என் மலர்
அரியலூர்
- அரியலூர் மாவட்டத்தில் திரையரங்கில் கலெக்டர் ஆய்வு செய்தார்
- திரையரங்கில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
அரியலூர்,
அரியலூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் திரையரங்கில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறை வசதிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், இருப்பில் உள்ள தீயணைப்பு வாளிகளின் எண்ணிக்கை மற்றும் தீயணைப்பு கருவிகள் குறித்த விவரங்கள், விற்பனை செய்யப்பட்டுள்ள சினிமா டிக்கெட்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவற்றின் விலை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும் குடிநீர் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திடவும், கூடுதலாக குடிநீர் வசதிகளை ஏற்படுத்திடவும், கழிவறைகளை தொடர்ந்து முறையாக சுத்தம் செய்திட வேண்டும் என்றும், நீர்த்தேக்கத்தொட்டிகளில் தேவைக்கேற்ப நீரினை சேமித்து வைத்திட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகத்தினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் திரையரங்கினை புதுப்பித்தல் சான்று, தீ அணைப்பான் கருவிகளின் புதுப்பித்தல் சான்று மற்றும் திரையரங்கில் பயன்படுத்தப்பட்டுள்ள தீ அணைப்பான்கள் போன்றவற்றினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட அறிவுறுத்தினார்.இந்த ஆய்வில், அரியலூர் வட்டாட்சியர் கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- ஜெயங்கொண்டம் அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
- கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் 12 வருடங்களுக்கு பிறகு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் நடைபெற்ற நிலையில் கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டி கடும் விரதம் இருந்தனர். இந்நிலையில் மாலை வேளையில் பூங்கரகம் ஏந்தி பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என முழக்கங்களை எழுப்ப சுமார் 50க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடி நேர்த்தி கடன் செலுத்தினர்.
- ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மண் கலந்த நிலக்கடலையை வியாபாரிகள் வாங்க மறுத்தனர்
- அதிகாரிகள் பாஸ்கரிடம் பேசி சமாதானம் செய்து 50 மூட்டையை எடுத்துக் கொண்டு மண்ணாக உள்ள 7 மூட்டையை திருப்பி அனுப்பினார்கள்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-திருச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள சிலால் வாரியங்காவல், சின்ன வளையம், புதுச்சாவடி, உடையார்பாளையம், ஒக்கநத்தம், கல்லாத்தூர், மேலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கடலை உள்ளிட்ட பயிர்களை கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் வானதிறப்பட்டினத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவருடைய கடலை மூட்டைகளை கடலை கமிட்டியில் போடுவதற்காக வந்துள்ளார்.அங்கே உள்ள வியாபாரிகள் கடலைகளை வாங்கி அதிக லாபத்திற்கு விற்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் பாஸ்கரின் கடலை மூட்டையில் மண் இருப்பதாக கூறி கடலை மூட்டையை வாங்காமல் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் விவசாயம் செய்ய பல்வேறு போராட்டங்களை தாண்டி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நீங்கள் இதுபோன்று செய்வது விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல் இருக்கிறது எனக் கேட்டுள்ள பாஸ்கரிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் விற்பனை கூடத்தில் உள்ள அதிகாரிகள் பாஸ்கரிடம் பேசி சமாதானம் செய்து 50 மூட்டையை எடுத்துக் கொண்டு மண்ணாக உள்ள 7 மூட்டையை திருப்பி அனுப்பினார்கள். இதனால் ஒழுங்குமுறை கூடம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
- செவிலியர் தினம் அரசு தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக செவிலியர் தினம் அரசு தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும் நினைவு பரிசும், இனிப்பும் வழங்கப்பட்டது.மேலும் செவிலியர்கள் நோயாளிகளின் வழியையும் வேதனையும் புரிந்து கொண்டு மிக சிறப்பாக செயல்படுவதாகவும், மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்து பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தலைவர் கலைச்செல்வன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் தாமரைச்செல்வன், பி.ஆர்.ஓ.குமாரசாமி, துணைத் தலைவர் லோகநாதன் மற்றும் முன்னாள் தலைவர்கள், கார்த்திகேயன், ராஜேந்திரன், பொறியாளர்கள் ஹரிஹரன், வில்வநாதன், அன்னை தெரசா கல்வி குழுமத்தின் தாளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் அரசு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.
