என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் 7-ம் ஆண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேச்சு
    • புதிய, புதிய புத்தகங்களை வாங்கி படிக்க அறிவுரை

    அரியலூர்,

    அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து 7ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா தொடங்கியது.கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி வரவேற்று பேசினார், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புத்தகதிருவிழா அரங்கினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது,நமது மாவட்டம் சிறிய மாவட்டம். மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் புத்தகங்கள் விற்பனையாகும். மாவட்ட மக்கள் பெருமளவு திரண்டு வந்து புத்தகங்கள் வாங்க வேண்டும். நமது முதல்-அமைச்சர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படித்து உயர்க்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் நான் முதல்வன் திட்டம். இது போன்றத்திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.புத்தக வாசிப்பு அனைவரையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். மாணவர்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காக புதிய புதிய புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். நான் கலந்து கொள்ளும் புத்தக கண்காட்சிகளில் நிச்சயம் புத்தகங்களை வாங்கி வருவேன். அதுபோல, இன்றைய தினமும் புத்தகங்களை வாங்கியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்அப்துல்லா, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன், நகராட்சி தலைவர் சாந்திகலைவாணன், தமிழ்பண்பாட்டு பேரவை தலைவர் சீனிபாலகிருஷ்ணன், பொறுப்பாளர்கள் புலவர் இளங்கோ, புகழேந்தி, நல்லப்பன், ஆர்டிஓ ராமகிருஷ்ணன், தாசில்தார் கண்ணன், சந்திரசேகர், பள்ளி சரக ஆய்வாளர் பழனிசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்,நிகழ்ச்சி முடிவில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதரஇயக்க திட்ட இயக்குனர் முருகண்ணன் நன்றி கூறினார்.

    • காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
    • மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சொர்ணலதா(வயது24). இவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில்நான் வயலுக்கு செல்லும்போது, செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ஞானசேகரன் (35) என்பவர் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்வகை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமணம் செய்து கொள்வதாக கூறி துன்புறுத்தல்
    • சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் கைது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 28). இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஜெயமூர்த்தியை கைது செய்தனர்.

    • ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய 292-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது
    • இன்று (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மன்னார்குடி பங்குதந்தை மரிய வியான்னி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    திருமானூர்:

    அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716-ம் ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சொரூபம் அமையபெற்றுள்ள திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தின் 292-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நிகழ்ச்சியில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய பங்குதந்தை அதிபர் தங்கசாமி தலைமையில், திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் முன்னிலையில், புனித அடைக்கல அன்னை திருஉருவ கொடி ஏலாக்குறிச்சி ஊரைசுற்றி ஊர்வளமாக வந்து கொடிமரத்தி ஏற்றப்பட்டது.

    திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மன்னார்குடி பங்குதந்தை மரிய வியான்னி தலைமையில் திருப்பலியும் நடைபெறுகிறது.நாளை (24-ந்தேதி) பாண்டிச்சேரி மேமாலூர் பங்கு தந்தை ஜோஸ்வா தலைமையில் திருப்பலியும், 25-ந்தேதி தஞ்சாவூர் மறைமாவட்டம் முதன்மை குரு பங்கு சந்தை பிரபாகர் தலைமையில் திருப்பலியும், 26-ந்தேதி புள்ளம்பாடி மறை மாவட்ட பங்கு சந்தை முதன்மை குரு சூசை மாணிக்கம் தலைமையில் திருப்பலியும், 27-ந்தேதி மலத்தான் குளம் பங்கு தந்தை தனராஜ் தலைமையிலும், ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி அரண்மனை குறிச்சி வடக்கு பாளையம் பக்தர்கள் சிறப்பிப்போடு அலங்காரத் தேர் பவனியும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி பெரம்பலூர் கெத் செமணி தியான மையம் இயக்குனர் பங்கு தந்தை யூஜின் டோனி தலைமையில் வரதராஜன் பேட்டை, ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம் பக்தர்கள் சிறப்பிப்போடு தேர்பவனியும், 30-ந்தேதி கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பாபநாசம் கபிஸ்தலம் பக்தர்கள் சிறப்பு முறையில் சிறப்பு வழியும் திருப்பலியும், உய்யக்கொண்டான் திருமலை பங்குதந்தை ஆம்புரோஸ் தலைமையில் புணவாசல் மாத்து பக்தர்கள் சிறப்பிப்போடு தேர்பவனியும், திருவிழாவின் நிறைவாக மே 1-ந்தேதி தேதி பங்கு தந்தை தங்கசாமி தலைமையிலும், உதவி பங்கு தந்தை ஞான அருள் தாஸ் முன்னிலையிலும் கொடி இறக்கம் நடைபெற இருக்கின்றது. நிறைவில் திருமானூர் பங்குதந்தை நன்றி கூறுகிறார்.

    • அரியலூர் நகராட்சியில் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவித்தார்
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அரியலூர் நகராட்சியில் 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    எனவே அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம். இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.


    • கொள்ளிடம் ஆற்றில் 2 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது
    • குளித்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு தட்டுப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமறை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது காலில் கடினமான ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த இளைஞர்கள் நீருக்குள் மூழ்கி காலில் தட்டுப்பட்டதை வெளியே எடுத்துள்ளனர்.

