என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஜெயங்கொண்டம் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • கடந்த ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு துர்நாற்றம் கடுமையாக வீசியது. இதனை அடுத்து கிராம மக்கள் குளத்தில் சென்று பார்த்தபோது மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தது தெரியவந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்புடைய அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி மற்றும் நிர்வாக அலுவலர் செல்வம், போலீசார் பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, கடந்த ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே மீன்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடனடியாக இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடத்தில் தெரிவித்தனர்.பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் நடத்திய இப்போராட்டம் காரணமாக கொடுக்கூர்-ஜெயங்கொண்டம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
    • மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும்.

    அரியலூர்,

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கு இணையவழியில் வரும் 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரிகளின் பொறுப்பு முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி, விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர்களின் கைப்பேசி எண்கள் போன்ற விபரங்களை பதிவு செய்து, கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவு அனைத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

    மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் தேசிய மாணவர்படை ஏ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.இந்த சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் அதற்கான தரவுகளை பதிவேற்றம் செய்யவேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பித்தவர்களின் தர வரிசை பட்டியல் தயார் செய்த பின் மாணவ, மாணவிகளின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட கல்லூரி அலுவலகத்தை அணுக வேண்டும் என தெரிவித்தனர்.

    • குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யபட்டனர்
    • அரியலூர் போலீசார் நடவடிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). இவரை அண்மையில், செல்போன மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பல தவணைகளாக 46 ஆயிரத்து 250 ரூபாயை இணைய வழியில் பணம் பெற்றுள்ளார்.ஆனால் கூறியபடி கடன் எதுவும் பெற்றுத்தரவில்லை. அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ்குமார், இதுகுறித்து அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டதில், மோசடியில் ஈடுபட்ட நபர் தில்லியில் இருப்பதும், அந்த நபருக்கு உடந்தையாக சிலர் நாமக்கல் மாவட்டத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவனேசன் மற்றும் சுரேஷ் பாபு, சுதாகர், ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு தனிப்படையினர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரத்துக்குச் சென்று, இணைய மோசடியில் ஈடுபட்ட மூர்த்தி மனைவி உஷா (34), ராமன் மகன் மூர்த்தி (39), நல்லமுத்து மகன் செங்கோடன் (58) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை அரியலூர் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 1 மடிக்கணினி, 4 செல்போன்கள், 13 ஏ.டி.எம் கார்டுகள், 1 வங்கி கணக்குப் புத்தகம், 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விளக்கிக் கூறினர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கோடை மழை காரணமாக சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நஞ்சை வயல்களில் பயிரிடப்பட்டிருந்த எள் செடிகள் முற்றிலும் அழிந்து நாசமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எள் பயிர் செய்யப்பட்டு பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை நேற்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி தலைமையிலான வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின்போது அதிகாரிகளை சந்தித்த விவசாயிகள், மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விளக்கிக் கூறினர்.

    அதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள், தா.பழூர் வட்டாரம் முழுவதும் சுமார் 700 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிர் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாக, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்யும் சூழ்நிலை இருப்பதால், மழையால் ஏற்படக்கூடிய சேதங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பின்னர் அரசுக்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க ஆவண செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். ஆய்வின்போது வட்டார வேளாண்மை அலுவலர் செல்வகுமார், தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார், வேளாண்மை உதவி அலுவலர் செல்வப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 40). இவரது மனைவி கவிதா(36). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சக்திவேல் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவர் அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் அவர் ஊருக்கு வந்தார். இதையடுத்து அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கவிதா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சக்தி வேல் நேற்று முன்தினம் வீட்டில் சேைலயால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள வேணாநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாராஜ். இவரது மனைவி வினோதா(வயது 28). இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் திருமானூர் அருகே உள்ள கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த வினோதாவின் தந்தை நமச்சிவாயம், இவர்களோடு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடமாக சமாதானமாகி, பேச்சுவார்த்தையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் சுதாராஜ் அடிக்கடி குடித்துவிட்டு, வினோதாவோடு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களை நமச்சிவாயம் அவ்வப்போது சமாதானம் செய்து வந்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு நமச்சிவாயம், வினோதாவுக்கு அரை பவுன் தோடு வாங்கி கொடுத்துள்ளார். அந்தத் தோடையும் விற்று, சுதாராஜ் மது குடித்ததாக கூறி வினோதா அவரோடு தகராறில் ஈடுபட்டு, மீண்டும் தோடு வாங்கி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதையடுத்து சுதாராஜ் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார்.

    இந்நிலையில் அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வினோதா வீட்டின் தாழ்வாரத்தில் தனது புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, நமச்சிவாயத்திற்கு சுதாராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த நமச்சிவாயம் தனது மகள் வினோதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி, இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து வினோதாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இருதரப்பினர் மோதலில் 2 பேர் கைது செய்யபட்டனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் உடையார்பாளையம்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மூர்த்தியான் தெருவை சேர்ந்த ஜெய்சங்கரின் மகன் திருமாவளவன் (வயது 23). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தமிழரசனுக்கும்(21) இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழரசன், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருமாவளவன், அவரது உறவினர் ஜோதிமணி ஆகியோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், ஜோதிமணி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அனுமன் சிலை 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செந்துறை வந்தது
    • பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று வழிபாடு செய்தனர்

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி பல கோடி மதிப்புள்ள வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது. இது குறித்து அப்போது கோவில் தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் செந்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    இந்த வழக்கை தமிழக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ராஜாராமன் இணையதளம் மூலம் இந்த சிலை ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டதை கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று அப்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமன் சிலையை ஆஸ்திரேலியா பிரதமர் ஒப்படைத்தார்.