- அரியலூர் பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டார்
- மாவட்ட போலீஸ் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று கோமதியை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர்ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள சிலம்பூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோமதி (வயது 41). இவர் மதுபானங்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்று வந்தாக கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோமதி தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாலும், இவர் மீது ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட மது குற்ற வழக்குகள் உள்ளது. இதன் காரணமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று கோமதியை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர்ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்
- சுற்றுலாத்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகை மற்றும் உணவகங்களை ஆய்வு செய்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் சுற்றுலாத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரீ, இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர் முரளிதரன், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, தொல்லியல்துறை இயக்குனர் காந்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் 2023-24-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறையின் சார்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டு அருங்காட்சியகம், வாகனங்கள் நிறுத்தும் இடம், நுழைவு வளாகம், வழிகாட்டும் பலகைகள் போன்றவற்றுக்கான இடங்கள் தேர்வு செய்யும் பணி மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, சுற்றுலாத்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகை மற்றும் உணவகங்கள், தங்கும் அறைகள், குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அனைத்து வசதிகளும் உடனடியாக சரிசெய்வதற்கான திட்ட அறிக்கையினை உடனடியாக தயார் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.பின்னர், கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலுக்கு வெளியே நிற்கும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்ட 8.50 மீட்டர் உயரத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு சாந்துகளால் கட்டப்பட்ட யானையின் ராட்சத நாயக்கர் கால சிற்பத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த யானை சிற்பத்தினை சுற்றுலா பயணிகள் கண்டு செல்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரீ, இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் அறிவுறுத்தினர்.இந்த ஆய்வில் இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா பழூர் அருகே கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது இரண்டாவது மகள் அனுஷா (வயது 18). இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கோடங்குடி கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சம்பவத்தன்று வீட்டிலிருந்து சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் அனுஷா கிடைக்காததால், தா பழூர் போலீசில் மதியழகன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகின்றனர்.
- தா.பழூர் அருகே ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது
- இரண்டு சமூக பிரிவினர் அந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர்.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் ஊராட்சியை சேர்ந்த கோடாலி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை ஒன்று கட்டப்பட்டது. இரண்டு சமூக பிரிவினர் அந்த ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை பெற்று வந்தனர்.இந்தநிலையில் அந்த ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்ததால் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் அதே இடத்தில் ரேஷன் கடை அமைத்தால் ரேஷன் பொருட்களை வாங்க மாட்டோம் என்றும் இரு தரப்பினருக்கும் பொதுவான இடத்தில் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால் மற்றொரு தரப்பினர் தங்கள் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைக்கு தங்களது இடத்தை கொடுத்து கட்டிடம் கட்ட சொன்னோம்.
ஆனால் அப்பொழுது மற்றொரு தரப்பினர் கட்டிடம் கட்ட இடம் தரவில்லை. எனவே ஏற்கனவே ரேஷன் கடை இருக்கும் இடத்தில் தான் கடை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.இந்தநிலையில் நேற்று திடீரென்று ஒரு தரப்பினர் தங்களது ரேஷன் கார்டை அதிகாரிகளை சந்தித்து ஒப்படைத்து போராட்டம் நடத்த முடிவு செய்து ரேஷன் கடையை நோக்கி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது
- கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில், துணைதலைவர் அசோகன் முன்னிலையில் நடைபெற்றது. அலுவலக செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, சகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனசெல்வி, கீதா, அலுவலக இளநிலை உதவியாளர் ரமேஷ், சிவக்குமார் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அரசின் திட்டபணிகள் மக்களுக்கு சென்று சேர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் ஏரிகுளம் நீர்வரத்து வாய்க்கால் பகுதிகளில் சுண்ணாம்புகல் சுரங்கம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- அரியலூரில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது
- நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கபடும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செந்துறை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
- ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று அம்மன், விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் அம்மன் வீதியுலாவும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனும், மற்றொரு தேரில் விநாயகரும் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் நின்று அம்மன், விநாயகர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
- புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
- கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அரியலூர்:
அரியலூர் வி.கைகாட்டி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன் ஆத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 32) என்பவர் தனது மளிகை கடையிலும், கயர்லாபாத் பனமரத்து சாலையை சேர்ந்த கருப்பையா (55) என்பவர் பழைய போலீஸ் நிலையம் எதிரே புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