    அப்போது அது சாமி சிலை என்பது தெரிய வந்தது.இதனால் மீண்டும் நீருக்குள் மூழ்கி இளைஞர்கள் வேறு ஏதேனும் சாமி சிலை உள்ளதா என்று அலசியபோது, மேலும் ஒரு சாமி சிலை கிடைத்துள்ளது. நீரில் இருந்து வெளியில் கொண்டு வந்து பார்த்த போது சுமார் 3 அடி உயரம் கொண்ட தட்சணாமூர்த்தி, 2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலைகள் என்பது தெரியவந்தது. இது குறித்து வருவாய் துறையினருக்கு இளைஞர்களும், அப்பகுதி பொதுமக்களும் தகவல் தெரிவித்தனர்.


    • தா.பழூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் திருட்டு போனது
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் சிலால் நால்ரோடு பகுதியில் வானதிரையான் பட்டினம் செல்லும் சாலையில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். மெடிக்கலுக்கு அருகிலேயே அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் வழக்கம் போல் கணபதி மளிகை கடையை திறப்பதற்கு வந்துள்ளார். அப்போது அவரது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதேபோலவே அவர் கடைக்கு அருகில் உள்ள செல்லம்மாள் நடத்தும் மெடிக்கல் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக கணபதி செல்லம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். மளிகை கடைக்குள் சென்று பார்த்தபோது சாமி படம் அருகில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. அதுபோலவே மெடிக்கல் உள்ள கல்லாப்பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.70 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    அத்துடன் மெடிக்கலில் இருந்து வெள்ளி கொலுசு உள்ளிட்ட சில பொருட்களையும் திருடி சென்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து உடனடியாக தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தடவியல் சப் இன்ஸ்பெக்டர் சத்யராஜ் சம்பவ இடத்திலிருந்து கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியானர்
    • துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-விருத்தாச்சலம் சாலையில் உள்ள கருக்கை கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் கடலூர் மாவட்டம் டி.வி.புத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கனக சபை மகன் ஜெகதீசன் (வயது 45) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த பாவாடை மகன் பழமலை (40) என்பவரும் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் மயிலாடுதுறை சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது கார் கருக்கை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையில் முன்பு சென்ற ஜெகதீசன், பழமலை இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இந்த விபத்தில் ஜெகதீசன், பழமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிமடம் போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கருக்கை பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


    • அரியலூரில் ஏ.ஐ.டி.யு.சி.யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் அண்ணாசிலை அருகே 8 மணிநேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்தும், அந்த சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சட்டத் திருத்ததுக்கு எதிராக முழக்கமிட்டனர்.


    • அரியலூர் பெண்ணிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த சாமியார், மனைவியுடன் கைது
    • போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தியாகம் டேனியலை ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், தீபா ஜெனிபரை திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேல மைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவரது 2-வது மனைவி ஜூலி (வயது 48). கணவர் மற்றும் கணவருடைய முதல் மனைவி இறந்து விட்ட நிலையில், ஜூலி கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன்களுடன் வசித்து வருகிறார். அதில் ஒருவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் காவனூர் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த தியாகம் டேனியல் (62) என்பவரை ஜூலி சந்தித்துள்ளார்.அப்போது தியாகம் டேனியல், ஜூலியிடம் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளார்கள் என்றும், அதனை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து தியாகம் டேனியல், அவரது மனைவி தீபா ஜெனிபர் (43) ஆகியோர் 15 நாட்கள் ஜூலி வீட்டில் பூஜை செய்து வந்துள்ளனர்.

    மேலும் ஜூலியை பயமுறுத்தியும், வீட்டில் புதையல் இருப்பதாகவும் கூறி, அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறி இதற்காக ஜூலியிடம் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பலமுறையாக அவர்கள் மொத்தம் ரூ.25 லட்சம் பெற்றுள்ளார்.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜூலி இதுகுறித்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு பழனிச்சாமியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த தியாகம் டேனியல், தீபா ஜெனிபர் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் திண்டிவனம் அருகே பதுங்கியிருந்த தியாகம் டேனியல், தீபா ஜெனிபர் ஆகியோரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தியாகம் டேனியலை ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், தீபா ஜெனிபரை திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.


    • ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலரிடம் நகராட்சி ஆணையர், மேலாளர், நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி வரவேற்று பேசினார். மன்றம் பொருள் தீர்மானத்தை இளநிலை உதவியாளர் சாவித்திரி வாசித்தார். கூட்டத்திற்கு வருகை புரிந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்டம் தொடங்கி தீர்மானம் வாசிக்கும் போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் செல்வராஜ், சுப்பிரமணியன், சேகர்.பாண்டியன் மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் மனோன்மணி, தேவேந்திரன், ஜோதிலட்சுமி அருள், பூபதியம்மாள் ராமையன் ஆகியோர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து தரையில் அமர்ந்து திடீரென நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அ.தி.மு.க. வார்டுகளுக்கும் நிதி ஒதுக்காமல் 6 தி.மு.க. வார்டுகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் பாரபட்சமின்றி அனைத்து வாடுகளுக்கும் பொது நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலரிடம் நகராட்சி ஆணையர், மேலாளர், நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.


    • அனல்மின் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது
    • 81 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணையின் அடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

    இதில் 81 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதி மன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் ராஜமூர்த்தி (நிலம்எடுப்பு) கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்தப் பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதி மன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனவும் கூறினார்.

    இதில் ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா முன்னிலையில் ஜெயங்கொண்டம் தனி வட்டாட்சியர் (நிலம்எடுப்பு) ராஜமூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள் மோகன் ராஜ், செந்தில்குமார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


    ×