    10 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டு பிடிக்கப்பட்ட இந்த சிலையை உடனடியாக மீட்டு தங்களது கிராமத்திற்கு கொண்டு வந்து கோவிலில் வைத்து வழிபாடு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளையும் கண்டுபிடித்து மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் வெள்ளூர் கிராமத்திற்கு வந்த சிலைத்தடுப்பு பிரிவு போலீசார் கோவிலை ஆய்வு செய்து விட்டு சிலையை கும்பகோணம் சிலைத் திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிலையை கோவிலில் வைத்து வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து நேற்று ஆஞ்சநேயர் சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் கிராம மக்களிடம் ஒப்படைத்தார்.பின்னர் கிராம மக்கள் சிலையை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து புனித நீரால் அபிஷேகம் செய்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சைஷேஸ்குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2012 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஆஞ்சிநேயர் சிலை இன்று சொந்த ஊரில் உள்ள கோவிலில் வைக்கப்பட்டது.

    இந்த சிலை 16 ஆம் நூற்றாண்டான விஜய பேரரசு காலத்தை சேர்ந்தது. இச்சிலை ஐம்பொன் சிலை ஆகும். இது 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (41 லட்சம் ரூபாய்) விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இன்று அச்சிலை பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சிலை தொடர்ந்து கோவிலில் வழிபாட்டிற்கு வைக்கப்படும். இதனுடன் கடத்தப்பட்ட மற்ற 3 சிலைகள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்க்கு கடத்தப்பட்ட 23 சிலைகள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 64 சிலைகள் மீட்க முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் உள்ள 15 சிலைகளை மீட்க இரு நாடுகளுக்கு இடையே கலாச்சார ஒப்பந்த சட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள சிலைகள் உள்ளது கண்டறிப்பட்டுள்ளது. அதனையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, சிலை கடத்தல் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ் உள்ளிட்ட ஏராளமான போலீசார் இருந்தனர்.

    • பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • தீராத வயிற்று வலியால் நடந்த சம்பவம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசனின் மகள் நிஷா என்ற பிரேமா(வயது 19). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால், ஆஸ்பத்திரியில் காண்பித்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன், தனது மனைவியுடன் அஸ்தினாபுரம் கிராமத்திற்கு வளையல் வியாபாரத்திற்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பிரேமாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார், பிரேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • 2 குழந்தைகளுடன் தாய் மாயமானார்.
    • தந்தை வீட்டில் வசித்து வந்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் நாச்சியார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேலின் மனைவி சண்முகப்பிரியா (வயது 23). இவர்களுக்கு சர்பேஸ்வரன்(4), சங்கமேஸ்வரன்(2) என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சண்முகபிரியா, தனது தந்தை செந்தில் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகப்பிரியா மற்றும் அவரது குழந்தைகளை காணவில்லை. இதனால் செந்தில், தனது உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கயர்லாபாத் போலீசில் செந்தில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிந்து குழந்தைகளுடன் மாயமான சண்முகப்பிரியாவை தேடி வருகிறார்.

    • ரேசன் கடை பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • சிறப்பாக பணியாற்றியதற்காக வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரேசன் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.மாவட்டத்தில் 271 முழுநேர ரேசன் கடைகள், 194 பகுதி நேர ரேசன் கடைகள் என மொத்தம் 465 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 192 விற்பனையாளர்களும், 12 எடையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் ரேசன் சடைகளில் சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி அரியலூர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரிந்த நாகமங்கலம் ரேசன் கடை விற்பனையாளர் லட்சுமிக்கு முதல் பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், புதுக்குடி ரேசன் கடை விற்பனையாளர் மதுரை முருகனுக்கு 2-வது பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ், ஜெயங்கொண்டம் ரேசன் கடை எண் -1 எடையாளருக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், அரியலூர் நகரம் ரேசன் கடை எண்-2 எடையாளருக்கு 2-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் கலெக்டர் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மின்கம்பியை மிதித்த கறவை மாடு பலியானது
    • இழப்பீடு வழங்கக்கோரி கோரி மனு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவர் மேய்ச்சலுக்காக தனது பசு மாடு மற்றும் கன்றை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் நேற்று காற்றுடன் பெய்த மழையின் காரணமாக விவசாய மின் இணைப்பிற்கு செல்லக்கூடிய மின் கம்பி அறுந்து கீழே கிடந்தது. அந்த வழியாக சென்ற பசுமாடு அந்த மின் கம்பியை மிதித்த நிலையில், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தது. பசு மாட்டினை ஓட்டிச்சென்ற உரிமையாளர் சுதாரித்துக் கொண்டு அதிர்ஷ்டவசமாக கன்றுக்குட்டியுடன் உயிர் தப்பினார்.இது குறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பசுமாட்டிற்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இறந்த மாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் மாட்டின் உரிமையாளர் கலைமணி மனு அளித்துள்ளார்.

    ×