என் மலர்tooltip icon

    அரியலூர்

    • மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்சியம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் தெற்கு தெருவை சேர்ந்த ராஜமோகனின் மனைவி சரிதாவை(வயது 40) பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுப்பெண் மாயமானார்
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்ராவை தேடி வருகிறார்.

    அரியலூர்

    தா.பழூர் அருகே உள்ள கண்டியங்கொல்லை ஓடைக்கார தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 57). இவரது மகள் சுமித்ராவை(26) தேவாமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் சரவணனுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொடுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமித்ரா, தனது தந்தை வீடான பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று மதியம் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பாண்டியன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து சுமித்ராவை தேடி வருகிறார்.


    • அரியலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலை அருகே அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவேண்டும்.

    காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜாவேம்பு தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம்.கே.ஷேக்தாவூத் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கி.காந்தி, மாவட்டப் பொருளாளர் கே.ஆனந்தவள்ளி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.


    • பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகத்திற்கு மஞ்சள் பை விருது வழங்கபடும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரித்துள்ளார்
    • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்க் தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாரம்பரிய பயன்பாட்டை ஊக்குவித்த சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த 3 பள்ளிகள், சிறந்த 3 கல்லூரிகள் மற்றும் சிறந்த 3 வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் இந்த விருது வழங்கப்படுகிறது.

    முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர், நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (சிடி) பிரதிகள் இரண்டை மாவட்ட ஆட்சியரிடம் மே 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • 8 மணி நேர வேலை உரிமையை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் அண்ணாசிலை அருகே சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் சட்டத்தை திருத்தக் கூடாது. தொழிலாளர் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும்.8 மணி நேர வேலை உரிமையை பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன், துணைத் தலைவர் சிற்றம்பலம், பொருளாளர் கே.கண்ணன், துணைச் செயலர் சந்தனம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம், மின்வாரியம், குடிநீர் வடிக்கால் வாரியம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.


    • ரோவர் கல்விநிறுவனத்தில் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் இப்தார் ரமலான் நோன்பு பெருவிழா மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது. விழாவிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜான் அசோக்வரதராஜன், மாவட்ட அரசு காஜி அப்துல் சலாம் தாவூதி, மாவட்ட ஐக்கிய ஜமாத்பேரவை தலைவர் சுல்தான் இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், புதுக்கோட்டை பேராசிரியர் சதக்கத்துல்லா தாவூதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பின்னர் ரமலான் பண்டிகையையொட்டி நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ரோவர் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராசு வரவேற்றார். முடிவில் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் பள்ளி முதல்வர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

    • ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து தா.பழூர் அருகே மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியை சேர்ந்த கோட்டியால் மேலத்தெரு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த குளமும் தூர் வருவதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் பிரச்சினை குறித்து முறையிட்டு வந்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் தா.பழூர், விளாங்குடி சாலையில், கோட்டையால் பாண்டிபஜார் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதே போல ஊராட்சி நிர்வாக அலுவலர்களும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் தேவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டமானது கைவிடப்பட்டது. பொதுமக்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

    • மகா பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில். மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மகாபிரதோஷத்தை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம் பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வ பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • மாநில அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்
    • வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்

    ஜெயங்கொண்டம், 

    மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவில் வெற்றி பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவர். மாநில அளவிலான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் அரியலூர் மாவட்டம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் வெ.நிதிஷ்குமார் வெற்றி பெற்று உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் இவர் ஒருவர் மட்டுமே தேர்தேடுக்கப்பட்டு உள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர் வெ.நித்திஷ் குமார் மற்றும் வழிகாட்டியான அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழாவிற்கு ஆமணக்கந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி நடராஜன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் க.இராசாத்தி , ஆசிரியர் பயிற்றுநர் சு.ஐயப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ச.சாந்தி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் அ.மதலைராஜ் வெற்றி பெற்ற மாணவருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா, ஜெயப்பிரியா, பவானி, கவிதா, ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். கணித பட்டதாரி ஆசிரியர் கு.செல்லதுரை நன்றி கூறினார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி மின்னல்கொடி வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் , பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
    • உயர்தரமான சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது

    அரியலூர், ஏப்.18-

    அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பழைய கட்டிட வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சார்பில் மக்களைத் தேடி தமிழ் மருத்துவம் கோடைகால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.இந்த கோடைகால இலவச சிறப்பு சித்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, வயிற்றுப் புண், தோல்நோய்கள், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீரக கற்கள், மாதவிடாய் கோளாறுகள், பொடுகு, சைனஸ், மூலம், ஆஸ்த்துமா, பௌத்திரம், வெள்ளைப்படுதல், தைராய்டு பிரச்சனை, கருப்பை சினைப்பைக்கட்டிகள், குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உயர்தரமான சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.முன்னதாக சித்த மருந்துகள் மற்றும் அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் சித்த மருந்தாக பயன்படுத்தப்படும் தாவர வகைகள் கண்காட்சியை பார்வையிட்டு அதன் சிறப்புகளை மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் விளக்கம் அளித்தார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.முத்துகிருஷ்ணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் குழந்தைவேலு, உதவி சித்தமருத்துவ அலுவலர் குமரேசன், உட்பட சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது
    • பணிக்கொடை வழங்க கோரி கண்டன கோஷங்கள்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மாநில தலைவர் ராஜசேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.முன்னதாக மாவட்ட செயலாளர் கணபதி வரவேற்று பேசினார். இதில் புது சுகாதாரத்துறை மாநில செயலாளர் ராஜா, கிராம உதவியாளர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தில் சி.பி.எஸ்.ஐ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சி.பி.எஸ்.ஐ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தி.மு.க.வின் 2021 தேர்தல் கால வாக்குறுதி 309ன் படி சி.பி.எஸ்.ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும் பணிக்கொடை வழங்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆண்டிமடம் வட்டத் தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.

    • 7 பேர் படுகாயம்
    • தப்பி ஓடிய கார் டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 43), ஆட்டோ டிரைவர். இவர் செங்குந்தபுரத்திலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் ஜெயங்கொண்டத்திலிருந்து வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் பீதியடைந்த கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து, ஆட்டோவில் பயணம் செய்த வீரமணி, அவருடைய மனைவி ராதா (34), மகள் கீர்த்தனா (19), உடையார்பாளையம் தெற்கு வாணிபத் தெரு காளிமுத்து மனைவி செல்வி (39), தெற்கு புதுக்குடி பரமசிவம் மனைவி கொளஞ்சி (50), சவுமியா (21), கண்டமங்கலம் ஆத்தங்கரை தெருவை சேர்ந்த சக்கரபாணி மனைவி சரிதா (31) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 7 பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×