என் மலர்
செங்கல்பட்டு
- இன்று பார்வையாளர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம்.
வண்டலூர் :
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 17 ஆயிரம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
நேற்று மாட்டுப்பொங்கல் தினத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதியான கோயம்பேடு, கிண்டி, அம்பத்தூர், ஆவடி, பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி, செங்குன்றம், செங்கல்பட்டு, மாமல்லபுரம் காஞ்சீபுரம், மதுராந்தகம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வருகை தந்தனர்.
பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பூங்காவில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூங்கா நிர்வாகம் செய்திருந்தது.
பொங்கல், மாட்டு பொங்கல் ஆகிய 2 தினங்களில் மட்டும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 47 ஆயிரம் பேர் சுற்றி பார்த்துள்ளனர். குறிப்பாக நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவை 30 ஆயிரம் பேர் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.
வண்டலூர் பூங்காவுக்கு கார், மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்களால் வண்டலூர் பூங்கா மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்து இருக்கும், காணும் பொங்கல் அன்று பூங்காவுக்கு வருகை வரும் பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
காணும் பொங்கல் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றி பார்க்கலாம். பூங்காவில் உள்ள இந்திய காட்டுமாடு, காண்டாமிருகம், வெளிமான், கடமான், வராக மான், புள்ளிமான், சதுப்புநில மான், நீலமான் போன்ற தாவர வகை விலங்குகளுக்கு காலை 11 மணிக்கு மேல் உணவளிக்கும் காட்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்.
அதேபோல் பூங்காவில் உள்ள யானைகள் சவரில் குளிக்கும் காட்சிகளை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், பின்னர் 3 மணி முதல் 4 மணி வரையும் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். பூங்காவின் செயல்பாடுகளை விவரிக்கும் ஆவணப்படம் மற்றும் பூங்கா விலங்குகளின் திரை தொகுப்புகள் 2 பெரிய எல்.இ.டி. திரையில் திரையிடப்படுகிறது.
குடும்பமாக வரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள், நண்பர்கள் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு புகைப்பட கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு பூங்காவுக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் பூங்கா நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சென்னை புறநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு, தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
- திருமாவளவன் விழா மேடையில் கேக் வெட்டி தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள மல்லை கலங்கரை விளக்கு மக்கள் சேவை மையமும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் இணைந்து 15வது முறையாக பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.
இதில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்று, கோலம் போடுதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சிலம்பம், கைப்பந்து, ஸ்லோ சைக்கிள், மியூசிக் சேர், கபடி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அதே மேடையில் கேக் வெட்டி, தனது 60வது பிறந்தநாளை கட்சி தொண்டர்களுடன் கொண்டாடினார்.
ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தொண்டரணி செயலாளர் கிட்டு, திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் இ.சி.ஆர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், சாலமன், சிவா, பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- தினேஷ் கீரப்பாக்கம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார்.
- கோபிநாத் என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்று விட்டனர்.
வண்டலூர்:
வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரியை சேர்ந்தவர் தினேஷ். இவர் கீரப்பாக்கம் மெயின் ரோட்டில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் நகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 5 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். தங்க நகை என நினைத்து கவரிங் நகைகளையும் அள்ளி சென்று உள்ளனர்.
இதேபோல் கீரப்பாக்கம் துலுக்காணத்தம்மன் தெருவை சேர்ந்த கோபிநாத் என்பவரது மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்று விட்டனர்.
- செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை, கலாச்சார மையத்தில் நடைபெற்றது.
- பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம்:
தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கானத்தூர் அருகே தனியார் கலை, கலாச்சார மையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மண்பானையில் பொங்கல் வைத்தனர்.
விழாவில் கரகம் ஆடுதல், உறியடித்தல், மாட்டுவண்டி பயணம், கிளி ஜோசியம் பார்த்தல், உள்ளிட்ட விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றும், கண்டும் ரசித்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலையில கரகம் வைத்து ஆடி அசத்தினர். மேலும் அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினார்.
கும்மியடித்தல், கரகம் ஆடுதல், மாட்டு வண்டி பயணம் உள்ளிட்டவற்றில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்று நெகிழ்ச்சி அடைந்தனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரம் அகே மகளிர் விடுதியில் உயர் அழுத்த மின்வயர் அருகே நின்று செல்போனில் பேசியபோது மின்சாரம் தாக்கி 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பகுதியில் இருந்த சிமெண்டு சீட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீஸ் நிலையம் அருகே உள்ள கடையில் கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38). இவர் திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் சாலை பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பகுதியில் இருந்த சிமெண்டு சீட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பேண்ட், சார்ட் போன்ற ரூ.1 லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.37 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பாலாஜி திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே உள்ள கடையில் கொள்ளை சம்பவம் நடந்ததால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
- 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் யுவராஜ் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.
பொங்கல் விழாவின்போது இஸ்லாமிய சமுதாய பெண் கவுன்சிலர் தௌலத் பீவி தீபாராதனை காட்டி வழிபட்டார். இது அங்கு வந்திருந்த அனைவரிடமும் சமத்துவ உணர்வை ஏற்படுத்தியது. 150க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.
