என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் வீடு இடிந்து பொருட்கள் சேதம்
- டீ குடிப்பதற்காக இன்று காலை எழுந்து கேஸ் சிலிண்டரை ஆனந்தி பற்ற வைத்துள்ளார்.
- ரெகுலேட்டர் மற்றும் டியூப் வழியாக தீ பரவுவதை கண்டதும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே ஓடினர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் கிராமம், 7-வது வார்டுக்கு உட்பட்ட துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன்(48) கூலி தொழிலாளி. இவரது மனைவி பப்பி என்ற ஆனந்தி(40). இவர்ளுக்கு மகன் ராஜேஷ்(20), மகள் மலர்(18) ஆகியோர் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்கினர்.
இன்று காலை எழுந்து டீ குடிப்பதற்காக கேஸ் சிலிண்டரை ஆனந்தி பற்ற வைத்துள்ளார். அப்போது ரெகுலேட்டர் மற்றும் டியூப் வழியாக தீ பரவுவதை கண்டதும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே ஓடினர். அப்போது ஆனந்தி வெளியே ஓடி கோணியை எடுத்து வர முயன்றுள்ளார். அதற்குள் குடிசை வீடு தீப்பற்றி தீ மளமளவென எரிய தொடங்கியது. இதில் அலறல் சத்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு ஓடி வந்தனர். அப்போது கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனை கண்டதும் அனைவரும் நாலாபுறமும் அலறியடித்து சிதறி ஓடினர். பின்னர் தீ கட்டுக்குள் வந்ததும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த ரூ.8,500 பணம், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும் ஆவணங்களும் தீயில் கருகி முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் அரிகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். காயர் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று கேஸ் சிலிண்டர் வெடித்தது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் இன்று காலை கீரப்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






