என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பரத் மீது சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அஜித், சூர்யா ஆகிய இருவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது
    • முக்கிய குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    வண்டலூர்:

    மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூரை சேர்ந்தவர் காளிதாஸ் (35). பா.ம.க. பிரமுகரான இவர் வன்னியர் சங்க செங்கல்பட்டு மத்திய மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த மாதம் 12-ந் தேதி மறைமலைநகரில் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக, இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகள் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரத் என்ற கரி பரத் (27) என்பவரை மறைமலைநகர் போலீசார் கைது செய்தனர். பரத் மீது சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த அஜித், சூர்யா ஆகிய இருவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • பள்ளி கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு நிலைய இயக்குனர் சுதிர் பி ஷெல்கே திறந்து வைத்தார்.
    • திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த காரணை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதை ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின், பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டக்குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    இதையடுத்து அணுமின் நிலையம் சார்பில் 63.25 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிட பணிகள் அனைத்து நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் பயன்பாட்டிற்கு நிலைய இயக்குனர் சுதிர் பி ஷெல்கே திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், ஒன்றிய கவுன்சிலர் வினோத், ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் தமிழரசி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார், தலைமை ஆசிரியை விஜயகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பா.ம.க. மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமை தாங்கினார்.
    • விழிப்புணர்வு பேரணி கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது.

    வண்டலூர்:

    புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 10 லட்சம் கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது.

    பா.ம.க. மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், பசுமை தாயகம் ஐநா கண்ணன், செந்தில்குமார், கூடுவாஞ்சேரி நகர செயலாளர் கணபதி, அண்ணாமலை, ஜெயக்குமார், காரணைபுதுச்சேரி டில்லி பாபு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தரமற்ற குழாய் பதிக்கப்பட்டதே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
    • கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய தொழிலாளர்கள் வருவதில்லை.

    செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33-வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். செங்கல்பட்டு நகர பகுதி முழுவதும் பயன்படுத்தும் வகையில் பழவேலி, இருகுன்றம்பள்ளி அருகே உள்ள பாலாற்று பகுதியில் கிணறுகள் அமைத்து அங்கிருந்து குழாய்களில் நகராட்சி மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக 1,5,6, 7,8,9,10 வார்டுகளில் பெரியநத்தம் பகுதியில் உள்ள களத்து மேடு, தூக்குமரகுட்டை, கைலாசநாதர் கோவில் தெரு, தட்டான் மலை தெரு, மற்றும் அனுமந்த பொத்தேறி, ராமபாளையம், சாஸ்திரி நகர் , பிள்ளையார் கோவில் தெரு மற்றும் மதுரை வீரன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 29,30 மற்றும் 31ஆகிய வார்டுகளில் 4 அல்லது 5நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் விடப்படாததால் எப்போது தண்ணீர் வரும் என்று பொதுமக்கள் தினமும் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. காலிகுடங்களை குடிநீர் குழாய் உள்ள இடங்களில் வரிசையாக அடுக்கி வைத்து காத்திருக்கிறார்கள்.

    குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட மொத்தம் உள்ள 10 வார்டுகளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் குடிநீரை கூடுதல் விலை கொடுத்து கடைகளில் வாங்கும் நிலை நீடித்து வருகிறது. குடிநீர் விநியோகத்துக்காக புதைக்கப்பட்ட குழாய்களில் உடைப்புகள் ஏற்படுவதே இந்த தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணம் என்று தெரிகிறது. சமீபத்தில் தட்டான்மலை தெரு வழியாக புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் 4 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி கால்வாயில் கலந்தது.

    இந்த குழாய் உடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. தரமற்ற குழாய் பதிக்கப்பட்டதே காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பூமியில் புதைக்கப்பட்ட குழாய் உடைப்பே இதற்கு காரணம். இதனை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் 2 அல்லது 3 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் குறித்த நேரத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். கைலாசநாதர் கோவில் தெரு, தூக்குமர குட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரு குழாய்களில் எப்போதும் காலி குடங்களுடன் குடி நீருக்காக காத்து கிடக்கின்றனர். சில இடங்களில் குடி நீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. குழாய்களில் தண்ணீர் வரும்போது சிலர் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து விடுகின்றனர்.இதனால் தெரு குழாய்களுக்கு வரவேண்டிய குடிநீர் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது.

    மேலும் கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய தொழிலாளர்கள் வருவதில்லை.

    எனவே குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் தண்ணீர் கிடைக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீட்டில் உள்ள அறையில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது.
    • எழிலரசி சிக்கினால் தான் கணவர் கொலைக்கான காரணம் என்ன? உதவியவர்கள் யார்? என்ற விபரம் தெரியவரும்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் வளத்தி கோவிலான் (வயது70).தொழிலாளி. இவரது மனைவி எழிலரசி(50). இவர் ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் வளத்திகோவிலான் வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் இருந்தார். இது பற்றி கேட்பதற்காக வீட்டின் உரிமையாளர் நேற்று காலை வந்தார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. வெளியில் பூட்டப்பட்டு, மேலும் வீட்டின் உள் பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

    இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இதுபற்றி திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது சமையல் அறையில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மை திறந்து பார்த்த போது அதில் வளத்தி கோவிலான் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது.

