என் மலர்
செங்கல்பட்டு
- எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஷெர்லி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷெர்லி பரிதாபமாக இறந்தார்.
- செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
வண்டலூர்:
சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வெங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் சைமன் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகள் ஷெர்லி (வயது 15). இவர் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை ஷெர்லி பள்ளி முடிந்ததும், டியூசன் வகுப்புக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். அவர் அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ஷெர்லி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷெர்லி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான மாணவி ஷெர்லியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்படடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
- செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்கள் தாக்கப்படுவது, சித்திரவதை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
- ஆலோசனை கூட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும் என 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செங்கல்பட்டு:
தாம்பரத்தை அடுத்த கன்னட பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்ஸ்ரீ (வயது 17). கடந்த மாதம் தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் பேட்டரி ஒன்றை திருடியதாக ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே கடந்த 31-ந் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுவன் கோகுல்ஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை செய்தார். இதில் சிறுவன் தாக்கப்பட்டதில் இறந்து இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக சிறுவர் சீர்திருத்தபள்ளி கண்காணிப்பாளர் மோகன், பணியில் இருந்த காவலர்கள் சந்திரபாபு வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட்ராஜ், விஜயகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அனைத்து அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் உள்ள கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா தலைமை தாங்கினார். தி.மு.க.வை சேர்ந்த ராஜி வரவேற்றார்.
கூட்டத்தில் சிறுவன் கோகுல்ஸ்ரீ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (19-ந் தேதி) அனைத்து கட்சிகள் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கப்படும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டில் வருகிற 21-ந் தேதி அன்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்கள் தாக்கப்படுவது, சித்திரவதை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது போன்ற சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும் என்று உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம், தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் ஆசீர், ம.தி.மு.க.வை சேர்ந்த கே.பி.ராமலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி முகமது யூனூஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விபத்தில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பார்க்க சென்ற போது பெண் தலைமை காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உடன் வேலை பார்க்கும் மற்ற போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான பல்லாவரத்தை சேர்ந்த சக்தி என்பவரை கைது செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ஷீலா ஜெபமணி (வயது51). நேற்று முன்தினம் இதே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரமா பிரபா என்பவர் பணி முடித்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை அருகே விபத்தில் சிக்கி கீழே விழுந்தார்.
இதுபற்றி அவர் தலைமை காவலர் ஷீலா ஜெபமணிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை பார்ப்பதற்காக ஷீலா ஜெபமணி தனது மோட்டார் சைக்கிளில் சம்பவ இடம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென ஷீலா ஜெபமணி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஷீலா ஜெபமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு ஏழு தையல் போடப்பட்டது. தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஷீலா ஜெபமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான பல்லாவரத்தை சேர்ந்த சக்தி என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பார்க்க சென்ற போது பெண் தலைமை காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உடன் வேலை பார்க்கும் மற்ற போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புதிய சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
- மின் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள தெற்கு மாடவீதி, கச்சேரி சந்து தெரு இணைப்பு சாலை, பேருந்து நிலைய இணைப்பு சாலை, விளம்பி வினாயகர் கோயில் தெரு, வேம்படி வினாயகர் கோயில் தெரு, ஏரிக்கரை 1வது தெரு, 2வது தெரு ஆகிய பகுதிகளில் பழைய சேதமடைந்த சாலைகளை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், வார்டு உறுப்பினர் மீனாகுமாரி சந்திரன் ஆகியோர் முன்னிலையில், தெற்கு மாடவீதியில் சாலை அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுக்கும் பணி நடந்தது. குடிநீர் குழாய்கள், மின் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
- சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- சுங்ககட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.
செங்கல்பட்டு:
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்களுக்கு வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. இதன் மூலம் ஏறத்தாழ 5 லட்சம் பேர் வரை தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருந்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து ஆம்னி பஸ்கள் மூலமும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிட வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 16-ந் தேதி முதல் இன்று வரை 3 நாட்களுக்கு வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் என மொத்தம் 15,619 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று பள்ளி கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலை நாள் என்பதால் நேற்று மாலை முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்னை நோக்கி திரும்பி வரத்தொடங்கினர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பஸ், கார்கள் சென்னை நோக்கி வரத்தொடங்கியதால் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேரம் செல்ல செல்ல சென்னை நோக்கி ஏராளமான வாகனங்கள் வரத் தொடங்கின.
சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்ககட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.
