பேர் காரில் வந்தனர்.

    அவர்கள் அழகர் ராஜாவின் காரை வழி மறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பேச வேண்டும் எங்களுடன் வாருங்கள் என அழைத்தனர். அவர் மறுக்கவே அந்த கும்பல், தாங்கள் வந்த காரில் அழகர் ராஜாவை கடத்தி சென்றனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் அவரை துடியலூர் இடையர்பாளையத்தில் உள்ள சண்முகம் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்கள் அழகர் ராஜாவை சிறை வைத்து தாக்கி மிரட்டி ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த 7 பவுன் செயின், 4 பவுன் காப்பு, முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்தனர்.

    பின்னர் ஒரு நாள் முழுவதும் அவரது வீட்டிலேயே சிறை வைத்தனர். மறுநாள் காலையில் அழகர் ராஜாவை அவர்கள் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

    அங்கு வைத்து அந்த கும்பல் குரும்பபாளையத்தில் உள்ள அழகர் ராஜாவுக்கு சொந்தமான 4 முக்கால் ஏ நிலத்தை மிரட்டி சண்முகம் என்பவரது பெயருக்கு கிரையம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் சொகுசு காரையும் விற்பனை செய்தது போல மிரட்டி கையெழுத்து வாங்கினர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது.

    அப்படி கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அழகர் ராஜாவை பீளமேட்டில் இறக்கி விட்டு சென்றனர்.

    இது குறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தொழில் அதிபரை காரில் கடத்தி சென்று சிறை வைத்து மிரட்டி நகை, சொத்து மற்றும் சொகுசு காரை அபகரித்த குமாரசாமி உள்பட 4 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டாஸ்மாக் சூப்பர் வைசர் முத்துபாலன் வீட்டிற்கு இன்று காலை 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
    • அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு 10 பேர் அதிவிரைவுபடை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.

    நெல்லையை சேர்ந்தவர் முத்துபாலன்(வயது40). இவர் கோவை டவுன்ஹாலில் டாஸ்மாக் சூப்பர் வைசராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவரது வீடு கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ளது.

    இந்த நிலையில் இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு 2 கார்களில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் உள்ளே நுழைந்ததும், வேறு யாரும் வீட்டிற்குள் நுழைய முடியாதபடி நுழைவாயில் மற்றும் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டனர்

    பின்னர் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று, அங்குலம் அங்குலமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின்போது அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.

    அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு 10 பேர் அதிவிரைவுபடை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வீட்டின் முன்பு யாரும் கூடிவிடாத வகையிலும், உள்ளே யாரும் நுழையாத வண்ணமும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    இதேபோல் கோவை ராமநாதபுரம் ஷியாம் நகரை சேர்ந்தவர் அருண். இவர் திருச்சி ரோடு ஹைவேஸ் காலனியில் அருண் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இன்று காலை இவரது அலுவலகத்துக்கு 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அலுவலகத்தின் வாயிலின் கதவை மூடி விட்டு சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையை முன்னிட்டு அங்கு மத்திய அதிவிரைவுபடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அருண் கரூரில் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடு ஒன்றை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    கோவையில் முதல் முறையாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது இங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சரோ தனராஜன் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
    • சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட CISCE (Counsil for Indian School Certificate Examinations) பள்ளிகளுக்கு இடையிலான 2013-ம் ஆண்டிற்கான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா ஹோம் ஸ்கூலில் சிறப்பாக நடைபெற்றன.

    இதில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டு போட்டிக்கான கொடியை ஏற்றி வைத்தார். செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சரோ தனராஜன் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

    ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 65 பள்ளிகள் மற்றும் 1,400 தடகள வீரர்கள் பங்கேற்றனர். வயதுகளின் அடிப்படையில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் லே மார்கரேட் ராஜீவ் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் பிரிவில் தன்வந்த் ராஜா, ஐயன் அமன்னா, பிரச்சனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

    ஜூனியர் பெண்கள் பிரிவில் நெல்சி செர்லின் மற்றும் சாதனா ரவி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் ருத்ரேஷ் பாலாஜி தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    சீனியர் பெண்கள் பிரிவில் சஞ்சனா, சக்தி ராஜாராம் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் சவன் எஸ் ரெஜினால்ட் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்த விளையாட்டு போட்டிகளின் தரத்தை உறுதி செய்யும் விதமாக, கோவை மாவட்ட தடகள சங்கத்தின் தொழில்நுட்ப குழு தலைவர் ஸ்ரீநிவாசன் மற்றும் துணைத் தலைவர் சிவகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக, போட்டியின் தொடக்க விழாவில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் களரிப் பயட்டு போட்டியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    • 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம்.
    • நான் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தேன்.

    கோவை:

    கோவை அருகே அன்னூரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் அன்னூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து கொண்டு இருந்தேன். அப்போது அதே கல்லூரியில் படித்த சேலத்தை சேர்ந்த 26 வயது வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது காதலை வளர்த்து வந்தோம். அப்போது நாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அந்த வாலிபர் அவரது செல்போன் எடுத்தார்.

