என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன் உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
    • செங்கல்பட்டு டவுன் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

    செங்கல்பட்டு:

    தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 30-ந் தேதி 17 வயது கொண்ட சிறுவனை திருட்டு வழக்கில் கைது செய்தனர். 31-ந் தேதி அவன் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

    அன்று மாலை சிறுவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன் உடனடியாக சிறுவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்தான்.

    இதுதொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். செங்கல்பட்டு, முதன்மை குற்றவியல் நீதிபதி முன்பு சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு சிறுவனின் உடல் மருத்துவ பரிசோதனைக்காக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

    இந்தநிலையில் சிறுவன் கொலை தொடர்பாக சிறுவர் சீர்திருத்த பள்ளி சூப்பிரண்டு மோகன், துணை சூப்பிரண்டு நித்யானந்தம், காவலர்கள் சரண்ராஜ், ஆனந்தராஜ், விஜயகுமார், சந்திரபாபு ஆகிய 6 பேரை செங்கல்பட்டு டவுன் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பெண்கள் பொங்கலிட்டு, கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • சுகாதாரம், சுற்றுச்சூழல், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் முன்னிலையில் நடைபெற்றது. பெண்கள் பொங்கலிட்டு, கும்மியடித்து பாட்டுப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சுகாதாரம், சுற்றுச்சூழல், புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. தூய்மை பணியாளர்கள் 50 நபர்களுக்கு புத்தாடைகள், பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ தனபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூர் அடுத்த வேப்பஞ்சேரி பாலாற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூவத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். கொலையுண்ட பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

    மர்ம நபர்கள் அவரை கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்து உள்ளனர். அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். மர்ம கும்பல் அவரை வேறு இடத்தில் கொலை செய்து பாலாற்றில் வீசி இருப்பது தெரிந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இளம்பெண் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.

    கொலையுண்ட பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    இளம்பெண் கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரகடம்:

    செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகுதியில் இருந்து ஒரகடம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி எழிச்சூர் அருகே வரும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் படுகாயம் அடைந்த நபரை மீட்டு தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர்.

    விசாரணையில் அந்த நபர் எழிச்சூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28) என்பதும் தனது 3 வயது குழந்தையுடன் வந்தது தெரிய வந்தது. குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான நேர்முக தேர்வை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.
    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வருகிற 20-ந்தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முக தேர்வை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12- ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், நர்சுகள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வருகிற 20-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்.

    மேலும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • சிறப்பு விருந்தினராக நாட்டியமங்கை கலைமாமணி டாக்டர் விசித்ரா பங்கேற்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உற்பட்ட ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில், நுண்கலை சங்கம் துவக்க விழா அத்துறையின் முதல்வர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாணவ, மாணவிகள் இடையே பாரம்பரிய இயல், இசை, நாடகம், நாட்டியம் மற்றும் தற்காப்பு கலைகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினராக நாட்டியமங்கை கலைமாமணி டாக்டர் விசித்ரா பங்கேற்றார். கல்லூரி பொறுப்பு இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் சில்வஸ்டர், பேராசிரியர்கள் குமுதவல்லி, ஜீவா, அபிஜித் முரளி, வசந்த்குமார் உட்பட அனைத்து பிரிவு மாணவர்களும் கலந்துகொண்டனர்.

    • மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது.
    • பிரதமர் மோடி-சீன அதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் என்றதுமே அங்குள்ள கற்சிற்பங்கள் தான் நினைவுக்கு வரும். இங்குள்ள புராதன சின்னங்களை பார்க்க தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த இடமாக மாமல்லபுரம் மாறி உள்ளது.

    சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரம், தற்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற உள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர். என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து அரசின் அனைத்து துறையின் கவனமும் தற்போது மாமல்லபுரம் பக்கம் திரும்பி உள்ளது.

    கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் என்றாலே சவுக்கு காடுகளும், முறையான அடிப்படை வசதிகளும் இல்லாததே நினைவுக்கு வரும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு இருட்டுவதற்கு முன்பே திரும்பி விடுவார்கள். இந்தநிலை தற்போது படிப்படியாக குறைந்து, இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலைகள் மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்து வசதி, நகரில் ஒளி விளக்குகள் அதிகரிக்கப்பட்டது.

    மேலும் தொல்லியல்துறை சார்பில் புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

    கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங், முறைசாரா மாநாடாக மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். தலைவர்கள் இருவரும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இருந்த பகுதியில அமர்ந்து ரசித்தனர். அங்குள்ள அனைத்து சின்னங்களையும் பார்வையிட்டு அதன் சிறப்புகளை பிரதமர் மோடி, சீன அதிபரிடம் விளக்கி கூறினார்.

    இதன் பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு உலக அரங்கிலும் பல மடங்கு அதிகரித்தது. அதன் தொன்மை மற்றும் புராதன சின்னங்களின் வரலாறு குறித்த தேடுதல்கள் அதிகரித்தன.

    பிரமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகைக்கு பின்னர் மாமல்லபுரம் நகரின் அழகு மேலும் அதிகரிக்கத்தொடங்கியது. பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள், புராதன சின்னங்களுக்கு இரவில் லேசர் ஒளி, கருங்கல் நடைபாதை, டிஜிட்டல் பலகைகள், நவீன தெரு விளக்குகள் என மேம்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு "சர்வதேச செஸ் ஒலிம்பியாட்" போட்டி இந்தியாவில் முதல்முறையாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனை தமிழகத்தில் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து அனுமதி பெற்றார். இந்த போட்டியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த மாமல்லபுரத்தில் நடத்தியது கூடுதல் சிறப்பு ஆகும். இதன் பின்னர் மாமல்லபுரத்தின் பெயர் மற்றும் அங்குள்ள கற்சிற்பங்களின் மதிப்பு உலக அளவில் மேலும் உயர்ந்தது. இதனால் தற்போது மாமல்லபுரம் கூடுதலாக சர்வதேச கவனம் பெற்று உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு குவியும் நகரமாக மாறி உள்ளது.

    கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகையின் கணக்கெடுப்பில் உலக அதிசயமான டெல்லியில் உள்ள தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிவிட்டு மாமல்லபுரம் முதல் இடத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது மாமல்லபுரம் துணை நகரமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதன் அழகிய முகம் மேலும் வளர்ச்சி அடைந்து மாறி வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கைவசம் உள்ள ஆளவந்தாரின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் துணை நகரம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் கூடுதலாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சென்னை நகரருக்கு இணையாக மாமல்லபுரம் மாறும் என்று உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதுகுறித்து மால்லபுரம் பகுதி மக்கள் கூறும்போது, மாமல்லபுரம் துணை நகரமாவதால் மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் உள்ளிட்ட நவீன வசதிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். மாமல்லபுரம் சுற்றுலா தலமாக இருந்தாலும் இதற்கு முன்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பிரதமர் மோடி-சீனஅதிபரின் வருகை மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின்னர் மாமல்லபுரத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. இந்திய அளவிலும், உலக அளவிலும் மாமல்லபுரம் உச்சத்தில் உள்ளது. மாறி வரும் மாமல்லபுரத்தை நினைத்தால் இங்கு வசிப்பது பெருமையாக இருக்கிறது என்றனர்.

    • ஆண்டாள் தனது நோன்பை நிறைவு செய்த மார்கழி 27-ந்தேதி கூடாரவல்லி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
    • அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் நவநீதகிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாளித்தார்.

