என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரத்தில் கார் மோதி படுகாயம் அடைந்த தலைமை பெண் காவலர் பலி
- விபத்தில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பார்க்க சென்ற போது பெண் தலைமை காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உடன் வேலை பார்க்கும் மற்ற போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான பல்லாவரத்தை சேர்ந்த சக்தி என்பவரை கைது செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் ஷீலா ஜெபமணி (வயது51). நேற்று முன்தினம் இதே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரமா பிரபா என்பவர் பணி முடித்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலை அருகே விபத்தில் சிக்கி கீழே விழுந்தார்.
இதுபற்றி அவர் தலைமை காவலர் ஷீலா ஜெபமணிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை பார்ப்பதற்காக ஷீலா ஜெபமணி தனது மோட்டார் சைக்கிளில் சம்பவ இடம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டு இருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று திடீரென ஷீலா ஜெபமணி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஷீலா ஜெபமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு ஏழு தையல் போடப்பட்டது. தொடர்ந்து அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஷீலா ஜெபமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான பல்லாவரத்தை சேர்ந்த சக்தி என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் சிக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பார்க்க சென்ற போது பெண் தலைமை காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் உடன் வேலை பார்க்கும் மற்ற போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