    இந்த நிலையில் எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தேன்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நாங்கள் காதலிக்கும்போது நெருக்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் எனது தந்தை மற்றும் அண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.

    மேலும் நான் கொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும். இழப்பீடாக ரூ.4 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டுகிறார்.

    கடந்த 12-ந் தேதி இரவு எனது வீட்டு காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த வாலிபர் வீட்டில் உள்ள சுவரின் இதுதான் கடைசி எச்சரிக்கை என்று எழுதி விட்டு சென்றுள்ளார்.

    சம்பவத்தன்று எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அவர் எனது அண்ணனிடம் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் குடும்பத்தில் யாரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் என மிரட்டி விட்டு சென்றுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தார்
    • தேங்கி கிடந்த குப்பைக்கூளங்களை தானாகவே முன்வந்து அகற்றி சுத்தம் செய்தார்.

    வால்பாறை,

    வால்பாறை நகராட்சி துணை தலைராக செந்தில் குமார் பதவி வகித்து வருகிறார்.

    11வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் அங்கு குப்பைகள் அகற்றப்படவில்லை.

    இதுகுறித்து அவர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் செந்தில்குமார் இன்று 11வது வார்டு பகுதிக்கு வந்தார். அங்கு தேங்கி கிடந்த குப்பைக்கூளங்களை தானாகவே முன்வந்து அகற்றி சுத்தம் செய்தார்.

    வால்பாறை நகராட்சி துணைத்தலைவரே நேரடியாக களமிறங்கி குப்பைகளை அகற்றியது பொதுமக்களிடம் பாராட்டுதலை பெற்று உள்ளது

    • மல்லிகா பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
    • 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி மல்லிகா(வயது57). இவர் தேவாங்கபேட்டையில் உள்ள பள்ளியில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மல்லிகா வேலைக்கு செல்வதற்காக பஸ்சில் தேவாங்கபேட்டை சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் மல்லிகா கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் நாராயணசாமி.இவரது மனைவி பிரேமலதா(57). சம்பவத்தன்று இவர் அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பிரேமலதா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது.
    • மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

    கோவை,

    கோவை காந்திபுரத்தில் மாநகர பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உக்கடம், சிங்காநல்லூர், ரெயில் நிலையம், காந்தி பார்க், வடவள்ளி, மருதமலை, சுந்தராபுரம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் செல்கின்றன.

    இதனால் எப்போதுமே காந்திபுரம் மாநகர பஸ் நிலையம் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். பொதுமக்கள் வருவதும், போவதுமாகவே இருப்பார்கள்.

    இந்த பஸ் நிலையத்தில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது.

    புகாரின் பேரில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அவர்கள் அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்பட 25 கடைகளை அகற்றினர். இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    காந்திபுரம் மாநகர பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டது.

    தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நாளை ஆடிப்பெருக்கையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை உயர்ந்துள்ளது.
    • நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை,

    ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்ைட, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் இங்கு சென்று தான் பூக்கள் வாங்கி வருகின்றனர்.

    விஷேச நாட்களில் இங்கு பூக்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. நாளை ஆடிப்பெருக்கையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை உயர்ந்துள்ளது. நேற்று பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று ரூ.200 உயர்ந்து கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை பூ மார்க்கெ ட்டிற்ககு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூ விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சத்தியமங்கலம், காரமடையில் இருந்து முல்லைப் பூவும், ஓசூரில் இருந்து ரோஜா பூவும் விற்பனைக்கு வருகிறது. நேற்று 2 டன் அளவுக்கு பூக்கள் விற்பனை செய்யப்பட்டது.

    நாளை ஆடிப்பெருக்கு விழா என்பதால் இன்று மேலும் பூக்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்,

    பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-மல்லிகை - ரூ.800, முல்லை ரூ.480, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ. 320, ரோஜா 240, கோழி கொண்டை ரூ. 140, அரளி ரூ. 240, தாமரை ரூ.10 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • வேளாங்கண்ணி ஆலயம் அருகே முக கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர்.
    • போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை செல்வபுரம் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பேரூர் ரோடு அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அருகே முக கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர்.

    இதனை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    உடனடியாக போலீசார் 5 பேரில் 4 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அந்த கும்பல் முன் விரோதம் மற்றும் பணத்தகராறு காரணமாக கரும்புக்கடையை சேர்ந்த அஜ்மல் கான் என்பவரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வாலிபரை காரில் கடத்திச் செல்ல காத்திருந்த திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார்(வயது27), திருப்பூர் பாலப்பாளையத்தை சேர்ந்த வெல்டர் விவேக்(29), திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார்(28), திருப்பூர் குறிச்சி நகரை சேர்ந்த தென்பாண்டி(22) என்பது தெரியவந்தது .

    பின்னர் போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய சூர்யா என்பவரை தேடி வருகின்றனர்.

    ×