- களிமண் தட்டுப்பாடு காரணமாக பானைகள் ரூ.100 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதித்தால் விலை குறையும் விற்பனையும் அதிகரிக்கும்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் மண்பானை, சட்டி உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிக்கும் குடும்பத்தினர் உள்ளனர். பொங்கல் திருநாள் விற்பனைக்காக ஒரு மாதமாக பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முதல் பானைகளை சந்தைகளில் விற்க துவங்கினர். களிமண் தட்டுப்பாடு காரணமாக பானைகள் ரூ.100 முதல் 250 வரையும், அடுப்புகள் ரூ.150 முதல் 200 வரையும் விலை சற்று அதிகமாக வைத்து விற்கப்பட்டது.
இதனால் மண்பானை விற்பனை குறைந்தது, ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதித்தால் விலை குறையும் விற்பனையும் அதிகரிக்கும் என மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
- விபத்தில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார்.
- அச்சரபப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பணியாற்றி வந்தவர் ஏழுமலை (வயது 47). தூய்மை பணியாளர். இவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான கடமலைபுத்தூர் கிராமத்துக்கு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அச்சரப்பாக்கத்தை அடுத்த அரப்பேடு என்ற இடத்தில் செல்லும்போது இவரது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து அச்சரபப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை போலீசார் கைப்பற்றினர்.
- பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வி பரிவர்த்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
- நிகழ்ச்சியில் ஆலோகர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
கூடுவாஞ்சேரி:
இந்திய கடற்படை அலுவலர்களுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி கல்வியில் முதுகலை பட்டபடிப்பு மற்றும் பி.எச்.டி. பட்டபடிப்பு வழங்கவும், எஸ்.ஆர்.எம். மாணவர்கள், பேராசிரியர்கள் கடற்படை தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடவும் இந்திய கடற்படை, கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை, காட்டங்குளத்தூர் எஸ். ஆர். எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பிரிவு ரியர் அட்மிரல் பி. சிவகுமார், கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சி.முத்தமிழ் செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர்.
நிகழ்ச்சியில் கடற்படை நலன் மற்றும் ஆரோக்கியம் சங்க தலைவி கலா ஹரிக்குமார், எஸ்.ஆர். எம். மருத்துவம் மற்றும் உடல்நலம் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்னல் டாக்டர் ஏ. ரவிக்குமார், பதிவாளர் சு. பொன்னுசாமி, கூடுதல் பதிவாளர் டி. மைதிலி, பாதுகாப்பு மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் பேராசிரியர் வி. பி. நெடுஞ்செழியன் மற்றும் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள், டீன்கள் பங்கேற்றனர்.
- பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன.
- செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
மதுராந்தகம்:
பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் இன்று மாலையில் இருந்தே தங்கள் சொந்த ஊருக்கு பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.
இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புறப்பட்டு செல்கின்ற கார்கள் இருசக்கர வாகனங்கள் அரசு பேருந்துகள் என ஒன்றன்பின் ஒன்றாக படையெடுத்து செல்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இன்று மாலை முதல் அதிகப்படியான வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதால் கூடுதலான கவுண்டர்கள் திறக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனவே போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- டீ குடிப்பதற்காக இன்று காலை எழுந்து கேஸ் சிலிண்டரை ஆனந்தி பற்ற வைத்துள்ளார்.
- ரெகுலேட்டர் மற்றும் டியூப் வழியாக தீ பரவுவதை கண்டதும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே ஓடினர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் கிராமம், 7-வது வார்டுக்கு உட்பட்ட துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன்(48) கூலி தொழிலாளி. இவரது மனைவி பப்பி என்ற ஆனந்தி(40). இவர்ளுக்கு மகன் ராஜேஷ்(20), மகள் மலர்(18) ஆகியோர் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்கினர்.
இன்று காலை எழுந்து டீ குடிப்பதற்காக கேஸ் சிலிண்டரை ஆனந்தி பற்ற வைத்துள்ளார். அப்போது ரெகுலேட்டர் மற்றும் டியூப் வழியாக தீ பரவுவதை கண்டதும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே ஓடினர். அப்போது ஆனந்தி வெளியே ஓடி கோணியை எடுத்து வர முயன்றுள்ளார். அதற்குள் குடிசை வீடு தீப்பற்றி தீ மளமளவென எரிய தொடங்கியது. இதில் அலறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு ஓடி வந்தனர். அப்போது கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனை கண்டதும் அனைவரும் நாலாபுறமும் அலறியடித்து சிதறி ஓடினர். பின்னர் தீ கட்டுக்குள் வந்ததும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த ரூ.8,500 பணம், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் ஆவணங்களும் தீயில் கருகி முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அரிகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். காயர் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று கேஸ் சிலிண்டர் வெடித்தது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் இன்று காலை கீரப்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