    மாமல்லபுரம்:

    ஸ்ரீரங்கம் கோயிலில் வீற்றிருக்கும் ரங்கநாதரையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மார்கழி மாதத்தில் 27 நாட்கள் விரதமிருந்த ஆண்டாள், திருப்பாவை பாடல்களை பாடி பாவை நோன்பு இருந்து அவரது திருவடிகளை அடைந்தார். ஆண்டாள் தனது பாவை நோன்பை நிறைவு செய்த நாளான மார்கழி 27ம் தேதியை கூடாரவல்லி தினம் என்கிறோம். மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான நிகழ்வுகளில் கூடாரவல்லி வைபவமும் ஒன்று. அனைத்து பெருமாள் கோயில் மற்றும் கிருஷ்ணர் கோயில்களில் கூடாரவல்லி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், மாமல்லபுரம் ஸ்ரீநவநீதிகிருஷ்ணன் கோயிலில் மார்கழி 27-ம் நாளான இன்று கூடாரவல்லி திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருக்கோலத்தில் நவநீதகிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாளித்தார்.

    அப்போது நவநீத கிருஷ்ண பக்த பஜனை குழுவினர் திருப்பாவை பாடல்கள் பாட, சிறுவர்கள் பாரம்பரிய காவி வேட்டி அணிந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமியை சுற்றி வந்து கோலாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

    முன்னதாக இன்று காலை ஸ்ரீநவநீதகிருஷ்ணனுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் ஆராதனை நடந்தது. கூடாரவல்லி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பயணிகள் சிலரும் சிறுவர்களின் கோலாட்ட நிகழ்ச்சியை பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    • பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.
    • போகி பண்டிகை பழைய பொருட்கள், குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகராட்சி கமிஷனர் ராமஜெயம் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி வெளியிட்டு உள்ள அறிவிப்பில், பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    இதேபோல் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி, நகராட்சி கமிஷனர் ராமஜெயம் ஆகியோரும் போகி  பண்டிகையின்போது பொதுமக்கள் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தில் உள்ள தியேட்டரில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் பாலகிருஷ்ணன் (வயது48). இவரது சொந்த ஊர் பண்ருட்டி செட்டிப்படை காலனி ஆகும்.

    இவர் இன்று அதிகாலை வாரிசு மற்றும் துணிவு படங்களின் விளம்பர போஸ்டர்களை சுற்று வட்டார பகுதியில் உள்ள சுவர்களில் ஓட்டுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அச்சரப்பாக்கம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பாலகிருஷ்ணன் பலியானார். இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    கூவத்தூர் அடுத்த கானத்தூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (38).இவர் நண்பரான நவீனுடன் மற்றொரு நண்பரை சந்திக்க காரில் வடபட்டினம் நோக்கி சென்றார். சின்ன பாலம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற ரோடு ரோலர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் பலியானார். நவீன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் ரோடு மேற்கு காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). தொழிலாளி. இவர் நண்பரான சூளைமேனி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையில் இருந்து சூளைமேனி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    தொம்பரம்பேடு பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி சென்று விட்டது. இதில் கார்த்திக், பிரகாஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர்களை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பலியானார். பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சென்னையில் இரண்டு நாட்கள் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு நடக்கிறது
    • 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    மாமல்லபுரம்:

    ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 200 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஐ.ஐ.டி வளாகத்தில் இரண்டு நாட்கள் வெவ்வேறு துறைசார் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கலந்தாய்வுக்கு பிறகு தலைவர்கள் சுற்றுலாவாக சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன்தபசு போன்ற பகுதிகளை பார்வையிடவும், அதன்முன் நின்று புகைப்படம் எடுக்கவும் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சக தலைவர் சைதன்ய பிரசாத் மற்றும் மத்திய கல்வித்துறை இணை செயலாளர் நீதா பிரசாத் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வில், தலைவர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவது, உணவருந்தும் இடம், எவ்வாறு வரவேற்பது, எங்கே நின்று புகைப்படம் எடுக்கவைப்பது போன்ற விஷயங்களை திட்டமிட்டனர்.

    இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்.பி பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல், தாசில்தார் பிரபாகரன், தொல்லியல்துறை அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன்.
    • போலீசார் வழக்குப்பதிவு மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்த 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஓட்டேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 31). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவது போல் வந்து திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சிங்காரவேலனிடமிருந்து ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து சிங்காரவேலன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு மளிகை கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்த 4 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×