    உடல் அழுகி மிக மோசமாக காணப்பட்டது. அவர் இறந்து 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. மேலும் வீட்டில் உள்ள அறையில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. அவருடன் தங்கி இருந்த மனைவி எழிலரசி மாயமாகி இருந்தார்.

    வளத்தி கோவிலானை மனைவி எழிலரசி கொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எழிலரசி மட்டும் இந்த கொலையை செய்து இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அவருடன் வேறு யாரேனும் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்று தெரிகிறது.

    வீட்டில் ரத்தம் சிதறி கிடப்பதால் வளத்தி கோவிலானை கொடூரமாக வெட்டி கொன்று விட்டு உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி டிரம்மில் அடைத்து வைத்து விட்டு காதலனுடன் எழிலரசி தப்பி இருக்கலாம் என்று தெரிகிறது.

    வளத்தி கோவிலானுக்கும், எழிலரசிக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் வசித்து வந்த குடியிருப்பில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் மட்டும் வடமாநில வாலிபர் தங்கி உள்ளார். மற்ற வீடுகள் அனைத்தும் காலியாக உள்ளது.

    எழிலரசி வேலைக்கு செல்லும் போது சிலருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக எழிலரசி வேலைபார்த்த கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவருடன் பழகியவர்களிடம் விசாரணைநடந்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த கொலையில் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்க வில்லை. எழிலரசி சிக்கினால் தான் கணவர் கொலைக்கான காரணம் என்ன? உதவியவர்கள் யார்? என்ற விபரம் தெரியவரும்.

    எழிலரசி பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர் கடைசியாக யார்? யாரிடம் பேசினார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.

    கணவரை மனைவியே கொடூரமாக கொன்று உடலை டிரம்மில் அடைத்து தப்பிய சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
    • சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாமல்லபுரத்தில் சுற்றுலா சார்ந்த தொழில்களான தங்குமிடம், உணவு, பயணம், சாகச பொழுதுபோக்கு, சாகச விளையாட்டு, உள்ளிட்ட தொழில்களை தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் செய்து வருகிறது.

    இவை முறையாக தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் அனுமதி பெறாமல், உள்ளூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பதிவு பெற்று அந்த அனுமதியுடன், செயல்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் மாவட்ட நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்படுகிறது. தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அவர்களின் பாதுகாப்பிற்காக, அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

    அதன்படி முறையாக சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் வரும் ஜூலை.31-ந் தேதிக்குள் சுற்றுலாத்துறை www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயம் புதிதாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பார்த்திபன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கோனையூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் சஞ்சய்யை தேடி வந்தனர்.

    மேல்மருவத்தூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் நடுத்தூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ரேகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் மகன் சஞ்சய் (வயது 13). மகள் மித்ரா (9). குடும்பத்தகராறு காரணமாக பார்த்திபன், ரேகா இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர்.

    பார்த்திபன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கோனையூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சஞ்சய் தாய் ரேகாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்ற சஞ்சய் வீடு திரும்பவில்லை. மாயமானான்.

    இதுகுறித்து ரேகா மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சய்யை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சஞ்சய்யின் உடல் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி மேல்மருவத்தூர் போலீசில் தகவல் தெரிவித்தார்.

    போலீசார் விரைந்து வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆனுப்பி வைத்தனர். ரேகாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சஞ்சய் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டானா? அல்லது தற்கொலை செய்து கொண்டானா? என்பது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • கல்பாக்கம் அணுவாற்றல் துறை கடற்கரையில் நிர்வாண கோலத்தில், உடலில் காயங்களுடன் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது.
    • கல்பாக்கம் போலீசார் பழனியப்பன் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வந்தவர் பழனியப்பன் (வயது 52). இவர் கூவத்தூர் அடுத்த கீழார்கொள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மங்கையர்க்கரசி, இவரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக உள்ளார்.

    வழக்கம்போல கீழார் கொள்ளை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பழனியப்பன் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் கல்பாக்கம் அணுவாற்றல் துறை கடற்கரையில் நிர்வாண கோலத்தில், உடலில் காயங்களுடன் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதி மீனவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். கல்பாக்கம் போலீசார் பழனியப்பனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நேரில் வந்து இது மாயமான பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன்தான் என்று உறுதி செய்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    செங்கல்பட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், எப்படி கல்பாக்கம் கடற்கரையில் பிணமாக கிடந்தார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பிறகு அவரது மனைவி மங்கையர்கரசி செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் கல்பாக்கம் போலீசில் அளித்துள்ள புகாரில், எங்களது குடும்பத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் 2 மகள்களுடன் நாங்கள் மகிழச்சியுடன் வாழ்ந்து வந்தோம்.