இதைத்தொடர்ந்து சுங்கக்கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன்பின்னர் போக்குவரத்து நெரிசல் மெல்ல மெல்ல சீரானது. தொடர்ந்து அதிகமான வாகனங்கள் சென்னை நகர் நோக்கி வந்து கொண்டு இருப்பதால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.பரத் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வெளியூர்களில் இருந்து வரும் ஆம்னி பஸ்கள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசு பஸ்கள் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றன. ஆம்னி பஸ்கள் சில வண்டலூரிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அங்கிருந்து நகருக்கு மாற்று பஸ்சில் வர சிரமப்பட்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில இடங்களில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளில் பெரும்பாலானோர் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் இறங்கி மற்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். இதைத்தொடர்ந்து பயணிகள் வசதிக்காக தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கூடுதலாக மநகர பஸ்கள் இயக்கப்பட்டன. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்ட நெரிசலை தடுத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் அதிகப்படியான கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை அறிவுறுத்தலின் படி ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதலான சுங்க கட்டணம் வசூலிக்கின்ற மையங்கள் திறக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் விரைவாக சென்றன. நேற்று மாலை 3 மணி முதல் வாகனங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.
கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோயம்பேடு மார்கெட் அருகே உள்ள "ஏ" மற்றும் "சி" சாலை, காளியம்மன் கோவில் சாலை, மெட்டுக்குளம் சந்திப்பு, பள்ளிகூட தெரு சந்திப்பு, நூறடி சாலையில் உள்ள கேம்ஸ் வில்லேஜ் சந்திப்பு, பஸ் நிலைய நுழைவு வாயில் ஆகிய முக்கிய இடங்களில் 6 இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 போலீஸ்காரர்கள் என சுமார் 50 போக்குவரத்து போலீசார் அதிகாலை 4 மணி முதலே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பெரிதும் தவிர்க்கப்பட்டது.
மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் தங்களது பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டு செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
- காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
- புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.
வண்டலூர்:
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு அதிக அளவில் சென்று வந்தனர்.
காணும் பொங்கலையொட்டி நேற்று வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பழவேற்காடு பகுதியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலா இடமாக வண்டலூர் பூங்கா உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் வண்டலூர் பூங்காவில் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கடந்த 4 நாட்களில் வண்டலூர் பூங்காவை 1 லட்சம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். நேற்று மட்டும் 31 ஆயிரம் பேர் குவிந்து இருந்தனர்.
இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் விரும்பத்தக்க இடங்களில் ஒன்றாகும். பார்வையாளர்களின் வருகையினை முன்னிட்டு பூங்காவின் நேரம் நீட்டிக்கப்பட்டது.
கூடுதல் நுழைவுச் சீட்டு வழங்குமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கூடுதல் உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக நிறுத்த அடையாளக் குறியீடுகள் செய்யப்பட்டது. கூடுதல் வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல மாற்று வழி அமைக்கப்பட்டது.
பூங்கா நிர்வாகம் செய்த பொங்கல் ஏற்பாடுகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பெரிய எல்.இ.டி. திரைகள் மூலம் பூங்காவின் திரை தொகுப்பு திரையிடல், தாவர உண்ணிகளுக்கு உணவு வழங்குதல், யானை குளியல் மற்றும் புகைப்படம் எடுக்குமிடம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டது. பூங்காவில் 3 கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து சி.சி.டி.வி. கண்காணிப்பு, வனத்துறை அலுவலர்கள் காவல் துறையுடன் இணைந்து பூங்கா ரோந்து பணி போன்றவற்றின் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பூங்காவிற்கு பொங்கல் பண்டிகை நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.
14-ந்தேதி 7,630 பேர், 15-ந்தேதி- 17,762 பேர், 16-ந்தேதி 34,183 பேர், 17-ந்தேதி, 31,440 பேர் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சுமார் 9 ஆயிரம் பேர் வந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காணும் பொங்கலை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர். அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக் கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை அருகில் சென்று 20 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர். இந்தியருக்கு ரூ.40-ம், வெளிநாட்டவருக்கு ரூ.600-ம் தொல்லியல்துறை நுழைவு கட்டணமாக வசூலித்தது.
- வண்டலூர் பூங்காவில் இருந்து வெளியே வந்த வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
- போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் மாலை முதல் திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது வண்டலூர் பூங்காவில் இருந்து வெளியே வந்த வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும் அவர் யார் எந்தபகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
- ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை.
மாமல்லபுரம்:
இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் சுசோகி ஹிரோசி மாமல்லபுரத்துக்கு நேற்று சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோவிலுக்கு வந்த அவரை மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு அவருடன் டெல்லியில் இருந்து வந்த ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் அவருக்கு மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய அரிய தகவல்களை ஜப்பான் நாட்டு மொழியில் விளக்கி கூறினார்.
பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார்.
கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். ஜப்பான் தூதரின் பெண் உதவியாளர் தங்கள் நாட்டு தூதரை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து தங்கள் நாட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவரை மகிழ்ச்சி படுத்தினார்.
நேற்று காணும் பொங்கல் விசேஷ தினம் என்பதால் தனக்காக இங்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்புக்காக யாரும், தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும், அவர்கள் வழக்கம் போல் சுற்றி பார்க்கட்டும் என்றும், நானும் அவர்களுடனேயே சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன் என்று தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளிடம் பெருந்தன்மையுடன் அவர் தெரிவித்தார்.
அதனால் ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. அவர்கள் வழக்கம்போல் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது.
+2
- அ.தி.மு.க நகர செயலாளர் ஏ.கணேசன் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- அண்ணாநகர், பூஞ்சேரி, தேவநேரி பகுதியிலும் விழாக்கள் நடைபெற்றது.
மாமல்லபுரம்:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் எதிரில் அ.தி.மு.க நகர செயலாளர் ஏ.கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி துணைத் தலைவர் க.ராகவன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அண்ணாநகர், பூஞ்சேரி, தேவநேரி பகுதியிலும் விழாக்கள் நடைபெற்றது. இன்று காணும் பொங்கல் என்பதால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அவர்களுக்கு கட்சியினர் அன்னதானம் வழங்கினார்கள்.
- செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பெரிய ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்.
- கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை சரமாரியாக வெட்டிய 4 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பெரிய ராமசாமி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29), நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரி ரெயில்நிலையம் அருகே உள்ள
விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.
முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த கமல், அப்பு, அருண், கார்த்திக் ஆகியோர் பிரபாகரனை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால்
சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பிரபாகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள
ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை சரமாரியாக வெட்டிய 4 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- மாலையில் தனது 8 வயது பெண் குழந்தை ஜோஸ்னா அமுல்யாவை காணவில்லை என தந்தை தேடினார்.
- நீச்சல் குளத்தில் குழந்தை மிதப்பதாக ஊழியர்கள் கூறினர்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் பிரேம் எட்வின் ராஜன். பொங்கல் விடுமுறை கொண்டாடுவதற்காக நேற்று குடும்பத்துடன் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் சன் ரிசார்ட்டில் தங்கினார். மாலையில் தனது 8 வயது பெண் குழந்தை ஜோஸ்னா அமுல்யாவை காணவில்லை என தேடினார். அப்போது அங்குள்ள நீச்சல் குளத்தில் குழந்தை மிதப்பதாக ஊழியர்கள் கூறினர்.
பதறியடித்து குழந்தையை தனது காரில் தூக்கிக்கொண்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
ஜோஸ்னா அமுல்யா 4ம் வகுப்பு படித்து வருகிறார். மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மானந்தன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.
மாமல்லபுரம்:
காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குடும்பத்துடன் அவர்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இன்று காலையில் இருந்தே குடும்பத்துடன் வரத்தொடங்கினர்.
இதையடுத்து மாமல்லபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி, ஐந்துரதம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் என 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
பூஞ்சேரி டோல்கேட், புறவழிச்சாலை பகுதியில் இருந்து கடற்கரை கோயில், புலிக்குகை, ஐந்துரதம், அர்சுணன்தபசு போன்ற புராதன சின்னம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாமல்லபுரம் பஸ் நிலையம் வரை செல்ல தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அடையாறு டெப்போக்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாநகர மினிபஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் பயணம் செய்ய ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உற்சாகம் அடைந்தனர். மாமல்லபுரம் பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். திருட்டு, பெண்களை கேலி செய்தல், போதை ஆசாமிகளை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர்.
மேலும் மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டச்சுகல்லறை, நிழல் கடிகாரம், பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளிட்ட பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மர நிழலில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஏற்கனவே சமைத்து கொண்டு வந்து இருந்த உணவை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பழவேற்காடு பகுதி மக்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது.
சுற்றுலா பயணிகளின் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தனித்தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டி.எஸ்.பி. கிரியா சக்தி திருப்பாலைவனம் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பொன்னேரி தீயணைப்பு அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
வடசென்னை அனல்மின் நிலையம், பழவேற்காடு செல்லும் சாலை, காட்டு பள்ளி, பொன்னேரி -பழவேற்காடு சாலை ஆண்டார் மடம், போளாச்சி அம்மன் குளம், ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.