    தனது கணவர் தலைமை ஆசிரியராக வேலை செய்த இடத்தில் முன்விரோதம் காரணமாக யாராவது, அவரை கொலை செய்து கடலில் உடலை வீசினார்களா? என சந்தேகமாக உள்ளது எனவும் இது குறித்து புலன் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து கல்பாக்கம் போலீசார் பழனியப்பன் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு கூட்டம் மண்டலத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
    • உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட முதலமைச்சருக்கு நன்றி.

    சென்னை:

    தாம்பரம் மாநகராட்சி பம்மல் மண்டலக்குழு கூட்டம் மண்டலத் தலைவர் வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    முன்னாள் முதலமைச்சரும் முத்தமிழ் அறிஞருமான டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி திராவிட இயக்க சிந்தனைகளை திரைப்பட வசனங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் விதைத்து சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர், தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தவர், மாநில உரிமைகளுக்காக போராடிய மாபெரும் தலைவர், நவீன தமிழகத்தை மட்டுமல்ல நவீன இந்தியாவையும் உருவாக்கியவர் என புகழப்படும் கருணாநிதியை போற்றும் வகையில் மண்டலம் 1-ல் பம்மல் அலுவலகத்தில் முன்பு நுழைவு வாயலில் முழு அளவு கலைஞரின் வெண்கல சிலை அமைக்க ஏகமனதாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு மேயர் அனுப்பி வைக்க இக்கூட்டம் முடிவு செய்கிறது.

    உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க ஆணையிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தென்மேல்பாக்கம் காட்டுப்பகுதியில் மதியழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார்.
    • மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு அருகே உள்ள செங்குன்றம், நரசிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மதியழகன்(வயது32). மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.

    நேற்று இரவு பணிக்கு சென்ற அவர் பின்னர் திரும்ப வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை மறைமலைநகர் அருகே உள்ள தென்மேல்பாக்கம் காட்டுப்பகுதியில் மதியழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அருகில் அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், புலிக்குகை உள்ளிட்ட புராதன சின்னங்கள் சிறப்பு பெற்றது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்றுமாலை சாலவான் குப்பம் பகுதியில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 'புலிக்குகை' வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குறைவாக இருந்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியருக்கும் மாமல்லபுரம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்துவந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த முருகன் (வயது39) என்பது தெரிந்தது. பிளம்பராக வேலைபார்த்து வந்த அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
    • மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 5- வது வார்டு பகுதியில் உள்ளது. வி.ஐ.பி நகர் குடியிருப்பு . இந்த பகுதியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த புதிய குடியிருப்பு பகுதி முறையான சாலை வசதி இல்லாத தாழ்வான இடம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இடுப்பளவிற்கு மேல் மழை தண்ணீர் தேங்கி நிற்கும். பொதுமக்கள் தண்ணீர் வடியும் வரை வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.

    எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து,மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சியின் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சத்தில் தார் சாலைகள் மற்றும் 6 சிறு பாலங்களை அமைக்க பணிகள் செய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டது . 90 நாட்களுக்குள் பணிகள் முடிவடைய வேண்டும் என திட்ட காலம் தீர்மானித்து டெண்டர் விடப்பட்டது.

    அதன்படி,டெண்டர் விடப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது.

    மேலும், தற்பொழுது தான் ஒரு சாலையின் சந்திப்பு பகுதிகளில் மற்றும் சாலையின் முகப்பு பகுதியில் மழை நீர் செல்லும் 6 சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்தப் பகுதியில் திட்டமிட்டபடி கால்வாய்கள் அமைக்காமல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைப்பதால் வரும் மழை காலத்தில் தண்ணீர் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டு சாலைகள் பெயர்ந்து முழுவதும் வீணாகி விடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

    எனவே மழைநீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல் சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணியையும் உடனடியாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் மழைக்காலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கும். தண்ணீர் செல்ல வழி இல்லாததால் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி மழை காலங்களில் கடும் சிரமம் அடைந்து வருகிறோம்.

    எனவே இந்த பகுதியில் கால்வாய் அமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை ஏற்று சாலை மற்றும் கால்வாய் அமைப்பதற்கான பணிகள் இறுதி செய்யப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இன்னும் முடிக்கப்படவில்லை.

    மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்கள் அமைக்காமல் சாலை அமைப்பதும், சாலையின் சந்திப்பில் சிறு பாலங்கள் அமைப்பதும் பயனற்றது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, வி.ஐ.பி. நகர் பகுதியில் முதலில் சாலைகளும், சிறு பாலங்களும் அமைப்பதற்கு தான் நிதி ஒதுக்கப்பட்டது.ஆனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம் என்றனர். அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட வி. ஐ பி நகரில் குடியிருப்பு பகுதிகளின் தேவைக்கேற்ப கால்வாய் அமைத்து சாலைகள் அமைத்த பின்னர் சிறு பாலங்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

    ×